1938இல் நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக, தமிழக அரசியல் தளத்தில் மாபெரும் திருப்புமுனை ஏற்பட்டது. இனி இந்தியாவுடன் தொடர்ந்து இருக்கக்கூடாது என்பதே அது. அதை வலியுறுத்தி “தமிழ்நாடு தமிழருக்கே” என்று விடுதலை ஏட்டில் அய்ந்து தொடர் கட்டுரைகள் எழுதப்பட்டன.

தமிழ்நாடு தமிழருக்கே! - III

நேற்றும் முன்தினமும் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற தலைப்பின்கீழ் அதன் கருத்தையும், அவசியத்தையும், முறையையும் விளக்கி எழுதியிருந்ததுடன், மறுபடியும் அதைப்பற்றித் தொடர்ந்து திராவிடருக்கும் அந்நியருக்கும் உள்ள வாழ்க்கை முறைப் பேதம்பற்றி எழுதப்படும் என்று குறிப்பிட்டிருந்தோம். அதன்படி இன்று எழுதப் போகும் இந்த 3ஆவது தலையங்கத்தில் முதலாவதாக திராவிடர்கள்-ஆரியர்கள் என்பவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களிருவருக்கும் எப்படி சம்பந்தமேற்பட்டது, அவர் களுடைய வாழ்க்கைமுறை பேதம் எப்படிப்பட்டது என்பவைகளை எடுத்துக்காட்ட இதை எழுதுகிறோம்.

திராவிடநாட்டுக்கு ஆரியர்கள் குடியேறி திராவிடர்களை அடக்கி கீழ்மைப்படுத்தியவர்கள் என்பதைப்பற்றி நாம் விளக்க வேண்டியதில்லை. ஆரியர் திராவிட நாட்டுக்கு வருவதற்கு முன் திராவிடநாடு கலைகளிலும், நாகரிகத்திலும் தலைசிறந்து விளங்கி வந்தது என்பது பற்றியும் நாம் விளக்க வேண்டியதில்லை என்றாலும் இவ்விரண்டுக்கும் ஆதாரமாக இரண்டொரு சரித்திரா சிரியர்கள் அபிப்பிராயங்களை எடுத்துக்காட்டுவது பொருந்துமென நினைக்கிறோம்.

“மேற்கு திபேத்தையும் ஆப்கானிஸ்தானத்தையும் தாண்டி ஆரியர்கள் இந்தியாவுக்குக் குடியேறியவர் களாவார்கள். அவர்களது பாஷை சமற்கிருதம் போன்றது. இந்தியாவுக்கு வந்ததும் தங்கள் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கைகள் முதலியவற்றைத் தங்கள் இஷ்டப்படி தங்கள் பாஷையிலேயே எழுதி வைத்துக் கொண்டார்கள்” என்று சர் என்றி ஜான்ஸ் பட்டளர் என்கின்ற பிரசித்தி பெற்று ஆராய்ச்சியாளர் “இந்தியாவில் அந்நியர்கள்” என்ற புத்தகத்தில் 19ஆவது பக்கத்தில் ஆதாரங்களோடு எடுத்துக்காட்டி இருக்கிறார்.

“ஆரியர்கள் மதுவருந்துவதும் சூதாடுவதுமான ஒழுக்க ஈனமான காரியங்களில் பற்றுடையவர்கள் ”.

இது ராகேஸ் என்னும் பேராசிரியர் “வேதகால இந்தியா” என்பதில் எடுத்துக்காட்டி இருக்கிறார்.

“வட இந்தியாவில் இருந்து திராவிடக் கலை நாகரிகம் முதலி யவை யாவும் ஆரியர்களால் அடியோடு ஒழிக்கப்பட்டு விட்டன - ஆனால், தென்னிந்தியாவில் அவ் விதம் செய்யமுடியவில்லை”

இது “பண்டையத் தமிழரின் வரலாறு” என்கின்ற ஆராய்ச்சிப் புத்தகத்தில் 4ஆம் பக்கத்தில் இருக்கிறது. இந்த ஆராய்ச் சிக் குறியானது நாம் முன் தலையங்கத்தில் குறிப்பிட்ட, அதாவது திராவிடம் இன்னமும் ஆரியமயமாகவில்லை என்பதற்கு ஆதரவளிப்பதாகும்.

“ஆரியரல்லாத இந்நாட்டுத் திராவிடப் பழங்குடி மக்கள் ஆரியர்களால் துன்புறுத்தப்பட்டு காடுகளுக்குத் துரத்தப்பட்டார்கள். இதுவும் போதாதென்று அவர்களை இராட்சதர்கள், அசுரர்கள் என்றும் நூல்கள் எழுதிக் கொண்டார்கள். இதுவும் போதாதென்று கருதி, திராவிடர்களுக்கு ‘தஸ்யூ’ என்றும் -ஆரிய எதிரி என்றும், பெயரிட்டு அவற்றையே நாளாவட்டத்தில் பேய் என்றும், பூதம் என்றும், இராட்சசர் என்றும் பெயர்களாக மாறச் செய்துவிட்டார்கள்”.

இது சர்.வில்யம் வில்ஸன் ஹெணர், டாக்டர் கே.சி.எஸ்.ஐ., சி.ஐ.ஈ. எல்-லய-டி எழுதின “இந்திய மக்களின் சரித்திரம்” 41ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே ஆக்கிக் கொண்டு அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தித் தங்கள் இஷ்டம் போல் தங்களுக்கு அனுகூலமாக சகல விஷயங்களையும் உட்படுத்திக்கொண்டு அதற்கு ஏற்றபடி கதைகளை உற்பத்தி செய்து எழுதி வைத்துக்கொண் டார்கள். இந்தக் கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் திராவிடரை அழுத்தி, அடிமைப்படுத்தித் தங்களை உயர்த்திக் கொள்ளுவதற்கு ஆகவே, எழுதிக்கொள்ளப்பட்டவைகளாகும்.”

இது பிரபல சரித்திராசியரான என்றி பெரிட்ஜ் என்ப வரால் 1865ஆம் வருஷத்திலேயே எழுதப்பட்ட விரிவான இந்திய சரித்திரம் முதல் பாகம் 15ஆம் பக்கத்தில் இருக்கிறது.

“பாரத இராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டுமிராண்டிகள், அசுரர்கள், ராட்சதர்கள், தஸ்யூக்கள் வசிக்கும் நெருக்கமான நாடு என்பதெல்லாம் தென்னிந்தியாவை (திராவிடத்தை)ப் பற்றியேயாகும்.”

இது ராவின்சன் சி.ஐ.ஈ.யால் எழுதின `இந்தியா’ என்னும் புத்தகத்தில் 155வது பக்கத்தில் இருக்கிறது.

“நம்மைச் சுற்றி 4 பக்கங்களிலும் தஸ்யூக்கள் (திராவிடர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் யாகங்கள் செய்வதில்லை. ஒன்றையுமே நம்புவதில்லை. அவர்கள் பழக்க வழக் கங்களே வேறாய் இருக்கின்றன. ஓ! இந்திரனே! அவர் களைக் கொல்லு” என்பது ஆரியர்களின் பிரார்த்த னையாகும். இது ரிக் வேதம் 10ஆம் அதிகாரம் சுலோகம் 22-8ல் இருக்கிறது.

“இந்தியாவில் இருந்த ஆரியர்களிடம் மனிதர்களைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது என்று நிச்சயமாய்ச் சொல்லலாம்.,”

இம்பீரியல் இந்தியன் கெஜட்டில் 1909 வருஷ வால்யம் ஐ, பக்கம் 405 ல் இருக்கிறது.

“தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதார் களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் இராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.”

இது ரோமேஷ் சந்திர டட் சி.அய்.ஈ.அய்.சி.எஸ். எழுதிய “புராதன இந்தியா” என்னும் புத்தகத்தில் 52-வது பக்கத்தில் இருக்கிறது.

“திராவிடர்கள் தங்கள்மீது படை எடுத்துவந்த ஆரியர்களோடு கடும்போர் புரியவேண்டி இருந்தது. இந்த விஷயம் ரிக்வேதத்திலேயே அநேக சுலோகங்களாக இருக்கின்றன.”

இது டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார் எம்.ஏ.யின். “பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்” என்னும் புத்தகத்தின் 22ஆவது பக்கத்தில் இருக்கிறது.”

“இராமாயணக்கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படை எடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவதாகும்.”

இது பி. சிதம்பரம் பிள்ளை எழுதிய `திராவிடரும் ஆரியரும்’ என்னும் புத்தகத்தின் 24ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“இராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக் கும், யுத்த வீரர்களுக்கும் நடந்தபோரைக் குறிப்பதாகும். இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை -ஆரியரல்லாதவர்களைக் குறிப்பதாகும்.”

இது ரோமேஷ் சந்திர டட் எழுதிய “பண்டைய இந்தியாவின் நாகரிகம்” என்ற புத்தகத்தின் 139 - 141ஆவது பக்கங்களில் இருக்கிறது.

“தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும் அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்”

இது “சுவாமி விவேகானந்தா அவர்களது சொற்பொழிவு களும், கட்டுரைகளும்” என்ற புத்தகத்தில் “இராமாயணம்” என்னும் தலைப்பில் 587 - 589 பக்கங்களில் இருக்கிறது.

“ஆரியன் என்கிற பதம் இந்தியாவின் புராதன குடிமக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக்காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக்கொண்ட பதம்” தஸ்யூக்கள் என்பது இந்தியப் புராதன குடிமக்களுக்கு அவர்கள் (ஆரியர்கள்) கொடுத்த பெயராகும்.

இது 1922ஆம் வருஷம் பிரசுரிக்கப்பட்ட கேம்ப்ரிட்ஜ் “பழைய இந்தியாவின் சரித்திரம்” என்னும் புத்தகத்தில் இருக்கிறது.

பகைமைக்குக் காரணம்

“ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும், தஸ்யூக்கள்-அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக் கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமை யைப்பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும், அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைமைக்கு காரணமாகும்”

இது டாக்டர் ராதா குமுத் முக்கர்ஜீ எம்.ஏ., பிஎச்.டி., எழுதிய ‘இந்து நாகரிகம்’ என்னும் புத்தகத்தில் 69ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“இராமாயணக் கதையின் உள் பொருள் என்னவென்றால் ஆரிய நாகரிகத்துக்கும், திராவிட நாகரிகத் துக்கும் (அவற்றின் தலைவர்களான இராமன் - இராவணன் ஆகியவர்களால்) நடத்தப்பட்ட போராகும்.”

இது ராதா குமுத் முக்கர்ஜீ எழுதிய “இந்து நாகரிகம்” என்னும் புத்தகத்தின் 141ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென் கிழக்கிலும், இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசப்படும் பாஷை.

இது சர் ஜேம்ஸ் மர்ரே எழுதிய புதிய இங்கிலீஷ் அகராதியின் பக்கம் 67 டி -யில் இருக்கிறது.

“ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லா தாருக்குள் புகுத்த முயற்சித்து முடியாமல் போனதால் ஆரியரல்லாதாருடய பாஷைகளைக் கற்றுக்கொண்டு அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டி வந்தன.”

இது பண்டர்காரின் கட்டுரைகள் வால்யூம் 3, பக்கம் 10-ல் இருக்கிறது.

“தமிழர்கள் ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைத்தார்கள். ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்”

இது கிருஷ்ணசாமி அய்யங்கார் எம்.ஏ., பிஎச்.டி.,  அவர்கள் எழுதிய “தென் இந்தியாவும் இந்தியக் கலையும்” என்ற புத்தகத்தின் 3ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“இராமாயணத்தில் தென் இந்தியா (திராவிடதேசம்) தஸ்யூக்கள் என்ற இராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது.

“இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகமடைந்த வர்களாய் இருந்தார்கள்”. இது பி.டி.சீனிவாசய்யங்கார் எழுதிய ‘இந்திய சரித்திரம்’ முதல் பாகம் என்னும் புத்தகத்தில் 10ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், இராட்சதர்கள் என்றும் எழுதிவைத்தார்கள். ஆனால் இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்த பிராமணர்கள் கற்றுக்கொண்டார்கள்”. இது ஷோஷி சந்தர் டட் எழுதிய “இந்தியா அன்றும் இன்றும்” என்னும் புத்தகத்தில் 105ஆவது பக்கத்தில் இருக்கிறது.

ஆரியக் கடவுள்களைப் பூசித்தவர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களும், தேவர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்த வர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப்பகை இருந்துகொண்டே வந்தது”

இது எ.ஸி. தாஸ், எம்.ஏ., பி.எல்., எழுதிய “ரிக் வேத காலத்து இந்தியா” என்னும் புத்தகத்தில் 151ஆம் பக்கத் தில் இருக்கிறது.

ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில், திராவிடர்களை தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், இராட்சசர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

“ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறு வதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.”

இது சி.எஸ். சீனிவாசாச்சாரி எம்.ஏ., அண்டு எம்.எல். இராமசாமி அய்யங்கார் எம்.ஏ., ஆகிய சரித்திர போதகர்கள் எழுதிய “இந்திய சரித்திரம் முதல்பாகம்” என்னும் புத்தகத்தில் “இந்து இந்தியா” என்னும் தலைப்பில் 16, 17ஆவது பக்கங்களில் இருக்கிறது.

“ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவில் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிட மிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக்கொண்டார்கள்”

இது எச்.ஜி. வெல்ஸ் எழுதிய  “உலகத்தின் சிறு சரித்திரம்” என்னும் புத்தகத்தின் 105ஆம் பக்கத்தில் இருக்கிறது.

“ஜாதிப் பிரிவுகள் நான்கில் அதாவது பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள். கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக் குடிகள்.”

இது “New Age Encyclopedia.(நியூ ஏஜ் என்சைக்ளோ பீடியா ஏடிட, ஐஐ, 1925) பக்கம் 237-இல் இருக்கிறது.

“இராமாயணம் தென்னிந்தியாவில் ஆரியர் பரவிய தையும் அதைக் கைப்பற்றியதையும் உணர்த்தும் நூல்”

இது இப்போது கல்வி மந்திரியாய் இருந்த சி.ஜே. வர்க்கி, எம்.ஏ., எழுதிய “இந்திய சரித்திரப் பாகுபாடு” என்னும் புத்தகத்தின் 15ஆவது பக்கத்தில் இருக்கிறது.

“விஷ்ணு என்கின்ற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக்கொடுக்கவும் யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது”

இது இ.பி. ஹாவெல் 1918இல் எழுதிய “இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம்” என்னும் புத்தகத்தின் 32ஆவது பக்கத்தில் இருக்கிறது. “பாரதத்தில் இடும்பி என்று ஒரு ஆரியரல்லாத பெண்மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி தனக்குள்ள, ஜாதி துவேஷத்தால் ராட்சசி என்று எழுதி இருக்கிறான். இராட்சதர் என்கின்ற பயங்கரப் புரளி வார்த்தை வைதிகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்”

இது நாகேந்தரநாத் கோஷ் பி.ஏ.,பி.எல் எழுதிய “இந்திய ஆரியரின் இலக்கியமும், கலையும்” என்ற புத்த கத்தின் 194ஆவது பக்கம். “இராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாகக் கூறவும், திராவிடர்களை இழிவுபடுத்திக் காட்டவும் எழுதப்பட்ட நூலாகும்.”

இது பண்டிதர் டி.பொன்னம்பலம் பிள்ளையால் எழுதப்பட்ட “மலபார் குவார்ட்டர்லி ரிவ்யூ”என்னும் புத்தகத்தில் இருக்கிறது. “இந்திய ஐரோப்பியர்களால் (அதாவது ஆரியர்களால்) தோற்கடிக்கப்பட்ட கறுப்பு மனிதர்களை (திராவிடர்களை) தஸ்யூக்கள் என்றும், கொள்ளைக்காரர்கள் என்றும், அடிக்கடி பிசாசுகளாக மாறக்கூடியவர்கள் என்றும் வேத இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கின்றது”

இது பால்மாசின் அவர் செல் எழுதிய “புராதன இந்தியாவும், இந்தியாவின் நாகரிகமும்” என்ற புத்தகத் தில் 19ஆவது பக்கத்தில் இருக்கிறது. இவையும், இவை போன்றனவுமாகிய பல விஷயங்கள் பெயர் பெற்ற ஆராய்ச்சியினர்களுடைய ஆராய்ச்சியிலும், பல ஆரியப் பார்ப்பனர்களுடைய ஆராய்ச்சிலும், ஆரிய வேத புராண இதிகாசங்களிலும் இருந்தே கண்டு பிடிக்கப் பட்டிருப்பவைகளாகும்.

ஆனால், ஆரியர் வருவதற்குமுன் திராவிட நாடு எப்படி இருந்தது என்பதற்கு இராமாயணத்திலேயே ஆதாரங்கள் இருக்கின்றன.

அதாவது, இராமாயணம் கிட்கிந்தா காண்டத்தில் சீதையைத் தேடுவதற்குத் தென்பாகத்திற்கு அனுப்பப் பட்ட அனுமானுக்கு சுக்ரீவனால் சொல்லி அனுப்பப்பட்ட வழிக்குறிப்புகளில், “காவேரி நதியைத் தாண்டிப் பொருநை நதியைக் கடந்து சென்றால் பாண்டியனுடைய பொற் கதவமிட்ட மதிலரணைக் காண்பாய்” என்று சொன்ன தாக, வால்மீகியார் இராமாயணத்தில் கூறுகிறார். மற்றும் அவர் கூறுவது விந்தியமலைக்கு அப்பாலுள்ள திராவிட நாட்டில் தண்டகாருண்யம் கடந்தால் பிறகு,

“ஆந்திரம், சோழம், கேரளத்தோடு கூடிய பாண்டிய நாடுகளைக் காண்பீர்கள்” “அதில் தேவரம்பையர் வந்து நீராடும்படியான தெளிந்த நீரையுடைய திவ்வியமான காவேரி நதியைக் காண்பீர்கள்.” “பிறகு முதலைகள் நிரம்பிய தாம்பிரபரணியைக் காண்பீர்கள் “பிறகு பொன் னிறத்ததாயும், முத்து மயமனதாயும், பாண்டியர்க்கு யோக்கியமானதாயுமுள்ள கபாடபுரத்தைக் காண்பீர்கள்.” “அப்புறம் சமுத்திரத்தைக் காண்பீர்கள். அங்கு சென்று உங்கள் காரிய நிச்சயத்தைச் செய்யுங்கள்” என்று கூறியிருப்பதாக, வடமொழி இராமாயணத்தில் காண் கிறோம். ஆகையால், திராவிட நாடு ஆரியர் இந்நாட்டிற்கு வருவதற்கு முன் மேன்மையாயும், நாகரிகத்துடனும், செல்வத்துடனும் தனிப்பட்ட அரசாட்சி உடையதாயும் இருந்து வந்திருக்கிறது என்பது விளங்குவதோடு, இப்படிப்பட்ட திராவிடமும், திராவிட மக்களும் ஆரியர் ஆதிக்கமும் கொடுமையும் ஏற்பட்ட பிறகே திராவிடர்கள் குரங்குகளாகவும், இராட்சதர் களாகவும் கற்பிக்கப்பட்ட தோடு - சூத்திரன் அடிமை, மிலேச்சன், சண்டாளன், என்பது போன்ற இழிமொழிகளுக்காளாகி சூத்திரர்களுக்கு (திராவிடர்களுக்கு) ஒரு நீதியும், ஆரியர்களுக்கு ஒரு நீதியும் கற்பிக்கப்பட்ட மனுதர்ம நீதி வழங்கப்பட்டிருக்கிறது.

அம்மனு நீதியில் சூத்திரர்களுக்கு (திராவிடர்களுக்கு) விதித்திருக்கும் தர்மங்களையும் பற்றி ஒரு சிறிது மாத்திரம் எடுத்துக்காட்ட ஆசைப்படுகிறோம்.

அதாவது, பிரமாணனுக்குத் தலையை முண்டிதம் செய்வது கொலைத் தண்டமாகும். மற்ற வருணத் தாருக்குக் கொலைத் தண்டமுண்டு. மனுஅத். ஐஐ. 379

அந்தணன் - பூனை, அணில், காடை, தவளை, நாய், உடும்பு, கோட்டான், காகம் இவைகளைக் கொன்றால் ஒரு சூத்திரனைக் கொன்றதற்குச் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் செய்யவேண்டும். மனு.அத்.9. 132

வைதிக கருமமாயிருந்தாலும், லௌகிக கருமமாயிருந் தாலும் அக்கினி எப்படி மேலான தெய்வமாயிருக்கிறதோ, அப்படியே பிராமணன் ஞானியாயிருந்தாலும், மூடனா யிருந்தாலும் அவனே மேலான தெய்வமாவான். மனு.அத்.6. 317

பிராமணன் துர்ச்செய்கையுள்ளவனாயிருந்த போதிலும் சகலமான சுபா-சுபங்களிலும் பூசிக்கத்தக்கவன், அவன் மேலான தெய்வமாதலால். மனு.அத்.7.318 - 319

கருமானுஷ்டமில்லா பிராமணனேனும் அவன் அரசன் செய்ய வேண்டிய தீர்ப்புகளைச் செய்யலாம். சூத்திரன் ஒருபோதும் செய்யக்கூடாது, மனு.அத்.8.20

சூத்திரன் விலை கொடுத்து அடிமையாக வாங்கப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவனைப் பிராமணன் நிர்ப்பந்தப்படுத்தி வேலை வாங்கலாம். ஏனென்றால், கடவுள் சூத்திரனைப் பிராமணனுக்கு வேலை செய்யும் ஒரே நிமித்தமாகவே படைத்திருக்கிறார். மனு.அத்.8,413

பிராமணன் சூத்திரனுடைய பொருளை முழுமனச் சமாதானத்துடன் (சற்றாயினும் பாவமென்றெண் ணாமல்) கைப்பற்றிக் கொள்ளலாம். ஏனெனில் அவனுக் குச் சொந்தமான தொன்றுமில்லையாதலாலும் அவன் சொத்தை அவன் எஜமான் எடுத்துக்கொள்ளலாமாத லாலும். மனு.அத்.8.417

ஒரு பிறப்பாளன் (சூத்திரன்) இரு பிறப்பாளரை (பிராமணரை)த் திட்டினால் அவன் நாவை அறுத்தெறிய வேண்டும். மனு. அத். 8. 271.

அவன் அவர்கள் பேரையாவது, சாதியையாவது தூஷித்தால் பத்துவிரல் நீளமுள்ள பழுக்கக் காய்ச்சிய இரும்பை அவன் வாய்க்குள் செலுத்தவேண்டும். மனு.அத்.8.271

அவன் அகந்தையால் குருமாருக்கு அவர்களுடைய கடமைகளைப் பற்றிப் போதிப்பானானால் அவன் வாய்க்குள்ளும், காதுக்குள்ளும் கொதிக்கிற எண்ணெயை ஊற்றும்படி செய்வது அரசன் கடமை. மனு.அத்.7.272

அவன் உயர் குலத்தானை அடிப்பதற்குக் கையையாவது தடியையாவது உயர்த்தினால் அவன் கையை வெட்டியெறிந்துவிட வேண்டும். அவன் கோபத்தினால் அவனை உதைத்தால் அவன் காலை வெட்டியெறிந்து விட வேண்டும். மனு.அத்.8.280

தாழ் குலத்தான், உயர் குலத்தானோடு சமமாக உட்கார வெத்தனித்தால் அவனை இடுப்பிற் சூட்டுக் கோல்கொண்டு சுட்டுத் தேசத்தைவிட்டுத் துரத்திவிட வேண்டும். அவன் பின்பக்கத்தை வெட்டியெறிந்து விடலாம்.  மனு.அத்.7.281

அவன் அகந்தையால் அவன் மேல் உமிழ்ந்தால் அவன் உதடுகளிரண்டையும் அரசன் வெட்டியெறியும் படி செய்ய வேண்டும். மனு.அத். 8.282

இதுவரை எழுதி வந்தவை ஆரியர் - திராவிடர் யார் என்பதும், அவரவர்கள் வாழ்க்கைமுறை, தன்மை என்ன என்பதும், ஆரியரால் திராவிடம் இன்றைய இழிநிலை அடைந்ததற்குக் காரணம் விளங்கும் படி விளக்கப்பட்டவைகளாகும். இனி திராவிட சமய சம்பந்தமான விஷயங்கள் முதலியவை பற்றி அடுத்த தலையங்கத்தில் விளக்குவோம்.

(விடுதலை : 23-11-1939)

தொடரும்

Pin It