நேபாளத்தில் உள்ள பரியபூர் கிராமத்தில் 3 லட்சம் விலங்குகள் மற்றும் பறவைகளை பலியிட பல ஆயிரம் இந்து பக்தர்கள் குவிந்தனர். இந்த விழா நவம்பர் 24 அன்று துவங்கியது.

நேபாளத்தில் உள்ள பரியபூர் கிராமத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை காதிமாய் கடவுளுக்கு பலியிடும் விழா நடக்கிறது. காதிமாய் அதிகாரம் தரும் பெண் கடவுள் ஆகும். காதிமாய்க்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு இந்தியா - நேபாளம் நாடுகளில் இருந்து பல ஆயிரம் இந்து பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இவர்கள், 15 ஆயிரம் எருமைகள் உள்ளிட்ட 3 லட்சம் பறவை மற்றும் ஆடுகளை தங்கள் இஷ்ட தெய்வத்திற்காக பலியிடுகிறார்கள். இந்த பலியிடும் நிகழ்வுக்கு உலகம் முழுவதும் உள்ள விலங்கு உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் மிகப்பெரும் எண்ணிக்கையில் விலங்குகள் பலியிடப்படும் இவ்விழாவை தடுக்க பிரெஞ்ச் நடிகை பிரிகிடி பார்ட் உட்பட விலங்கு உரிமை ஆர்வலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நேபாளத்தில் உள்நாட்டுப் போர் 2006-ம் ஆண்டு முடிவுக்கு வந்ததால் இந்த ஆண்டு விழாவுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல நூறு ஆண்டுகளாக மதப்பாரம்பரியமாக நடத்தப்ப டும் இந்தப் பலி திருவிழாவை நிறுத்த நேபாளஅரசு மறுத்துள்ளது. மேலும் இந்நிகழ்ச்சிக்கு 60 ஆயிரம் டாலர் நிதி உதவி தரவும் உறுதியளித்துள்ளது.

பண்டிகையையொட்டி கோவிலில் ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டனர்.

மேலும் அங்கு, மது பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Pin It