ஒரே மேடையில் நூறுக்கும் அதிகமான கலைஞர்கள் !

தலைநகர் சென்னையில் நடந்த ‘மகுடம்’ தமிழர் வல்லிசை மண்ணின் இசைக் கருவிகள் மார்தட்டி அணி வகுக்கும் எழுச்சி இசை முழக்கமாய் கடந்த மார்ச் 12ஆம் தேதி ஞாயிறு மாலை காமராசர் அரங்கில் ஒலித்தது. தமிழ்நாட்டில் தமிழர் இசையில் மிளிர்ந்த எத்தனையோ தாளக் கருவிகளும் இசைக் கருவிகளும் காணாமலே போய் விட்டன. இந்த இசைக் கலைஞர்கள் ஒடுக்கப்பட்ட ஜாதியில் பிறந்தவர்கள் என்பதற்காக ஜாதிய சமூகம் அவர்களை ஒதுக்கியதுபோலவே தமிழர்களின் அடையாளங்களைப் பேணிய இசைக் கருவிகளையும் அழித்துவிட்டது. அழிந்து வரும் தமிழர் வல்லிசையை மீட்டெடுத்து, அந்தக் கலைஞர்களைக் கண்டறிந்து, அவர்களை ஒரே மேடையில் இசைக்க வைக்கும் கடும் முயற்சியில் இறங்கியது ‘மகுடம்’ அமைப்பு. தலைநகரில் தந்தை பெரியார் தமிழிசை மன்றம் தொடங்கி தமிழிசை விழாக்களை ‘ஆனா ரூனா’ என்று அன்புடன் அழைக்கப்படும் மாணவர் நகலக நிறுவனர் மறைந்த நா. அருணாசலம் நடத்தி வந்தார். அவரது நினைவு நாள் நிகழ்வில் அந்தப் பணி தொய்வின்றி தொடரும் என்று அவரது மகன் மாணவர் நகலக உரிமையாளர் சா.அ.சௌரிராசன் அறிவித்தார்.

அறிவிப்பை செயல்படுத்த தமிழிசை விழாவை மக்கள் இசை விழாவாகத் திட்டமிட்டு 3 மாத காலம் தனது நண்பர்கள் குழாமுடன் தீவிர முயற்சிகளில் இறங்கினார். ஓ. சுந்தரம், கலைவாணன் உள்ளிட்ட நட்புக் குழாம் உடன் நின்றது. தமிழகம் முழுதும் பல்வேறு கிராமங்களில் அடையாளமும் அங்கீகாரமும் மறுக்கப்பட்ட கலைஞர்கள் கண்டறியப்பட்டனர்.  அவர்கள்  அனைவரையும் ஒரே அரங்கில் ஒன்று கூட்டி பல நாட்கள் ஒத்திகைகள் பயிற்சிகள் தரப்பட்டன. ஒவ்வொரு கலைஞரிடமும் புதைந்து கிடந்த ஆற்றல் அனைவரையும் திகைக்க வைத்தது. சுமார் 60 தாள வாத்தியக் கருவிகள் கண்டறியப் பட்டன. இந்தக் கருவிகளை இசைப்போர் வெகு சிலர். சில வகைக் கருவிகளை இசைக்கக் கூடியவர் ஒரே ஒருவராக மட்டுமே இருந்தனர். அத்தனை கலைஞர்களையும் இசையால் இணைய வைத்து அவர்களின் கலை அடையாளங்களுக்கு சுயமரியாதையை சூட்டியது ‘மகுடம்’.

makudam 600காமராசர் அரங்கம், உணர்வுகளின் சங்கமாய் தமிழர் எழுச்சியாய் தகித்தது. 6.30 மணிக்கு தொடங்கிய நிகழ்வு 9 மணி வரை அரங்கையே அதிர வைத்தது. குடும்பம் குடும்பமாய் திரண்ட தோழர்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர், நடனமாடினர். கவிஞர் அறிவுமதியின் உணர்ச்சியூட்டும் பாடலுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. இறுதிக் காட்சியில் 110 கலைஞர்களும் ஒரே மேடையில் இணைந்து நாயன இசையுடன் எழுப்பிய இசையும் தாளமும் ஏற்படுத்திய உணர்வுகள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.  நடிகர் நாசர் நிகழ்ச்சி பற்றி குறிப்பிடும்போது, “என் வாழ்க்கையில் இது போன்ற அர்த்தமுள்ள ஓர் இசை நிகழ்வை இதுவரை நான் கண்டதே இல்லை” என்றார்.

கவிஞர் அறிவுமதி, ஓவியர் டிராட்ஸ்கி மருது, வீர சந்தானம், நடிகர் நாசர், நடிகர் திலகத்தின் மகன் இராம்குமார், கலைப்புலி தாணு உள்ளிட்ட பல கலைஞர்களும், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி இராமதாசு, வேல் முருகன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சிப் பிரமுகர்களும், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் உள்ளிட்ட ஏராளமான இயக்கங் களைச் சார்ந்தவர்களும், பேராசிரியர் சரசுவதி, காஞ்சி மக்கள் மன்றம் மகேசு, குட்டி ரேவதி உள் ளிட்ட பெண்ணிய போராளிகளும், பெண் களும் ஆண்களுமாய் அரங்கம் நிரம்பி வழிந்தது. நிகழ்த்துக் கலைஞர்கள், பெருமை யிலும் உற்சாகப் பூரிப்பிலும் திளைத்தனர். மக்கள் ஆரவாரமும், கை தட்டலும், ஆட்ட மும் சூடேறிக் கொண்டே இருந்தன. கவிஞர் காளமேகத்தின் நரம்பை முறுக்கேற்றும் பாடல் வரிகளோடு நிகழ்வு நிறைவானது.  அனை வருக்கும் பாராட்டும் மரியாதையும் செய்யப் பட்டன.  கலைஞர்கள், உழைத்தவர்கள், உதவி யவர்கள் என அனைவரும் பாராட்டப்பட்டனர்.

பார்ப்பனிய மேட்டுக்குடி மக்களின் - தியாகராஜ கீர்த்தனைகளும், நாமவாளிகளும், தெலுங்கு சமஸ்கிருதப் பாடல்களுமே தமிழ்நாட்டின் இசை என்ற பொய்மையை தகர்த்து, பறை, மகுடம், உறுமி நய்யாண்டி மேளம், நாயனம் போன்ற கருவிகளுடன் களத்துக்கு வந்துவிட்டது தமிழிசை முழக்கம்!

Pin It