பெரியார் பிறந்த திங்களான செப்டம்பரில் 22ஆம் நாளில் இந்து ஆங்கில நாளிதழில் திறந்த பக்கத்தில் (Open Page) அமைந்துள்ள இந்திய அறிவியல் கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரியும் வசந்த் நடராஜன் ‘மதமற்ற சமூகத்தை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் சிறந்த கட்டுரை ஒன்றைத் தீட்டியிருந்தார். அதே பக்கத்தில் வீரமரணம் அடைந்த பகுத்தறிவுப் போராளி தபோல்கருக்கு எஸ்.வி.வேணு கோபால் என்பவரும் கவிதாஞ்சலியைச் செலுத்தியிருந்தார்.

இக்கட்டுரையை ஒட்டி ஒரு சிகப்பு வண்ணப் பெட்டிச் செய்தியையும் வெளியிட்டு - மதக்கோட்பாடுகளில் உள்ள வேறுபாடுகளை, மூடநம்பிக்கைகளைச் சுட்டிக் காட்டினால் மனம் பொறுத்துக் கொள்ளும் பக்குவம் சரிந்து வருவதையும், இதற்குச் சான்றாக தபோல்கர் மறைவு அமைந்துள்ளது; இன்றையச் சூழலுக்கு இக்கட்டுரை மிகப் பொருத்தமாக அமைகிறது என்ப தாகîம் இந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

பேராசிரியர் வசந்த் நடராஜன் தன் கட்டுரையில் அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டினின் மேற்கோளைச் சுட்டியிருந்தார். அப்துல்காதர் என்ற மற்றொரு வாசகர் ‘குழந்தைத்தனமான மூடநம்பிக்கைதான் மதம் என்று ஐன்ஸ்டின் குறிப்பிடவில்லை, என்று ‘திறந்த பகுதியில்’ அக்டோபர் 13, 2013 இதே நாளிதழில் குறிப்பிட்டிருந்தார். அக்டோபர் 20, 2013 இந்து நாளிதழில் மீண்டும் பேராசிரியர் வசந்த் நடராஜன், “ஐன்ஸ்டினின் புத்தகத்தில் இடம் பெற்ற சரியான மேற்கோளைத்தான் நான் குறிப்பிட்டி ருந்தேன். அதற்கான ஆதாரம் இதோ!” என்றும் எழுதியிருந்தார். இந்தக் கருத்து விவாதம் இத்துடன் முற்றுப் பெறுகிறது என்று, இம்மடலுக்குப் பிறகு இந்து நாளிதழ் அறிவித்துவிட்டது.

பேராசிரியர் வசந்த் நடராஜனின் முதல் கட்டுரை பகுத்தறிவு எனும் கருத்துக் களத்துக்கு நம்மை இட்டுச் செல்வதால் முதல் கட்டுரையை முழுவதும் மொழியாக்கம் செய்வது சாலப் பொருத்தமாக அமைகிறது. இத்துடன் பேரறிஞர் காரல் மார்க்சின் கருத்தையும், தந்தை பெரியாரின் கருத்தையும் ஒப்பிட்டால் பகுத்தறிவும், பொதுவுடைமை நெறியும் மேலும் விரிவடைகின்றன.

பேராசிரியர் வசந்த் நடராஜனின் கட்டுரை

 “பதிவு செய்யப்பட்ட மானுட வரலாற்றை மேலோட்டமாகப் படித்தால், மற்றக் காரணங்களை விட மதத்தின் பெயரால்தான் அதிக அளவிலான போர்கள் நடைபெற்றதைக் காணமுடியும். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், கடுமையான மத உணர்வுகளும், கோட்பாடுகளும் மேலோங்கி நின்ற காலங்களில் மிகக் கொடுமையான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. கிருத்துவத்தைத் தவிர பிற மதங்களைப் பின்பற்றிய மக்கள் மீதான ஸ்பானிய விசாரணை மன்றம் மேற்கொண்ட நடவடிக்கைகள், கொடுமைகள், சிறைத் தண்டனைகள், உயிர்ப்பலிகள் ஆகியன இதற்குச் சான்றுகளாக உள்ளன.

யூதப் பகைமையும், நாஜிகளின் எழுச்சியும் இரண்டாவது உலகப் போருக்கு வகை செய்தன. தற்போது நடைபெறும் இசுலாமிய பயங்கரவாதம்-சிலர் குறிப்பிடுவது போன்று நாகரிகங்களுக்கு இடையேயான மோதல்கள் அன்று. இசுலாமுக்கும், கிறித்துவத்திற்கும் நடைபெறும் மதமோதல்களே ஆகும். இது எங்குப் போய் முடிகிறது என்றால், இசுலாமிய மதத்தலைவர்கள் விட்டுகொடுக்காத கடுமையான முறையைக் கடைப்பிடிக்கிறார்கள். குழந்தைகளுக்குப் போடப்படும் நோய்த் தடுப்பு ஊசிகளையும், வாய் வழியாகச் செலுத்தப்படும் சொட்டு மருந்துகளையும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளில் வாழும் இசுலாமியர்களின் மக்கள் தொகையைக் குறைப்பதற்காக மேற்கத்திய நாடுகள் இரகசியமாகக் கடைபிடிக்கும் செயல் திட்டம் என்று, முல்லாக்கள் பரப்புரை செய்கிறார்கள். அண்மையில் பாகிஸ்தானில் வாதநோய் வரமாலிருப்பதற்காகச் சொட்டு மருந்தினை அளித்த மருத்துவ நலப்பணியாளர்களைத் தாலிபான் இயக்கத்தினர் கொன்றார்கள்.

இக்கருத்துகளை ஆய்வு செய்வதற்கு முன்பு, ஏன் மனிதர்கள் கடவுள் கருத்தைக் கண்டுபிடித்தார்கள் என்று குறிப்பிட்டாக வேண்டும். இன்றையச் சூழலுக்கு அது ஏதாவது ஒரு வகையில் பொருந்துவதாக உள்ளதா என்பதை முதலில் காண்போம்.

பயத்தின் மீது, அதுவும் அறிந்த கொள்ள முடியாத தன்மையால் ஏற்பட்ட பயத்தின் மீதுதான்- மதம் கட்டப்பட்டது. புதிய அறிவியல்  பெரும்பாலான இயற்கை நிகழ்வுகளை விளக்கி வருவதால், அறிந்த கொள்ள முடியாதது என்பது பெருமளவில் குறைந்து வருகிறது. இயற்கையைப் பற்றிய பயம் பெரும்பாலும் பொருத்தமற்றதாகிவிட்டது. நமக்கு சூரியக் கடவுள், காற்றுக் கடவுள் அல்லது பல்வகை இயற்கைக் கடவுள்கள் (பழங்கால இந்துக் கடவுள்கள், கிரேக்கக் கடவுள்கள் உட்பட) இப்போது தேவையற்றவையாகிவிட்டன. உண்மையைச் சொல்லப் போனால், ஒரு நொடி சிந்தனைகூட நமக்குச் சுட்டுவது என்னவெனில், கடவுள் வணக்கம் எவ்வித விளக்கமும் அற்றது என்பதாகும். ஆனால், தோள்களைச் சுருக்கி, பணிந்து நமக்கு மீறிய ஒரு பொருள் உள்ளது என்ற நம்பிக்கையை ஆதி மனிதன் பெற்றிருந்தான். அதுவும் புதிய அறிவியல் உலகத்தில் பொருத்தமற்றதாய்ப் போயிற்று.

இன்று ஆதிக்கம் செலுத்தும் - ‘ஒரு கடவுளைப் போற்றும் மதங்கள்’ (ஜுதாயிசம், கிருத்தவம், இசுலாம் ஆகிய மதங்கள் பழைய ஏற்பாட்டின் (Old Testament). இயற்கைக் கடவுள்களைப் புறந்தள்ளி, வளர்ந்து, இயற்கையை மீறிய வல்லமைமிக்க ஒரு கடவுளை இப்போதும் ஏற்றுக்கொள்கின்றன. இயற்கையை மீறிய சக்தி என்றால் என்ன? அறிவியல் சோதனைக்கு உட்படாத இயற்கையை மீறிய அற்புதம் ஒன்றும் இல்லை என்பதை நாம் முதலில் உணரவேண்டும்.

நாம் பகுத்தறிவு உள்உணர்வோடுதான் பிறக்கிறோம். ஏன் என்றால் உலகத்தோடு ஒத்துப் போகிற இயற்கை விதிகள் சிறப்புமிக்க பரிணாம வளர்ச்சியின் பயனை உயிர் வாழ்வதற்கு அளிக்கின்றன. பேசும் பருவத்தை எட்டாத ஒரு வயது குழந்தைகள், தந்திரக் காட்சிகளைக் கண்டு மனம் பாதித்து அழுகின்றன. ஏனென்றால், இவ்விதக் காட்சிகள் உலகத்தை ஒட்டிய உணர்வோடு பொருந்திவராத வகையாக உள்ளன.

ஒரு பொருளை மேசையின் மேற்பரப்பில் நிறுத்தி இறுதி வரை தள்ளினாலும் விழாமல் இருப்பதற்குக் காரணம், நமது கண்களுக்குத் தெரியாத மெல்லிய கண்ணாடித் தடுப்பினை மேசையின் இறுதியில் தந்திரமாக அந்தத் தந்திர நிபுணர் பொருத்தியுள்ளதுதான். நான்கு வயதுக்குப் பிறகுதான் நம்மை மகிழ்விப்பதற்காக, தந்திர நிபுணர், இந்த வித்தையைச் செய்கிறார் என்று உணர்கிறோம். ஆனால் இது போன்ற தந்திரச் செயலை அற்புதம் என்று போற்றி, ஏற்றுக்கொண்டு பெற்றோர்களும், ஆசிரியர்களும் இயற்கையை மீறிய சக்தியான கடவுளை வணங்கிடுமாறு குழந்தைகளிடம் சொல்கிறோம். குழந்தைகளும், தங்களிடம் உள்ள பகுத்தறிவு உள்உணர்வை மீறி, பொற்றோரும், ஆசிரியர்களும், பெரியவர்களும் கூறிவிட்டார்கள் என்று இதை (கடவுளை) ஏற்றுக் கொள்கிறார்கள்.

நமது அறநெறிகளை மதத்திலிருந்து நாம் பெறுவதில்லை. ஆனால், மனிதனின் உள்ளார்ந்த உணர்விலிருந்து பெறுகிறோம். சக மனிதனின் வலிகளை உணர்கிறோம். இந்த உணர்வை மற்ற மிருகங்கள் பெற்றிருக்கவில்லை. சான்றாக, செப்டம்பர் 11ஆம் நாள் அமெரிக்க நாட்டின் உலக வர்த்தக அமைப்பு இயங்கி வந்த இரட்டைக் கோபுரங்களை, விமானங்களைக் கடத்தி, ஓட்டிச் சென்று முட்டித் தகர்த்தார்கள். அவர்கள் ‘தங்களின் மத எதிரிகளைக் கொன்றுவிடுகிறோம். நன்மையைத்தான் செய்கிறோம், இச்செயலுக்காக, இறந்த பின்பும் கடவுள் நமக்குப் பரிசளிப்பார்’ என்று நம்பினார்கள். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஜார்ஜ், ‘தீவிரவாதிகளோ தங்கள் மதநம்பிக்கை அடிப்படையில் இதே செயலை அறநெறியானது என்று கருதினார்கள் (ஒரு வேளை தீவிரவாதிகளுக்கு அவர்களின் குருமார்கள் மூளைச்சலவை செய்திருக்கலாம்). “மதம் மனித மாண்பிற்கு ஓர் அவமானம்” என்று நோபல் பரிசு பெற்ற இயற்பியல் அறிஞர் ஸ்டிவன் வியன்பர்க்’ (Steven Weinberg) இதன் காரணமாகத்தான் என்று குறிப்பிட்டார்.

இது (மதம்) இல்லாமல் நல்ல மனிதர்கள் நற்செயலைப் புரிவார்கள். தீய மனிதன் தீயசெயலைச் செய்வான். ஆனால் நல்ல மனிதர்கள் தீய செயலைச் செய்வதற்கு மதம் துணைபோகிறது. வியன்பர்க், பாகிஸ்தான் நாட்டின் இயற்பியல் அறிஞர் அப்துஸ் சலாமோடு (Abdus Salam) நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டார். அப்துஸ் சலாம் வளைகுடா நாடுகளுக்கு அறிவியலை எடுத்துச் சென்றவர். அந்த நாடுகளின் தலைவர்கள், அவருக்கு ஆதரவாக இல்லை என்பதைக் கண்டார். அறிவியல், மத நம்பிக்கைகளைச் சிதைத்துவிடும் என்று அந்தத் தலைவர்கள் கருதினார்கள். ஆம், அறிவியல் மதத்தைச் சிதைத்து விடும். எனவேதான், மத நம்பிக்கை இன்றைய அறிவியல் உலகத்திற்குக் கேடு விளைவிப்பதாக உள்ளது.

நம்மைச் சுற்றியுள்ள துயரம், துன்பம் ஆகியன கடவுள் நம்மைச் சோதிப்பதற்காகவும், அன்பின் ஆழத்தைக் காண்பதற்காகவும் செய்கிறார் என்று மதத்திற்காக வாதிடுபவர்கள் கூறுகிறார்கள். சரிதான். ஏதும் அறியாத ஒரு குழந்தை புற்று நோயால் அல்லல்படும்போது, அக்குழந்தையின் பெற்றோரிடம் இதைக் கூறிப்பாருங்கள்;. இயற்கையை மீறிய சக்தியைப் பெற்ற நீங்கள், இது போன்ற குழந்தையைச் சோதனை செய்தால், நான் உங்களை மிகக் கொடியவன் என்றே குறிப்பிடுவேன்.

ஐன்ஸ்டின் (Einstein) ‘கடவுள் நம்பிக்கையைக் குழந்தைத்தனம்’ என்று குறிப்பிட்டார். நாம் வளர்ச்சி அடைந்த பின்பு, அறிவு முதிர்ச்சி பெற்ற பிறகு, நாம் இந்தக் கருத்தியலைக் கைவிடுவதுதான் இயற்கையானது என்றார். நான் குறிப்பிட விரும்புவது இதைவிடப் பெரிய செய்தியாகும். நாகரிகம் பெற்ற நாம் இந்தக் குழந்தைத்தனத்திலிருந்து விடுபட்டு வளர வேண்டும் என்பதேயாகும்.

ஒரு சமூகத்தில் உள்ள மக்கள் திரும்பிப் பார்க்க வேண்டும். 21ஆம் நூற்றாண்டு வரை பின்பற்றிய கடவுள் கருத்துருவை எண்ணி நகைக்க வேண்டும். பழங்கால குகை ஓவியங்களைக் காண்பது போன்று நாம் காண வேண்டும். ஓவியப் படிநிலை வளர்ச்சியில், குழந்தைத்தனமான ஓவியங்கள் - தேவையான ஒரு வளர்ச்சி நிலையாகும். பிக்காசோ (Piccasso) ரெம்பிராண்டிட் (Rembrandt) ஆகியோரின் ஓவியங்கள் உயர்நிலை வளர்ச்சியின் கலை வடிவங்கள். நாம் குகை ஓவியங்களைப் பார்த்து நகைத்தால் யாரும் வருந்துவதில்லை. அதற்காக மதம் சார்பில் கொலை ஆணைகளை (Fatwa) யாரும் பிறப்பிப்பதில்லை.

முடிவாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நூறு ஆண்டுகளுக்கு முன்பு அறிஞர் பெட்ரன்ட் ரஸ்ஸல் எழுதிய ‘நான் ஏன் கிருத்துவன் இல்லை’ என்ற நூலிலிருந்து ஒரு கருத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். ‘நாம் நமது காலில் நின்று உலகம் உருண்டையானது, அழகானது என்று காண வேண்டும். நல்லவை, கெட்டவை, அழகு, அழகற்றவை என்பதைப் பகுத்தறிந்து உலகம் எப்படி இருக்கிறதோ அப்படியே காண வேண்டும். அதைக் கண்டு அஞ்சக் கூடாது. மதத்தினால் ஏற்படும் பயங்கரவாதத்துக்கு அடிபணிந்து இருக்கக் கூடாது, அறிவினால் உலகத்தை வென்றெடுக்க வேண்டும்.

கடவுள் பற்றிய கருத்தாக்கம் பழங்காலச் சர்வாதிகாரத்திலிருந்து பிறந்தது. சுதந்தர மனிதனுக்கு இது தேவையற்றது. அறிவு, அன்பு, வீரம் ஆகியன ஒரு நல்ல உலகுக்குத் தேவையானவையாகும். வருத்தம் அளிக்கக் கூடிய பழங்காலத் தடைகள் நமக்குத் தேவையில்லை. அறியாமையில் மூழ்கியிருந்த-நீண்ட காலத்துக்கு முன்பு வாழ்ந்த மனிதன் கூறிய கருத்து களுக்கு நமது அறிவை அடிமைப்படுத்தக் கூடாது”.

பேராசிரியர் வசந்த் நடராஜன் முன்வைத்துள்ள முத்துகளைப் போன்ற மேலே கண்ட அறிவியல் எண்ணங்கள், 19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் பூத்துக் குலுங்கத் தொடங்கின. குறிப்பாக டார்வின் கோட்பாடுகள் மானுடச் சிந்தனை வரலாற்றில் மதவாதக் கருத்துக்களைத் தூள் தூளாக்கின. இக்கருத்தாக்கத்தினை அறிஞர் காரல் மார்க்சு நன்கு அறிந்திருந்தார்.

ஜெர்மன் மொழியில் வெளி வந்த மூலதனத்தின் முதல் நூலுக்கு அவர் அளித்த முகவுரையில் (சூலை 25, 1867) “அரசியல் பொருளியல் என்ற களத்தில் கட்டற்ற அறிவியல் முறையிலான ஆய்வு, பிற அனைத்துத் துறைகளிலும் போன்றே, அதே வகையான பகைவர்களைச் சந்திப்பது மட்டுமல்லாமல், அது கருதிப் பார்க்கும் கருத்து களின் சிறப்பியல்புகள், அதன் போர்க் களத்துக்கு வன்முறை மிக்கதும், இழிவானதுமான தீய நோக்க முடைய மனித உள்ளத்தின் உணர்ச்சியைத் தனியார் நலம் பேணும் சுயநலப்பேய்களை எதிரிகளாக அழைத்து மோதுகிறது.

சட்டப்படி நிறுவப்பட்டுள்ள ஆங்கிலேய சர்ச் அமைப்பு, அதன் 39 கொள்கைக் கூறுகளில், 38இன் மீது தொடுக்கப்பட்ட தாக்கு தல்களை வேண்டுமானால் உவப்புடன் மன்னித்து அருளுமே தவிர, அதனுடைய வருவாயில் 1:39 பங்கையும் விட்டுக் கொடுக்காது. தற்போதைய சொத்துரிமை உறவுகளின் திறனாய்வுகளுடன் ஒப்பிடுகையில் இந்நாட்களில் நாத்திக வாதமே மதி நுட்பம் வாய்ந்தது” என்று குறுகிறது மார்க்சு புரட்சிக்கான அடித்தளத்தை அடையாளம் காட்டினார் (மூலதனம் - முதல் பாகம் - பக்கம் xxiv-க.ரா.ஜமதக்னி).

இன்னும் இந்திய நாட்டின் கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கம், வைரம், மற்ற சொத்துக்களை மதவாத சக்திகள் இறுக்கிப் பிடித்து வைத்துக் கொண்டுள்ளன. வடமாநிலத்தில் சாமியாரின் கனவில், மன்னர் தோன்றி அரண்மனைக்கு அடித்தளத்தில் தங்கப் புதையல் உள்ளது என்று கூறினார். இதற்கு மத்திய அமைச்சர் அதரவு தெரிவித்ததாகக் புதைபொருள் ஆய்வாளர்கள் தங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதைக் கண்ட இந்துத்துவப் பிரதமர் வேட்பாளர், மண்ஞ¡குள் இருக்கும் தங்கத்தைத் தோண்டுவதை, விட சுவிஸ் வங்கியில் உள்ள கணக்கில் காட்டாத- திருட்டுப் பணத்தை எடுத்து வரலாம் என்று கூறி யுள்ளார். மண்ணில் தங்கம் கிடைத்தால் அரசு கைப் பற்றலாம். பிறகு கேரளாவில் உள்ள கோயிலில் உள்ள மன்னர் குடும்பம் பத்மநாபர் கோயிலில் பதுக்கியுள்ள தங்கத்தையும் கைப்பற்ற நேரிடலாம். விடுவார்களா இந்துத்துவ‌ மதவாதிகள்? அதற்காகத் தான் முன் எச்சரிக்கையாக மாற்று யோசனையை வழங்கி யுள்ளார் மோடி.

பெரியார், மதப் பிரச்சினைகளை சமுதாய - பொருளாதாரச் சிந்தனைகளோடு அணுகினார் என்பதை பால்யநாடார் சங்கத்தின் ஆண்டு விழாவில், அவர் ஆற்றிய உரை சுட்டுகிறது.

“நம்மைச் சுற்றிக் கோடிக்கணக்கான மக்கள் குடியிருக்க நிழல் கூட இல்லாமலும், இரண்டு நாளைக்கு ஒரு வேளை கூடச் சாப்பிடச் சக்தி இல்லாமலும் தரித்திரத்தில் இருக்கும் போது, சோம்பேறிகளும், விபச்சாரிகளும் தங்கும்படி மடங்களும், சத்திரங் களும் கட்டுவதும், வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு, பாயசத்துக்கு குங்குமப்பூ போதவில்லை, பொங் கலுக்குப் பாதாம் பருப்பு போதவில்லை என்று சொல்லிடும் தடியர்களுக்குப் பொங்கிப் போடுவதும், சமாராதனை செய்வதும் தர்மமாகுமா?

இவைகளை உணராமல் சுயநலக்காரர்கள் தங்கள் நன்மைக்கு எழுதி வைத்திருக்கும் ஆபாசக் களஞ்சியங்களை நம்பிக் கொண்டு நமது பொருள், நேரம், அறிவு ஆகியவைகளை வீணாக்குகிறோம்... நமது சென்னை மாகாணத்தில் மாத்திரம் இந்துமத சம்பந்தச் சடங்கு கள் எப்போதும், மதத்தின் பெயராலும், தெய் வங்களின் பெயராலும் வருடம் ஒன்றுக்கு 10 கோடி ரூபாவுக்கு அதிகமாகச் செலவாகிறது என்று சொல்வது அதிகமாகாது... இதனால் என்ன பலனை அடைகிறார்கள்? மனதில் ஏற்படும் ஒரு குருட்டு நம்பிக்கையாலும், இதனால் இலாபம் அடையும் வகுப்பார்களால் ஏமாற்றப்படுவதாலுந்தானே நமது மக்கள் இவ்விதக் கணுட, நணுட, மெனக்கேடுகளுக்குக் கட்டுப்பட வேண்டியிருக்கிறது” (பெரியர் ஈ.வெ.ரா. சிந்தனைகள், முதல் வரிசை-‘மதமும்-கடவுளும’ தொகுதி 4, பக்கம் - 1796, பதிப்பாசிரியர் வே.ஆனைமுத்து).

1926இல் மத மூடநம்பிக்கைகளின் அடிப்படைக் கூறுகளைத் தனது சொற்பொழிவில் விளக்கிய பெரியார், 23.11.1966 அன்று விடுதலை தலையங்கத்தில் “இன்று மதம் 100க்கு 97 பேரான, இந்து பாமர, பண்டித, பணக்கார மக்களை என்ன செய்திருக்கிறது? எப்படி நடத்துகிறது? என்பது பற்றி எவருக்குமே கவலை இல்லை என்பதோடு, மானமும் இல்லாமல் செய்து விட்டதே என்று சிந்திப்பது இல்லை. இன்று மதம் ஒழிந்தால் - மனித சமுதாய உயர்வு தாழ்வு ஒழிந்து ஒன்றாகிவிடும். செல்வத்தில், அறிவில், அந்தஸ்;தில், வாழ்வில் உள்ள பேதங்களும் ஒழிந்து கவலையற்ற சமநிலை ஏற்பட்டுவிடும்” (விடுதலை தலையங்கம் - 23.11.1966 - பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், முதல் வரிசை -‘மதமும்-கடவுளும்’ தொகுதி 4, பக்கம்-2098, பதிப்பாசிரியர் வே.ஆனைமுத்து). அயராத உழைப்பால், தொண் டால் பெரியார் உருவாக்கிய சமூகப் பொருளாதார - நாத்திகம் சார்ந்த பணியை நமது இளைஞர்கள் உணர்ந்து பணியாற்ற வேண்டும்.

இந்தியத் துணைக் கண்ட மண்ணில் நாத்திகச் சிந்தனை பல ஆயிரம் ஆண்டுகளாக விதைக்கப்பட்டுள்ளது. சமணமும், பௌத்தமும் வலியுறுத்திய கருத்துகள், உயர் நெறிகள், பகுத்தறிவின் வேர்களாகும். இவற்றை மனுதர்மமும், அதனை ஒட்டிய வருணாசிரமும் சூழ்ச்சியால், நயவஞ்சகத்தால் முறியடித்து, அடுக்குமுறை சாதிக் கட்டமைப்பையும், இந்து சனாதன முறைகளையும் உட்புகுத்தி, உலகில் எங்கும் காண முடியாத வேறுபாடுகளைச் சமூகத்தில் புகுத்தியது. இதில் பெரும்பான்மையான மக்கள் இன்றும் சிக்கி, அடிமைகளாக வாழ்வதினால்தான், நாட்டிற்குத் தேவையான, புரட்சிக்கான அணுகு முறைகளுக்குப் பல தடைகளை ஆதிக்கச் சக்திகள் ஏற்படுத்தி வருகின்றன. கடவுள், மதம், மூடநம்பிக்கை கள், ஜாதக அமைப்பு ஒன்றோடு ஒன்று இணைந் துள்ளன. இந்தக் கட்டமைப்பின் தலையில் கடவுள் உள்ளது. இவற்றைத் தெரிந்தோ, தெரியாமலோ பல இயக்கங்களும், அதன் தலைவர்களும், ஊடகங்களும் மத, பணப் போலிப் புகழ் போதையில் ஆழ்ந்து கிடக்கின்றனர். இதை முற்றிலும் உணர்ந்த பெரியார் தலையில் ஓங்கி அடித்தார்.

“கடவுள் இல்லை, இல்லவே இல்லை,

கடவுளை நம்புகிறவன் முட்டாள்;

வணங்குகிறவன் காட்டுமிராண்டி;

கற்பித்தவன் அயோக்கியன்.”

என்றார் பெரியார். இதை என்று மக்கள் உணர் வார்களோ, அன்றுதான், உண்மையான சமூக, பொருளாதார சமத்துவம் மலரும். பேராசிரியர் வசந்த் நடராஜன் விரும்பிய மதமற்ற சமூகம் உருவாகும்.