சேலம் பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் சாதி ஆணவ கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட பத்து பேர் குற்றவாளிகள் என்று மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத் தக்கது. இந்த வழக்கில் தண்டனை மார்ச் 8ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இந்த வழக்கு பல்வேறு தடைகளைத் தாண்டி நீண்ட நெடிய காலம் நடந்து வந்துள்ளது. 2015ஆம் ஆண்டு நடந்த கொலையில் தற்போதுதான் தீர்ப்பு வந்துள்ளது.

p p mohanசாதி ஆணவப் படுகொலையான இந்த வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு காவல்துறை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா உயரதிகாரிகளின் நிர்ப்பந்தம் காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அதுகுறித்த விசாரணையும் கூட நடை பெறவில்லை. கோகுல்ராஜ் கொலைக்கு நீதி கிடைத்துள்ளது போல விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கிலும் நீதி நிலை நாட்டப்பட வேண்டும். அவரது தற்கொலைக்குக் காரணமான உயரதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த இந்த கொலையில் குற்றவாளிகளைக் காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் சாதி ஆணவ சக்திகளால் மேற்கொள்ளப் பட்டன. விஷ்ணுபிரியா தற்கொலையும் இதன் ஒரு பகுதியாகும். இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டதும் கூட கடுமையான சமூக அழுத்தத்திற்கு பிறகு நடந்தது.

நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் அரசுத் தரப்பு சாட்சிகள் பலரும் பிறழ் சாட்சிகளாக பல்டிய டித்தனர். கோகுல்ராஜின் தாயார் சித்ரா அளித்த மனுவின் அடிப்படையிலேயே மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான நீதிமன்றத்தி ற்கு இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் திறம்பட வாதாடிய அரசு சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் மற்றும் கோகுல் ராஜ் வழக்கறிஞர் பார்த்திபன் ஆகியோர் இந்த வழக்கை பல்வேறு நிர்ப்பந்தங்களுக்கு இடையே திறம்பட கையாண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளது பாராட்டத்தக்கது. அரசு தரப்பு வழக்கறிஞரான தமக்கு அரசு உரிய முறையில் ஒத்துழைக்கவில்லை என்றும் குறைந்தபட்ச வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்றும் வழக்கறிஞர் ப.பா.மோகன் கூறியுள்ளார்.

கோகுல்ராஜ் கொலை: கழகம் எடுத்த தொடர் போராட்டங்கள்

தலித் சமூகத்தைச் சார்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், ‘கவுண்டர்’ சமூகத்தைச் சார்ந்த பெண்ணை காதலித்த குற்றத்துக்காக கவுண்டர் சமூகத்தைச் சார்ந்த சில ஜாதி வெறியர்கள் கோகுல்ராஜ் தலையைத் துண்டித்து, பள்ளிப்பாளையம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே தண்டவாளத்தில் வீசி ‘தற்கொலை’ என்று ஏமாற்ற முயன்றனர். திராவிடர் விடுதலைக் கழகம் உண்மைக் குற்றவாளிகளைத் தண்டிக்கத் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியது.

வழக்கின் வெற்றிக்கு அயராது உழைத்த வழக்கறிஞர் ப.பா. மோகன்

பல்வேறு தடைகளை சந்தித்து வழக்கறிஞர் ப.பா. மோகன், வழக்கின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், 42 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்; பிறகு அவர்கள் பிறழ் சாட்சிகளாக மாறி விட்டனர். கோகுல் ராஜ் வகுப்புத் தோழியான சுவாதி முதலில் தன்னிடமிருந்து கோகுல்ராஜ் பிரிக்கப்பட்டு, கடத்தப்பட்டதையும் செல்போன் பிடுங்கப்பட்டதையும் ஒப்புக் கொண்டாலும் பிறகு பிறழ் சாட்சியாகி விட்டார்.

உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு விசாரணை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறினாலும் சாட்சியங்கள் அப்படியே இருந்தன. 106 சாட்சிகள் அளித்த சாட்சியங்களையும் 500 ஆவணங்களையும் 700 பொருள்களையும் பரிசீலித்து சந்தர்ப்ப சூழலை முன் வைத்து வழக்கை நடத்தினோம். அரசு தரப்பு ஒத்துழைப்பும் அவ்வளவாக இல்லை. இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு காவல்துறை அதிகாரிகள் சிறப்பான ஒத்துழைப்பைத் தந்தனர்.

சம்பவம் நடந்த இடத்தில் நிறுவப்பட்ட சி.சி.டி.வி. கேமரா மற்றும் உடற்கூறு ஆய்வுகள் அறிக்கைகளைக் கொண்டு அறிவியல் ரீதியாக குற்றம் நிரூபிக்கப்பட்டது என்றார் ப.பா.மோகன். அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு கடமையாற்றியபோதும் அவருக்கு ஊதியம் ஏதும் நிர்ணயிக்கப் படவில்லை. ஒவ்வொரு முறை வழக்கிற்கு சொந்த செலவிலேயே வந்து சென்று வழக்கை நடத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.

- விடுதலை இராசேந்திரன்