தமிழ்நாடு மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளிலும் தமிழ்நாட்டின் அரசு மற்றும் ஆசிரியப் பணி நியமனங்களிலும் வடநாட்டுக்காரர்கள் குவிந்து வருவதைக் கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய அரசுப் பணிகளில் பறிபோகும் தமிழர் உரிமைகளைக் கண்டித்து தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் மார்ச் 22, 2018 காலை 10.30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவக்குமார் தலைமை தாங்கினார்.

kolathoor mani mallai sathya and viduthalai rajendran

நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மல்லை சத்யா (ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்), சங்கர் (மேலாண்மை இயக்குனர், சங்கர் அய்.ஏ.எஸ். அகாடமி), அருண் முருகன் (மே 17 இயக்கம்), வேணுகோபால் (தமிழக வாழ்வுரிமை கட்சி), டைசன் (தமிழர் விடியல் கட்சி), எம்.எஸ். வெங்கடேசன் (பொதுச் செலயாளர், வருமானவரி ஊழியர் சங்கம்), ஜி. குணவதி (வருமானவரி பிற்படுத் தப்பட்டோர் ஊழியர் சங்கம்) ஆகியோர் உரை ஆற்றினர். அன்பு. தனசேகர் (வருமான வரித் துறை) நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்தார்.

நிகழ்வில் தொடர்வண்டித் துறை, சிண்டிகேட் வங்கி, ஆவடி டேங்க் தொழிற்சாலை ஊழியர்களும், சங்கர் அய்.ஏ.எஸ். அகாடமியில் பயிலும் மாணவர் களும் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்களும் பெருமளவில் பங்கேற்றனர். தேன்ராஜ் நன்றி கூறினார்.

மத்திய அரசு தேர்வாணையத்தின் அகில இந்திய தேர்வுகளை இரத்து செய்து, மீண்டும் மாநில அளவில் தேர்வுகளை நடத்து! தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்து! பணி நியமனங்களில் அந்தந்த மாநில மக்களை பணியில் அமர்த்து! என்ற மூன்று கோரிக்கைகளை முன் வைவத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த 2013 முதல் 2016 வரை மத்திய அரசு தேர்வாணையத்தில் உருவாக்கப்பட்ட பணியிடங் களில் 1988 வடநாட்டுக்காரர்கள் தமிழ்நாட்டில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதையும், 110 பேர் மட்டுமே (6 சதவீதம்) தமிழர்கள் என்பதையும், தமிழக மத்திய அரசு துறைகள் இந்திக்காரர் களாலேயே ஆக்கிரமிக்கப்பட்டு வருவதையும் கண்டன உரையில் பலரும் சுட்டிக்காட்டினர்.

தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பீகார், ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களின் பயிற்சி நிறுவனங்கள் கள்ளக் கூட்டு வைத்துக் கொண்டு மோசடிகள் செய்து வருவதையும் ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் குறிப்பிட்டனர்.

இப்படி மோசடியாக வருமான வரித் துறையில் பணியில் சேர்ந்த மூன்று பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 2014ஆம் ஆண்டு தேர்வில் மோசடிகள் நடந்ததால் தேர்வுகள் இரத்து செய்யப்பட்டன. நேர்முகத் தேர்வு ஏதும் இல்லாத நிலையில் வடமாநிலத்தவர் எழுத்துத் தேர்வில் இலஞ்சம் கொடுத்து தேர்ச்சிப் பெற்று விடுகிறார்கள். அஞ்சல் துறையில் கடைநிலை ஊழியர்களுக்கான தேர்வுகள் அந்தந்த மாநிலங்களில் நடத்தப்பட்ட நிலை மாற்றப்பட்டு அகில இந்திய அளவில் நடத்தப்பட்டு வருவதால் தமிழே தெரியாத வடநாட்டுக்காரர்கள் தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற நிலையில், மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்தன. இதனால் கடந்த ஆண்டு அஞ்சல்துறை ஊழியர்களுக்கான தேர்வும் இரத்து செய்யப்பட்டது.

இப்போது மிகக் குறைந்த ஊதியம் பெறும் மத்திய அரசுத் துறைக்கான கடைநிலை ஊழியர்களுக்கான தேர்வும் இந்த ஆண்டு முதல் அகில இந்திய அடிப்படையில் தேர்வாணையத்தால் நடத்தப்படும் என்று மாற்றி விட்டார்கள். கடைநிலை ஊழியர் நியமனங்களும், இனி வடநாட்டுக்காரர்களுக்கே கிடைக்கும் நிலையை உருவாக்கி விட்டார்கள்.

வங்கிப் பணியாளர் தேர்வுகளில் மாநில மொழி பேசுவோரே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதி மாற்றப்பட்டுவிட்டது. ‘பாரத ஸ்டேட் வங்கி’ கடந்த ஆண்டு ஆங்கில மொழி மட்டுமே அடிப்படைத் தகுதியாக்கிவிட்டது. இதனால் இந்த வங்கியின் நியமனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்கள் உரிமைகள் பறிக்கப்பட்டு, வடமாநிலத்தவரும் கேரளத்தவரும் பெருமளவில் குவிந்து விட்டனர்.

தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங் களில், தொழிற்சாலைகளில் தொடர்ந்து, தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், இப்போது தமிழ்நாட்டு அரசுப் பணிகளிலும் வெளி மாநிலத்தவர்கள் புகுத்தப்படுவதாக வரும் செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழ்நாட்டிலுள்ள பல்தொழில்நுட்பக் (Polytechnic) கல்லூரிகளில் உள்ள 1058 விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்காக “ஆசிரியர் தேர்வு வாரியம்” (Teachers Recruitment Board) வழியே கடந்த 16.09.2017 அன்று எழுத்துத் தேர்வு நடைபெற்றது. சற்றொப்ப 1,33,567 பேர் அதில் பங்கேற்றனர். அத் தேர்வின் முடிவுகள் கடந்த 07.11.2017 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

பதிவு எண்கள் பலவற்றை தனித்தனியே எடுத்து அவர்களின் பெயர்களைப் பார்த்தபோது, அவற்றில் பெரும்பாலானவை குப்தா, ரெட்டி, சர்மா, நாயர், சிங், பாண்டே என்ற பின்னொட்டுடன் கூடிய வெளி மாநிலத்தவர்களின் பெயர்களாகவே இருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதே ஆசிரியர் தேர்வு மையம் கடந்த 31.05.2017 அன்று, பட்டதாரி ஆசிரியர் மற்றும் சிறப்புப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டபோது, பதிவு எண்ணுடன் பெயரையும் குறிப்பிட்டிருந்தனர். அதற்கு முன்பு 27.04.2017 அன்று அரசுப் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிவதற்கான துணைப் பேராசிரியர் பணியிடங் களுக்கான தேர்வு முடிவுகளிலும், பதிவு எண்ணுடன் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு (23.11.2016) வெளியான விரிவுரையாளர் பணியிடங் களுக்கான தேர்வு முடிவுகளில்கூட, பதிவு எண், பிரிவு மட்டுமின்றி பெயரும் குறிப்பிடப்பட் டிருந்தது.

இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering) துறைக்கு 219 விரிவுரையாளர்கள் தேவை என்ற நிலையில், அதில் பொதுப்பட்டியலுக்கான 67 இடங்களில் 46 பேர் வெளி மாநிலத்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அதாவது, இத்துறையின் கீழ் தமிழ்நாட்டு மண்ணின் மக்களுக்கு பொதுப் பட்டியலில் கிடைக்க வேண்டிய இடங்களில் 68 விழுக்காட்டு இடங்கள் வெளி மாநிலத்தவர்க்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.

 அதேபோல், மின்னணு தொடர்பியல் (ECE) துறைக்குத் தேவைப்படும் 118 இடங்களில், பொதுப்பிரிவுக்கான 36 இடங்களில் 31 பேர் வெளி மாநிலத்தவர் ஆவர். அதாவது, இத்துறையின் கீழ் தமிழ்நாட்டு மண்ணின் மக்களுக்கு பொதுப் பட்டியலில் கிடைக்க வேண்டிய இடங்களில், 86 விழுக்காட்டு இடங்கள் வெளி மாநிலத்தவர்க்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் துறைக்கு எடுக்கப்பட்ட 3 பேரில் ஒருவர் வெளி மாநிலத்தவர்!

பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலம் இருப்பினும், தமிழ்வழிக் கல்வியில் பயின்றுவிட்டு சேரும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தேர்வின்போது அவர்கள் தமிழிலும் எழுதலாம் என்ற நடைமுறை உள்ளது. இவ்வாறு எழுதுபவர்களில் கணிசமானவர்கள், கிராமப்புறங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் ஆவர். இனி, தமிழேத் தெரியாத வெளி மாநிலத்தவர்கள் விரிவுரையாளர்களாகப் பணியமர்த்தப்படுவதால், இந்த உரிமை அடியோடு ஒழிக்கப்படும்! தமிழில் நடத்தப்படும் பாடங்கள் ஆங்கிலத்தில் நடத்தப்படும். ஆங்கிலமும் பேசத் தெரியாத வெளி மாநிலத்தவர் இருப்பின், அந்த வகுப்பு மாணவர்களின் எதிர்காலமே கேள்விக் குறிதான்! எனவே, இந்த நியமனங்கள் காரணமாகத் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித்தரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும்! பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் தமிழ் மாணவர்களின் எதிர்காலம் வினாக்குறியாகும்!

 குசராத்தில் 1995லிருந்தும், கர்நாடகாவில் 1986லிருந்தும், மேற்கு வங்கத்தில் 1999லிருந்தும் என - தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மண்ணின் மக்களுக்கே வேலை என சட்டமியற்றப்பட்டுள்ளது. இந்தியத் தேசியம் பேசும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியிலுள்ள இந்தியத் தலைநகர் தில்லியில், தில்லிப் பல்கலைக்கழகத்திலும், அதில் இணைக்கப்பட்டுள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் 85 விழுக்காட்டு இடங்கள் அம் மாநிலத்தவருக்கே வழங்க வேண்டுமென சூலை 2017 மாதம், தில்லி சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சியினரும் இணைந்து ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி யுள்ளனர்.

 இந்நிலையில், தமிழ்நாட்டில் இந்திய அரசுப் பணிகளில் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசுப் பணி களிலும் வெளி மாநிலத்தவர்கள் பணியமர்த்தப் படுவது மண்ணின் மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியும், துரோகமும் ஆகும்!

கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்த கருத்துகள் சுட்டிக் காட்டப்பட்டன.

Pin It