kilinochiகிளிநொச்சியைக் கடந்து முல்லைத்தீவை நோக்கி இலங்கை ராணுவம் முன்னகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தற்பொழுது கிளிநொச்சி யாரிடம், எப்படி இருக்கிறது? எங்கள் ஊர் கைப்பற்றப்பட்டிருக்கிறதா, வீழ்ந்திருக்கிறதா? கிளிநொச்சியின் வெற்றிக்கு யார் சொந்தக்காரர்கள்? எங்கள் ஊரின் மீதான போர்களும் அதன் இன்றைய நிலையும் எப்படி அர்த்தப்படுகிறது? பல கேள்விகள், விடைகள் தெரியாமல் நிற்கின்றன.

ஒரு விலங்கினத்தின் தோலை பிரித்தெடுப்பது போல், கிளிநொச்சி அதன் சனங்களிடம் இருந்து பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறது; சூழ்ச்சியிடம் சிக்குண்டு, அதிகாரத்திடம் பலியாகிக் கிடக்கிறது. போராளிகள் எங்கள் ஊரை விட்டு பின்வாங்கிய பொழுது இராணுவம் உள்ளே நுழைந்து, அதை தமது வெற்றியாக அறிவித்தது. இராணுவத்தால் கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட செய்தி சிங்களவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்தது; அதற்கு மாறாக உலகம் முழுக்க தமிழ் மனங்கள் எல்லாமே பெருவலி கொள்ளத் தொடங்கின. அன்று, முழு ஈழம் எங்கும் பெரும் துயரமும் கேள்வியும் நிலவிக்கொண்டிருந்தன; தோற்றுதான் விடுவோமா என்ற உணர்வு எல்லோரையும் வாட்டிக் கொண்டிருந்தது. ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வெற்றி அறிவிப்பு சிங்களவர்களால் குதுகலிக்கப்பட்டதையும், தமிழர்களுக்கு அது பெரும் துயரத்தை ஏற்படுத்திவிட்டுள்ளதையும் அனைவராலும் புரிந்துகொள்ள முடியும். சிங்களவர்கள் கிளிநொச்சி வீழ்ந்தது என்று கருதினால் தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஏற்கவேண்டும். மறைமுகமாகவன்றி வெளிப்படையாக இப்படித்தான் போர் அர்த்தம் குறித்து நிற்கிறது. 

ஆனால், கிளிநொச்சி விடயத்தில் பல மாதங்களாக அவகாசங்களையும் அரசாங்கத்தின் பிரசாரங்களையும் முறியடித்து வந்திருக்கிறார்கள், புலிகள். கடைசிவரை தங்களது சமரின் மூலம் புலிகளிடமிருந்து கிளிநொச்சியை இராணுவத்தால் கைப்பற்ற முடியாது போனது. புலிகள் பின்நகர்ந்த கிளிநொச்சிக்குள் நுழைந்து, தான் கைப்பற்றிக் கொண்டதாக அரசு அறிவிப்பதும் அதை பெரும் வெற்றியாக கொண்டாடுவதும் அர்த்தம் எதுவுமற்ற தோல்விக்கு சமமான வெற்றி என்றே தோன்றுகிறது.

கிளிநொச்சியை இராணுவம் பெறுமதியான வெற்றியாக கருதியிருப்பதற்கு காரணம் இருக்கிறது. தமிழ் மக்களின் ஈழம் குறித்த கனவும் குரலும் கிளிநொச்சியிலிருந்தே பிரகாசித்து, ஒலித்துக் கொண்டிருந்தது. விடுதலைப்புலிகள் தங்கள் போராட்டத்தை கிளிநொச்சியை வைத்தே இயக்கிக் கொண்டிருந்தார்கள். அதனால்தான் பெருமளவான இராணுவத்தை பலிகொடுத்தும் அதிக செலவு செய்தும் இலங்கை அரசு கிளிநொச்சியை கைப்பற்ற யுத்தத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தது. கிளிநொச்சியின் வீழ்ச்சி மூலம் ஈழம் பற்றிய கோரிக்கையை நிராகரிக்கலாம்; போராளிகளது பலத்தையும் செயற்பாடுகளையும் தடுத்துவிடலாம் எனவும் அரசு கருதுகிறது. இலங்கை ஜனாதிபதி தனது வெற்றி அறிவிப்பில் ‘புலிகளின் ஈழக் கனவுக்கான தலைநகரத்தின் சாம்ராஜ்யம் அழிக்கப்பட்ட’தாக கூறினார். இந்த வெற்றியின் மூலம் தனது இடத்தை இலங்கை அரசியலில் ஸ்திரப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார், ராஜபக்ஷ.

இப்பொழுது மட்டுமல்ல, இதற்கு முன்னாலும் ஒவ்வொரு முறையும் நொறுக்கப்பட்ட கிளிநொச்சியை வைத்து இலங்கை ஜனாதிபதிகள் அரசியல் செய்யத்தொடங்கும் போது, உண்மையில் எங்கள் சனங்களின் வாழ்வுதான் பலியிடப்படுகிறது. ஒரு நகரம் கைப்பற்றப்படும் போது அதன் சனங்கள் படையெடுப்பவர்களை ஆக்கிரமிப்பாளர்களாகவே கருதுவார்கள். கிளிநொச்சியை பொறுத்தவரை வாழ்வுக்காக நெடுநாளாக ஏங்குகிற சனங்கள்தான் அங்கு வாழ்ந்து வந்தார்கள். நாங்கள் நெடுங்காலமாக ஆக்கிரமிப்பாளர்களது படையெடுப்பால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். எனது பள்ளிப் பருவத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பெரியவர்களுடன் சேர்ந்து தெருவில் இறங்கி ஓட, மேலே போர் விமானங்கள் வட்டமடித்துக் கொண்டிருப்பது அன்றாட நிகழ்வு. ஈழப்போரின் ஒவ்வொரு கட்டத்திலும் கிளிநொச்சி பல பின்னடைவுகளை சந்தித்து வந்திருக்கிறது. அழிவுகளை, முற்றுகைகளை, படையெடுப்புக்களை கண்டிருக்கிறது. எல்லா கட்டங்களிலும் எங்கள் சனங்கள் தொடர்ந்து போரிடம் பலிவாங்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஈழப்போரின் முதலாவது கட்டத்தில், 1984இல் அப்போதைய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவ கிளிநொச்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார். தொடர்ந்து ஆறு ஆண்டுகள் இராணுவத்திடமிருந்த கிளிநொச்சியை 1990இல், ஈழப்போரின் இரண்டாம் கட்டத்தில் புலிகள் மீட்டெடுத்தார்கள். அதன்பிறகும் இலங்கை இராணுவம், இந்திய இராணுவ வருகை என மாறிமாறி கிளிநொச்சி கைமாறிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு கட்டங்களிலும் பட்ட காயங்கள், வடுக்கள் அதன் உடம்பில் இன்னும் ஆறாமலிருக்கின்றன.

கிளிநொச்சியிலிருந்து 1996ஆம் ஆண்டு சத்ஜெய ராணுவ நடவடிக்கையால், இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது மிகவும் கொடுமையான துன்பங்களை எங்கள் சனங்களால் அனுபவிக்க நேர்ந்தது. இப்படித்தான் திடிரென இராணுவம் பரந்தனையும் கைப்பற்றிவிட்டு கிளிநொச்சிக்குள் நகரத் தொடங்கியது. எறிகணைகள் வந்து பக்கத்தில் விழ விழ எல்லோரும் ஓடிக் கொண்டிருந்தார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து வந்த ஆறு லட்சம் சனங்களுடன் வன்னி சனங்களும் காடுகளிற்குள் அகலம் குறைந்த பாதைகளில் ஓடிக் கொண்டிருந்தார்கள். காட்டு மரங்களுக்குள்ளும் கோயில்களுக்குள்ளும் சின்னப் பள்ளிக் கூடங்களுக்குள்ளும், வீதிகளிலும் அவ்வளவு சனங்களும் அடைந்துகொண்டார்கள். உணவு, குடிநீர், குளிப்பு வசதி, கழிப்பறை வசதி என பல அடிப்படைத் தேவைகளுக்காக மிகவும் நெருக்கபடிப்பட நேர்ந்தது. நோய்கள் பரவிக் கொண்டிருந்தன. புலிகள் அப்பொழுதும் கிளிநொச்சியை விட்டு பின்வாங்கித்தானிருந்தார்கள். திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா அப்பொழுது ஜனாதிபதியாக இருந்து பல இராணுவ நடவடிக்கைகளை செய்து கொண்டிருந்தார். அவரின் வருகை சமாதானம் தரும் என்று நம்பிய ஈழமக்கள் கடுமையான போரின் கீழ் ஏமாற்றி அலைக்கழிக்கப்பட்டார்கள். 

புலிகளை முன்னைய ஜனாதிபதிகளைப் போலவே அழிப்பேன் என்று அவரும் விடாப்பிடியாக நின்றார். புலிகளுக்கு எதிரான போர் என்றே அவரும் கூறினார். சந்திரிக்காவுக்கும் கிளிநொச்சி மற்றும் ஏ-9 வீதி குறித்த பெரும் ஆசையிருந்தது. யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றினார். கிளிநொச்சி, இதற்கு முதல் சிதைந்து போனது இவரது இராணுவ நடவடிக்கைகளால்தான்.

இன்று போல்தான் அன்றும் கிளிநொச்சி சனங்கள் காடுகளில் அலைந்தார்கள். புலிகளை ஜனாதிபதிகள் தோற்கடிக்கிறபோது சனங்கள்தான் தோற்கிறார்கள்; புலிகள் குறிவைக்கப்படுகிறபோது சனங்கள்தான் குறிவைக்கப்படுகிறார்கள்; புலிகள் நெருக்கடிகளை சந்திக்கிறபோது சனங்கள்தான் நெருக்கடிப்படுகிறார்கள். இதனால்தால், தோல்விகளில் இருந்து புலிகளை சனங்கள் பலமூட்டி கட்டி எழுப்புகிறார்கள். ஈழத்தில் ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் போர் மீளமீள தொடங்கியபடியிருக்கிறது. பெரும்பாலும் கிளிநொச்சியுடன் ஒவ்வொரு கட்ட போரும் பல மாற்றங்களை சந்தித்திருக்கிறது. சந்திரிகாவுக்கும் கிளிநொச்சிதான் முதலில் கவனமுடைய தோல்வியை வழங்கியது. அது முதல் அவரை தொடர்ந்து தோல்விகள் துரத்தத் தொடங்கின. கிளிநொச்சி மீதான இராணுவ வெற்றியை வைத்து அரசியல் செய்த சந்திரிகாவை, போர்த் தோல்விகள்தான் கடைசியில் அரசியலில் இருந்தே ஒதுக்கி வைத்தன. தமிழ் மக்களை எண்ணிக்கையற்று பலிகொன்று பல்வேறு அலைச்சல்களுக்கு உள்ளாக்கிய குற்றம் மட்டும்தான் இப்போது அவருடன் மிஞ்சியிருக்கிறது.

புலிகள், சந்திரிகாவிடமிருந்து 1998ஆம் ஆண்டில் மீளவும் கிளிநொச்சியை மீட்டார்கள். இதில் 1500 வரையான படைகள் கொல்லப்படபட, 2000 வரையிலான படைகள் காயமுற்றார்கள். இருந்தாலும், 2000ஆம் ஆண்டில் ஆனையிறவை கைப்பற்றிய பிறகே மக்கள் கிளிநொச்சியில் குடியேறினார்கள். நாங்கள் திரும்பவும் கிளிநொச்சிக்கு திரும்பிய பொழுது நகரம் முற்றாக சிதைந்திருந்தது. கிளிநொச்சி நகரத்தை சுற்றி இருபது கிராமங்களுக்கு மேல் இருக்கின்றன. எல்லாவற்றிலும் வீடுகள், கிணறுகள், வேலிகள், மலசலகூடங்கள் எல்லாம் அழிந்து கிடந்தன. போராளிகளுடன் சேர்ந்து சனங்கள் மீள நம்பிக்கையுடன் கிளிநொச்சி நகரத்தையும் அதனை சுற்றியிருந்த கிராமங்களையும் கட்டியெழுப்பினார்கள். தூக்கி நிறுத்தினார்கள். போர் அழித்த கிளிநொச்சியை சமாதானம் வந்து கட்டிக்கொண்டிருந்தது.

கிளிநொச்சியை ஒரு அழகிய நகரமாக்கி கொண்டிருந்தார்கள் புலிகள். அவர்களுக்கு புதிய நகரங்களையும் கட்டிடங்களையும் மிகவும் விரைவாக எழுப்பி விடுகிற திறன் இருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிற நகரங்கள் எப்படி இருககும் என்பதை கிளிநொச்சியை வடிவமைப்பதன் முலம் வெளிக்காட்டியிருந்தார்கள், அவர்கள். போரில் வீரமரணம் அடைந்த போராளிகளை மிகவும் உன்னத்துடன் நேசிக்கும் விடுதலைப்புலிகள், கிளிநொச்சி நகரத்தின் அநேக இடங்களில் அவர்களை நினைவு கூறுகிற கற்களையும் தூபிகளையும் அமைத்திருக்கிறார்கள். போராளிகளின் இரத்தமும் குருதியும் கொண்டுதான் கிளிநொச்சி நவீன நகரமாக எழும்பியது. ஒரு விதத்தில் ஈழப்போராட்டத்தின் குறியீடாக இருந்த கிளிநொச்சி, இக்காலகட்டத்தில் ஒரு சமாதான நகரமாகவும் உலகமெங்கும் அறியப்பட்டது. உலகளவிலான சமாதான முயற்சிகளை கிளிநொச்சியில் இருந்துதான் புலிகள் மேற்கொண்டார்கள். சமாதான காலத்தில் கிளிநொச்சி பலரது கவனத்தையும் தனது பக்கம் இழுத்துக்கொண்டிருந்தது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எங்கள் மக்கள் சமாதானம் கட்டிய வாழ்வில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். கிளிநொச்சியை நம்பியே இராணுவம் கட்டுப்பாடு செலுத்துகிற இடங்களில் உள்ள சனங்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பலவாறு யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

சமாதானம் புனரமைத்த நகரத்தை இப்பொழுது யுத்தம் அழித்துவிட்டது. கிளிநொச்சியில் மக்கள் கட்டிய வாழ்வு முழுவதும் அழிந்து முடிந்து போயுள்ளது. இன்று அந்த கனவு, குருதி உழைப்பு எல்லாவற்றையும் இராணுவம் மிதித்துக்கொண்டு நிற்கிறது. கிளிநொச்சியை கட்டியெழுப்பும் போதே, உண்மையில் நாங்கள் ஒரு சூழ்ச்சி வலைக்குள் இருக்கிறோம் என்பதை அறிந்திருக்கவில்லை. உலக நாடுகள் சமாதானத்தின் மூலம் கிளிநொச்சியை தனது பொறிக்குள் கொண்டு சென்று கொண்டிருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாமல் இருந்தது. கிளிநொச்சியின் தெருக்களில் வந்த சமாதான வாகனங்களின் பின்னால் போர் வந்து கொண்டிருப்பதை எங்கள் சனங்கள் கவனிக்காதிருந்தனர். புலிகளிடமிருந்து கிளிநொச்சி பறிக்கப்படுதற்கான வியூகங்கள் அப்பொழுது முதல் வகுக்கப்பட்டிருக்கின்றன. சிமெண்ட், பெற்றோல் பிற பொருட்கள் எல்லாம் சமாதானத்தில் தான் கிளிநொச்சிக்குல் வந்தன. இப்படி வந்த அநேகமான பொருட்கள் போராடுகிற மக்களை திசை திருப்புகிற உத்தியுடன்தான் வந்திருக்கின்றன.

சூழ்ச்சியான சமாதானத்தின் விளைவால் இன்று கிளிநொச்சி பேரழிவுகளை சந்தித்திருக்கிறது; அதன் சனங்களையும் இழந்திருக்கிறது. சூழ்ச்சியான சமாதானத்திடம் ஈழப்போராட்டம் சிக்கியது போலவே கிளிநொச்சியும் சிக்கிவிட்டது. 2002இல் செய்யப்பட்ட போர் நிறுத்தம் 2006இல் அறிவிக்கப்படாது முறிந்து போர் மீளவும் தொடங்கியபோதே எங்கள் ஊரின் மீதான குறியும் தொடங்கியது. கிளிநொச்சியில் மையமுற்றிருந்த ஈழப்போரட்டத்தின் கனவுகளையும் உழைப்பையும் முற்றுகையிட்ட இலங்கை இராணுவம், முதலில் ஈழத்தின் கிழக்கு, வடக்கின் மற்ற பகுதிகள் என்று கைப்பற்றிக்கொண்டு இன்று கிளிநொச்சியையும் தாண்டிவிட்டது. அதற்கு முன்னால், கிளிநொச்சியில் நடந்த எண்ணற்ற விமானத் தாக்குதல்களில் பல மக்கள் பலிகொள்ளப்பட்டார்கள். வாழிடங்கள், விளை நிலங்கள் அழிக்கப்பட்டன. குழந்தைகள், பாடசாலை மாணவர்கள் மனிதாபிமானமற்ற வகையில் கொல்லப்பட்டார்கள். சமாதானத்தின் நகரத்துக்கு அரசு பலிகளை பரிசாக வழங்கிக்கொண்டிருந்தது. யாருடையதுமான கேள்விகள், விசாரணைகளற்று இலங்கை அரசின் பலி நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சமாதானத்திற்கு வாழ்த்துரைத்து வரவேற்ற எந்த நாடுகளும் இவைகளை கண்டு கொள்ளவில்லை.

கிளிநொச்சியிலிருந்து கடந்த ஐந்து மாதங்களுக்கு முதலிலேயே மக்கள் வெளியேறிவிட்டார்கள். ராணுவ விமானங்களின் கொடுமையான தாக்குதல்கள் மேலும் அதிகரிக்கவும் தரைப்படைகளின் முற்றுகைகள் நெருக்கவும் நாங்கள் வெளியேற நேரிட்டது. அரசின் அவகாசங்களை முறியடித்து கிளிநொச்சியை புலிகள் தொடர்ந்து பாதுகாத்து வந்தார்கள்; புறநகரில்தான் சண்டைகள் நடைபெற்றன; புறநகர் சண்டைகள் பலவற்றில் பெருமளவு இராணுவம் கொல்லப்பட்டது. என்றாலும், கிளிநொச்சியை தொடர்ந்து புலிகள் பாதுகாத்து கொள்ளுவார்கள் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்த போது திடிரென புலிகள் கிளிநொச்சியை விட்டு வெளியேறினார்கள். அதில் அவர்கள் தந்திரங்களையோ வியூகங்களையோ கொண்டிருக்கலாம். கிளிநொச்சியில் இருந்து வெளியேறிய புலிகளுடன் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட அதன் சனங்களும் வெளியேறினார்கள். சாந்திரிகாவிடம் இருந்து காப்பாற்றப்பட்ட கிளிநொச்சியை, அங்கு அதன் சனங்கள் எழும்பிவந்த வாழ்வை மகிந்த ராஜபக்ஷே பத்து வருடங்களில் பறித்துவிட்டார். கிளிநொச்சியின் மக்கள் இன்று மிகவும் சிறிய ஒரு நிலப்பகுதியில் ஒடுங்கியபடி இருக்கிறார்கள். பசுமையாக இருந்த சனங்களின் முகங்கள் வாடி மிகவும் மெலிந்து கொண்டிருக்கிறது. உணவுக்கும், குடிநீருக்கும், குந்தியிருப்பதற்கும் சிறிய துண்டு நிலத்திற்கும் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். ஆனால், அந்தக் கஷ்டங்களை சிறியதாக நினைக்கும் வகையில் இந்த சிறிய நிலப்பகுதியை ஒரு நாளுக்கு பல தடைவை என விமானங்கள் தாக்கிக் கொண்டிருக்கிறது. தினமும் மக்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி பசியும் பலியுமாக வாழுகிறபோதுதான் கிளிநொச்சி படைகளிடம் வீழ்ந்த செய்தி எங்களுக்கு கிடைத்தது. இன்றைக்கு கிளிநொச்சியில் இராணுவம் புகுந்து நிற்கிறதை பார்த்து எம் மக்கள் பெரும் துயரத்துடனும் கோபத்துடனும் இருக்கிறார்கள். நாங்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டு தொடங்கிய வாழ்வை சிதைத்துவிட்டு, அரசு வெற்றி கொண்டாடி சிங்கள மக்களை மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த போருக்கு பின்னால் பெரும் சூழ்ச்சிகள் இருக்கின்றன. உலக நாடுகள் பலவற்றின் இராணுவ உதவிகள், ஆலோசனைகள் இருக்கின்றன. கிளிநொச்சியுடன் இந்த போர் முடிந்துவிடப் போவதில்லை; தொடர்ந்து தமிழர் நகரங்களை குறிவைத்து முன்னெடுக்கப்படும் என்று நாங்கள் நினைத்திருந்தது போலவே நிகழ்ந்து வருகிறது. புலிகளுக்கு எதிரான அல்லது பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என்று வெளியில் அறிவிக்கப்பட்டு உலக அங்கீகாரத்தை பெற்றிருக்கிற இந்த யுத்த நடவடிக்கைகள் தமிழர் நகரங்களை கைப்பற்றிவிட்டு, தமிழ் மக்களை அழித்துவிட்டு, புலிகளை அகற்றிவிட்டு, தொடர்ந்து என்ன செய்யவேண்டும் என்பதற்கான முன்திட்டங்களை இப்போதே கொண்டிருக்கிறது. இதுநாள் வரையிலான எழுச்சிகளையும் அடையாளங்களையும் அழிப்பதன் மூலம் தழிழினத்தின் கனவுகளை முற்றாக தகர்த்துவிடலாம் எனவும் இலங்கை அரசு போர் கொண்டு நிற்கிறது. தமிழ் இனத்தை முற்றாக அழித்து, அதனுடன் தமிழ் தேசிய எண்ணத்தை சிதைத்து, தனித்த சிங்கள மொழியாலும் பௌத்த மதத்தாலும் இலங்கை என்ற நாட்டை உருவாக்கவே இந்தப் போர் நிகழுகிறது. 

கிளிநொச்சியில் படைகளது நுழைவு அந்த போர்கொள்ளைகளை மிகவும் வெளியாக காட்டுவதுடன் அதனால் ஏற்படப்போகிற மாற்றங்களையும் விளைவுகளையும் தெளிவுருத்துகிறது. வாழ்வுக்காக தவித்துக் கொண்டிருக்கிற எங்கள் மக்களது இருப்பை சிதைத்து, அதில் இராணுவ செயற்பாடுகளை உலகம் நிகழ்த்துகிறது.

ஆனால், இன்றும் கிளிநொச்சி குறித்து ஈழத் தமிழர்களுக்கு பெரும் கனவும் நம்பிக்கையும் இருக்கிறது. கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதன் அர்த்தத்தை புலிகளின், ஈழத் தமிழர்களின் கனவு வீழ்ச்சியாக ராஜபக்ஷ காட்டிக் கொண்டிருக்கிறார். தமிழர்களின் மனதை நொறுக்குவதைப்போலவே கிளிநொச்சி நொறுக்கப்பட்டது. அப்படியெனில் கிளிநொச்சி மற்றும் வன்னி சனங்களுக்கு, கிளிநொச்சி நகரத்துக்கள் இராணுவம் புகுந்தபோது ஏற்பட்ட துயரத்தாலான கோபத்திலிருந்தே இனி ஈழ அரசியல் மாற்றத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அதைத்தான் உலகம் எங்கிலும் வாழ்கிற ஈழத்தமிழர்களும் ஈழத்தமிழர் நலன் குறித்த அக்கறையாளர்களும் விரும்புகிறார்கள்.

புலிகளுக்கும் இது ஒரு பலம். அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்ட வன்னி மக்களது வாழுகிற கனவின் கடும் கோபத்திற்கு இலங்கை அரசும் இராணுவமும் உள்ளாகியிருக்கிறது. சந்திரிகாவைவிட தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே மிகவும் பெருந்தெகையான துயரங்களை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறார். அதில் ஒன்று, முன்னைப் போலவே கிளிநொச்சி நகரத்தை கைப்பற்றி மக்களை துரத்தியிருப்பது. அப்படியென்றால் கிளிநொச்சி இனி வகுக்கிற வியூகங்களில்தான் எதுவும் நடக்கவிருக்கிறது என்பதை தெளிவாக உணர முடிகிறது. கிளிநொச்சியின் சனங்கள் எதிர்கொண்டிருக்கிற நம்பிக்கை சிதைவுகளையும் அலைவுகளையும் கொண்டு, போராட்டத்துக்கு மீள உயிருட்டுகிற இடத்திற்கு செல்வதன் முலம், இலங்கை அரசின் வெற்றிக் கனவுகளிலிருந்து அவர்களை வெளியேற்றி, போராட்டதின் தேவையையும் நம்பிக்கையையும் தக்க வைத்துக்கொள்ள முடியும். புலிகளுடன் சேர்ந்து கிளிநொச்சியை விட்டு வெளியேறியபோது, ஈழப்போராட்டம் பற்றிய தமது கனவுகளையும் நம்பிக்கைகளையும்கூட மக்கள் பின் எடுத்துச்சென்றிருக்கின்றனர்.

- தீபச்செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It