தமிழகத்திலுள்ள பெரிய நூலகங்களில் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள 134 ஆண்டு பழமைவாய்ந்த பென்னிங்டன் பொதுநூலகம் 2-வது இடத்தை வகிக்கிறது.

இங்கு, 1953-ம் ஆண்டிலிருந்து வெளிவந்த தமிழக அரசிதழ்கள் மற்றும் அரசாணைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

1875-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த பென்னிங்டன் ஆசியுடன், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியராக இருந்த சரவணமுத்துப்பிள்ளை, ஏ. ராமசந்திரராவ், டி. ராமஸ்வாமி ஐயர், டி.கிருஷ்ணராவ், முத்துஐயங்கார் மற்றும் முத்துச்சாமி பிள்ளை ஆகியோர் இணைந்து, இந்த

நூலகத்தை ஆரம்பித்தனர்.

மாவட்ட ஆட்சியரைத் தலைவராகவும் நகரில் தர்மசிந்தனை உள்ளவர்களையும், நூலக வளர்ச்சிக்கு பாடுபடும் மனப் பக்குவம் கொண்டவர்களையும் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்து, அவர்களில் துணைத் தலைவர், செயலர், பொருளாளர் கொண்ட குழு இந்நூலகத்தை நிர்வகித்து வருகிறது. தற்போது மாவட்ட ஆட்சியரையும் சேர்த்து 14 உறுப்பினர்கள் உள்ளனர்.

நூலகத்தில் தமிழில் 20,113 புத்தகங்களும், ஆங்கிலத்தில் 21,277 புத்தகங்கள் என மொத்தம் 41,390 புத்தகங்கள் உள்ளன.

நூலகத்தின் அரிய தமிழ்ப் புத்தகங்களில், கலித்தொகை (1887), த்ருவ சரித்திர கீர்த்தனை (1890), இங்கித மாலை மூலமும் உரையும் (1904), தியாகராசலீலை (1905), வள்ளலார் சாஸ்திரம் (1907), திருமந்திரம் (1912) ஆகியன. இதுபோக, பல அபூர்வமான தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் இங்கு ஏராளமாக உள்ளன.

தினசரி சராசரியாக 360 வாசகர்கள் நூலகத்துக்கு வந்து பயனடைந்து செல்கின்றனர். நூலகத்துக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 17 நாளிதழ்களும், மாத மற்றும் வார இதழ்கள் தமிழில் 69-ம் வருகின்றன. ஆங்கிலத்தில் மாத மற்றும் வார இதழ்கள் 47-ம், ஆங்கிலத்தில் அறிவியல் தொடர்புடைய இதழ்கள் 46-ம் வருகின்றன.

1,344 சதுர அடியில் சொந்தக் கட்டடத்தில் இயங்கிவரும் இந்த நூலகம், ஆங்கிலப் பிரிவும், அரிய புத்தகங்கள் அடங்கிய பிரிவும், பழைய இலக்கியங்களைத் தேடுபவர்களுக்கும், போட்டித் தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்கும் வேடந்தாங்கலாக அமைந்துள்ளது.

வாசகர்களின் உபயோகத்துக்காக, பழமையான அரிய புத்தகங்கள் சிடியில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

சிறுவர்களுக்கென தனிப்பகுதி அமைத்து அவர்களே நூல்களை எடுத்து படிக்கும் விதத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இவர்களுக்கு நல்லறிவையும், ஒருமைப்பாட்டினையும் வளர்க்கும் பொருட்டு வாரந்தோறும் நீதிக்கதைகள், ஆன்மீகக்கதைகள், சுதந்திரப் போராட்டக் கால கதைகள் ஆகியன தொலைக்காட்சியில் படமாகக் காட்டப்படுகின்றன.

குடியரசு தலைவராக இருந்தபோது டாக்டர்.அப்துல்கலாம் நூலகத்தைப் பார்வையிட்டு, பார்வையாளர்கள் பதிவேட்டில் நூலகத்தின் செயல்பாடுகள் மிக நன்றாக இருப்பதாக பதிந்துள்ளார். மேலும், இந்த் நூலகத்துக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் வருகின்றனர்.

நன்றி : தினமணி - 29-10-09

Pin It