நுகர்பொருள் கண்காட்சி, அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட கண்காட்சிகளுக்கு முறையே நடுத்தர வயதினர், மாணவர் எனக் குறிப்பிட்ட சில பிரிவினரே சென்று களித்துப் பயனுறுவர். இவற்றுக்குத்தான் மக்கள் கூட்டம் திரண்டு செல்லும். இந்நிலையில், சமுதாயத்தையே முன்னேற்றிச் செல்ல வித்திடும் புத்தகக் கண் காட்சிக்கு மக்கள் வருவார்களா என்ற அய்யம் ஒருபுறம் இருப்பினும், ‘வருவார்கள், வரவேண்டும்’ என்ற நம்பிக்கையால் அந்த அய்யத்தைத் திணறடித்து, வளர்ந்து வந்துள்ளது இன்றைய சென்னைப் புத்தகக் காட்சி. அந்த வளர்ச்சி தமிழ்ச் சமுதாயத்துக்குப் பெருமை சேர்த்துள்ளது. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் 35 ஆவது புத்தகக் காட்சி சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் ஜனவரி, 5 அன்று தொடங்கியது.

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பக உரிமையாளர், நூலகர் போன்ற நிலைகளில் சிறந்து விளங்குவோருக்கான விருதுகள் வழங்கப் பட்டு, இந்த ஆண்டில் சென்னைப் புத்தகக் காட்சி சிறப்பாகவே அடியெடுத்து வைத்தது.

சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டின் புத்தகக் காட்சியில் ஒரு சில மாற்றங்களில் மட்டும் மிகவும் சிறப்பான முன்னேற்றத்தைக் காண முடிந்தது. அவற்றுள் ஒன்று: பெற்றோர்கள், குறிப்பாக, நடுத்தர வயதினர் குழந்தைகளை காட்சியரங்குக்கு அழைத்து வந்து அவர்களுக்கு நூல்களைக் காட்டினர்; அக்குழந்தைகள் கண்கள் விரிய வண்ண நூல்களைக் கண்டு, தொட்டு, தாங்களாகவே தேர்ந்தெடுத்தனர். வருகைபுரிந்த குழந்தைகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிகம்தான்! இரண்டாவது: தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து மாண வர்கள் உள்ளிட்ட இளைஞர்களும், நடுத்தர வயது ஆண்களும் புத்தகக் காட்சிக்காக சென்னைக்கு வந்து ஓரிரு நாட்கள் முகாமிட்டுப் பயனடைந்து வருகின்றனர்.

குறிப்பிட்டுச் சுட்டிக்காட்ட வேண்டியவை இவை என்றாலும், எல்லாத் தரப்பினர்களும் புத்தகக் காட்சியரங்குகளில் அலைமோதுகின்றனர்.

தமிழ்நாட்டில் புத்தகக் காட்சி என்றாலே சென்னைப் புத்தகக் காட்சிதான் என்ற நிலையும் மாறியது; மதுரை, ஈரோடு, நெய்வேலி போன்ற நகரங்களில் புத்தகக் கண்காட்சிகள் சில ஆண்டு களாக மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் ஆண்டுக்கொரு காட்சி என்ற சூழல் மாறி, மாதத்துக்கு ஒன்று என்று புதுச் சூழல் தோன்றியும் கூட, சென்னைப் புத்தகக் காட்சியில் எப்படி இவ்வளவு மக்கள்திரள் குழுமுகிறது? தணியாத அறிவுத்தாகத்தின் தகிப்புதான்! வளர்ந்து வரும் பண்பாட்டு, தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக, வாசிப்போரின் எண்ணிக்கை அதி வேகமாக வளர்ந்து வருகிறது. அவர்களுக்கு, நல்ல கருத்தார்ந்த நூல்களை மேலும் அதிக அளவில் புலமையாளரும் பதிப்பகத்தாரும் உருவாக்கித் தர வேண்டும் என்ற உந்துதலுக்கு வித்திட்டுள்ளது, இந்த அறிவுத்தாகம்!