சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் :

சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் 1907ஆம் ஆண்டு முதல் ஒரு வழக் கறிஞராகப் பணியாற்றி னார். அப்பொழுது பாரதி யார், தொழிற்சங்கத் தலை வர்கள் சர்க்கரைச் செட்டி யார், திரு.வி.க. ஆகியோ ரோடு சிங்கார வேலருக் குத் தொடர்பு ஏற்பட்டது. 1920ஆம் ஆண்டில், சென்னைத் தொழிலாளர் வர்க்கம் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டங்களில் தீவிர அக்கறை கொள்ளத் தொடங்கினார். ரௌலட் சட்ட எதிர்ப்பு இயக்கத்தில் பங்குகொண்டு, சென்னையில் பல பேரணிகளை நடத்திடப் பேருதவி புரிந்தார். 1922இல் சென்னையில் முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரானார். அகில இந்தியக் காங்கிர கமிட்டி உறுப்பினராகவும் ஆனார்.

இரஷ்யப் புரட்சியினால் ஈர்க்கப்பட்ட சிங்காரவேலர் 1919ஆம் ஆண்டிலேயே கம்யூனிசம் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார். 1921ஆம் ஆண்டில், “மகாத்மா காந்திக்கு ஒரு பகிரங்கக் கடிதம்” (அது, தி இந்து, சுதேசமித்திரன் நாளேடு களில் வெளிவந்தது) எழுதினார். “நிலமும் இதர முக்கியத் தொழில்களும் சமூகவுடைமை ஆக்கப்பட்டால்தான் மக்களின் விருப்பங்கள் நிறைவேறும்” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டி ருந்தார். இவ்வாறு 1921ஆம் ஆண்டிலேயே கம்யூனிசக் கருத்துக்களால் கவரப்பட்ட சிங்காரவேலருடன், எம்.பி.எ. வேலாயுதன் என்பவரும் இணைந்து பணியாற்றினார்.

சிங்காரவேலர், உழைக்கும் வர்க்கமே அரசியல் போராட்டத்துக்கு முன்னணிப் படை என்பதை நன்கு உணர்ந்திருந்தார். அதனால் 1923இல் “இந்துஸ்தான் தொழிலாளர் - விவசாயிகள் கட்சி”யைத் தொடங்கினார். “இந்துஸ்தான் லேபர் அண்டு கிசான் கெஜட்” என்ற ஆங்கில மாத இதழை யும், ‘தொழிலாளி’ என்ற தமிழ் மாத இதழையும் தொடங்கி நடத்தினார்.

1925 முதல் 1927 வரை சென்னை நகராட்சி உறுப்பி னராக இருந்த போது, நலிவுற்ற மக்களுக்குப் பல திட்டங் களை அவர் கொண்டு வந்தது அவருடைய மானுட நேயத்தைப் புலப்படுத்தும். பொதுநல ஈடுபாடு, அரசியல் பணிகள், தொழிற்சங்கப் பணிகள் ஆகியவற்றுடன் தத்துவம், பொருளியல், உளவியல், வானியல் போன்ற துறைகளில் அந்நாளிலேயே தமிழில் சிறந்த படைப்புகளை எழுதினார். அவர் எழுதிய கட்டுரைகளில் பாதிக்குமேற்பட்டவை அறிவியல் சார்ந்த கட்டுரைகளே ஆகும்.

காலராவும், பிளேக்கும் சிங்காரவேலர் காலத்தில் பெரும் பீதியையும் பயத்தையும் ஏற்படுத்தும் நோய்களாக இருந்ததால், அவற்றைப் பற்றி நிறைய எழுதினார். 1918இல் சென்னை நகரத்தைப் பிளேக் நோய் அச்சு றுத்திய போது, சிங்காரவேலர் தன் இல்லத்தில் (எண்.22, தெற்குக் கடற்கரை சாலை - இப்போதைய வெலிங்டன் சீமாட்டிக் கல்லூரி வளாகம்) சாதி, மதம் பாராது நோயாளிகளுக்கு மருத்துவர் களைக் கொண்டு சிகிச்சை அளித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூரில் நடைபெற்ற கூலி விவசாயிகள் போராட்டத்துக்கு, சிங்காரவேலர் தம் தொண்டர் கள் துணையோடு ஆயிரம் பேருக்கு ஒரு வண்டி நெல்லை அனுப்பி வைத்தார். 1926இல் கர்நாடக மாநிலத்தில் கொங்கணக் கடற்கரை, பெரும் புயலால் பாதிக்கப்பட்டது. அந்த மக்களுக்கு சென்னை நகராட்சியின் சார்பில், ஒரு பெருந்தொகையை அனுப்பச் செய்து அவர்களுக்கு உதவி புரிந்தார்.

ம. சிங்காரவேலு ஒரு சுதந்தரப் போராட்ட வீரர்; தொழிற்சங்க இயக்கத் தலைவர்; பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி; பன்மொழி அறிஞர்; சமுதாயப் போராளி; பல்துறை வித்தகர். இவ்வாறு பல பரிமாணங்களைக் கொண்டிருந்த சிங்காரவேலர், தம் வாழ்வின் இறுதிவரை ஏழை, எளிய மக்களுக்காகவே சிந்திப்பதையும், எழுதுவ தையும், செயல்படுவதையும் ஒரு தவமாகவே ஏற்றிருந்தார். 1927ஆம் ஆண்டில் கயா நகரில் நடந்த அகில இந்திய காங்கிரசு மாநாட்டில், முழுச் சுதந்தரம் குறித்த தீர்மானத்தை முன்மொழிந்த போது, தொழிலாளி - விவசாயி குறித்து அரசியல் திட்டம் வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சிங்காரவேலர் சென்னையில் தாம் வாழ்ந்த தெற்குக் கடற்கரைச் சாலை இல்லத்தில், ஒரு மிகப் பெரிய நூலகத்தை வைத்திருந்தார். தனிப்பட்டவர்கள் வைத்திருந்த நூலகங் களில், தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக அன்று அது திகழ்ந்தது என அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். அந்த நூலகத்தில் படித்துத் தங்களை வளர்த்துக் கொண்ட வர்கள் பாரதியார், திரு.வி.க., அறிஞர் அண்ணாதுரை, ஏ.எஸ்.கே. அய்யங்கார், எல்.வி. காட்டே, கே. முருகேசன், பாரதிதாசன், டி.என். இராமச்சந்திரன், குத்தூசி குருசாமி, கவிஞர் சுரதா முதலானோர் ஆவர்.

தடை செய்யப்பட்ட நூல்கள் உலகம் முழுவது மிருந்து, கடத்தல் மூலம் சிங்காரவேலருக்குக் கிடைத்தன; குறிப்பாகப் புதுச்சேரி மூலம் சிங்காரவேலரை அடைந்தன.

1902இல் இலண்டன் சென்று, சிங்காரவேலர் அங்கேயே ஆறு மாதங்கள் தங்கியிருந்தார். இலண்டனிலிருந்து திரும்பிய போது, நிறைய புத்தகங்களுடன் வந்தார். படிப்பதில் சிங்காரவேலர் தணியாத வேட்கை கொண்டிருந்தார். தன் இறுதிக்காலத்தில் பார்வை பழுதுபட்ட நிலையிலும் விடாப் பிடியாகப் படித்தார் என்று சமதர்மம் சுப்பையா கூறியுள்ளார்.

1900களில் சென்னையில் மகாதேவன் புத்தகக் கம்பெனி என்பது மிகப் பிரபலமானதாகவும், மிகப் பெரிய கம்பெனியாகவும் இருந்தது. அக்கம்பெனிக்கு உலகில் இருந்து வருகின்ற உன்னதமான புத்தகங் களில் முதல் புத்தகத்தைப் பெறுபவன் நான்தான் என்று சிங்காரவேலர் குறிப்பிட்டுள் ளார். அவருடைய நூலகத்தில் 20,000க்கும் மேற்பட்ட நூல்கள் இருந்தன.

கம்யூனிஸ்டுகள் முன்வைத்த முழுவிடுதலைக் குறிக்கோளும்-சிங்காரவேலர் தெரிவித்த வாழ்த்துரையும் :

பஞ்சாபின் லாகூரில் குலாம் உசேன் என்பவர் கம்யூனி சக் கருத்துக்களால் கவரப்பட்டார். அவர் பெஷாவர் கல்லூரி யில் பேராசிரியாக இருந்தார். தாஷ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியை அமைத்தவர்களில் ஒருவரான முகமது அலியுடன் (அகமது ஹாசன்) காபூலில் 1922ஆம் ஆண்டு குலாம் உசேன் சேர்ந்தார். குலாம் உசேன் கம்யூனிஸ்டாக மாறினார். காபூலிலிருந்து கொண்டே அகமதுஹாசன், லாகூரில் குலாம் உசேனை இயக்கினார். லாகூரில் இரயில்வே தொழி லாளர் சங்கத்தில் இணைந்த குலாம் உசேன் கம்யூனிசக் கொள்கைகளைப் பரப்புவதற்காக ‘இன்குலாப்’ எனும் பத்திரி கையை நடத்தி வந்தார்.

1921-22ஆம் ஆண்டுகளிலேயே தாஷ்கண்டில் அமைக்கப் பட்ட கட்சிக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் குழுக்களுக்குமிடையே நல்லதொரு தொடர்பு உருவாக் கப்பட்டுவிட்டது.

மாஸ்கோ பல்கலைக்கழகத்துக்குச் சென்ற இந்தியர் களில் கம்யூனிஸ்டுக் கட்சியில் உறுப்பினரானவர்களை இந்தியா வுக்கு அனுப்பி, கம்யூனிஸ்டுக் கட்சியைக் கட்டும் பணியில் ஈடுபடுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அவர்களில் சவுகத் உஸ்மானி உள்ளிட்ட பதினொரு பேர் பனிப்புயலைத் தாங்கி, பனிமலை களைக் கடந்து, காட்டாறுகளைத் தாண்டி, பல்வேறு வழிகளில் 1922 இறுதியிலும் 1923ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் இந்திய எல்லையை நெருங்கினர். ஆனால் ஆங்கிலேயக் காவல்துறை அவர்களைக் கைது செய்தது. அவர்களின் சவுகத் உஸ்மானி மட்டும் தப்பிவிட்டார். மற்ற பத்துப் பேர் மீது அரசு வழக்குத் தொடுத்தது. இவ்வழக்குக்கு ‘மாஸ்கோ-தாஷ்கண்ட் சதி வழக்கு’ என்று பெயர். பத்துப் பேரும் தண்டிக் கப்பட்டனர்.

1922 நவம்பர் 5 முதல் திசம்பர் 5 வரை நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் நான்காவது மாநாட்டுக்குப்பின், எம்.என்.ராய், இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட் குழுக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு மாநாட்டைப் பெர்லின் நகரில் கூட்ட வேண்டும் என்றும், அம்மாநாட்டில் கட்சியின் திட்டம் பற்றியும், அமைப்புச் சட்டம் பற்றியும் விவாதிக்கலாம் என்றும் கருத்துரைத்தார். இந்த ஆலோசனையை டாங்கேவும், சிங்காரவேலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை வரவேற்ற முசாபர் அகமது பெர்லினுக்கு இரகசியமாகச் செல்ல முயன் றது இயலாமற் போயிற்று.

1922 திசம்பர் இறுதியில் கயாவில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரசு மாநாட்டுக்கு எம்.என். ராய், கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒரு திட்டம் தயாரித்து அனுப்பினார். இத்திட்டமானது சரித்திர ரீதியாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் திட்டம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சமயத்திற்கு ஏற்ப சுயராஜ்ஜியம் என்கிற வார்த்தைக்கு வியாக்கியானம் செய்து கொண்டிருந்த காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து தெளிவாக மாறுபட்டு நின்று, “முழு மையான தேசிய சுதந்தரமே நமது குறிக்கோள்” என்று திட்டவட்டமாக அறிவித்தது இத்திட்டம்.

கயாவில் நடந்த காங்கிரசு மாநாட்டில் டாங்கேயுடன் சிங்காரவேலரும் கலந்துகொண்டார். இம்மாநாட்டில் சிங்கார வேலர் பேசியது :

“மகத்தானதொரு உலக நலனைப் பிரதிநிதித்துவப் படுத்தும் மகத்தான உலகக் கம்யூனிஸ்டு அமைப்பின் ஒரு பிரதிநிதியாக உங்களிடம் பேசுகிறேன். உலகத் தொழிலாளர் களுக்குக் கம்யூனிசம் வழங்கும் மகத்தானதொரு செய்தியினை உங்களுக்குச் சொல்லிட இங்கே நான் வந்திருக் கிறேன். நீங்கள் சுதந்தரம் பெறுவதில், நீங்கள் உணவு, உடை, உறையுள் பெறுவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள உலகத் தொழிலாளர்களின் வாழ்த்துகளை, சோவியத் இரஷ்யக் கம்யூனிஸ்டுகளின் வாழ்த்துகளை, ஜெர்மன் கம்யூனிஸ்டு களின் வாழ்த்துகளை உங்களுக்குத் தெரிவிக்க இன்று நான் உங்கள் முன்னால் வந்துள்ளேன்” எனப் பிரகடனம் செய்தார்.

காங்கிரசுக் கட்சியின் வரலாற்றிலேயே தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என வெளிப்படையாக அறிவித்துக் கொண்டு ஒருவர் பேசியது இதுதான் முதல் முறை. காங்கிரசு மாநாட்டில், ‘தோழர்களே’ என ஒருவர் விளித்துப் பேசியதும் கூட இதுவே முதன்முறையாக இருக்கலாம்.

கயா காங்கிரசில் சிங்காரவேலர் கலந்துகொண்டது பற்றி 1923 மார்ச் மாதம் “வேன்கார்ட்” ஏடு பின்வருமாறு எழுதியது :

“பல்வேறு சித்தாந்தப் போக்குகள் கொண்டவர்கள் வந்திருந்த கயா காங்கிரசு மாநாட்டில் அவர் (சிங்கார வேலர்) பங்குகொண்டது ஒரு வரலாற்றுப் புகழ் பெற்ற நிகழ்ச்சியாக நினைக்கப்படும். ‘மரியாதைக்குரிய தேசியத் தலைவர்கள்’ எனும் அந்தஸ்து பறிபோய் விடுமோ அல்லது அரசு நடவடிக்கை எடுத்திடுமோ என்று இளம் இரத்தங்கள் எல்லாம் நடுங்கிக் கொண்டிருக்கையில், இந்த அறுபது வயதுக்கு மேற் பட்ட வெண்தாடி வீரர், வெளிப்படையாகத் தன்னை யொரு கம்யூனிஸ்ட் என அழைத்துக் கொண்ட அந்தத் துணிச்சலை மாநாட்டில் இருந்தவர்கள் இன்னும் வியந்து பாராட்டியிருக்க வேண்டும்.” 

- தொடரும்

Pin It