எந்த மதவாதியை சட்டையைப் பிடித்துக் கேட்டாலும், ‘கடவுள்’ ஒருவர் உண்டு என்பதற்குக் கைவசம் வைத்துள்ள ஒரே பதில், “ஒருவன் இல்லாமல் இந்த உலகம் தோன்றி இருக்க முடியுமா?” என்பதுதான். இது எவ்வளவு பெரிய அடிவண்டல் மூடத்தனம் என்பதை விஞ்ஞானம் இருள் கிழித்துக் காட்டியிருக்கிறது. அதன் தலையாய விளக்கங்களை வினா - விடையாக இப்பகுதியில் காணலாம். திரு.வி.தங்கவேல் சாமி அவர்களின் ‘கடவுள் கற்பனையே - புரட்சிகர மனித வரலாறு’ ஆகிய நூல்களின் அடிப்படையில் தொகுக்கப் பட்டது.

வினா : பொருள் என்றால் என்ன?

விடை : இடத்தை நிறைப்பது அனைத்தும் பொருள்களே. சிறு தூசி, பெரு மலைகள், பூமி, சூரியன், நட்சத்திரங்கள், செடி, கொடிகள், மிருகங்கள், மனிதர்கள் அனைத்தும் பொருள்களே! எந்தப் பொருளையும் சிறிது சிறிதாகப் பிளந்து கொண்டே சென்றால் கடைசியில் நாம் காணுவது அணு. அணுவின் மையத்தில் அணுக் கரு உள்ளது. அணுக்கரு முக்கியமாகப் புரோட்டான், நியூட்ரான் என்ற துகள்களால் ஆக்கப்பட்டது. அணுக் கருவை எலக்டிரான் துகள்கள் சுற்றிக் கொண்டுள்ளன. பொருளின் தன்மை முக்கியமாக அதன் அணுவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை யைப் பொறுத்தது. உதாரணமாக தங்கத்தின் குணம் அலுமினியத்தின் குணத்திலிருந்து மாறுபட்டு இருக் கிறது என்றால், தங்கத்தின் அணுவில் 79 புரோட்டான்களும், அலுமினி யத்தின் அணுவில் 13 புரோட்டான் களும் உள்ளன. எனவேதான் ஒரே அளவுள்ள தங்கம் அதே அளவுள்ள அலுமினியத்தை விட அதிகக் கனமாக இருக்கிறது. இயற்கையில் ஒன்று முதல் 104 வரை புரோட்டான்கள் உள்ள குணங்களைக் கொண்ட மூலகங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வினா : பொருள் எவ்வாறு தோன்றியது? எப்பொழுது தோன்றியது?

விடை : இந்த வினாவிற்கு “சக்தி நிலைத்துவ” விதி விடை கூறுகின்றது. “சக்தியை அழிக்கவும் முடியாது - ஆக்கவும் முடியாது” என்பதுதான் இந்த விதி. சக்தி பல்வகைப்படும். வெப்ப சக்தி, ஒலி சக்தி, ஒளி சக்தி, இயக்கு சக்தி, மின் சக்தி, காந்த சக்தி, அணு சக்தி என்பது சக்தியின் வெவ் வேறு நிலைகள் ஆகும். இவ்விதியின் படி ஒரு சக்தியை இன்னொரு சக்தியாக மாற்ற முடியுமேயல்லாது அதை ஒன்றுமே இல்லாததாக அழிக்கவோ, மாற்றவோ முடியாது. உதாரணமாக மின்விசிறியால் மின்சார சக்தி இயக்கு சக்தியாக மாற்றப்படுகின்றது. ரயில் என்ஜினில் வெப்ப சக்தி உருளைகளை இயக்கும் சக்தியாக மாற்றப்படுகின்றது. சக்தியும் பொருளும் வெவ்வேறல்ல. சக்தியை அறவே அழிக்க முடியாது என்பது போலவே பொருளையும் அறவே ஒன்றுமில்லாமல் ஆக்கவும் முடியாது - ஒன்றுமே இல்லாததிலிருந்து ஒரு பொருளை ஆக்கவோ உண்டாக்கவோ முடியாது. ஒரு விறகுக் கட்டையைத் தீயிலிட்டால் அது கரியாகவும், வாயுவாகவும் மாற்றப்படுமேயல்லாது, அதை ஒன்றுமற்ற சூனியமாக ஆக்க முடியாது. சூனியத்திலிருந்து ஒரு பொருளையும் உண்டாக்கவும் முடியாது. எனவே, ஒன்றுமில்லாததிலிருந்து உலகத்தைக் கடவுள் படைத்தார் என்று மதங்கள் கூறும் கூற்று இந்த விதிக்குப் புறம்பானது; அதாவது, விஞ்ஞானத்திற்குப் புறம்பானது; உண்மைக்கு அப்பாலானது. இவ்விதியின்படி பொருள் இப்பொழுது இருப்பதால் எப்பொழுதும் ஏதாவது ஒரு வடிவத்தில் இருந்து கொண்டே இருக்கும். எப்பொழுது தோன்றியது என்ற கேள்வியே அர்த்தமற்றது.

வினா: உயிர் எப்பொழுது தோன்றியது? எவ்வாறு தோன்றியது?

விடை: சுமார் 500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி சூரியனின் ஒரு பாகமாகவே இருந்து வந்துள்ளது. சூரியனில் ஏற்பட்ட சலனங்களின் காரணமாக அதன் ஒரு பகுதி சிதறி ஈர்ப்பு சக்தி காரணமாகவே சூரியனைச் சுற்றிக் கொண்டு இருக்கிறது. சூரியனிடமிருந்து பூமி பிரிந்த காலத்தில் அது சூரியனின் வெப்ப நிலையில்தான் இருந்திருக்க முடியும். அதாவது, 5000 டிகிரி சென்டிகிரேட். அந்த நிலையிலிருந்து 500 கோடி ஆண்டுகளாகக் குளிர்ந்து பூமியின் வெப்பநிலை 30 டிகிரி சென்டிகிரேட்டுக்கு குளிர்ந்துள்ளது. நீராவி குளிரும்பொழுது அணுக் கூட்டங்களின் சலனத்தால் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் அது நீராக மாறுகின்றது. நீர் குளிரும் பொழுது ஒரு வெப்ப நிலையில் பனிக்கட்டியாகிறது. நீராவி, நீர், பனிக்கட்டி ஆகிய மூன்றுக்கும் குண மாறுபாடுகள் உள்ளன. ஆனால், மூன்றும் ஹைட்ரஜன், ஆக்சிஜன் என்ற மூலகங்களால் ஆனது தான். இதேபோல் பூமி குளிரும் பொழுது ஒரு நிலையில் உயிரற்ற பொருளில் இருந்து ஒரு ‘செல்’ உடைய உயிர் தோன்றுகிறது. அதாவது உலகத்தின் வெப்பம் தணிந்து நீர் தோன்றிய பிறகு “அமீனோ ஆசிட்” என்ற திரவத்தின் மீது சூரிய கிரகணங்கள் விழ, நாளடைவில் உயிர்த்துளிகள் ஏற்பட்டு, நாளடைவில் இவ்வுயிர்த்ளிகள் பரிணாம வளர்ச்சியின் காரணமாக “பெப்டைட்டு” என்பன ஏற்பட்டன. பிறகு, “புரோட்டின்கள்” ஏற்பட்டன. “புரோட்டின்” உணவில்லாமல் உயிர் வாழ முடியாது.

உயிருக்கு அஸ்திவாரம் இந்த ‘செல்’ ஆகும். உயிரற்ற பொருளாக பூமி தோன்றி சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு பின்புதான் உயிர் தோன்றியுள்ளது. இந்த செல்கள் பரிணாம வளர்ச்சியினாலும், சேர்க்கையினாலும் ஒரு செல் உயிர் பல செல் உள்ள உயிராகிப் பெருகி வளர்ந்து, மேலும் மேலும் உயர்ந்த நிலைகளுக்கு மாறி கடைசியில் மனித உருவம் தோன்றியுள்ளது.

குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையில் உயிரில்லாப் பொருள் என்று நாம் கூறக் கூடியது உயிருள்ளதாக மாறுகிறது. அதாவத, உயிர் என்பது பொருளின் ஒரு இன்றியமையாத குணமாகும். குறிப்பிட்ட சூழ்நிலையில் அது வெளிவருகிறத. இந்த சூழ்நிலை மாறினால் இந்தக் குணம் மங்கிவிடுகிறது.

Pin It