ஃபாரூக் படுகொலையைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள், இயக்கங்கள், தோழர்கள் வெளியிட்ட அறிக்கையிலிருந்து சில பகுதிகள்:
கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு
கடந்த 16ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு கோவை, உக்கடம் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் பாரூக், சில நபர்களால் கொலை செய்யப்பட்டு இறந்தார். இச்செயலை கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.
இஸ்லாமிய வழிகாட்டுதலை மீறி யாரேனும் சில முஸ்லிம்கள் இந்தக் கொடூரத்தை செய்திருப்பார் களேயானால் அவர்களை ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இந்த நடவடிக்கை இஸ்லாமிய வழிமுறையும் இல்லை என்பதை இந்த நேரத்தில் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறோம். மேலும் குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.
கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தோழர் பாரூக் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவிக்கிறோம். இக்கூட்டமைப்பு சார்பில் அனைத்து உண்மை குற்றவாளிகளையும் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும், மனித நேயம் காத்திட அனைத்து ஜனநாயக நடவடிக்கை களுக்கும் அனைத்து ஜமாஅத்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதியமான் (ஆதித் தமிழர் பேரவை)
கருத்தை சந்திக்க திராணியற்ற மதவெறிக் கோழைகளின் மனித நேயமற்ற இக் கொடூரச் செயலால் நிர்கதியாக நிற்கும் அவரது குடும்பத் தாருக்கு என்ன பதில் சொல்லப்போகிறது இந்த மதவெறி!
கோவையில், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ஃபாரூக் படுகொலை செய்யப்பட்டிக்கும் மனித நேயமற்ற இச்செயல் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
நாடெங்கும் பகுத்தறிவாளர்களும், முற்போக்கு சிந்தனையாளர்களும் குறிவைத்து கொலை செய்யப்படுவது, நாளும் நாளும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது கோவையில் அதுபோன்ற ஒரு கொடூரக் கொலை நடந்திருப்பது, மிகவும் அதிர்ச்சியாக உள்ளது, இக்கொலையை தான்தான் செய்தேன் என்று ஒரு இசுலாமிய இளைஞரே சரணடைந்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலமாக இசுலாமிய இளைஞர்கள் பலர் தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு தங்களை அம்பேத்கரிய பெரியாரிய மார்க்சிய சிந்தனைகளுக்கு உட்படுத்தி அந்த அரசியல் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லும் அமைப்புகளில் தங்களை இணைத்துக்கொண்டு சமூகப்பணி ஆற்றிவருவது, ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுத்து வருகிறது.
அப்படித்தான் தோழர் ஃபாரூக்கும் தன்னை திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைத்துக் கொண்டு கோவைப் பொறுப்பாளராக இருந்து செயல்பட்டு வந்துள்ளார். தோழரின் முழுமையான பெரியாரிய பகுத்தறிவு சிந்தனைகளையும் செயல்பாட்டுகளையும் அதே வழியில் எதிர்கொள்ள முடியாத சில மதவெறியர்கள் இப்படியான அணுகுமுறையை கையில் எடுத்திருப்பது,
நாடெங்கும் நடந்தேறும் பார்ப்பனிய மதவெறி பாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட்டு வரும் இயக்க வாதிகளுக்கு இப்படி ஒரு சவாலை எதிர் கொள்வது, மிகவும் குழப்ப நிலையை உருவாக்கி உள்ளது, பார்ப்பனிய மதவெறி சாதிவெறி கூட்டு பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து நிற்க வேண்டிய தருணத்தில் இப்படியான ஒரு மதவெறி சம்பவம் ஏற்புடையதாக இல்லை.
ஆளூர் ஷாநவாஸ் (விடுதலை சிறுத்தைகள்)
திராவிடர் விடுதலைக் கழக தோழர் பாரூக் கொலை வழக்கில், கோவை போத்தனூரை சேர்ந்த மீரான் குட்டியின் மகன், 31 வயதுள்ள அன்சர் என்பவர் சரணடைந்துள்ளார்.
இதே கொலையை ஆர்.எஸ்.எஸ் சக்திகள் செய்திருந்தால் இன்று என்னென்ன ஆர்ப்பாட்டம் நடந்திருக்குமோ, அதே சினத்தை இதிலும் வெளிப்படுத்துவோருக்குத்தான் மதவெறியைக் கண்டிக்கும் தகுதி உண்டு.
முஸ்லிம் சமூகத்தில் பிறந்த ஒருவன், மைய நீரோட்டக் களத்தில் தம்மை இணைத்துக் கொண்டு, சமத்துவத்துக்காகவும் சமூக நீதிக்காகவும் பயணிப்பதை சகிக்க முடியவில்லை எனில், அந்த சகிப்பின்மையும் அப்பட்டமான மதவெறியே.
திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் போன்ற சமூகநீதி இயக்கங்களில் செயலாற்றுவது குற்றமெனில், நான் உறுதிபடக் கூறுவேன்; நானும் ஒரு தி.க - தி.வி.க - த.பெ.தி.க காரன்தான்.
தோழர் பாரூக்கை இழந்துவாடும் பெரியாரிய தோழர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரை கொடூரப் படுகொலை செய்த வெறியனுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.
கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்)
கோவையில் திராவிடர் விடுதலைக் கழகத்தில் பணியாற்றிய கொள்கை வீரர் தோழர் பாரூக் அவர்களை திட்டமிட்டே கொலை செய்திருக்கிறார்கள். இது ஒரு கொடுமையான படுகொலை.
இதற்குக் காரணமான உண்மையான கொலையாளிகள், திட்டமிடப்பட்ட இக்கொலையில் பங்கேற்றவர்கள், தூண்டிய சக்திகள் அனைவரையும் கோவை போலீஸ் அதிகாரிகள் உடனடியாகக் கண்டுபிடித்துத் தக்க தண்டனை வழங்கிடும் வகையில் புலன் விசாரணையும் மற்ற நடவடிக்கை களும் அமைந்திடல் வேண்டும். மதவெறி எந்த ரூபத்தில் வந்தாலும் மதச் சார்பற்ற சக்திகள் ஒன்று திரண்டு கண்டிக்க வேண்டும் - தடுத்திடல் வேண்டும்.
ஜி. இராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. இராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை.
கோவையில் திராவிடர் விடுதலை கழகத்தைச் சார்ந்த பாரூக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். சிறுபான்மை மதவெறி அமைப்பின் உறுப்பினர்களால் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். மாற்றுக் கருத்துக்களை சொல்வதற்கான உரிமை என்பதே ஜனநாயகத்தில் மிக முக்கியமான கூறு. மதச்சார் பின்மையின் ஆதாரமே கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் யாராக இருப்பினும் அவரவர்களுக்கான உரிமை உத்தரவாதம் செய்யப் படுவதே. திராவிடர் விடுதலை கழகத்தின் கொள்கைகளில் ஒருவர் உடன்படாமல் இருக்கலாம். அதை எதிர்த்து பிரச்சாரம் செய்வதற்கான உரிமை உண்டு. ஆனால் அந்த கொள்கையை பிரச்சாரம் செய்தார் என்ற காரணத்திற்காக இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டிருப்பது கடுமையான கண்டனத்திற் குரியது.
தொல்.திருமாவளவன் (தலைவர் வி.சி.)
கோவையில், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ஃபாரூக் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. அண்மைக்காலமாக , நாடு முழுவதும் பகுத்தறிவாளர்களும் முற்போக்கு சிந்தனை யாளர்களும் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டு வருகின்றனர். தற்போது, தமிழகத்திலும் அதுபோன்ற கொடூரமான படுகொலை அரங்கேறியிருப்பது கடுமையான அதிர்ச்சியை அளிக்கிறது.
இக்கொலை வழக்கில் அன்சர் எனும் ஒரு இசுலாமிய இளைஞரே சரணடைந்திருப்பது மேலும் அதிர்ச்சியளிக்கிறது.
தற்போதைய அரசியல் சூழலில் முஸ்லிம் இளைஞர்கள் ஏராளமானோர், இசுலாமிய அரசியல் வரம்புகளைத் தாண்டி, மைய நீரோட்டக் களத்தில் இணைந்து களமாடி வருகின்றனர். குறிப்பாக, சமூக நீதிக் கருத்தியலின் அடிப்படையில் பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களிலும் பொதுவுடைமை அமைப்புகளிலும் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.
அவ்வாறு, திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து, கோவை மாவட்டப் பொறுப்பாளராகச் செயலாற்றிவந்த ஒருவர்தான் தம்பி ஃபாரூக். அவரைத் திட்டமிட்டுப் படுகொலை செய்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.
கருத்து மாறுபாடுகளையும் முரண்பாடுகளையும் சனநாயக நெறிப்படியே எதிர் கொள்ளவேண்டும். விமர்சிப்பது, கண்டிப்பது, எச்சரிப்பது, மக்களிடையே அடையாளப்படுத்துவது போன்ற எதிர்வினைகளையும் சனநாயகமுறையில் ஆற்றலாம். ஆனால், அவ் வாறின்றி, இத்தகைய கொடூரமானப் படுகொலை களைச் செய்வது மானுட நாகரிகத்திற்கு முரணான தாகும்.
திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்)
தோழர் ஃபாரூக்கின் இரண்டு சிறு குழந்தை களுக்கும் என்ன பதில் சொல்லப் போகிறார் உன் ‘உன்னத கடவுள்’?
அந்தக் குழந்தைகளின் தகப்பனை காக்க வராத கடவுளா இந்த மனித சமூகத்தை காக்கப் போகிறார்?
இரு குழந்தைகளின் தகப்பனை கொல்லாதே என்று அறிவுரை சொல்லாத கடவுளை எப்படி கடவுள் என்று சொல்வீர்கள்?
அக்குழந்தைகளுக்கு கதை சொல்லவும், கைபிடித்து பள்ளி அழைத்து செல்லவும், சோறூட்டவும், செல்லமாய் கொஞ்சி விளையாடவும் செய்யும் தகப்பனை கொலை செய்யும் மிருக சிந்தனையை ’குற்றம்’ என்று சொல்லவில்லையா உன் கடவுள்?
மதவெறியை எதிர்த்த எங்கள் போராட்டம் என்பது அனைத்து மதவெறிக்குமானது. ஆர்.எஸ்.எஸ்சின் மதவெறிக்கும்- இதற்கும் என்ன வேறுபாடு.
கடவுள் உண்டு என்றவன் மசூதியை உடைத்தான். கடவுள் இல்லையென்றவன் உடைத்த மசூதிக்காய் குரல் கொடுத்தான்.
கடவுள் உண்டு என்றவன் சகமனிதனை கோவிலுக்கு வெளியே நிறுத்தினான். கடவுள் இல்லையென்றவன் கோவிலில் அனைவருக்கும் கும்பிடும் உரிமைக்காய் போராடினான் .
கடவுள் மறுத்தவன் மனிதனின் விடுதலைக்கு எதிரானவர்களை எதிர்த்துப் போராடினான்.
ஈழத்தில் தமிழனை காக்க கடவுள் வரவில்லை. குஜராத்தில் இசுலாமியனை காக்க கடவுள் வரவில்லை. திபெத்திய பௌத்தனை காக்க கடவுள் வரவில்லை. ஈராக்கில் யெஜீதியை காக்க கடவுள் வரவில்லை. பாலஸ்தீனில், காசுமீரில் அந்த மக்களைக் காக்க கடவுளை காணவில்லை.
இந்துத்துவ மதவெறியிடமிருந்து விடுதலை பெறும் வழிமுறை முற்போக்கு கருத்தியலில் மட்டுமே உண்டு. இந்துத்துவ மதவெறிக்கான மாற்று இசுலாமிய மதவெறியல்ல.
மதம் அதிகாரத்தை ஆக்கிரமிக்கும் பொழு தெல்லாம் வெறியாட்டங்கள் நடந்தே இருக்கின்றன. இதில் இந்து, முஸ்லீம், கிருத்துவம், பௌத்தம், யூதம் என்கிற வேறுபாடுகள் உலகில் இல்லை. இந்த மதங்கள் பெரும்பான்மை கொண்டு நின்ற இடங்களிலெல்லாம் மக்களை பலியிட்டிருக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ், ஐ.எஸ்.ஐ.எஸ், பொது பலசேனா, வெள்ளை ஏகாதிபத்தியம், ஜியோனிசம் என எல்லாமும் மக்களை கொன்று குவித்திருக்கின்றன.
இந்து என்று சொல்லிக்கொள்ளும் தலித்துக்கும், சூத்திர சாதிக்கும் கோவிலுக்குள் பூசை செய்ய அனுமதி கிடையாது. ஆனால் இந்த சாதிகள் ஆர்.எஸ்.எஸ்ஸினை வளர்ப்பதில் வெட்கப்படுவதும் இல்லை. சக மதத்தவனையே மனிதனாக நடத்தாத இந்த மத நம்பிக்கைகள் தான் மனிதனை மிருகமாகவே மாற்றி இருக்கின்றன. கடவுளின் பெயரில் நடக்கும் இக்கொடுமைகளை கடவுளும் கண் திறந்து கண்டித்தது இல்லை.
கருப்பு சட்டை தான் இந்துத்துவ மதவெறியிடமிருந்தும், பௌத்த இன வெறியிடமிருந்தும், இசுலாமிய மத வெறியிடமிருந்தும் சாமானிய மக்களை காப்பவன்.
தோழர் ஃபாருக் கடவுள்களையும் விட உயர்வானவன் புனிதமானவன். உலகின் அனைத்து கொடுமைகளுக் கும் எதிராக நிற்க முடிந்தவனை விட வலிமையான கடவுள் உலகில் இல்லை.
கடவுள் இல்லையென்று சொல் வதற்கு ஒரு நேர்மை வேண்டும், அநீதியை எதிர்க்கும் மனம் வேண்டும். அது ஃபாருக்கிற்கு வாய்த்திருக்கிறது.
தோழர். ஃபாரூக்கை எது கொலை செய்ததோ, அந்த பாசிசத்திற்கு எதிராய் உரக்கச் சொல்கிறோம்,
“கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை”
மதவெறிக்கு எதிரான நம் போராட்டம் ஃபாரூக்கின் மரணத்தால் நின்றுவிடாது. தோழர் ஃபாரூக்கின் கொலைகாரர்களை எந்த மதத்தாலும் எளிதில் உருவாக்கிவிட முடியும்.. ஆனால், தோழர்,ஃபாரூக் போன்ற ஒருவரை எந்த மதப்பிரசங்கத்தாலும் உருவாக்கி விட முடியாது.
யார் வேண்டுமானாலும் மதப் பற்றாளனாய் மாறிவிட முடியும். ஆனால் பகுத்தறிவாளானாய் மாறுவது அவ்வளவு எளிதல்ல. அனைத்து அநீதி களுக்கு எதிராகவும், அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், அனைவரையும் சுயமரியாதையுடனும், சுதந்திரத்துடனும் நடத்தும் மனதினை கொண்டவனே பகுத்தறிவாளனாய் மிளிர்கிறான். அப்படியான ஒருவனாக தோழர் பாரூக் இச்சமூகத்தில் நிமிர்ந்து நின்றார்.
சீனி. விடுதலை அரசு (த.பெ.தி.க.)
இது எங்கள் வீட்டு இழவு. குடும்ப உறவுகளைவிட கொள்கை உறவுகளை அதிகமாக நேசிப்பவர்கள் நாங்கள்! எங்கள் தோழர்கள் அழுகிறார்கள், புலம்புகிறார்கள், அரற்றுகிறார்கள், அவரோடு பழகி பாசத்தை பகிர்ந்து கொண்டவர்கள் ஆற்றாமையால் ஒப்பாரி வைத்து கதறுகிறார்கள்! அவர்களை அரவணைத்து இரங்கலைத் தெரிவித்து, ஆறுதல் மொழிகூறும் தோள்களை பற்றிக் கொண்டு நிம்மதி தேடுகிறார்கள்.
ஆனால்... துக்க வீட்டின் கிட்டே வராமல் தூரமாக நின்றுகொண்டு, அழுகுரலின் சத்தம் அமைதிக்கு இடையூறாக இருக்கிறது என்பதும், ஒப்பாரியின் வேகம் குறைவு என்பதும், வேறுவிதமாக ஒப்பாரி வைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பதும், நாங்கள் சொல்கிறபடி ஒப்பாரி வையுங்கள் என்பதும் அநாகரீக மானது... அசிங்கமானது... அருவறுக் கத்தக்கது...
நாங்கள் எளிதில் உணர்ச்சி வயப்படுகிறவர்களல்ல. ஆனால்... உணர்ச்சியே இல்லாத சதைப் பிண்டங்களுமல்ல! உணர்வையும் - அறிவையும் ஒருங்கிணைக்கும் ஆற்றல் பெற்ற பெரியாரின் பிள்ளைகள்! எம்மை வழிநடத்தும் தலைவர்கள் இருக்கிறார்கள், அதனிலும் மேலாக பெரியாரியல் எனும் தத்துவம் இருக்கிறது!
வே. மதிமாறன் (எழுத்தாளர்)
பெரியார் தொண்டனை படு கொலை செய்திருக்கிறான் மத வெறியன். மனம் நிலை கொள்ளாமல் அவமானத்தாலும் கோபத்தாலும் துடிக்கிறது.
இந்தப் படுகொலை என்னைப் போன்ற பெரியார் தொண்டன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல, கோடிக்கணக்கான முஸ்லிம்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்.
இஸ்லாமிய மக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்துகிற மதவெறி யர்களுக்கு மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் அளிக்கிற படுகொலை.
பெரியார் இயக்கத்தை, தொண்டர்களை மட்டுமல்ல இஸ்லாமிய மக்களை யும் நெருக்கடிக்கு உள்ளாக்குகிற திராவிடர் விடுதலை கழக நிர்வாகி கோவை உமர் பாரூக் படுகொலையை வன்மையாகக் கண்டிப்போம்.