இந்தியாவின் எத்தனையோ மாநிலங்களில் நமது தமிழ்நாட்டுக்குத் தனித்த சிறப்புகள் பல உண்டு. நம்மை வழி நடத்திய தலைவர்கள் நமக்காக போராடிப் பெற்றுத் தந்த உரிமைகள்தான் அதற்குக் காரணம். ஒரு காலத்தில் நமது நாட்டுக்குப் பெயர் 'சென்னை மாகாணம்' என்பதுதான். அண்ணா முதலமைச்சராக வந்த பிறகு நாம் நமது நாட்டை ‘தமிழ்நாடு' என்று அறிவித்துக் கொண்டோம்.
இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என்று அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனாலும் நமது தமிழ்நாட்டின் எல்லைக்குள் இந்திக்கு இடமில்லை என்று அறிவித்து, தமிழும் ஆங்கிலமும் எமக்குப் போதும் என்ற இரு மொழிக் கொள்கையை உருவாக்கிக் கொண்டோம்.
பார்ப்பனிய ஜாதி அமைப்பு, ஒருவனை மேல் ஜாதி; ஒருவனைக் கீழ் ஜாதி என்று பாகுபடுத்தியது. படிக்கவும், பதவிக்கு வரவும் ‘கீழ்ஜாதி'களுக்கு உரிமை இல்லை என திமிராட்டம் போட்டது. அதை சுக்குநூறாக உடைத்தெறிந்து, அனைவருக்குமான கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளுக்காக, இட ஒதுக்கீடு சட்டங்களை உருவாக்கிக் கொண்டோம். அந்த சமூகநீதிதான் நமக்கான பண்பாடு. எந்த ஆதிக்கத்துக்கும் நமது தமிழ்நாடு பணிந்து போகாது. உண்மைதான்; நாம் வளர்ந்திருக்கிறோம். ஆனாலும் வளர வேண்டிய அளவுக்கு வளரவில்லையே என்ற கவலை நம் எல்லோருக்கும் உண்டு.
இப்போது என்ன நடக்கிறது?
இந்தியாவின்அதிகாரத்தில் இருக்கும் பாஜக நமது உரிமைகளை பறிக்கிறது. பண்பாட்டில் குறுக்கிடுகிறது.
இந்தியாவிலேயே இந்தியை எதிர்த்து முதல் போர்க்கொடியை உயர்த்தியது யார்? நாம் தான். 1938ஆம் ஆண்டிலேயே பெரியார் போர்ச் சங்கு ஊதினார். ‘இந்தியைத் திணித்தால் எங்களுக்கு இந்தியாவே தேவையில்லை' என்று முழங்கினார். ஆனால் இப்போது, தமிழ்நாட்டிற்குள் மைல் கற்களில், மத்திய அரசு அலுவலகங்களில், மத்திய அரசுப் பள்ளிகளில், விமான நிலையங்களில், வானொலியில் இந்தி தீவிரமாக நுழைகிறது. நாடாளுமன்றத்தில் இந்தித் தெரிந்தவர்கள் இந்தியில் மட்டுமே பேசுவார்களாம்.
தமிழ்நாட்டைத் தனிமைப்படுத்துகிறார்கள். இந்தி படித்தால்தான் வேலை கிடைக்கும் என்கிறார்கள் சிலர். அப்படியானால் இந்தியைப் புறக்கணித்த நமது நாட்டுக்குள் இந்தி பேசும் மாநிலங்களிலிருந்து பல லட்சம் பேர் வேலை தேடி வருவது ஏன்? அதே நேரத்தில் தமிழ்நாட்டின் மத்திய அரசு அலுவலகங்களிலும் இரயில்வேத் துறையிலும் வடநாட்டுக்காரர்கள் குவிந்து கொண்டிருக்கிறார்கள்.
பேச்சு வழக்கில் இல்லாத, கோவில்களில் மட்டுமே முடங்கியுள்ள, பார்ப்பன பண்பாட்டு மொழி சமஸ்கிருதம். அதைப் பரப்புவதற்கு கோடிகோடியாக வாரி வழங்குகிறார்கள். அய்.அய்.டி.யிலிருந்து அரசுத் தொலைக்காட்சிகள் வரை சமஸ்கிருதம் கொடி கட்டிப் பறக்கிறது.
மதுரைக்கு அருகே கீழடி கிராமத்தில் அகழ்வாராய்ச்சி நடந்தது. நமது தமிழ் இனம் சங்க காலத்தில் ஜாதி மத அடையாளமின்றி வாழ்ந்தது என்பதற்கான சான்றுகள் தடயங்கள் ஏராளமாகக் கிடைத்தன. நமது பண்பாட்டு அடையாளங்களை உறுதிப்படுத்தும் இந்த ஆராய்ச்சிப் பணிகளை முடக்கிப் போடுகிறது பாஜக ஆட்சி.
நமது கல்வி கட்டமைப்பையும் சீர்குலைக் கிறார்கள். நீட் தேர்வை திணிக்கிறார்கள். இந்தியா விலேயே இதை எதிர்த்துப் போராடுகிற ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். நமது வரிப் பணத்தில் உருவாக்கிய மருத்துவக் கல்லூரிகளில் அய்ம்பது சதவீத இடங்களை ‘அகில இந்திய' கோட்டா என்கிற பெயரில் அபகரித்துக் கொள்கிறார்கள்.
‘புனித’ நதி என்று கூறி கங்கையை சுத்தப்படுத்த இருபத்தையாயிரம் கோடி பணம் ஒதுக்குகிறார்கள். ஆனால் வறட்சியின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் நமது விவசாயிகளை அவமதிக்கிறார்கள்; கடன் தள்ளுபடி செய்யக்கூட மறுக்கிறார்கள். பன்னாட்டு கம்பெனிகளுக்கோ பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி. அதுமட்டுமா? ‘மீத்தேன்' எடுக்கிறோம், ‘ஹைட்ரோகார்பன்' எடுக்கிறோம் என்று நமது விவசாய நிலங்களைப் பாழ்படுத்துகிறார்கள். நாம் துடிக்கிறோம்! போராடுகிறோம்!
வங்காளிகளும் குஜராத்திகளும் தங்களுக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்ட ஆபத்தான அணுமின் திட்டங்களை நம் மீது திணிக்கிறார்கள்.
ஜெயலலிதா முதலமைச்சர் பதவியில் இருந்தபோது அவரிடம் பணிந்து நின்றது நடுவண் பாஜக ஆட்சி. அவரது மரணத்திற்குப் பிறகு ஆட்சியை மிரட்டி கொள்ளைப் புறவழியில் தமிழகத்தில் காலூன்றத் துடிக்கிறார்கள்.
உணவு உரிமையைக்கூட மறுக்கிறார்கள். பார்ப்பனர்களையும் சைவ உணவுக்காரர்களையும் மாமிசம்தான் சாப்பிட்டாக வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்துவதில்லை. ஆனால் குறைந்த விலையில் புரதச்சத்துடன் கிடைக்கும் மாட்டுக்கறி உணவை சாப்பிடவே கூடாதாம்; தடைபோடுகிறது பாஜக.
இன்னும் ஏராளம் பட்டியலிடலாம்.
வடக்கே பரவி நிற்கும் காவிப் பண்பாடு அம் மாநிலங்களில் வாழும் மக்களை கீழ்நிலையிலேயே வைத்திருப்பதை அங்கே நேரில் போய் பார்க்கும் எவருக்கும் புரியும்.
ஆனால் நமது பண்பாடோ சமூகநீதிக்கானது. நமது மக்கள் கடவுள் மத நம்பிக்கை கொண்டவர் களாக இருந்தாலும் ஒருபோதும் சமூகநீதியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
அகில இந்திய கட்சிகளைப் புறக்கணித்தவர்கள் நாம். நமக்குள் ஆயிரம் வேறுபாடுகள் மோதல்கள் இருந்தாலும், நமதுநாட்டில் உருவாகி நமது சமுதாயத்தில் மலர்ந்த கட்சிகளை மட்டுமே அதிகாரத்தில் அமர்த்தி வருகிறோம். இதுவே நமது அரசியல் வரலாறு.
நமக்கான கல்வி;
நமக்கான மொழி உரிமை;
நமக்கான பண்பாடு;
நமக்கான விவசாயம்;
நமக்கான உணவு;
நமக்கான அரசியல்;
அத்தனையும் பறிக்க - அழிக்க பார்ப்பனீயக் காவிப் படை துடித்துக் கொண்டு நிற்கிறது.
விழித்தெழுவோம்! தடுத்து நிறுத்துவோம்! தமிழர்களே வாரீர்!