பாவேந்தர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு விழாக் கருத்தரங்கிற்குத் தலைமை ஏற்றிருக்கும் பாவலர் முழுநிலவன் அவர்களே, பாவரங்கில் கலந்து கொண்டு எழுச்சிப்பாக்கள் வழங்கிய பாவலர் நெல்லை இராமச்சந்திரன் அவர்களே, பாவலர் அருள்மொழி அவர்களே, பாவலர் பிரகாசு பாரதி அவர்களே,

சிறப்புரை அரங்கத்தில் சிறப்பான ஆய்வுரை வழங்கிய பேராசிரியர் முனைவர் வீ. அரசு அவர்களே, முனைவர் தி. பரமேசுவரி அவர்களே, இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கும் ஐயா அருகோ அவர்களே, மறைமலை அடிகளார் பேரன் ஐயா தாயுமானவன் அவர்களே, அண்ணல் தங்கோ அவர்கள் பேரன் தோழர் அருட்செல்வன் அவர்களே, மா.பொ.சி. பேத்தி முனைவர் பரமேசுவரி அவர்களை முன்பே விளித்து விட்டேன். இங்கு குழுமியிருக்கும் சான்றோர்களே, சகோதரிகளே, நண்பர்களே, தோழர் களே!

இங்கே ஐயா அருகோ அவர்கள் எனக்கு சால்வை அணிவித்துப் பாராட்டினார். அருகோ அவர்களுக்குத் தான் நாங்கள் சால்வை அணிவித்துப் பாராட் டியிருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் களத்தில் அவர் எங்களுக்கு முன்னோடி, தொடர்ந்து அக்களத்தில் வழிகாட்டிக் கொண்டிருப்பவர்.

இந்த விழாவில் பாவலர் பொன்னடியான் அவர் களை வரவழைத்துச் சிறப்பித்திருக்க வேண்டும். அவர் சென்னையில்தான் வாழ்கிறார். பாவேந்தர் பாரதிதா சனின் நேரடி மாணவர்களில் உயிரோடிருப்பவர் பாவலர் பொன்னடியான். புரட்சிப் பாவலருடன் கூட இருந்தவர். முன்கூட்டியே இந்தச் சிந்தனை எங்களுக்கு வரவில்லை. இன்று பிற்பகல் அருட்செல்வன் நினை வூட்டினார். பொன்னடியான் அவர்களால் இங்கு வர முடியாத நிலை. அவர் பெருங்குடியில் உள்ளேன் என்றார். அவருடன் நான் தொடர்பு கொண்டு பேசி னேன். வேறொரு வாய்ப்பில் பொன்னடியான் அவர் களை நாம் சிறப்பிக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் இளம் மாணவி சரண்யா சிறப் பாக சிற்றுரை வழங்கினார். அவரைப் பாராட்ட வேண்டும்.

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பாவேந்தரின் 125ஆம் ஆண்டு விழாவைப் பல இடங்களில் நடத்தி வருகிறது. இன்று சென்னையில் இங்கு இவ்விழாவை நடத்திக் கொண்டுள்ளோம். ஏற்கெனவே, ஓசூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் நடந்த பாவேந்தர் விழாக்களில் நான் கலந்து கொண்டேன். கோபியிலும் இவ்விழாவை த.க.இ.பே. நடத்தியுள்ளது.

கோவேந்தர்களை விடவும் பாவேந்தர்கள் வரலாற் றில் நிலைத்து வாழ்கிறார்கள். எத்தனையோ மன் னர்கள் ஆண்டிருக்கிறார்கள். அவர்களில் கரிகால் பெருவளத்தான், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், இராசராசன், இராசேந்திரச் சோழன் போன்ற சில மன்னர்கள் மட்டுமே மக்கள் மனத்தில் தொடர்ந்து நிற்கிறார்கள். கபிலர் இல்லை என்றால் பாரியின் பெருமைகூட வரலாற்றில் நின்றிருக்குமா என்பது கேள்விக்குறிதான்!

கலை இலக்கியப் படைப்பாளிகள் மக்களின் மனத் துடன் பேசுகிறார்கள்; மனத்துடன் உரையாடுகிறார்கள். அதனால் அவர்கள் காலம் கடந்தும் வாழ்கிறார்கள்.

சிறந்த கலை இலக்கியப் படைப் பாளிகள் தாங்கள் வாழும் சமூகத்தின் - தாங்கள் வாழும் இனத்தின் முகமாக - ஆன்மாவாக விளங்கு கிறார்கள். டால்ஸ் டாய் இரசிய மக்களின் முகமாக விளங்கினார். அவரின் சமகாலப் படைப்பாளிகள் டால்ஸ்டாயை அப்படித் தான் அழைத்தனர்.

தாம் வாழ்ந்த காலத்தில் இருந்த ரசிய சமூகத்தின் சிக்கல்களை விவாதித்து - அச்சமூகத்தை அடுத்த கட் டத்திற்கு முன்னோக்கி நகர்த்துவதற்குரிய கருத்து களைத் தம் படைப்பு களில் வழங்கினார் டால்ஸ்டாய்.

ஒரு படைப்பாளி தான் வாழும் சமூகத்திற்குத், தன் இன மக்களுக்கு முழுமையாகத் தன்னை ஒப் படைத்துக் கொள்ளும் போதுதான் அப்படைப்பாளி அம் மக்களின் அடையாளமாக - முகமாக மாற முடியும்!

“நமக்குத் தொழில் கவிதை; நாட்டுக்குழைத்தல்; இமைப்பொ ழுதும் சோராதிருத்தல்” என்று தன் பணி பற்றிப் பாரதி பிரகடனம் செய்தான். அப்படியே அவன் வாழ்ந்தான்.

எனவே, இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மக்களின் அடையாளமாகப் பாரதி விளங்கினான். பாரதிக்குப் பின் தமிழர்களின் முழுமையான முகமாக, தமிழர்களின் ஆன்மாவாக விளங்கியவன் பாவேந்தன்!

இப்பொழுது தமிழில் பாரதியாரைப் போல், பாவேந்தரைப் போல் எழுத்தாற்றல் பெற்றவர்கள் இல்லையா? இருக்கிறார்கள். அவர்கள் ஏன் தமிழர் களின் முகமாக மாற முடியவில்லை. அவர்கள் முழுமை யாகத் தமிழர்களுக்குத் தங்களை ஒப்படைத்துக் கொள்ளவில்லை. எழுத்துக் கலையில் வல்லவர்களாக இருக்கிறார்கள். அதற்குமேல் அவர்கள் தங்களைத் தாம் வாழும் சமூக மக்களுக்கு ஒப்படைத்துக் கொள்ள வில்லை.

நம் தமிழினம் ஆங்கிலேயர்களுக்கு முன்பே அறிவு வளர்ச்சி பெற்ற இனம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மொழியியல் குறித்து எழுதிய தொல்காப்பியர் பிறந்த இனம். அப்போது, ஆங்கிலேயர்களுக்கு அவர் களுடைய மொழியே பிறக்கவில்லை.

ஐரோப்பாவில் கி.பி. 13ஆம் நூற்றாண்டில்தான் Philology என்ற மொழியியல் தோன்றியதாக ஆய் வாளர்கள் கூறுகிறார்கள். மொழி குறித்த முழு அறிவு தமிழர்களுக்கு இருந்தது. அதுபோல் தேசம், இனம் குறித்த சிந்தனைகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிருந்தே தமிழர்களுக்கு இருந்து வருகிறது.

தொல்காப்பியத்திற்கு அணிந் துரை வழங்கிய பனம்பாரனர் “வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்உலகம்” என்று கூறித் தமிழர் தாயகத்தை வரையறுக்கிறார். அக்காலத்தில் தமிழ் நாட்டில் பல சிற்றரசுகள் இருந்திருக்கும். ஆனால், தமிழர்களுக்குத் தாயகம்,- தமிழர்களுக்கு நாடு ஒன்று தான் என்று தமிழ் அறிஞர்கள் கருதினர். அது தமிழ கம்! தமிழ் பேசப்படாத இடங்களை மொழி பெயர் தேயம் என்றனர். நம் மொழி பேசும் இடம் நம் தேயம் என்றனர். அந்தக் காலத்திலேயே தமிழர்களுக்குத் தேசம் குறித்த புரிதல் இருந்தது. ஒற்றை அரசின் கீழ் உள்ள தேசமாக உருவெடுப்பது பின்னர் - முதலாளிய உற்பத்தி முறை வளர்ச்சிக் காலத்தில் இருக்கலாம். ஆனால் தேசம் குறித்த கருத்தியல் மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்பே தமிழர்களுக்கு இருந்தது.

எப்பொழுதும் கருத்தியல் முந்திப் பிறக்கும். அதன் பிறகே அக்கருத்தியலுக்கான நடைமுறை வடிவம் கிடைக்கும்.

சங்க இலக்கியத்தில் தமிழகம் என்ற சொல் வருகிறது. சிலப்பதிகாரத்தில் தமிழ்நாடு என்ற சொல் வருகிறது.

இமிழ் கடல் வேலியைத் தமிழ் நாடாக்கிய

இது நீ கருதினை ஆயின், ஏற்பவர்

முது நீர் உலகின் முழுவதும் இல்லை;

இமயமால்வரைக்கு எம்கோன் செல்வது

கடவுள் எழுதவோர் கற்கே;

என்கிறது சிலப்பதிகாரம்!

“செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்ற தொல்காப்பிய நூற்பா, கேள்வியும் பதிலும் குழப்ப மில்லாமல் இருக்கவேண்டும் என்று கூறுகிறது. “நான் மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன், கண்டத்தால் ஆசியன், உயிரினத் தால் ஒரு ஜந்து..” என்பது போல் இங்கே ஒரு மூத்த தலைவர் பேசிக் கொண்டுள்ளார். குழப்பமாகப் பேசுவ தற்கு இது “சிறந்த” எடுத்துக்காட்டு.

தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர் குழப்ப மில்லாத வினாவுக்கும் விடைக்கும் எடுத்துக் காட்டு ஒன்று கூறினார். “நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்” என்றார். இளம்பூரணர் காலம் கி.பி. 11ஆம் நூற்றாண்டு என்பர். அப்போது சோழ நாடு இருந்தது. பாண்டிய நாடு இருந்தது. தமிழ்நாடு எங்கே இருந்தது? தமிழ்நாட்டிற்குள்தான் சோழநாடு, பாண்டிய நாடு, சேரநாடு ஆகியவை இருக்கின்றன என்ற தேசக் கோட்பாடு தமிழர்களிடம் அப்போதே இருந்தது.

அப்போதெல்லாம் ஐரோப்பியர்களுக்குத் தேசக் கோட்பாடும் கிடையாது.

மொழி, இனக் கோட்பாடுகளும் இல்லை. தமிழ் மொழி, தமிழர், தமிழ்நாடு என்ற கோட்பாடு இரண் டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் களுக்கு இருந்தது.

சங்க காலத்திற்குப் பிறகு, தமிழர்கள் அயலார் ஆட்சிகளுக்கு அடிமைகள் ஆகிவிட்டோம். களப்பிரர், பல்லவர் ஆகிய அயல் இனத்தார்க்கு அடிமைகள் ஆனோம். பிற்காலச் சோழர்கள் ஆட்சி, பாண்டியர்கள் ஆட்சி என்பவை தமிழர்கள் ஆட்சியாக சிறிது காலம் இயங்கியது. பின்னர், சுல்தான்கள் ஆட்சி, நாயக்க மன் னர்கள், தளபதிகள் ஆட்சியில் சிக்குண்டோம். அதன் பிறகு, வெள் ளையர்க்கு அடிமை ஆனோம். அதனால் நம் இன வளர்ச்சி தடைப்பட்டது.

ஐரோப்பியர்கள் 15ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் வளர்ச்சி அடைந்தார்கள். அதை அவர்கள் மறு மலர்ச்சிக் காலம் என்றார்கள். “நம் இனம் ஏற்கெனவே மலர்ச்சி பெற்றிருந்தது, பின்னர் வாடிப்போனது. இப்போது மறுபடியும் அந்த மலர் மலர்கிறது” என்ற பொருளில்தான் ஆங்கிலேயேர்கள் மறுமலர்ச்சிக் காலம் என்றார்கள். Renaissance என்பது அதுதான்!

பிரடெரிக் எங்கெல்ஸ் ஐரோப் பிய மறுமலர்ச்சி பற்றிக் குறிப்பிடும் போது, ரோமாபுரி நாகரிகத்தின் புதையுண்ட கட்டட இடிபாடுகளிலிருந்து தங்களின் வரலாற்றுப் பெருமிதங்களைக்கண்டறிந்தனர் என்றார்.

அப்படி வரலாற்றுப் பெருமை யுள்ள நாம் மீண்டும் பெருமிதங்களைப் படைக்க வேண்டும் என்று கூறி சமகால மக்களைத் தட்டி எழுப்பினர் என்பார். தமிழர் களும் தங்கள் மறுமலர்ச்சியில் வரலாற்றுப் பெரு மிதங்களைச் சொன் னார்கள். பாரதியும் பாரதிதாசனும் இப்பெருமிதங்களைச் சொன்னார்கள்.

நாம் நீண்ட காலம் அடிமை வாழ்வு வாழ்ந்ததால் நம் சமூகத்தில் மறுமலர்ச்சிக் காலம் ஐரோப்பாவில் தோன்றிய காலத்தில் தோன்றவில்லை. நீராவி எந்திரம் உருவாக்கியதுபோல ஐரோப்பாவில் உருவான தொழில் நுட்பப் புரட்சியும் தமிழ்ச் சமூகத்தில் அப்போது உருவாகவில்லை.

தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் தொடக்கப் புள்ளியாக வள்ளலார் இருக்கிறார். அது ஒரு தொடக்க நிலை. அதிலிருந்து பாய்ந்து அடுத்த கட்டத்திற்குத் தமிழ் இலக்கியத் தைக் கொண்டு சென்றவர் பாரதி யார். பாரதியிடமிருந்து உரம் பெற்று பாரதியைவிடக் கூடு தலாகப் பாய்ந்தவர் பாரதிதாசன்.

மறைமலைஅடிகள் 1916-இல் தொடங்கிய தனித் தமிழ் இயக்கம், தமிழில் வடமொழி ஆதிக்கத்தையும் வடமொழிக் கலப்பையும் நீக்கித் தனித்தமிழில் எழுதுவது, பேசுவது, அதுபோல் தமிழர்களின் குடும்பச் சடங்குகள் - கோயில் பூசைகள் ஆகியவற்றிலிருந்து பார்ப்பனர்களையும் வடமொழியையும் நீக்குவது என்ற கொள்கைகளைக் கொண்டது.

மக்களைப் பாடிய பாரதியின் தாக்கம், பாரதியின் எளியநடை, பெரியாரின் மூடநம்பிக்கை எதிர்ப்பு, பெண்ணுரிமை, கம்யூனிஸ்ட்டுகளின் பொதுவுடை மைக் கருத்துகள், உழைப்பாளர் உரிமைகள், மறை மலை அடிகளின் தனித்தமிழ்; தமிழர் எழுச்சி இவை அனைத்தின் சங்கமிப்பாகவும், புதிய வார்ப்பாகவும் உருவானவர்தான் பாரதிதாசன்!

“சாதி ஒழித்தல் ஒன்று - நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று; இதில் பாதியை நாடு மறந்தால் மறுபாதி துலங்குவதில்லையாம்” என்று எனக்குப் பாரதி சொல்லித் தந்தார்” என்று பாவேந்தர் கூறு கிறார்.

“எஞ்சாதிக்கு இவர் சாதி இழிவென்று சண்டையிட் டுப் பஞ்சாகிப் போனாரடி சகியே” என்று சாதி ஆதிக்கத்தைச் சாடுகிறார் பாவேந்தர். தொடர்ந்து சாதி ஒழிப்பை எழுதி வந்தார் பாவேந்தர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வைப் போற்றினார்.

“சேரிப் பறையர் என்றும்

தீண்டாதோர் என்றும் சொல்லும்

வீரர் நம் உற்றாரடி” என்று பாடினார்.

“இருட்டறையில் உள்ளதடா உலகம்

சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே

மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே

வாயடியும் கையடியும் மறைவதெந்நாள்? “ என்று கேட்டார்.

பெண்ணுரிமையைப் பேசினார். சஞ்சீவிபர்வ தத்தின்சாரலில், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஒரு விவாதம் நடப்பது போன்ற காட்சியை உருவாக் கினார். மனைவியைப் பேச விடாமல் தடுத்துக் கணவர் பேசுவதுபோல் ஒரு காட்சி! அப்போது அந்த மனைவி கூறுவாள்:

“பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம் என் கின்றீரோ?

மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை

பெண்ணடிமை தீரும்மட்டும் பேசுந்திருநாட்டின்

மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே

ஊமை என்று பெண்ணை உரைக்கு மட்டும்

ஆமை நிலைதான் ஆடவர்க்கும் உண்டு! “

என்பாள். இங்கே பாவேந்தர் ஓர் அருமையான வரலாற்று வழிப்பட்ட, உளவியல் வழிப்பட்ட கருத் தைக் கூறுகிறார். பெண்ணடிமைத்தனம் நீடிக்கும் வரை ஆணுக்கும் உண்மையான விடுதலை கிடையாது என்பதுதான் அந்த உயர்ந்த கருத்து!

அடிமைத்தனத்திற்கும் அண்டிப் பிழைக்கும் இழி விற்கும் பழக்கப் பட்டு, தன்மானமிழந்து கிடந்த தமிழர் களைப் பார்த்துப் பாடினார் பாவேந்தர். இன்றைக்கும் இப்பாடல் பொருத்தமாய் உள்ளது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அரசியல் மக்களிடையே உருவாக் கியுள்ள அடிமை மனப்பான்மையை, அண்டிப் பிழைக் கும் இழிவை அப்படியே எடுத்துச் சொல்வது போல் இப்பாடல் உள்ளது. ஆனால் இதனை 1938-இல் பாவேந்தர் எழுதினார்.

“பள்ளம் பறிப்பாய் பாதாளத்தின்

அடிப்புறம் நோக்கி அழுந்துக! அழுந்துக!

பள்ளம் தனில்விழும் பிள்ளைப் பூச்சியே

தலையைத் தாழ்த்து! முகத்தைத் தாழ்த்து!

தோளையும் உதட்டையும் தொங்கவை ஈன

உளத்தை உடலை உயிரைச் சுருக்கு

நக்கிக் குடிஅதை நல்லதென்று சொல்”

என்றெல்லாம் அடிமைத் தனத்தைக் கூறிவிட்டு பின்னர் அதே பாட்டில், அந்த அடிமையை எழுப்பு கிறார் பாவேந்தர்.

“மனிதரில் நீயுமோர் மனிதன் மண்ணன்று

இமைதிற எழுந்து நன்றாய் எண்ணுவாய்

தோளை உயர்த்து சுடர்முகம் தூக்கு

மீசையை முறுக்கு மேலே ஏற்று

விழித்த விழியில் மேதினிக்கு ஒளிசெய்

நகைப்பை முழக்கு நடத்து உலகத்தை!

...

ஏறு வானை இடிக்கும் மலைமேல்

ஏறு விடாமல் ஏறு ஏறு மேன்மேல்

ஏறிநின்று பாரடா எங்கும்

எங்கும் பாரடா இப்புவி மக்களை

பாரடா உனது மானிடப் பரப்பை

பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!”

தன்னம்பிக்கையும், தன்மானமும் கொண்ட தமிழ் மக்கள் - உலக மக்களை உறவாக நினைக்கும் பரந்த மனம் கொள்ள வேண்டும் என்ற மனித நேயத்தை-- உலக நேயத்தை வெளிப்படுத்துகிறார். இனவெறிக் கருத்தோ - மொழிவெறிக் கருத்தோ பாரதிதாசனிடம் இல்லை.

மொழியை வெறும் தகவல் பரிமாற்றக் கருவி என்று கூறும் வறட்டுப்பார்வை பலரிடம் உண்டு. ஆனால், பாவேந்தர், சமூக அறிவியல்படி மொழியின் பாத்திரத்தைக் கூறுகிறார்.

“இனத்தைச் செய்தது மொழிதான் - இனத்தின்

மனத்தைச் செய்தது மொழிதான்” என்றார்.

ஓர் இனம் அல்லது ஒரு தேசிய இனம் உருவா வதற்கு முதல் தேவை மொழியாகும். அதேபோல், அந்த இனத்தில் உள்ள மக்களிடையே நாம் ஒரே இனத்தைச் சேர்ந் தல்வர்கள் “நாம், நம்மவர்” என்ற (We Feeling) உணர்வை -அவ்வாறான உளவியல் உருவாக்கத்தை உருவாக்குவது மொழி. தேசிய இன உருவாக்கம் குறித்துப் பேசும்போது, ஜே.வி.ஸ்டாலின் இதைக் குறிப்பிடுகிறார்.

இந்த சமூக அறிவியலைப் புரட்சிப் பாவலர் பாரதிதாசன் தம் சிந்தனை ஆற்றல் கொண்டு சொல் கிறார். இனத்தின் மனத்தை அதாவது உளவியல் உருவாக்கத்தைச் செய்தது மொழிதான் என்கிறார்.

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு”

என்று பாவேந்தர் பாடியது வெறும் மொழிப் பாராட்டன்று. அது ஒரு கோட்பாடு! தமிழ்மொழி அழிந்தால் தமிழர்கள் ஒரு தேசிய இனமாக இருக்க மாட்டார்கள். பல்வேறு அயல் மொழிகளைப் பேசிக் கொண்டு உதிரிகளாகி சொந்த மண்ணிலேயே அடுத்த இனத்தாரை அண்டிப் பிழைக்கும் இரண்டாம்தர, மூன்றாம் தர மக்களாகி விடுவர். அதனால் தான் “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் - மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்றார்.

பெரியார் தலைமையில் இயங்கியதால் திராவிடர் - திராவிடம் என்ற கருத்துகளை ஏற்றுக் கவிதைகள் எழுதி வந்தார் பாரதிதாசன். பின்னர், 1950களின் பிற்பகுதியில் திராவிடர் என்று இருந்த இடங்களை தமிழர் என்று மாற்றினார். 1956 அல்லது 1958 என்று நினைக்கிறேன். தனித்தமிழ் நாடு விடுதலை கேட்ட ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் பாரதி தாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஆதித் தனார் “தாயின் மேல் ஆணை” என்ற தலைப்பில் பாவேந்தரின் தமிழர் எழுச்சிப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டார். அதில், “திராவிடர்” என்று இருந்த இடங்களில் தமிழர் என்று மாற்றினார் பாவேந்தர்.

பாரதிதாசன் ஆய்வில் கரை கண்ட ஐயா இளவரசு அவர்களிடம் திராவிடர் என்பதைத் தமிழர் என்று பாரதிதாசனே மாற்றிய விவரம் பற்றிக் கேட்டேன். “ஆம் பாரதிதாசனே அப்படி மாற்றினார். குடும்ப விளக்கு நூலை மறுபடி பதிப்பிக்கும் போது, இன் னின்ன இடங்களில் திராவிடர் என்பதை தமிழர் என்று மாற்றினார்” என்று இளவரசு குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசிய நோக்கில் 17.06.1958 அன்று குயில் இதழில் பாரதிதாசன் எழுதிய இந்தப் பாடலைக் கேளுங்கள்;

“செந்தமிழா உன்நாட்டின் பேரென்ன செப்பென்றால்

இந்தியா என்றே இளிக்கின்றான் என்தாயே!

பைந்தமிழ் நாட்டினையும் பாரதம் என்றும் சொல்வான்

எந்தவகையில் இச்சேய் உருப்படுவான் என்தாயே?

..

தமிழ்மொழிதான் தாய்மொழி என்னும் தமிழன்

தமிழ்நாடுதான் தனது தாய்நாடென் றெண்ணானோ?

தமிழ்நாடென் தாய்நாடு தாய்மொழி தான்என்றன்

தமிழ் என்றுணரான் சழக்கனன்றோ என்தாயே?

நம்தாய் அடிமை; வடநாட்டான் நம்ஆண்டான்

இந்தநிலை மாற்றா திருந்தென்ன என்தாயே!”

தமிழ் மண் பதிப்பக உரிமையாளர் ஐயா இளவழகன் அவர்கள் பாரதிதாசன் அவர்களின் அனைத்துப் பாடல்கள், கட்டு ரைகள் ஆகியவற்றைப் ’பாவேந்தம்’ என்ற தலைப்பில் 25 தொகுதிகளாக வெளி யிட்டுள்ளார். முனைவர் இரா. இளவரசு, இளங்குமர னார், தமிழகன் ஆகியோர் பதிப்பாசிரியர்களாக இருந்துள்ளனர். இவற்றை வாங்கிப் படிக்க வேண்டும்.

மறைமலையடிகள் வலியுறுத்திய தனித்தமிழில் பிற்காலத்தில் பாக்கள் எழுதினார் பாவேந்தர். இவ் வாறாகத் தமிழ்த் தேசியப் பாவலராக விளங்கினார்.

தொடக்கத்தில் துதிப்பாடல்கள் பாடினார். இறுதிக்காலத்தில் சீனப்படையெடுப்பை ஒட்டி இந்திய ஆதரவுப் பாடல்களை எழுதினார். ஆனால் பாரதி தாசன் என்ற படைப்பாளி இவற்றால் அறியப் பட வில்லை; அரவணைக்கப் படவில்லை. அவரது தமிழின உணர்வு, பகுத்தறிவு, பொதுவுடை மை, தனித்தமிழ்நாடு, சாதி எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, பெண்ணு ரிமை போன்ற முற்போக்குப் படைப்புகளுக்காகத்தான் அவர் தமிழ் மக்களால், அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்கப்பட்டார்.

பாரதிதாசனிடமிருந்து இளை ஞர்கள், இளம் படைப்பாளிகள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு செய்தி உள்ளது. தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று 1939 தொடங்கி கடைசி வரை கூறி வந்தவர் பெரியார். தமிழ் சனியனைக் கைவிட்டுவிட்டு வீட்டில் மனைவியுடன் வேலைக்காரிகளுடன் ஆங்கி லத்தில் பேசிப் பழகிக் கொள்ளுங்கள் என்று 1968-இல் கூடக் கூறினார் பெரியார்.

1939லிருந்து தமிழுக்கெதிராகவும் ஆங்கிலத்திற் காதரவாகவும் பெரியார் கருத்துக் கூறி வந்தபோது, அவரைத் தம் தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தார் பாவேந்தர். ஆனால், அதற்காக அவர் ஒரு போதும் தமிழை இழித்தோ பழித்தோ எழுதியதில்லை.

தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறிய போதுதான் பாரதிதாசன் “தமிழுக்கும் அமுதென்று பேர் -- அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று எழுதினார்.

“தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்”

என்று எழுதினார்.

பெரியாருக்காக தமிழ் குறித்த தமது உயர் மதிப்பீட்டை - அன்பைப் பாரதிதாசன் மாற்றிக் கொள் ளவில்லை. பெரியாருக்காக - தமிழை இழிவுபடுத்திய புலவர்கள் சிலரும் அப்போது பெரியாருடன் இருந் தனர்.

தமிழைத் தொடர்ந்து இழிவு படுத்தி வந்த பெரியாரைத் திறனாய்வு செய்து, கண்டனம் செய்து, குயில் ஏட்டில் 10.01.1961-இல் ஒரு கவிதை எழுதினார் பாரதிதாசன். பெரியார் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், அவரைத்தான் குறிப்பிடுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

”தமிழைக் கொண்டே தமிழகம் ஆனது

தமிழகத் தமிழர் தலைவர் தாமும்

தமிழ்நாடென்று சாற்றவும் மறுத்தனர்

தமிழால் தமிழர்க்குத் தலைவர் ஆயினர்

தமிழால் தலைமை அடைந்த அவர்கள்

தமிழில் ஏதுளது என்று சாற்றுவர்

தமிழைப் பேசித் தலைவர் ஆயினர்

தமிழை எழுதித் தலைவர் ஆயினர்

தமிழாற் பயன்ஏது என்று சாற்றினர்

தமிழர் வாழத் தக்கவை யான

எல்லாக் கருத்தையும் இயம்பி வந்தனர்

எல்லா உண்மையும் எடுத்துக் காட்டினர்

அரைநூற்றாண்டாய் அறிவு புகட்டினர்

அந்த அருமைத் தலைவரே இந்நாள்

ஆங்கிலம் தாயாய் அமைக என்றும்

தமிழால் உருப்படோம் என்றும் சாற்றினர்

இந்தத் தமிழில் விஞ்ஞானம் இல்லை

அந்த ஆங்கிலத்தில் அதிகம் உண்டே

ஆதலால் அழியத் தக்கது தமிழாம்

நாட்டுக் குழைத்த தலைவர்கள்

கேட்டுக் குழைப்பதால் பெறுவது கெடுதியே!”

“நாட்டுக் குழைத்த தலைவர்கள், கேட்டுக் குழைப்பதால் பெறுவது கெடுதியே” என்பதில், இந்தக் கெடுதி நாட்டுக்கு மட்டுமல்ல, அந்தத் தலைவர்களின் புகழுக்கும் கெடுதியே என்ற பொருளில் பாடுகிறார் பாவேந்தர்.

பாரதியாரைத் தம் குருவாகக் கடைசிவரை ஏற்றுக் கொண்டிருந்தார் பாரதிதாசன். அதற்காகப் பார்ப்பன ஆதிக்கத்தை - பார்ப்பனியத்தை எதிர்ப்பதில் சற்றும் பின்வாங்கவில்லை. ஏ.டி.பன்னீர்ச்செல்வம் விமான விபத்தில் இறந்தபோது எழுதிய இரங்கற் பாவில்,

எல்லையில் தமிழர் நன்மை என்னுமோர் முத்துச்சோளக்

கொல்லையில் பார்ப்பான் என்னும் கொடுநரி உலவும்போது

தொல்லைநீக்க வந்ததூயர் பன்னீர்ச் செல்வம்

என்றார்.

குடியேறும் ஆரியப் பாதகர்கள் சூழ்ச்சியால்

கொலையுண்ட தமிழர் நெஞ்சும்

குறுநெறிச் சங்கரன் புத்தநெறி மாற்றிட

கொல்வித்த தமிழர் நெஞ்சும்

என்று பாடி ஆரியத்தைச் சாடினார் பாவேந்தர்.

பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டதால் பெரியாரைப் பின்பற்றித் தமிழை இழிவுபடுத்தவில்லை பாரதிதாசன். பாரதியாரைக் குருவாக ஏற்றுக் கொண் டதால் பார்ப்பன ஆதிக்கத்தை, -பார்ப்பனியத்தை எதிர்க்க மறுக்கவுமில்லை பாவேந்தர். பாவேந்தரின் இந்தத் தெளிவு, இந்த ஆளுமை நம் இளைஞர்களுக்கும் நம் படைப்பாளிகளுக்கும் வேண்டும்.

பாரதியார் பார்ப்பன வகுப்பில் பிறந்தவர் என்பதற் காகப் பெரியாரியவாதிகள் பாரதியாரைப் புறக்கணித் தார்கள். ஆனால் அறிஞர் அண்ணா திராவிடர் கழகத்தில் இருந்தபோதே, பாரதியாரை மக்கள் கவிஞர் என்று 1948இல் பாராட்டி, அனைத் திந்திய வானொலியில் சிறப்பாக ஆங்கிலத்தில் பேசி னார்.

நவீன காலத்தில் வள்ளலார் தமிழை மக்கள் மயப் படுத்துவதில் முதல் அடி எடுத்து வைத்தார். அவர்க்குப் பின் வந்த பாரதியார் உலக மொழிகளில் ஏற்பட்ட சமகால வளர்ச்சியைத் தமிழுக்குத் தந்தவர். பாரதியார் பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே என்று பாடினாலும், ஆரிய தேசம், ஆரிய சம்பத்து, வேதப் பெருமை என்றெல்லாம்பாடி, பார்ப்பனி யத்தை - ஒரு வகையில் ஆதரித்தார் என்பது எனது கருத்து. ஆனா லும், புறக்கணிக்கப்பட வேண்டியவர் அல்லர் பாரதி யார். “கிறுக்கன் பாரதி” என்றார் பெரியார். அப்படி முற்றிலும் புறக்கணிக்க முடியாது பாரதியாரை.

பாரதியின் வரலாற்றுப் பாத்திரத்தை பாரதிதாசன் தெளிவாகக் கூறுகிறார்.

ஜாரின் கொடுமை தாங்கா உருசியம்

ஏருற லெனினை ஈன்றே தீரும்

செல்வர் சில்லோர் நல்வாழ் வுக்கே

எல்லா மக்களும் என்ற பிரான்சில்

குடிகள் குடிகட் கெனக் கவிகுவிக்க

விக்டர் யூகோ மேவினான் அன்றோ

தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்

இமைதிற வாமல் இருந்த நிலையில்

தமிழகம் தமிழுக்குத் தகும்உயர் வளிக்கும்

தலைவனை எண்ணித் தவங் கிடக்கையில்

இலகு பாரதிப் புலவன் தோன்றினான்

பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு

செந்தமிழ்த் தேனீ சிந்துக்குத் தந்தை

என்றார் பாவேந்தர். இது சரியான பார்வை!

அதே வேளை பாரதியாரிடம் உள்ள பார்ப்பனி யத்தை மறுக்கவும் நாம் திறம் பெற்றிருக்க வேண்டும். பாரதி முழுக்க முழுக்க ஒரு பார்ப்பனியவாதியாக மட் டும் இருந்தவர் அல்லர் என்ற உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பாவேந்தர் பாரதிதாசனின் தமிழின எழுச்சிப் பாடல்களை மேடைகளில் நரம்பு புடைக்க முழங்கித் தமிழர்களைத் திரட்டிய தி.மு.க. தலைவர்கள், தி.மு.க. பேச்சாளர்கள், அவர்கள் வளர்ந்த பிறகு, ஆட்சிக்கு வந்த பிறகு, பாரதிதாசனின் தமிழ்த் தேசியக் கொள் கையை - தமிழ் மொழிக் கொள்கையைக் கைவிட்டு விட்டு, ஆதிக்க இந்தியத் தேசியத்தை ஆதரிக்கின்றனர். தமிழைப் பலியிட்டு ஆங்கில ஆதிக்கத்தை வளர்த்த னர்.

அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; அவர்களின் வரலாறு செத்து விட்டது. அவர்களின் பிணங்களை அவர்களே சுமக்கட்டும்; இளைஞர்கள் சுமக்கச் செல்ல வேண்டாம்.

நாம் தமிழ்த் தேசியர்கள்; பாவேந்தர் பாரதிதாச னின் தமிழினக் கொள்கைகளை, தமிழ் மொழிக் கொள் கைகளை சமூகவியல் கொள்கைகளை முன்னெடுப் போம்; பாவேந்தரின் ஒளிச்சுடரை ஏந்துவோம்!

Pin It