மாணவர்கள் அனைவருக்கும் எதிர்காலக் கவலை இருப்பது என்பது யதார்த்தமான உண்மை. அவர்களின் கவலையில் நாட்டின் எதிர்காலமும் கலந்து உள்ளது. சமீபத்தில் நான் ஒரு கருத்தரங்கிற்கு உரையாற்றச் சென்றிருந்தபோது, பங்கேற்ற ஒரு மாணவனைச் சந்தித்தேன். அவரது குடும்பத்தை விசாரித்தேன். அவரின் தந்தை கூலித்தொழிலாளி. தாய் வீட்டுத் தலைவி. பி.ஏ.தமிழ் இரண்டாம் ஆண்டு படிக்கும் அவரது எதிர்காலக் கனவைப்பற்றிக் கேட்டேன். படித்து முடித்ததும் காவல்துறை உதவி ஆய்வாளராகப் போகிறேன் என்றார். அது எப்படி முடியும்? எனக் கேட்டேன். நான் “விளையாட்டு வீரர் என்ற ஒதுக்கீட்டில்தான் இந்தக் கல்லூரியில் படிக்க வந்துள்ளேன். அதேபோலக் காவல் துறைக்கும் போய்விடுவேன்’’ என்றார்.

எதிர்காலத்துக்கும் உதவும் வகையில் கல்வி இருக்க வேண்டும் என்பதில் நாம் எவ்வளவு உறுதியாக இருக்க வேண்டும் என்பதை இந்த மாணவனின் அனுபவம் நமக்குச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. நமது நாட்டில் பல பெரியோர்கள் கல்வியைப் பாதுகாப்பதற்காகப் பல பெரும் பணிகளைச் செய்துள்ளனர். நோபெல் பரிசு பெற்றவர் நம் புகழ்பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், அவர் வாழ்ந்த காலத்தில் சாந்தி நிகேதனைக் கல்விப்பணிக்காகவே உருவாக்கினார்.

சுதந்திரத்துக்கு முன்பான இந்தியாவில் கன்னியாகுமரிப் பகுதியும் கூட திருவாங்கூர் மன்னருக்கு உட்பட்ட சமஸ்தானத்தில் இருந்தது. அதில் நடந்த ஒரு துவக்கப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அதனால் பள்ளியின் ஒரு பகுதியை மூடிவிடலாம் என முடிவெடுத்தனர். அந்தப் பள்ளிக்குப் பொறுப்பாக ஆங்கிலேய அதிகாரி இருந்தார். மக்கள் மத்தியில் கருத்துக் கேட்காமல் பள்ளியை மூடிவிடக் கூடாது என்று நினைத்தார். எனவே, தமிழ்தெரிந்த ஓர் அதிகாரியை அழைத்துக்கொண்டு பக்கத்து கிராமத்திற்குச் சென்றார். கிராமத்து மக்களைக் கூட்டமாகக் கூட்டினார். அவர்களிடத்தில் “பள்ளியை மூடிவிடலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள்’’ என்று ஆங்கிலத்தில் கேட்டார். அதனைத் தமிழில் பக்கத்தில் இருந்த அதிகாரியைச் சொல்லச் சொன்னார். அவர் மக்களைப் பார்த்து, “கிராமங்களில் உள்ள கிணறுகளை எல்லாம் மூடிவிடலாமா என்று கேட்கிறார் பதில் சொல்லுங்கள்’’ என்றார். மக்கள் “வேண்டாம்! வேண்டாம்’’ என்றார்கள்.

இவ்வாறெல்லாம் பல்வேறு பிரிவு மக்களால் காக்கப்பட்ட கல்வியைத்தான் இன்று நாம் பெற்றுள்ளோம். கல்வியில் இன்று வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வளர்ச்சியின் பலன் எல்லோருக்குமே போய்ச் சேர்ந்துள்ளதா என்பதுதான் இன்றைய கேள்வி. ஏற்றத் தாழ்வான சமூகத்தில் எல்லோருக்கும் சமவாய்ப்பு கல்வியில் கிடைக்கச் செய்வதற்கான முயற்சிதான் சமச்சீர்க் கல்வி. சுதந்தரத்திற்குப் பிறகு கல்வியில் நடந்த வளர்ச்சியைப் பார்ப்போம். 1951இல் இந்தியாவில் 27 பல்கலைக்கழகங்கள் இருந்தன. 2005இல் அரசாங்கமும், தனியாரும் நடத்தும் பல்கலைக் கழகங்கள் 343 என்ற எண்ணிக்கையில் வளர்ந்தன. 1951இல் கல்லூரிகளின் எண்ணிக்கை 568ஆக இருந்தது. 2005இல் 16,865ஆக வளர்ந்துள்ளது. 1951இல் உயர்கல்வி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சம்தான். ஆனால் அதுவே 2005ஆம் வருடத்தில் 99 லட்சத்து 53 ஆயிரத்து 506 பேராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் பணிபுரிகிற கணினிப் பொறியாளர்கள் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர். நமது பெங்களூரில் வேலை செய்கிற பொறியாளர்கள் அதைவிட அதிகமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர்கள் உள்ளனர்.

பல மடங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனாலும், இந்த வளர்ச்சியை வைத்து மட்டும் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைத்து விட்டதாகச் சொல்லிவிட முடியாது. இந்திய மக்கள்தொகை 110 கோடி. அதில் 17 முதல் 23 வயதான இளைஞர்களில் 7 சதவீதம் பேர்தான் உயர்கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறுகின்றனர் என்று அரசின் ஆய்வு தெரிவிக்கிறது. இந்த 7 சதவீதத்தில் தலித் மாணவர்களின் விகிதாச்சாரம் (100 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்தால் அதில் 11.3 தான்) பழங்குடி மாணவர்கள் 3.6 தான். ஒட்டுமொத்த மக்களில் தலித், பழங்குடி மக்களின் விகிதாச்சாரம் இந்த எண்ணிக்கையில் பிரதிபலிக்கவில்லை.

இன்றைய உயர்நிலைக்கல்வி, ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் ஒடுக்கக்கூடியதாகத்தான் இருக்கிறது. கடந்த 13 ஆண்டுகளில் 14 ஆயிரத்து 862 கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. சாராய வியாபாரிகள் எல்லாம் கல்வி வேந்தர்களாகி விட்டனர். கல்வி வியாபாரிகளாகிவிட்டனர். பிறகு எப்படிச் சமமான வாய்ப்புக் கிடைக்கும் ?

1930களில் கீழத்தஞ்சை மாவட்டத்தில் தலித் மக்களுக்குப் பள்ளிக்கூடம் செல்லத்தடை இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரும், சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவருமான தோழர் தனுஷ்கோடியின் தந்தை ஒரு பண்ணையடிமை. தனுஷ்கோடியை அவரின் தந்தை எழுதப்படிக்க கற்றுக்கொள்ள வைத்தார். அதைத் தெரிந்து கொண்ட பண்ணையார் தனுஷ்கோடியின் தந்தையைக் கட்டிவைத்துச் சவுக்கால் அடித்தார். “உன் பையன் படிக்கப் போனால் என் மாட்டை எவன் மேய்ப்பது?’’ என்று சொல்லிச்சொல்லி அடித்தார். இதுதான் 1947க்கு முன்னாள் கீழத்தஞ்சையில் இருந்த நிலைமை.

அண்ணல் அம்பேத்கர் ஒரு முறை சொன்னார், “கல்வி என்பது இந்திய மக்கள் அனைவருக்கும் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்’’. அவரது கருத்துப்படி இந்திய மக்கள் அனைவருக்கும் சமவாய்ப்புக் கிடைத்து விட்டதா? இல்லை. “இந்தியாவில் ஜனநாயகம் என்பது மேற்பூச்சாகத்தான் இருக்கிறது. உள்ளார்ந்த ரீதியாக, பரம்பரை, பரம்பரையாக இந்தியா ஜனநாயக விரோதமானதாகத்தான் இருக்கிறது.’’ என்றும் அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளார்.

ஒரு மனிதனுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்றால் சமமான வாய்ப்புகள் கிடைக்கிற நல்ல சமூகச்சூழல் இருக்க வேண்டும். அந்தச் சமூகத்திலும்கூட நல்ல கல்வி கிடைக்கக் கூடிய கல்விச்சூழல் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கக் கூடிய வகையில் அவர்களது குடும்பச் சூழலும் இருக்க வேண்டும். இவையெல்லாவற்றோடும் கூடக் கல்வி கற்றுக் கொள்கிற சுயமுயற்சி இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் நம் குழந்தைகளுக்குச் செய்து கொடுக்க வேண்டிய காலகட்டத்தில் கல்வி கடைச்சரக்காகிவிட்டது. தாராளமய, பொருளாதாரக் கொள்கைகள் நமது கல்வியையும் பாதிக்கின்றன. சாதாரண ஏழை, எளிய, தலித் மக்கள் கல்வியைப் படிக்க முடியாத அளவு செலவுமிக்கதாகக் கல்வி மாறிவிடுகிறது.

1857இல், கல்கத்தா, பம்பாய், டெல்லி ஆகிய மூன்று இடங்களில் பல்கலைக்கழகங்கள் துவக்கப்பட்டன. அப்போதைய கல்வியின் நோக்கம் பற்றி மெக்காலே சொன்னதாவது : “நாம் கொடுக்கப்போகும் கல்வி என்பது ஆங்கிலேயர்களுக்கும், இந்தியர்களுக்கும் ஆன இணைப்பாக இருக்க வேண்டும். நிறத்தில் இந்தியர்களாகவும், சிந்தனையில் ஆங்கிலேயர்களாகவும் இருக்கிற அறிவாளிகளை உருவாகக் கூடியதாக நமது கல்விமுறை இருக்க வேண்டும்’’ என்றார் அவர். அத்தகைய பாரம்பரியம்தான் இன்னும் தொடர்கிறது. மேலைநாடுகள் கல்வியை லாபம் வரக்கூடிய சரக்காகவே இன்றும் பார்க்கின்றன.

2007இல் மட்டும் அமெரிக்கா கல்வி ஏற்றுமதி மூலம் 52 ஆயிரம் கோடி ரூபாயைச் சம்பாதித்து உள்ளது. அமெரிக்க மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேலைநாடுகளில் வர்த்தக அமைச்சர்தான் கல்வி அமைச்சராக உள்ளார். நமது நாட்டிலும் கல்வியை லாபம் தரும் பொருளாகக் கருதும் அரசியல் போக்கு வளர்ந்து வருகிறது. இதனை எதிர்த்து, எல்லோருக்கும் ஆரம்பக் கல்வி முதல் உயர்நிலைக் கல்விவரை சமத்துவமான முறையில் கல்வி கிடைக்கக்கூடிய ஒரு சமூகச் சூழலை உருவாக்குவதில் அனைவரும் ஈடுபடுவதுதான் இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது.
Pin It