periyamuz logo

மோடி ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த இரண்டு ஆண்டுகளில் மோடி ஆட்சியின் “சாதனைகள்” தான் என்ன?

•             இரண்டாம் ஆண்டு வெற்றி விழாவை மே 28 மாலை புதுடில்லியில் ‘இந்தியா கேட்’ மைதானத்தில் திரையுலக நட்சத்திரங்களை அழைத்து ஆடம்பரமாக கொண்டாடினார்கள். நட்சத்திரங்களைப் பார்க்க கூட்டம் கூடியது. இதே போன்ற வெற்றி விழா உ.பி. தேர்தலை கவனத்தில் கொண்டு அலகாபாத்தில் ‘சர்தார் பட்டேல் கிசான் மகா சம்மேளனம்’ என்று விவசாயிகள் விழாவாக கொண்டாடினார்கள். அமித்ஷா சிறப்பு விருந்தினர். குறைந்த எண்ணிக்கையில் தான் கூட்டம் சேர்ந்தது. அமீத்ஷா விரக்தியானார். ஊடகங்களும் பெரிதாக செய்தி போடவில்லை.

•             மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளில் 20 சதவீதம்கூட நிறைவேற்றப்படவில்லை என்றும் 80 சதவீதம் ‘வாய் வீச்சு’களாகவே இருக்கிறது என்றும் ஆட்சியை வழி நடத்தும் ஆர்.எஸ்.எஸ். தலைமை அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளதாக ‘பிரண்ட் லைன்’ ஏடு எழுதியிருக்கிறது. ‘தாராள மயம்’ என்ற கொள்கையில் காங்கிரஸ் ஆட்சிக்கும் மோடி ஆட்சிக்கும் வேறுபாடு இல்லை என்றாலும் பன்னாட்டுச் சுரண்டலுக்கு கதவு திறக்கும் இந்த கொள்கைகளில் இரு கட்சிகளுக்குள்ளும் வேறுபாடு இருப்பதாக கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன. இதே மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கை களைப் பின்பற்றிய காங்கிரஸ் ஆட்சி, அதற்குள்ளாகவே ‘மனித நேய’ முகத்தைக் காட்டும் வகையில், கிராமப்புற வேலை திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற வற்றைக் கொண்டு வந்தது மோடி ஆட்சி. ‘கார்ப்பரேட்’ நிறுவனங்களை மகிழ்விக்க நிலம் கையகப்படுத்தும் மசோதா, சரக்கு சேவை வரி மசோதா ஆகியவற்றைக் கொண்டு வர முயன்று தோல்வி அடைந்துள்ளது.

•             மோடி ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்களும் ‘இந்து தேசிய’வாதமும் ஒன்றுக்கொன்று உதவி வருகின்றன. ஒரு பக்கம் அன்னிய மூலதனத்தை மட்டுமே இந்திய பொருளாதாரம் நம்பிக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கான நலத் திட்டங்களுக்கு அரசு செலவிடுவது நாட்டின் ‘வளர்ச்சி’யை பாதிக்கும் என்று கார்ப்பரேட் ஆதரவு பொருளாதார கொள்கையாளர்கள் கூக்குரலிடுகின்றனர். இந்த நிலையில் ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் ‘இந்துத்துவா’ கட்டமைக்கும் ‘தேசபக்தி’யை யும் அதன் பொருளாதாரக் கொள்கைகளையும் கேள்விக்குள்ளாக்கும்போது அவர்கள் ‘தேச விரோதிகள்’ என்று முத்திரை குத்தப்படு கிறார்கள்.

•             முதலாளித்துவ நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் சூழலில் மோடி ‘மேக் இன் இந்தியா’ எனும் இந்தியாவில் முதலீடுகளை திரட்டும் திட்டத்தை அறிவித் திருக்கிறார். இதனால் இந்தியாவில் எதிர்பார்த்த முதலீடுகள் வரவில்லை.

•             உலகில் பொருளாதார வளர்ச்சி பெற்று வரும் நாடுகளில் ஒன்றாக ‘இந்தியா’ இருப்பதாக கூறிக் கொள்கிறார்கள். தனி நபர் வருவாய் உயர்ந் திருப்பதாக புள்ளி விவரங்களைக் காட்டு கிறார்கள். தனி நபர் வருவாய் தொடர்பான மீளாய்வுகள் இந்தியா ‘வளர்ச்சி’ அடைந்து வருகிறது என்ற வாதத்தை பொய்யாக்கிவிட்டன. உண்மையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மக்களின் உணவுப் பொருள் பயன்பாடு அடிப்படையில் கணக்கிட்டால் கடந்த இரண்டு ஆண்டுகளில் தனி நபர் உணவு தானியங்களைப் பயன்படுத்தும் வீதம் 1990-1991ஆம் ஆண்டுகளில் இருந்ததை விட கடுமையாக சரிந்து விட்டது.

•             டாலர் மதிப்பீட்டில் ஏற்றுமதியும் கணிசமாக குறைந்துவிட்டது. உலகம் முழுதும் பெட்ரோல், டீசல், எண்ணெய் விலை சரிவு ஏற்பட்ட சூழலிலும் இந்திய பொருளாதாரம் மூச்சு திணறி நிற்கிறது.

•             நாடு முழுதும் ‘ஒற்றைக் கலாச்சாரத்தை’ சங்பரிவார் கும்பலின் ஆதரவோடு திணிக்கும் திட்டங்களை தீவிரப்படுத்துகிறது மோடி ஆட்சி. பல மாநிலங்களில் மாட்டுக் கறி விற்பனை தடை செய்யப்பட்டு, மாட்டுக் கறியை சாப்பிட்டாலோ வீட்டில் வைத்திருந்தாலோ குற்றம் என்று சட்டங்கள் வந்துவிட்டன. (தாத்ரியில் அத்லாக் என்ற முஸ்லிம் வீட்டில் மாட்டுக் கறி வைத் திருந்ததாகக் கூறி அடித்தே கொல்லப்பட்டார்)

•             ‘பாரத் மாதாக்கி ஜே’ என்று முழக்கமிட மறுப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள்.

•             பாகிஸ்தானியரோடு நட்பு பாராட்டினால் முகத்தில் கறுப்பு சாயம் பூசுகிறார்கள். சுசீந்திரா குல்கர்னி என்ற ஆய்வு மய்யம் ஒன்றின் தலைவர் முன்னாள் பாகிஸ்தான் அமைச்சர் குர்ஷித் முகமது கசூரி என்பவருடன் அவரது நூல் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றதற்காக இந்து மதவெறியர்கள் குல்கர்னி முகத்தில் கருப்பு சாயம் பூசினர்.

•             பகுத்தறிவு கருத்துகளை பரப்பியதற்காக தபோல்கர், பன்சாய் ஆகியோரும் சிலை வழிபாட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்த கல்புர்கியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

•             காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காகவும் அநியாயமாக தூக்கிலிடப்பட்ட அப்சல்குரு நினைவு நாளை நடத்தியதற்காகவும் கன்யா குமார் உள்ளிட்ட மாணவர்களை தேச விரோத சட்டத்தில் கைது செய்ததோடு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தையே சட்ட விரோதி களின் கூடாரமாக அறிவித்து விட்டார்கள்.

•             ‘அகில பாரத் வித்யார்த்தி பரிஷத்’ என்ற மதவெறி மாணவர் அமைப்பை எதிர்த்தால் பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடர முடியாது. சங்பரிவார் கும்பல் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தும். இப்படி எதிர்ப்பு தெரிவித்ததற்காக அய்தராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பட்டப் பிரிவில் படித்த தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலைக்கு தள்ளப்பட்டார்.

•             ஆர்.எஸ்.எஸ். சீருடையில் நாட்டில் உள்ள அனைவரும் பேண்ட் வாத்திய முழக்கங் களோடு அணி வகுத்தாக வேண்டும். அதுதான் தேச பக்தி என்ற எல்லைக்கு பேசக் கிளம்பி விட்டார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர் சாத்வீ நிரஞ்சன் ஜோதி இஸ்லாமியர்களை பீகார் பொதுக் கூட்டத்தில் இழிவுபடுத்துகிறார். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ‘இந்தியாவில் ஒருவர் வாழ வேண்டுமானால் மாட்டுக்கறி சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் பொதுக் கூட்டத்தில் வெளிப்படையாக மிரட்டுகிறார்; சட்டம் வேடிக்கை பார்க்கிறது.

•             அரசு நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ். கட்டுப் பாட்டில் கொண்டு வரப்பட்டு வருகின்றன. ‘இந்திய வரலாற்று ஆராய்ச்சி மய்யம்’ என்ற அமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.எஸ்.காரரான பார்ப்பனர் ஒய். சுதர்சன்ராவ். தெலுங்கானாவில் காக்காத்தியா பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறைத் தலைவராக இருந்தவர். ‘ஜாதி அமைப்பு தேவை’ என்று நூல் எழுதியவர். இராமாயணம், மகாபாரதம் என்பவை புராணங்கள் அல்ல; வரலாறு என்பதை இளம் தலைமுறைக்கு உணர்த்தும் வகையில் வரலாறுகள் மாற்றி எழுதப்பட வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டவர்.

•             இந்திய கலாச்சார உறவுகளுக்கான மய்யத்தின் (ICCR) தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர் லோகேஷ் சந்திரா. மோடியின் பக்தர். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடியை கடவுள் அவதாரம் என்று பேசியவர், காந்தியைவிட உயர்ந்தவர் என்று புகழாரம் சூட்டியவர். தனது ஆராய்ச்சி பட்டத்துக்கான ஆய்வை ஜனசங்கத் தலைவர்களான தீனதயாள் உபத்யாவுக்கும், விவேகானந்தருக்கும் காணிக்கையாக்கியவர்.

•             பூனேயில் உள்ள அரசு நிறுவனமான இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத் தின் (FTII) தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர் கஜேந்திர சவுகான். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மகாபாரத’ தொடரில் நடித்தவர் என்பதுதான் இவரது ‘தகுதி’. இந்த நியமனத்தை எதிர்த்து நிறுவனத்தின் மாணவர்கள் நீண்ட காலம் போராடினார்கள். ஆட்சி அசைந்து கொடுக்கவில்லை. இந்த நிறுவனத்துக்குள் இப்போது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஏராளமாக நுழைந்து விட்டார்கள்.

•             சிம்லாவில் உள்ள ‘இந்திய உயர்கல்வி ஆய்வு மய்யம்’ என்ற அரசு நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் சந்திர கலாபாடியா என்ற ஆர்.எஸ்.எஸ். அம்மையார். இந்தப் பதவிக்கு தேர்வுக் குழு பரிந்துரைத்த பட்டியலில் இவரது பெயரே இடம் பெற வில்லை. மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியால் நேரடியாக நியமிக்கப்பட்டவர். புகழ்பெற்ற ஆய்வாளர் கோபால கிருஷ்ண காந்தி போன்றவர்கள் வகித்த பதவி இது.

•             அய்.அய்.டி.யின் தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் பலரும் பார்ப்பனர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள்தான். மத்திய மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேரடி தலை யீட்டில் அனைத்து நியமனங்களும் நடந்தன. ரோப்பர், புவனேசுவர், பாட்னா, அய்அய்.டி. தலைவர் பதவிகளுக்கு தேர்வுக் குழு முறைப்படி 37 பேர் கொண்ட பெயர்ப் பட்டியலை அரசுக்கு அனுப்பியது. பட்டியலை குப்பைக் கூடையில் வீசி விட்டு, நேரடியாக ஆர்.எஸ்.எஸ். ஆதர வாளர்களை நியமித்தார் அமைச்சர் ஸ்மிருதி இரானி. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அய்.அய்.டி. ஆளுகைக் குழுத் தலைவர் பதவியிலிருந்து அணுசக்தி விஞ்ஞானி அனில் கடோட்கர் என்பவரும் புது டெல்லி அய்.அய்.டி. இயக்குனர் ரகுநாத் ஷெசோனிகர் என்பவரும் பதவி விலகினர்.

•             ‘அய்.அய்.எம்.’ என்ற இந்திய நிர்வாக அமைப்பின் சுயேச்சை யான அதிகாரங்களை அமைச்சர் ஸ்மிருதி இரானி பறித்து, பாடத் திட்டம், கட்டண நிர்ணயம் அனைத்தையும் தனது கட்டுப் பாட்டுகளின் கீழ் கொண்டு வந்து விட்டார்.

•             கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCERT) இயக்குநராக இருந்த பர்வின் சிங்லர் என்பவரை கடந்த அக்டோபர் மாதம் கட்டாயப் படுத்தி பதவி விலகச் செய்தனர். அதேபோல், ஆர்.எஸ்.எஸ். கட்டுப் பாடுகளுக்கு பணிய மறுத்த விசுவ பாரதி பல்கலைக் கழக துணை வேந்தர் சுஷாந்தா தத்தா குப்தா என்பவரும் கட்டாயப்படுத்தி பதவி விலகல் கடிதத்தைப் பெற்று, வீட்டுக்கு அனுப்பப் பட்டார்.

•             ‘டாட்டா அடிப்படை ஆராய்ச்சி மய்ய’ இயக்குநர் பதவியிலிருந்த விஞ்ஞானி சந்தீப் திரிவேதி என்பவரை இதற்கு முன் எப் போதும் நிகழ்ந்திடாத முறையிலே பிரதமர் அலுவலகம் பதவி நீக்கம் செய்தது.

•             ‘தேசிய நூல் அறக்கட்டளை’ என்ற அமைப்புக்கு தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர் பல்தேவ் சர்மா. இவர் ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான “பஞ்ச ஜன்யா” பத்திரிகையின் ஆசிரியர்.

•             ‘பிரச்சார் பாரதி’ என்ற தொலைக் காட்சி நிறுவனத்தின் தலைவர் ஏ. சூர்ய பிரகாஷ். இவர் ஆர்.எஸ். எஸ். சிந்தனை மன்றமாக செயல்படும் ‘விவேகானந்தா சர்வதேச நிறுவனம்’ என்ற அமைப்பில் செயல்பட்டவர்.

•             ‘சென்சார் போர்டு’ என்ற திரைப் படத் தணிக்கைக் குழுவின் தலைவர் நிகாலனி. தேர்தல் பிரச்சாரத்தில் மோடி புகழ் பாடும் ‘ஹர்ஹர் மோடி’ முழக்கங்களை உருவாக்கியது இவர்தான். பதவிக்கு வந்தவுடன் திரைப் படங்களில் பயன்படுத்தக்கூடாத ‘வார்த்தைகள்’ என்று ஒரு தடைப் பட்டியலையே மத கண்ணோட் டத்தில் தயாரித்தார்.

•             காசி இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கிரீஷ் சந்திரா திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். இவரை தேர்வு செய்த குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி கிரிஷ் மால்வியா. இவர் இந்து மகாசபையை நிறுவிய பார்ப்பனர் மதன் மோகன் மாளவியாவின் பேரன். வாரணாசியில் போட்டி யிட்ட மோடியின் வேட்பாளர் மனு வில் மோடியை முன்மொழிந்தவர்.

•             குஜராத் படுகொலை மாலேகான் குண்டு வெடிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ‘இந்துத்துவா’ கும்பல் மீதான வழக்குகளை ஆட்சி திரும்பப் பெற்று வருகிறது.

•             அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். சில் சேர்ந்து பணியாற்றுவதில் தடையேதும் இல்லை என்று அரசு உத்தரவிட முடிவு செய்துள்ளது. மத்திய கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மோடி ஆட்சி அதிகாரத்தைப் பயன் படுத்தி அரசு நிறுவனங்களை இந்து மயமாக்கியதன் ஒரு தொகுப்பு இது. மேலும் பல செய்திகள் அடுத்த இதழில்.

Pin It

இந்துத்துவ அரசியல் - ஒரு வரலாற்றுப் பார்வை (2)

முஸ்லிம் அல்லாதவர்களில் மிகப் பெரும்பான்மையினரையும், வருணாசிரம அமைப்புக்கு வெளியில் இருந்த தாழ்த்தப்பட்டவர்களையும், பழங்குடியினரையும் இந்துக்கள் என்ற வரையறைக்குள் கொண்டுவந்து அவர்கள் எல்லாருக்கும் பொதுவான இந்து உரிமை இயல் சட்ட நெறிகளை (மனுஸ்மிருதி) முதலானவற்றின் அடிப்படை யில், ஆங்கிலேயே ஆட்சி 1860இல் உருவாக்கியது. 1860க்கு முன்பு வரை, இந்தியாவில் ஒரே சீராக எல்லா இடங் களுக்கும் எல்லாருக்கும் எல்லா சமயங்களிலும் பொருந்துகிற, பொதுவான சித்தாந்த உள்ளடக்கத்தைக் கொண்ட இந்துச் சட்டம் (Hindu code) என்று ஏதும் இருந்ததில்லை.

ஆனால் சங்பரிவாரங்கள் வேதகாலம் முதல் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி இருந்து வந்தது போலவும், அதை மீண்டும் நிலைநாட்டுவதே இந்தியர் களின் - இந்திய நாட்டின் சுயமரியாதையை மீட்டெடுப்ப தாகும் என்றும் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆங்கிலேயரின் ஆட்சியாலும் கருத்துகளாலும் இந்து மதம் பல அறைகூவல்களை எதிர்கொள்ள வேண்டி யிருந்தது. வேதகாலம் முதல் பார்ப்பனியம் காலத்துக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு, தன் ஆதிக்கத்தை நீடிக்கச் செய்யும் சூழ்ச்சித் திறன் மிக்கதாகத் திகழ்ந்து வருகிறது. இவ்வாறு தான் வரலாற்றில் பல நூற்றாண்டுகள் நீடித்த பவுத்த, சமண சமயங்களில் செல்வாக்கையும் எதிர்ப்பையும் இறுதியில் முறியடித்தது. 500 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த முகம்மதிய ஆட்சியினரும் வருணாசிரம - சாதியமைப்பினைக் கட்டுக் குலையாமல் காத்தனர். மதத்திலும் சமூகத்திலும் பார்ப்பன மேலாதிக்கம் சரியாமல் பார்த்துக் கொண்டனர். எனவே ஆங்கிலேய ஆட்சியால் ஏற்பட்ட புதிய சூழலுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைக்கும் முயற்சியாக 1828இல் பிரம்ம சமாஜத்தையும், 1875இல் ஆரிய சமாஜத்தையும் பார்ப்பனர்கள் தோற்றுவித்தனர். இந்து மதத்தைச் சீர்திருத்தம் செய்து நவீனப்படுத்தும் முயற்சியில் இவை ஈடுபட்டன.

1858 முதல் பிரித்தானியப் பேரரசின் நேரடி ஆட்சியில் உருவான கல்வி, வேலை வாய்ப்புகளைப் பார்ப்பனர்களே கைப்பற்றிக் கொண்டனர். தங்கள் ஆதிக்கத்தை உரிமை யுடனும், வலிமையாகவும் நிறுவுவதற்கான ஓர் அமைப்பாக 1885இல் ‘இந்தியத் தேசியக் காங்கிரசு’ என்ற அரசியல் கட்சியை நிறுவினர். ‘அரசின் உயர் பதவிகளை இந்தியர் மயமாக்கு’ என்பதே இதன் முதன்மையான முழக்கமாக இருந்தது. காலங்காலமாகக் கல்வியைத் தம் முற்றுரிமை யாக்கிக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் ஆங்கில ஆட்சியில் ஏற்பட்ட கல்வி வாய்ப்பையும், அரசு வேலைகளையும் முழுவதுமாகக் கைப்பற்றிக் கொண்டனர். இந்திய அளவில் காங்கிரசுக் கட்சியிலும் பார்ப்பனர்களே தலைவர்களாக இருந்தனர். இவர்களின் அரசியல் கோரிக்கைகள் அனைத்தும் ஆட்சியதிகாரத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதையே குறிக்கோளாகக் கொண் டிருந்தன. இதற்காகவே ‘இந்திய தேசியத்தின்’ பெயரால் இந்தியாவில் உள்ள அனைவரும் ஓரணியில் திரள வேண்டுமென்று முழங்கினர்.

பார்ப்பனர்களே சுயராச்சியம் என்ற பெயரால் எல்லா வாய்ப்புகளையும் அதிகாரங்களையும் பெற்று வருவதைக் கண்ட - அப்போது இந்தியாவின் மக்கள் தொகையில் 25 விழுக்காட்டினராக இருந்த இசுலாமியர்கள் தங்கள் நலன்களைக் காப்பதற்கென 1906இல் ‘முசுலீம் லீக்’ என்ற அமைப்பை உருவாக்கினர். தங்களுக்குத் தனியாக, சட்ட அவைகளிலும், அரசு வேலைகளிலும் விகிதாசாரப் பங்கீடு கோரினர். 1909இல் மிண்டோ-மார்லி திட்டத்தின் கீழ், சட்ட அவைகளில், முகமதியர் தனி இடஒதுக்கீடு பெற்றனர். 1919இல் மாண்டேகு-செம்ஸ்போர்டு திட்ட அறிக்கையின் படி சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் தனி வாக்காளர் தொகுதியைப் பெற்றனர். 1934இல் வேலைகளில் தனியாக விகிதாசார இடஒதுக்கீடு பெற்றனர்.

வெள்ளையர் வெளியேறியவுடன் இவை இரண்டும் நீக்கப்பட்டன.

இதே சமகாலத்தில் சென்னை மாகாணத்தில் பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்த்து 1916இல் உருவாக்கப்பட்ட தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் எனும் நீதிக்கட்சி, பிரித்தானிய அரசிடம் டாக்டர் டி.எம்.நாயரின் தலைமையில் வாதாடி, சென்னை மாகாணத்தில் மட்டும் பார்ப்பனர் அல்லாதார்க்கென சட்டமன்றத் தொகுதிகளைப் பெற்றது. 1920இல் நடந்த தேர்தலில் நீதிக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. 1921இல் இயற்றிய சட்டப்படி, சென்னை மாகாணத்தில் மட்டும் அரசு வேலைகளில் 100 விழுக்காடு இடங்களும் 5 வகுப்புகளுக்குப் பிரித்து அளிக்கப்பட்டன. 1937 வரை நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தது. பார்ப்பன ஆதிக்கத்திற்கு இது பேரிடியாய் அமைந்தது என்பது வரலாறு.

சமூக சீர்திருத்தத்துக்கு எதிர்ப்பு

காங்கிரசுக் கட்சியில் கோபால கிருட்டிண கோகலே போன்றவர்கள் அரசியல் சீர்திருத்தத்துடன், சமூக சீர்திருத்தத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்றனர். தீவிர இந்துமதப் பிற்போக்காளர்களாக விளங்கிய திலகர் போன்றவர்கள் சமூக சீர்திருத்தக் கோரிக்கை மேலெழாதவாறு செய்துவிட்டனர். அதனால் காங்கிரசு மாநாடுகளில் நடைபெற்று வந்த சமூக சீர்திருத்த மாநாட்டுக்கு அனுமதி தரவும் மறுத்துவிட்டனர்.

1915இல் காந்தியார் தென்னாப்பிரிக்காவிலிருந்து நிலையாக இந்தியாவுக்குத் திரும்பினார். 1920க்குள் காங்கிரசுக் கட்சியின் தலைமை அவரிடம் சென்றது. 25 விழுக் காட்டினராக உள்ள முசுலீம்களையும் தேசிய இயக்கத்தில் இணைக்கும் நோக்கத்துடன், கிலாபத் இயக்கத்தையும் ஒத்துழையாமை இயக்கத்தையும் ஒரே சமயத்தில் தொடங்கினார். அலி சகோதரர்கள் காந்தியுடன் இந்தியா முழுவதும் சென்று பரப்புரை செய்தனர். ஆனால் காந்தி எதிர்பார்த்த அளவுக்குப் பயன் கிடைக்கவில்லை.

1909இல் பிரித்தானிய அரசு சட்ட அவைகளில் இசுலாமியருக்குத் தனிப் பிரதிநிதித்துவம் அளித்ததைக் காங்கிரசில் இருந்த எல்லாப் பார்ப்பனர்களும் எதிர்த்தனர். இந்துக்களைக் கலாச்சார முறையிலும் அரசியல் வழியிலும் அணி திரட்டுவதற்காக 1910இல் கான்பூரில் பார்ப்பனர்கள் ஒரு மாநாடு கூட்டினர். இதன் தொடர்ச்சியாகக் காங்கிரசில் தலைவர்களாக இருந்த மதன்மோகன் மாளவியாவும், லாலா லஜபதிராயும் 1914இல் ‘இந்து மகா சபை’ என்ற அமைப்பை ஏற்படுத்தினர். காங்கிரசின் பல தலைவர்களும், மற்ற படித்த இந்துக்களும் இந்து மகாசபையில் சேர்ந்து செயல்பட்டனர். இந்து மகாசபை முசுலீம்களுக்கு எதிரான அரசியல் நிலைபாட்டைக் கொள்கையாகக் கொண்டிருந்தது.

மராட்டியத்தின் சித்பவன் பார்ப்பனப் பிரிவைச் சேர்ந்த விநாயக் தாமோதர் சாவர்க்கர் 1906-1910 வரை இலண்டனில் இருந்தார். அவர், பிரித்தானிய அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அந்தமான் தீவில் 1917இல் சிறை வைக்கப்பட்டார். இந்துத்துவம் குறித்து சாவர்க்கர் உருவாக்கிய கருத்துகளை 1917-1919 காலக் கட்டத்தில் அந்தமான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர்கள் மூலமாக இந்தியாவுக்கு அனுப்பினார். அவை தொகுக்கப்பட்டு ‘இந்துத்துவா’ என்ற தலைப்பில் 1923ஆம் ஆண்டு நூலாக வெளியிடப்பட்டது. அந்நூலின் ஆசிரியர் ‘மராத்தியன்’ என்று குறிக்கப்பட்டிருந்தது.

‘இந்து’ என்ற சொல்லுக்கு 50 வகையான விளக்கங்கள் இருந்தன. சாவர்க்கர் இந்தக் குழப்பத்துக்கு ஒரு முடிவுக் கட்டி, திட்டவட்டமான இறுதியானதோர் வரையறையை ‘இந்துத்துவா’ நூலில் வழங்கியிருக்கிறார் என்று, இந்நூலின் இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் கூறப்பட்டுள்ளது. ‘இந்துத்துவா’ என்ற சொல்லை, ‘சாவர்க்கர்’தான் உருவாக்கினார். இந்துத்துவா என்பது இந்து சாத்திரங்களையோ, இந்து மதத்தையோ குறிப்பதன்று. இந்து இராஷ்டிரம் எனும் நிலப்பரப்பை - அதில் வாழும் இந்து மக்களைக் குறிப் பாகும் என்று விளக்கமளித்துள்ளார் சாவர்க்கர்.

இந்து என்பவன் யார்? என்ற வினாவுக்கு, “சிந்து நதியிலிருந்து தெற்கே கடல் வரை நீண் டிருக்கும் பிரதேசமாகிய பாரத வர்ஷத்தைத் தன் தந்தையர் நாடாகவும் (பித்ரு பூமி) புண்ணிய பூமியாகவும் அதாவது தன் மதத்தின் தொட்டி லாகவும் கருதும் ஒருவன்தான் இந்து” என்று இந்துத்துவா நூலில் சாவர்க்கர் வரை யறை செய்துள்ளார். இந்துத்துவத்தின் கருப் பொருளாக இன்றளவும் இதுவே விளங்குகிறது.

இந்தியாவில் வாழும் இசுலாமியர்களுக்கு மெக்காவும், கிறித்துவர்களுக்கு ஜெருசலேமும் புண்ணிய பூமியாக இருப்பதாலும் அவர்களுடைய மதங்கள் அயல்நாட்டில் தோன்றியதாலும் அவர்கள் இந்த நாட்டுக்கு உரிமை உடையவர்கள் அல்லர் என்பதே இதன் விளக்கமாகும். சாவர்க்கரின் இந்துத்துவ நூலை லஜபதிராயும், மாளவியாவும் போற்றிப் புகழ்ந்தனர். இந்துமகா சபையின் கொள்கை நூலாக இது ஏற்கப்பட்டது.

இந்தப் பின்னணியில்தான் 1925 விஜயதசமி நாளில் நாகபுரியில் இராஷ்டிரிய சுயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) என்ற அமைப்பை டாக்டர் கே.பி. ஹெட்கேவர், டாக்டர் பி.எஸ். மூஞ்சே (இவர் திலகரின் நண்பர்), டாக்டர் எல்.வி. பராஞ்சிபாய், டாக்டர் பி.பி.தால்கர், பாபுராவ் சாவர்க்கர் (வி.தா. சாவர்க்கரின் தம்பி) ஆகிய அய்வர் அமைத்தனர். இவர்கள் அய்வரும் மராட்டிய சித் பவன் பார்ப்பனர்கள். ஹெட்கேவர் தவிர மற்ற நால்வரும் இந்து மகாசபையைச் சேர்ந்தவர்கள். அதனால்தான் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஹெட்கேவர் பெயரை மட்டுமே ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் பெயரில் குறிப்பிடுகின்றனர். 1929இல் ஹெட்கேவர் வாழ்நாள் தலைவராகத் (சர்சங்சாலக்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

(தொடரும்)

Pin It

மகாராஷ்டிராவில் பகுத்தறிவாளர் டாக்டர் தபோல்கர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து தீவிரவாத அமைப்பைச் சார்ந்த ஒருவரை சி.பி.அய். கைது செய்துள்ளது. அவரது பெயர் வீரேந்திர தாப்தே. ‘இந்து ஜன் ஜாக்ருதி சமிதி’ என்ற அமைப்பின் தீவிர உறுப்பினர். கம்யூனிஸ்ட்டும் பகுத்தறிவாளருமான கோவிந்த் பன்சாரே, இதேபோல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதே இந்து தீவிரவாத அமைப்பைச் சார்ந்த சமீர் கெய்க்வார்ட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2009இல் கோவாவில் நடந்த குண்டு வெடிப்பில் தேடப் பட்டு வரும் முக்கிய இந்து தீவிரவாதி சாரங் அகோல்கர்தான் தபோல்கர் கொலை யில் முதன்மை குற்றவாளி என்று சி.பி.அய். கருதி அவரை தேடி வருகிறது.

குற்றம்சாட்டப் பட்டுள்ள இந்த இருவருக்கும் அகோல்கருக்கும் இடையே இணைய தளம் வழியாக கடிதத் தொடர்புகள் இருந் துள்ளதை சி.பி.அய். கண்டு பிடித்துள்ளது. சரியான திசையில் சி.பி.அய். செயல்படத் தொடங்கியிருக்கிறது என்றும், காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் வரவேற்கத்தக்கது என்று தபோல்கரின் மகன் அமீது தபோல்கர் கூறியுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்துக்கும் மதத்துக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட வேண்டும் என்று ‘இஸ்லாமிய பயங்கர வாதத்தை’ மறைமுகமாக சுட்டிக் காட்டினார். இந்தியாவில் பார்ப்பன பயங்கரவாதம் துப்பாக்கிகளை தூக்கிக் கொண்டு திரிகிறது. வெடிகுண்டு தாக்குதல்களை நடத்திய இந்து தீவிரவாதக் கும்பல்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை மோடி ஆட்சி திரும்பப் பெற்று வருகிறது. மதத்தின் பெயரால் நடக்கும் அனைத்து வன்முறைகளும் தடுக்கப்பட்டாக வேண்டும்.

Pin It

‘இராசி எண்’ பார்க்கும் மூட நம்பிக்கை நீதித் துறைகளில் கொடி கட்டிப் பறப்பதை விளக்கி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு, தமிழ் நாளேடு ஒன்றில் விரிவான கட்டுரை எழுதியுள்ளார். அதிலிருந்து...

•             கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி தோற்று, இடதுசாரி கூட்டணி ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது. முந்தைய அமைச்சர்கள் பயன் படுத்திய வாகனங்களையே - புதிய அமைச்சர்களும் பயன்படுத்த முடிவெடுத்தனர். வாகனங்களை அணிவகுத்து நிறுத்தியபோது, அதில் 13ஆம் எண் உள்ள வாகனமே இல்லை. காரணம் 13 இராசியில்லாத எண் என்ற மூட நம்பிக்கை. ‘இராசியில்லாத எண்’ வேண்டாம் என்று நம்பிய பிறகும் தேர்தல் முடிவுகள் இவர்களுக்கு ‘இராசி’ இல்லாமல் போய்விட்டதே! இப்போது நிதி அமைச்சராக பதவி ஏற்றிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த அமைச்சர் தாமஸ் அய்சக் தன்னுடைய வாகனத்துக்கு 13 என்ற எண்ணைப் பெற்றுத் தரு மாறு கேட்டுள்ளார். அமைச் சரைப் பாராட்ட வேண்டும்.

•             கேரளாவில் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் அறைகளுக்குக்கூட ‘13’ எண் தவிர்க்கப்பட்டு, ‘12ஏ’ என்று இலக்கமிடப்பட்டுள்ளது. பகுத்தறிவுக்கு எதிரான இந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சந்திரமோகன் என்ற வழக்கறிஞர் கேரள உயர்நீதிமன்றத்தில் 2006 ஆம் ஆண்டு பொது நலன் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். 13ஆவது எண்ணை புறக்கணிக்கக் கூடாது என்று கோரி இருந்தார். வழக்கை விசாரித்த அன்றைய தலைமை நீதிபதி வி.கே. பாலி, அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு வழக்கை தள்ளுபடி செய்ததோடு, வழக் கறிஞருக்கு ரூ.10,000 அபராதம் விதித்தது. இது அற்பத்தனமான மனு என்றும் நீதிபதிகள் கடுமை யாக கண்டித்தனர். வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு முறையீடு செய்தார் சந்திரமோகன். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால் அடங்கிய அமர்வு கேரள உயர்நீதிமன்ற உத்தரவை நீக்கம் செய்ததோடு பகுத்தறிவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேரள உயர்நீதி மன்றத்துக்கு அறிவுறுத்தியது. அதற்குப் பிறகும்கூட கேரள உயர்நீதிமன்றத்தில் ஆங்கில அகர முதலி வரிசைப்படி எண்களை கொடுத்து (1, 1ஏ, 1பி....) 13ஆவது எண்ணை தவிர்த்து விட்டனர்.

•             சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தனக்கு ‘இராசி’ எண் 7 என்று நம்பி, எப்போதுமே 7 அல்லது கூட்டு வரிசையில் ‘7’ வரக்கூடிய அறைகளையும் ஒவ் வொரு நாளும் விசாரிக்கக்கூடிய வழக்குகளின் எண்ணிக்கை கூட்டுத் தொகையில் ‘7’ அமையு மாறும் பார்த்துக் கொள்வாராம்.

•             தமிழகத்திலுள்ள நீதிபதிகள் தங்களது வாகனங்களின் பதிவு எண்கள் ஒற்றைப் படை வரிசை யில் அமையுமாறு பார்த்துக் கொள்வார்களாம். ஆந்திராவி லிருந்து இங்கே வரும் நீதிபதி களோ இரட்டைப் படை எண் தான் ‘இராசி’ என்று நம்புவார் களாம்.

•             அரசமைப்பு சட்டத்தின் அடிப் படைக் கடமைகள் பற்றிய பிரிவு 51ஏ-யிலுள்ள பிரிவு (எச்) என்ற உட்பிரிவு அறிவியல் மனப் பான்மையை வலியுறுத்துகிறது. அறிவியல் மன நிலையுடன் மனிதாபிமானத் தன்மையுடன் அனைத்தையும் விசாரணைக்கு உட்படுத்தி, சீர்திருத்த மனப் பான்மைக்கான மெய்ப்பொருளை தேடும் கடமை உணர்வு ஒவ் வொரு குடிமகனுக்கும் அடிப்படை கடமையாக்கப்பட்டுள்ளது. ஆனால் பல நீதிபதிகள் இதற்கு மாறான மூடநம்பிக்கையாளர் களாக அதுவும் ‘இராசி’ எண் பார்க்கக் கூடியவர்களாக இருக் கிறார்கள். இதே நீதிபதிகள் 13 இலக்கக் கூட்டுத் தொகையில் ஊதியத் தொகையோ ஆயுள் காப்பீட்டுத் தொகையோ வரும் போது, அதை வாங்குவதற்கு மறுப்பார்களா?

சிறைக்குத் தள்ளியது வேதமந்திரத்தின் ‘சக்தி’

மும்பை சம்தா நகரில் கடந்த ஜூன் 10ஆம் தேதி ம hளிகை ஒன்றில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி தேவேந்திர துபே, பகவான் திவேரீ என்ற இரண்டு வேதம் படித்த புரோகித பார்ப்பனர்களை கைது செய்துள்ளனர்.

இவர்களால் சிறை பிடிக்கப்பட் டிருந்த 12 பார்ப்பன சிறுவர்கள் மற்றும் 16 பார்ப்பன இளைஞர்களை மீட்டுள்ளனர். தாங்கள் கற்ற வேத மந்திரங்களின் சக்தியினால் ‘கடவுளோடு’ தங்களுக்கு நேரடி தொடர்பு இருக்கிறது என்று இவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்.

மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உ.பி., ம.பி., ஜார்கண்ட் மாநிலங்களி லிருந்து தரகர்கள் வழியாக இந்த சிறுவர்கள் கடத்தப்படுகிறார்கள். அவர்களை ‘வேதப் பயிற்சி மாளிகைக்கு’ அனுப்பி வைக் கிறார்கள். இப்படி பார்ப்பன சிறுவர்களை சேர்ப்பதற்காக சில தரகர்கள் இருந்தார்கள். இப்போது பார்ப்பன பெண் தரகர் ஒருவரை காவல்துறை தேடிக் கொண்டிருக் கிறது. ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் தொடர்ந்து வேத மந்திரங்களை ஓதிக் கொண்டே இருக்க வேண்டுமாம். அப்படி இந்த சிறுவர்களும் இளைஞர்களும் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

சொத்துக்கள் குவிப்பதற்கும், வெற்றிகரமாக வணிகம் நடத்துவதற் கும், விரும்பும் பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கும் சோதிட இராசிப் பலன்களை மாற்றி அமைப்பதற்கும் இந்த வேதப் பயிற்சி களை மேற்கொண்டால் கடவுள் நேரடியாக தலையிட முன் வருவார் என்று ஆசை வார்த்தைகள் காட்டப் பட்டன. கடும் மன அழுத்தத்துக்கு உள்ளான இளைஞர்கள், தங்கள் உறவினர்களுக்கு அலைபேசி, குறுஞ் செய்தி வழியாக இரகசியமாக தகவல் அனுப்பி, தங்களை மீட்க உதவுமாறு கேட்டனர்.

அதற்குப் பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. இந்த சிறுவர்கள் 2 மாதத்தி லிருந்து 5 மாதங்கள் வரை இப்படி கொடுமைபடுத்தப்பட்டிருக்கிறார்கள். கடவுளிடம் தொடர்பு இருப்பதாகக் கூறிய வேத புரோகிதர்கள் இருவரும் இப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

கோயில்களிலும் அர்ச்சகப் பார்ப்பனர்கள் தங்களின் வேத மந்திர உச்சரிப்புகளின் ஒலி கடவுளுக்கு கேட்கிறது என்று கூறி பக்தர்களின் கோரிக்கைகளுக்காக ‘தட்சணை’ வாங்கிக் கொண்டு அர்ச்சனை செய்கிறார்கள். பாமர பக்தர்களும் இதை நம்புகிறார்கள். இதற்குப் பெயர் பக்தியாம்!

இதே தொழிலை வேறு வடிவத்தில் பார்ப்பனர்களாக பார்த்து ஆள் பிடித்து செய்தால் அதற்குப் பெயர் மோசடி. இதே மோசடிதானே கோயில்களிலும் நடக்கிறது. இதே மோசடிதானே கோயில்களிலும் நடக்கிறது.

‘சமஸ்கிருத’ மந்திரத்தின் சக்தியைக் கூறி பார்ப்பனர்கள் வேத காலத்தி லிருந்து ஏமாற்றிக் கொண்டே வருகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.சில் அரசு ஊழியர்கள் சேரலாமாம்!

‘அரசு ஊழியர்கள் ஆர்.எஸ். எஸ்.சில் உறுப்பினராக இருக்க தடை யில்லை’ என்று மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ஒரு அரசாணை பிறப்பித்தார். அது நாடு முழுவதும் கொந்தளிப்பை உருவாக்கியது. அன்று நாடாளு மன்றத்தில் எதிர்கட்சியாக இருந்த காங்கிரஸ் இந்த உத்தரவு திரும்பப் பெறும் வரை நாடாளுமன்றத்தையே முடக்கியது. இப்போது ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அரசு ஊழியர்களாக அதிகாரிகளாக வருவதற்கான தடையை நீக்க மோடி ஆட்சி முடிவு செய்திருக்கிறது.

இந்திரா பிரதமராக இருக்கும் போது 1966ஆம் ஆண்டு அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப் பிலோ ஜமாத்-இ-இஸ்லாம் அமைப் பிலோ உறுப்பினராக இருப்பதற்கு தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இதன்படி அரசு ஊழியர்கள் பணியில் சேரும்போது இந்த அமைப்புகளில் உறுப்பினராக இல்லை என்று எழுத்துபூர்வமாக உறுதி தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து 1975ஆம் ஆண்டிலும் 1980ஆம் ஆண்டிலும் இந்த ஆணைகள் மீண்டும் பிறப்பிக்கப் பட்டன. தடை அமுலில் இருந்தாலும், எழுத்துபூர்வமாக உறுதி தரும் நடை முறை பின்பற்றப்படாமல் இருந்தது. இப்போது கோவாவில் புதிதாக அரசுப் பணிகளில் சேருவோர் இத்தகைய உறுதிப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அம்மாநில அரசு வலியுறுத்துகிறது.

இந்த நிலையில் மத்திய வேலை வாய்ப்புத் துறை அமைச்சகம், ‘ஆர்.எஸ்.எஸ்.சில் அரசு ஊழியர் உறுப்பினராகும் தடையை நீக்கு வதாக முடிவு செய்துள்ளது’ என்ற செய்தியை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜூன் 10) வெளியிட் டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். பிரச்சார செயலாளராக உள்ள (பிரச்சார் பிரமுக்) மன்மோகன் வைத்யா, ‘இத்தகைய தடை ஜனநாயக விரோத மானது’ என்று கூறியுள்ளார். மத்திய இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் என்பவரும் தடை நீக்கப்படும் என்று கூறியிருக்கிறார். ‘ஆர்.எஸ்.எஸ். ஒரு கலாச்சார அமைப்பு; அரசியல் அமைப்பு அல்ல’ என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால் இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவது மோடியா, அத்வானியா என்ற பிரச் சினை வந்தபோது, அத்வானியை அழைத்துப் பேசி போட்டியிலிருந்து விலக வைத்தது ஆர்.எஸ்.எஸ். மோடி யின் அமைச்சரவைப் பட்டியல், ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தலின் படியே தயாரிக்கப்பட்டது. ஆட்சியின் உயர் பதவிகளில் வரலாற்றுக் கழகம், தணிக்கைப் பிரிவு போன்றவற்றிலும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களே நியமிக்கப் படுகிறார்கள். பிரதமர் அலுவலகத் தில் செல்வாக்கு மிக்க பதவிகளில் ஆர்.எஸ்.எஸ். முகாமிலிருந்து வந்த வர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஆர்.எஸ்.எஸ்.சுக்கு அரசியல் தொடர்பு இல்லை. கலாச்சார அமைப்பு என்று காதில் பூசுற்றுகிறார்கள். அதிகார மய்யங்களை பார்ப்பன காவிமயமாக்கும் முயற்சிகளில் வெளிப்படையாகவே மோடி ஆட்சி இறங்கிவிட்டது.

Pin It

vemannaதந்தை பெரியாரின் நூல்களை கன்னட மொழியில் மொழி பெயர்த்து, கன்னட மக்களிடம் பெரியார் சிந்தனைகளை கொண்டு சென்ற எழுத்தாளர் வேமண்ணா (89). பெங்களூரில் கடந்த ஜூன் 8ஆம் தேதி முடிவெய்தினார். 1960களில் பெரியார் பெங்களூரு கோலார் தங்கவயல் பகுதிகளுக்கு பொதுக் கூட்டங்களுக்கு  சென்றபோது, வேமண்ணா, பெரியாருடன் உரையாடி, நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். கன்னட மொழியைப் படித்தால் பகுத்தறிவு கருத்துகளை கன்னட மக்களிடம் கொண்டு செல்ல பயன்படுமே என்று பெரியார் அறிவுறுத்தியதை ஏற்று, பெங்களூர் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து முறைப்படி கன்னடம் பயின்றார். கடந்த 50 ஆண்டுகளில் பெரியாரின் 30க்கும் மேற்பட்ட நூல்களை கன்னடத்தில் மொழி பெயர்த்தார். பெரியாரின் வாழ்க்கை வரலாறு நூலையும் கன்னடத்தில் எழுதிய பெருமைக்குரியவர். இந்த நூல் ஹம்பி பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

இவரது பெரியாரியல் பணிகளை பாராட்டி, ‘கன்னட ரத்னா’, ‘பெரியார் முழக்கம்’ உள்ளிட்ட பல விருதுகளை பல அமைப்புகள் வழங்கி கவுரவித்துள்ளன. வேமண்ணாவின் இயற்பெயர் வி.சி. வேலாயுதம். தமிழ்நாட்டுத் தமிழர். 1946இல் வேலை தேடி பெங்களூருக்கு சென்றார். அங்குள்ள ராஜா நூல் ஆலையில் பணியாற்றிய வேமண்ணா, பெரியாரின் சுயமரியாதை கருத்துகளில் ஈர்க்கப்பட்டார்.

பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வந்த வேமண்ணாவுக்கு 3 மகன்கள், 2 மகள்கள். அவரது துணைவியார் கடந்த ஆண்டு மரணமடைந்தார். தனது பிள்ளைகளுடன் வசித்த வேமண்ணாவுக்கு கடந்த 8ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்று வீடு திரும்புகையில் மரணம் நேரிட்டது.

எவ்வித மூடசடங்குகளும் இன்றி சுயமரியாதை வழியில் அவரது உடல் அடக்கம் நடந்தது. பெரியார் இயக்கத்தினரும், தமிழர் அமைப்புகளும் ஏராளமாக திரண்டு வந்து இறுதி வணக்கம் செலுத்தினார். கர்நாடக திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் செயலாளர் பழனி, இராவணன், இராசேந்திரன், சித்தார்த்தன், குமார், வேலு உள்ளிட்ட  தோழர்கள் இறுதி நிகழ்வுகளில் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.

வேமண்ணா கன்னடத்தில் பெரியார் நூல்களை மொழி பெயர்த்ததுபோல் பெங்களூருவில் பேராசிரியராக இருந்த மறைந்த ஏ.எம். தர்மலிங்கம், பெரியார் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஆவார். பெரியார் பகுத்தறிவு மரபில் ஆழமாக வேரூன்றி நின்ற பல சிந்தனையாளர்கள் கர்நாடகத்தில் உண்டு. பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த நரசிம்மையா, சீரிய பகுத்தறிவாளர். சாய்பாபாவின் மோசடிகளை அம்பலப்படுத்தியவர். தற்போது கருநாடக முதல்வராக இருக்கும் சித்தராமய்யாவும், பகுத்தறிவு மரபில் வந்தவர். பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலைகள்மீது உருண்டால் ‘புண்ணியம்’ கிடைக்கும் என்ற சடங்குக்கு தடை போட்டது உள்ளிட்ட பல்வேறு பகுத்தறிவு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருபவர் சித்தராமய்யா.

Pin It