அதானியைக் காப்பாற்றுவதற்காக நாடாளுமன்றத்திற்குள்ளேயே வரவிடாமல் ராகுல் காந்தியை தடுத்து விட்டது ஒன்றிய ஆட்சி. ஆனால் இப்போது மோடி என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தை ராகுல் காந்தி இழிவு செய்து விட்டார் என்று ஒரு பொய்யான பிரச்சாரத்தை பாஜக தலைவர்கள் கட்டவிழ்த்துவிட்டு இருக்கிறார்கள். இந்தப் பிரச்சாரத்தில் உண்மை இருக்கிறதா?

ராகுல் காந்தி குறிப்பிட்ட நீரவ் மோடி, லலித் மோடி, மெகுல் சோக்ஸி ஆகிய மூவரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் முன்னேறிய ஜாதியினர். மோடி என்பதும் கூட ஒரு ஜாதி இல்லை. பெயருக்குப் பின்னால் மோடி என்று போட்டுக் கொள்வது ஒரு மரபு பெயர். அது ஜாதிப் பெயரல்ல.

பிலு மோடி என்று நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இருந்தார். அவர் பார்சி சமூகத்தைச் சேர்ந்தவர். அதேபோல் பாகல் என்று சொல்லப்படுகிற ஒரு மரபுப் பெயர் பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக இருக்கிற பூபேஷ் பாகல் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் அதே பாகல் என்ற மரபு பெயர் ராஜபுத்திரர்களாலும், பழங்குடியினர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மோடி பெயருக்குப் பின்னால் இருப்பது ஜாதி பெயர் இல்லை ஒரு மரபுப் பெயர் தான். மோடி பிறந்த ஜாதி எண்ணெய் எடுக்கும் ஒரு சமூகத்தை சேர்ந்தவர். இதுதான் இவர்கள் பிற்படுத்தப்பட்டோர் மீதான கவலை!

பிற்படுத்தப்பட்டோருக்கு தாங்கள் காவலர்கள் என்று பேசிக் கொண்டிருக்கிற இவர்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு என்ன செய்திருக்கிறார்கள்? அகில இந்திய மருத்துவப் படிப்புக் கோட்டாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து அதை மறுத்தது ஒன்றிய பாஜக ஆட்சி. நீதிமன்ற வரை சென்று வழக்கு தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தான் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு அகில இந்திய கோட்டாவில் இட ஒதுக்கீடு கிடைத்தது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இப்போது காங்கிரஸ் ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. பூபேஷ்பாகல் அந்த மாநில முதலமைச்சராக இருக்கிறார். மாநில சட்டமன்றம் பிற்படுத்தப்பட் டோருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்து மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. ஆனால் அந்தத் தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் தமிழ்நாட்டு ஆளுநரைப் போலவே கிடப்பில் போட்டுள்ளார்.

பொதுத்துறை வங்கிகளில் பொது மேலாளர் பதவிகளில் 91ரூ பேர் இப்போதும் பார்ப்பனர்கள் தான். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட் டோர் பாதி அளவுக்கு கூட வர முடியவில்லை. டெலிஸ் என்று ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகம் இருக்கிறது. இந்த டெலிஸ் என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், மோடி என்ற மரபுப் பெயரைப் பயன்படுத்தி வருகிறார்கள். பெரும்பாலோர் மோடி என்ற மரபுப் பெயரைப் பயன்படுத்துவதில்லை. ஆக மோடி என்பது ஜாதிப் பெயர் அல்ல; அது ஒரு மரபுப் பெயர். ஆனால் ராகுல் காந்தி பிற்படுத்தப்பட்ட ஜாதிக்கு எதிரானவர் என்ற ஒரு பொய்யான பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டு அதானியை காப்பாற்றுகிற பிரச்சாரங்கள் நாட்டில் ஒருபோதும் எடுபடாது.

ராகுலை எதிர்ப்பவர்கள் மனுதர்மத்தை ஆதரிப்பது ஏன்?

சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருக்கிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது கோலாரில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி அனைத்து திருடர்களும் மோடி என்ற ஒரு குடும்பப் பெயர் வைத்துள்ளனர் என்று போகிற போக்கில் ஒரு கருத்தைக் கூறினார்.

இதை எதிர்த்து பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். அந்த விசாரணை முடிந்த நிலையில் அவரை குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனையையும் விதித்துள்ளது. ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமதித்து விட்டார் என்று இந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

மனுதர்மம் இன்றைக்கும் பார்ப்பனரல்லாத மக்களை சூத்திரர் என்று கூறுகிறது. சூத்திரர்கள் என்று சொன்னால் பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்கள், விலைக்கு வாங்கப்பட்டவர்கள், அடிமை சேவகம் செய்பவர்கள் என்றெல்லாம் மனுதர்மம் எழுதி வைத்திருக்கிறது. அது தடை செய்யப்படவில்லை. ஒட்டு மொத்த பார்ப்பனரல்லாத மக்களும் பெண்களும் சூத்திரர் என்ற இழிவுக்கு இப்போதும் உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.

அதற்குப் பாதுகாப்பு அரணாக ஆகமம் என்ற ஒன்றை தூக்கிக் கொண்டு சூத்திரராக இருப்பவர்கள் கோயில் கர்ப்ப கிரகத்துக்குள் நுழைந்தாலே சாமி தீட்டு ஆகிவிடும் என்று கூறுகிறார்கள். இதை நீதிமன்றங்களும் தீர்ப்புகளாக உறுதிப்படுத்தி வருகிறது. இவ்வளவு அவமானங்கள் ஒரு பெரும்பான்மை சமூகத்தின் மீது பார்ப்பனியத்தால் சுமத்தப்படுவதைப் பற்றி இங்கே எவருக்கும் எந்த கவலையும் இல்லை. எந்த எதிர்ப்பும் நாட்டில் வருவதும் இல்லை.

இலண்டனில் ராகுல் காந்தி பேசியபோது, இந்திய ஜனநாயகத்தை விமர்சித்து விட்டதாக மக்களவையில் ஆளுங்கட்சியினரே பிரச்சினையைக் கிளப்பி நாடாளுமன்றத்தை முடக்கிக் கொண்டு வருகிறார்கள். ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். நான் விளக்கம் தர வேண்டும்; அதற்குப் பேச அனுமதி வேண்டும் என்று சொன்னால் உனக்கு பேசுவதற்கு அனுமதி கிடையாது என்கிறார்கள். இப்போது நாடாளுமன்றத்துக்குள் வரவிடாமலேயே பதவியை பறித்து விட்டார்கள். காஷ்மீரில் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் என்று பேசிய பேச்சை பெரிய பிரச்சினையாக்கி அவரது வீட்டிற்கு போலீசை அனுப்பி விசாரணை நடத்துகிறார்கள்.

இந்த பழிவாங்கும் அரசியலை எதிர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நான் ராகுல் காந்தி பக்கம் நிற்கிறேன் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். பழிவாங்கும் பார்ப்பன அரசியல் பாசிசத்தை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்துவதை தவிர இந்த நாட்டிற்கு வேறு விடுதலையே இல்லை.

- விடுதலை இராசேந்திரன்