போர்ச்சுக்கீசியரின் வருகையான கி.பி.1498 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் காலனிய வரலாறு தொடங்குகிறது எனக் கொண்டால் இந்தியச் சமூகம் கடந்த நான்கு நூற்றாண்டுகளாக இத்தாக்கத்திற்கு ஆட்பட்டுள்ளது என்று பொருள். இதன் தொடக்கம் பற்றி வேறு வேறு கருத்துகளும் உண்டு. காலனியம் வெவ்வேறு தளங்களில் கிரியா ஊக்கியாகவும் இருந்துள்ளது. சமூகப் பண்பாட்டுத் தளங்களில் பெரும்பங்கு வகித்துள்ளது. அரசியல் மேலாதிக்கம் கொண்டிருந்தது. இதனால் இந்தியப் பொருளாதாரம் உலகச் சந்தைக்கு உதவியது. இருந்தபோதும் பண்பாட்டுத் தளத்தில் ஏற்பட்ட மாற்றம் சமூகப் பொருளாதாரத் தளத்தோடு மையம் கொண்டிருந்தாலும் அதன் இயக்கம் ஓரளவே கைகூடியது.

இம்மாற்றம் வெவ்வேறு அழுத்தத்தால் உண்டானது. காலனிய அரசு ஒருபுறமும் அரசு சாராத அமைப்புகள் மறுபுறமும் இதனை உண்டாக்கின. இவற்றின் தலையீடுகள் வேறு வேறாக அமைந்தன. சுரண்டுவது, மேலாதிக்கம் செய்வது. இவ்விரு கூறுகளும் ஒன்றுக்குள் ஒன்று இயைந்து அதிகாரத்தினைத் தக்கவைப்பதற்கான உத்தியே. விளைவாக உள்நாட்டு சமூக நிறுவனங் களின் நடவடிக்கைகளும், பண்பாட்டுப் பழக்க வழக்கங்களும் காலனிய அரசின் கடுமையான பார்வைக்கு உட்படுத்தப்பட்டன. அவை தாக்கு தலுக்கும் உட்பட்டன; முழுமையாக நிராகரிக்கவும் பட்டன. சிலர் காலனிய இயல்பிற்குள் தம்மை இணைத்துக்கொண்டாலும், சிலர் தம் அடை யாளங்களை இழந்ததாகக் கருதினர். மொத்த மக்கள்தொகையில் ஓரளவாவது காலனியப் பண்பாட்டிற்கு மாறிக்கொண்டனர். இம்மாற்றம் புதிய கருத்துகளையும், பழக்கவழக்கங்களையும் ஏற்றுக்கொள்வதற்கான ஏதுநிலையினை உருவாக்கியது.

இந்தியத் துணைக் கண்டத்தினை காலனியத்திற்கு உட்படுத்துதல் ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளைக் காலனியாக்கியதிலிருந்து வேறானது. இந்திய வரலாற்றியலில் பொதுவாகச் சொல்வதுபோல் ஐரோப்பிய அரசுகளிடையேயான போட்டி பொறாமைகளால் அன்று. இடைக் காலத்தில் இந்திய அரசுகள் அரச படை பலத் தினால் திறமையாக ஆளப்பட்டு வந்தன. குதிரைப் படையும், பீரங்கிப்படையும் மிகவும் திறனுள்ள வையாக இருந்தன. போர்த்தொழில்நுட்பத்தில் ஐரோப்பியர்கள் மேலோங்கியிருந்தாலும் சிறு படையினரைக் கொண்டு இந்தியரின் எதிர்ப்பினை ஓரளவே சமாளிக்க முடிந்தது. இதனாலேயே ஐரோப்பிய அரசுகள் இந்திய ஆட்சியாளர்களுடன் கூட்டணி வைத்தனர். பிரிட்டிஷார், மைசூர், மராத்தியர், குதிரை வீரர்களைச் சமாளிப்பது பெரும்பாடாய் இருந்தது. மூவரும் ஒருவருக் கொருவர் சண்டையிட்டனர். மைசூர் படை யினருக்கு எதிரான சர் அயர் கூட்டின் அனுபவமும், மராத்தியர்களுடனான லேக் பிரபுவின் அனுபவமும் பிரிட்டிஷ் ராணுவ வரலாற்றில் ஒரு நல்ல படிப் பினை, காலனிய ஆக்கிரமிப்பும் ஒரு புதுவகையான அனுபவம். இது இடைக்காலத்து அரசியல் வரலாற்றிலிருந்து பெருமளவு மாறுபட்டதாகும். இந்திய வரலாற்றில் ஒரு புதிய காலகட்டம். இதுபோன்ற வரலாற்று அனுபவம் முன்பு இல்லை. இந்தியா இதற்கு முன்பும் வெளியார் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. அப்போது இதுபோன்று அனுபவம் இல்லை.

ஆக்கிரமிப்புகூட மிகக் கொடூரமாக இல்லை. ஆனால் ஆக்கிரமிக்கப்பட்ட பரந்த நிலப்பரப்பு நிர்வாகத் துறையினரால் கொடூரமாக நிகழ்த்தப் பட்டது. காலனிய நாட்டிற்கும், காலனியமான நாட்டிற்கும் இடையிலான தொலைவு அதிகம். விரைவான செய்தித் தொடர்பு இல்லை. பிரச்சினை களைப் பேசித் தீர்ப்பது கட்டுப்படுத்துவதற்கான ஓர் உத்தியாக இருந்தது. ஆனால், அது ஒரு வரை யறைக்குள் இருந்தது. பேச்சு வார்த்தை என்பது காலனிய மேலாதிக்கத்தின் ஒரு கூறு, முக்கியமாக காலனியத்தின் தொடக்க காலத்தில், அப்போது அரசு, ஆட்சிக் கட்டமைப்பு வளர்நிலையில் இருந்தது. ஆனால், பேச்சுவார்த்தை மட்டுமே ஆட்சியதிகாரத்திற்கு உத்தரவாதம் அளிப்பதாக இல்லை; அது தொடர்ந்து சாதகமாகவும் இல்லை. மக்களையும், அரசுகளையும் மேலாதிக்கத்தினை ஏற்கவைத்தது. இதனை அதிகாரத்தினை வெளிப் படுத்தும் ஓர் உத்தியாக அமைத்தது. அதாவது, இந்தியரை காலனிய ஆதிக்கத்தினை ஏற்றுக்கொள்ள வைப்பது. சமூக பண்பாட்டு மாற்றங்களால் உருவான காலனிய இடைத்தட்டு வர்க்கம் அதனால் பாதிக்கப்பட்டது. இவ்வர்க்கமே காலனியத்தில் முனைப்புடன் பங்கு பற்றியது. ஆனால் தொடர்ந்து வந்த காலங்களில் இவர்களே காலனியத்தை வெறுத்தனர். இப்போக்கும் காலனிய கொள்கைகள் இருபுறமும் கூர்மையாக உள்ள கத்திபோல் செயல்பட்டது; பண்பாட்டினைச் சிதைப்பது, கேலிக்குள்ளாக்குவது, மேலாதிக்கம் செய்வது.

ஆப்பிரிக்க நாவலாசிரியர் Ngugi-Wa-Thiongo என்பவர் காலனியத்தின் மிகப்பெரிய ஆயுதம் பண்பாட்டு வெடிகுண்டு என்றார் (Cultural Bomb). இவ்வெடிகுண்டு ஒரு மனிதனுடைய தன்னம் பிக்கையினையும், அவன் மொழியின் மீதான நம்பிக்கையினையும் அவன் வாழும் இயற்கைச் சூழல், அவன் சமூகத்தின் ஒற்றுமை, அவன் திறன், போராட்ட குணம் போன்றவற்றின் மீதான நம்பிக்கையினையும் பாதிக்கும்.1

சொந்தப் பண்பாட்டின் மீதான உரிமையினை மறுக்கவைத்தே காலனியக் கூறுகள் பண்பாட்டு மாற்றத்தினை உண்டாக்கின என்பது மேற்சொன்ன நாவலாசிரியரின் கருத்து. இது, அழித்தல், கொள்ளை யடித்தல் இரண்டினால் மட்டும் நிகழவில்லை. இது எந்த அளவில் வேண்டுமானாலும் நிகழ்ந் துள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலுள்ள மாயன் நாகரிகத்தின் பிரமிடுகளின் மேல்தளங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுபோல் வரலாற்றுச் சின்னங்கள் சிதைக்கப்பட்டன.

இது காலனியத்தின் அழித்தொழிக்கும் கூறு. இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் அமைந்துள்ள பெரும்பாலான அருங்காட்சியகம் காலனிய நாடுகளின் பொருள்களையே கொண்டுள்ளன. பிரிட்டிஷ் அருங்காட்சியகம் என்பது தவறானது. அங்குள்ள பொருள்கள் பெரும்பாலும் காலனிய நாடுகளில் கொள்ளையடிக்கப்பட்டவை. காலனி யத்தின் பெயரால் இந்தியாவில் நுழைந்தவர்கள் வழிபாட்டிடங்களைச் சிதைத்தும் அபுனிதமாக்கவும் செய்தனர். இதற்கான போதுமான சான்றுகளை இலத்தீன் அமெரிக்காவில் ஸ்பானிஷ்காரர்களும், கோவாவில் போர்ச்சுக்கீசியரும் செய்தனர். ஆனால், இதனை நாம் முழுமையாக சமய நோக்கோடு பார்க்க வேண்டியதில்லை. இந்நிகழ்வுகள் முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியாகும். இப் போக்கு இடைக்காலத்திற்கென்றே உரியது.

காலனியம் காலனிய வரலாற்றினை மறுதலித்தது என்று வாதிடப்படுகிறது. அதாவது காலனியாக்கப் பட்டவர்களின் பண்பாட்டு உரிமையும் அடை யாளமும் தவிர்க்கப்பட்டன. அவர்களிடையே அரும்பிய வரலாறு மூடப்பட்டது. காலனிய நாடுகள் தம் பெரும்பாலான பண்பாட்டுச் சின்னங் களை இழந்தன. ஐரோப்பிய அருங்காட்சியகங் களே இதற்கு நற்சான்று. காலனியச் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டதைவிடவும் இடம் பெயர்க்கப்பட்டது இன்னும் முக்கியத்துவமான தாகும். இதன் மூலம் பண்பாட்டு அடையாளம் மறுதலிக்கப்பட்டுப் புது அடையாளம் ஒன்று உருவாக்கப்பட்டது?

காலனிய காலத்தில் இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டன. இதனால் உண்மையான அடை யாளம் மறக்கப்பட்டு பிறிதொரு அடையாளம் திணிக்கப்பட்டது. இந்தியாவில் பெரும்பாலான பெயர்கள் ஆங்கிலமயமாக்கப்பட்டு உண்மையான பெயர்கள் அரிதாகவே பயன்பாட்டில் இருந்தன. அலுவல் நிலையிலும் பொதுமக்களின் மனத்திலும் இதுதான் நிலை. இதில் உள்நாட்டு அறிவுமுறை ஓரங்கட்டப்பட்டது அல்லது மீட்டெடுக்கப்பட முடியாமல் மறைந்தது.

இந்தியப் பண்பாட்டுக் கூறுகளைப் புறக் கணிப்பது அல்லது அழித்தொழிப்பதுதான் காலனியத்தால் மேற்கொள்ளப்பட்ட பண்பாட்டுத் தாக்கம். நிலவி வந்த பண்பாட்டு அடையாளச் சூழலை காலனியத் தன்மைக்குள் புகுத்தி அதற்குப் புதிய விளக்கம் தந்து ஒன்றிணைத்துப் பார்ப்பதே காலனியப் பண்பாட்டுச் செயலாக இருந்தது. காட்டாக, இந்திய ஆட்சியாளர்களின் தர்பாருக் குள்ளும், பிரிட்டிஷார் இந்திய வழிபாட்டுத் தலங்களுக்குள்ளும் நுழையும்போது காலணிகளைக் கழற்றிவிடும் பழக்கத்தினைக் கொண்டிருந்தனர். பிரிட்டிஷ் அலுவலர்கள்கூட இது போன்ற வழக்கத்தினைப் பின்பற்றினர். ஐரோப்பிய மரபில் தொப்பியினைக் கழற்றி ஒருவருக்குச் செய்யும் மரியாதையுடன் இவ்வழக்கம் ஒப்பிடப்பட்டது. ஆனால், பிரிட்டிஷார் இதனை அவமானம் என்று கருதினர். இருந்தபோதும் அதிகாரத்தின் உச்சிக்கு வந்தபோது அதனைக் காத்துக்கொள்ள இவ் வழக்கத்தினைப் பின்பற்றினர். இதனையொட்டி 1854-இல் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. இதன் படி அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களில், தர்பாரில் இந்தியர்கள் உள்ளூர் வழக்கத்தினைப் பின்பற்றுவதுடன் காலணிகளைக் கதவருகே கழற்றிவிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஐரோப்பியர் பாணியில் ஆடையும் காலணியும் அணிந்துவரும் இந்தியர்கள் விருந்து, கூட்டங்களில் இவ்வழக்கத்தினைத் தவிர்க்கலாம் என்று சலுகையளிக்கப்பட்டது. இதனை பிரிட்டிஷ் பண்பாட்டு வழக்கங்கள் திணிக்கப்படுவதாக இந்தியர் வருணித்தனர்.

தொடக்கத்தில் கவர்னர் தர்பாரில் மட்டும் பின்பற்றப்பட்டு வந்த செருப்பு கழற்றும் மரியாதை (shoe respect) பிரிட்டிஷ் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு நிறுவனங் களிலும் பின்பற்றப்பட்டது. நீதிமன்ற வளாகத்திலும், அரசு அலுவலகங்களிலும் பின்பற்றப்பட்டு வந்த இவ்வழக்கத்தினைத் தொடக்கத்தில் சில இந்தியர் எதிர்த்தனர். ஆனால், எப்படிப்பட்ட அலுவல் சாராத சந்தர்ப்பங்களிலும் இந்தியர் பிரிட்டிஷ் அலுவலர் முன்பு இவ்வழக்கத்தினைப் பின்பற்ற வேண்டியிருந்தது.3 காலணி மரியாதை என்ற வழக்கத்தினை ஏற்றுக்கொண்டதற்கான பின்புலம் ஒரு மரபு தானே தவிர புதிய கண்டுபிடிப்பு அல்ல. இம்மரபு ஏற்கனவே இந்திய அதிகார வர்க்கத் திற்கும் ஆளப்படும் வர்க்கத்திற்கும் இடையிலான ஒன்றுதான் என்றும் பரவலாகப் பின்பற்றப்படும் ஒன்றுதான் என்றும் பிரிட்டிஷாரால் சொல்லப் பட்டது. ஆனால், இவ்வழக்கத்தினைப் பின்பற்று வதற்குப் போதுமான சமூக உத்தரவாதம் இல்லை. இதைப் பற்றி உண்மையிலேயே காலனியர்களுக்கு உணர்வில்லை. இதன் மூலம் காலனியாக்கப்பட்ட மக்களின் மரபுகளை மதிப்பது போன்ற ஒரு பாவனை காட்டப்பட்டது. ஆனாலும், இது காலனியவாதிகளுக்கும், காலனியாக்கப்பட்டவர் களுக்கும் இடையிலான வேறுபாட்டினை அதிகரித்தது.

காலனியப் பண்பாட்டுத் திட்டத்தின் மையக் கூறு மரபு ரீதியிலான பண்பாட்டினை உறுதி செய்வதன்று. ஆனால் பண்பாட்டுப் பொதுப் புத்தி யினையும் அறிவுப்புலத்தினையும் ஒன்றாக்குவது. இதுபோன்று கருத்தியல் உத்திகளின் வழியே காலனிய அரசு முடிவெடுக்கும் நிலையினை எட்டியது. வெவ்வேறு நிறுவனங்களிலும் அமைப்பு களிலும் இதற்காக இந்தியர்கள் பங்கு பற்றினர். கருத்தியல்களையும் அதன் நடைமுறைகளையும் பரப்புவதில் இந்தியர்கள் பெரும்பங்கு வகித்தனர். இப்படி பிரிட்டிஷாராலும் இந்தியராலும் ஒருங் கிணைக்கப்பட்ட முயற்சியால் காலனியம் சுயமான ஒரு பார்வையினைப் பெற்றது. இக்கருத்தினைப் புரிந்துகொள்ள Syed Hussain Altas எழுதிய Myth of The lazy Native என்ற என்ற நூல் பயனுள்ளது. இந்நூல் மலேசியாவின் தொழிலாளர்களின் உளவியலை ஆய்கிறது. அந்நாட்டிலுள்ள ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் எவ்வாறு காலனிய ஆதிக்கத்தால் தங்கள் இயலாமையை மறந்து உழைத்தனர் என்பதனை திறமையாக இந் நூலாசிரியர் ஆய்ந்துள்ளார்.4 காலனிய ஆதிக்கத் தால் தேசியவாதக் கோட்பாடு உருவாவதும் உருப் பெறுவதும் தற்போதைய நிலையில் சிறந்த ஆய்வாகக் கொள்ளப்படுகிறது.

காலனிய வரலாறு பற்றிய தம் ஆய்வில் James Mill இந்தியரை இழிவாக உருவகப்படுத்தியதே நிலைபெற்றுவிட்டது. இது காலனிய உருவாக்கமாகும். இதனைச் சிறப்பாக ஆய்தல் வேண்டும்.5 Father of Modern India என்று கொண்டாடப்படுகிற Ram Mohan Roy இந்தியப் பண்பாட்டின் பல கூறுகள் காலனிய நிறுவனங் களால் உருவானது என்று நம்பினார்.6 காலனிய ஆட்சிக்கு உட்பட்டவர்கள் ஒருவித அடிமைப் புத்தியினையும் பிறரை அண்டி இருக்கும் உரிமை யினைவும் பெற்றிருந்தனர் என்பது நன்கு உணரப் பட்டது. இது ஓர் உளவியல் சிக்கல். இதுபற்றிய வாதம் D.Mannoni, Franz Faron என்ற இருவரிடையே நிகழ்ந்துள்ளது. பொருளியல் காரணங்களை மட்டும் முன்வைத்து காலனியச் சிக்கலைப் புறந் தள்ள முடியாது. ஒவ்வொரு காரணத்தையும் மிகத் தெளிவாக ஒருவர் ஆராய வேண்டும். எவ்வாறு பொருளியல் வேறுபாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும், கவ்ரவத்தினை நிலைநிறுத்திக் கொள்வதற்கு எவ்வாறு போராட்டம் நடத்தப் பட்டது என்றும், பேரம் எவ்வாறு பேசப்பட்டது என்றும், நன்றியறிதல் எவ்வாறு உணரப்பட்டது என்றும், புதிய புதிய புனைவுகள் ஏன் உருவாக்கப் பட்டது என்றும் ஆராய வேண்டும்.7 இந்தியப் பண்பாட்டின்மேல் படிந்திருந்த ஒருவித கலகத் தன்மையைப் பயன்படுத்தி காலனியம் பண்பாட்டு மாற்றத்தினை தக்கவைத்துக் கொண்டது. இதனால் அதிகாரம் பெற்றது; இந்தியப் பண்பாடு விளிம்பிற்குத் தள்ளப்பட்டது, அழிக்கப்பட்டது. காலனிய மானவர்களுக்கு எந்தச் சலுகையும் தரப்பட வில்லை. ஆனால் சில துறைகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. கல்வியியல், இலக்கியம், மருத்துவம், பெரும்பாலும் அனைத்துத் துறைகளிலும் இந்தியப் பண்பாட்டுக் கூறுகளை மெக்காலே குறைத்து மதிப்பிட்டது அறியாமையால் அல்ல; இதன் மூலம் பண்பாட்டு அதிகாரம் கட்டமைக்கப்பட்டது. புதிய கல்வி முறையில் உருவான அறிவுஜீவிகள் அவர்களுக்குள்ளும், தம்மிடமும் வாதிடுவர் என்று மெக்காலெ எதிர்பார்த்தார். ஆனால் அவர்களோ காலனியப் பண்பாட்டினைப் பின்பற்றுபவர் களாகவும், பரப்புபவர்களாகவும் மாறினர். காலனிய பண்பாட்டிற்கும் அறிந்தேற்பு தரவும் அடிமையான மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவும் படித்த அறிவுஜீவிகள் இருந்தனர்.

காலனிய பண்பாட்டு வட்டத்திற்குள் மூழ்கிய மக்கள் அப்பண்பாட்டுத் தலைநகரங்களுக்கு வந்தடைந்தனர். Edward Shills சொல்வது போல் அவர்கள் ஒரு பண்பாட்டு வட்டாரத்தினை உருவாக்கினர். அப்பண்பாட்டு விழுமியத்திலும் நடைமுறையிலும் வாழத்தலைப்பட்டனர்.8 ஆனால், பலர் இவ்வட்டத்தின் வெளியில் இருந்து வாழ நினைத்தனர். இது மிகவும் கவலையான சூழலை உருவாக்கியது. மக்களைச் சேர்ந்த பண்பாட்டுக் கூறுகளைக்கூட பின்பற்றுவதற்குத் தடை செய்தது. இது ஒரு பண்பாட்டுச் சோகம். தம் எல்லைகளை மீறுவதன் மூலமே இந்தியர்கள் தம் விடுதலையை அடையவேண்டியிருந்தது. ஆனால், ஆட்சியாளரின் மேலாதிக்கக் கோட்பாடு வலிமையாக இருந்தது. அது ஒரு மலையாள நாவலின் கதை போல் அமைந்தது. மையழி புழையுதே தீரங்களி என்பதே அந்நாவல் (on the bank of river Mayyazhi). இதன் ஆசிரியர் முகுந்தன், இந்நாவலின் முதன்மைப் பாத்திரமான குறும்பி அம்மா காலனிய காலத்துக் கவலைகளையும், அழுகைகளையும் பொருத்தமாகச் சித்திரித்துள்ளார். இவருடைய பேரனால் உருவாக்கப்பட்ட இயக்கத் தினால் பிரஞ்சுக்காரர்கள் துரத்தியடிக்கப்பட்ட போது மிகவும் நொடிந்துபோய் இருந்தார். தன் பேரனை ஒரு காலனிய அலுவலராகக் காண வேண்டுமென்று ஆசைப்பட்டார்.10

காலனிய காலத்தின் பண்பாட்டு வளர்ச்சி ஒருமுகம் நோக்கியதாக இல்லை. இது பல கவலை களைக் கொண்டதாக இருந்தது. உள்ளூர்ச் சிக்கலும் இருந்தது. ஆனால் அறிவுஜீவிகளோ நவீன பண்பாட்டுச் சுவையினையும், உணர்வினையும் உருவாக்கத் துடித்தனர். இவர்கள் மரபினை மீறாமலே மேலைநாட்டுக் கருத்துகளையும், விழுமியங்களையும் காலனியத்தின் வழியே அளவோடு பெற்றுக் கொண்டனர். இது குழப்பமான புரிதலாக அமைந்தது. இப்புலம்பல் 1889-இல் வெளியான ஓ.சந்துமேனன் எழுதிய இந்துலேகா நாவலில் வெளிப்பட்டது. பத்தொன் பதாம் நூற்றாண்டின் மலபார் பகுதியில் உருவான சமூக கருத்தியல் மாற்றங்களின் பின்னணியில் புதிதாக எழுந்த பண்பாட்டு உணர்வினைத் துல்லியமாக இந்நாவல் ஆவணப்படுத்துகிறது. எவ்வாறு அறிவுஜீவிகள் நவீனத்துவத்திற்கும், காலனியாக்கப்பட்டவர்களுக்கும் இடையே இணக்கத்தினை உண்டாக்கினர் என்பதைக் காட்டுகிறது; மரபினையும் தவிர்க்கவில்லை. இச்சூழலின் பின்னணியிலேயே இந்நாவலின் முதன்மைப் பாத்திரங்களான மாதவன், இந்துலேகா காணப்படுகின்றன. இந்துலேகாவின் பண்பாட்டுப் புத்திசாலித்தனம் பின்வருமாறு வரையறுக்கப் பட்டுள்ளது.

“இந்துலேகா ஆழ்ந்த ஆங்கிலப் புலமை கொண்டவர்; நாடகங்களைப் புரிந்துகொள்ளு மளவிற்கு சமஸ்கிருத மொழியிலும் புலமை யுடையவர்; இசையில் இசையின் வல்லமைபற்றி அறிந்தவர் மட்டுமல்ல திறமையாக பியானொ வாசிப்பவருமாவார்; வயலின், இந்தியவகைச் சூழல் வாத்தியங்களையும் நன்கு இசைக்கத் தெரிந்தவர். அதே நேரத்தில் அவருடைய மாமன் தன் மரு மகளுக்குத் தையல் வேலையினைக் கற்றுக்கொள்ளும் அறிவுரையினையும் வழங்கினார். ஐரோப்பியப் பெண்கள்போல் ஓவியம் தீட்டுவதிலும் இந்து லேகாவைத் தயார்ப்படுத்தினார். சுருக்கமாகச் சொன்னால் ஓர் ஐரோப்பியப் பெண்ணைப் போல் அனைத்துவகைப் பண்பாட்டுக் கூறுகளையும் பெற்றிருக்கவேண்டுமென்று ஆசைப்பட்டார். இந்துலேகா தம் பதினாறு வயதிற்குள் மிகத் திறம்பட வளரவேண்டும் என்று எதிர்பார்த்தார்.10”

இதுபோன்ற பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட ஒருவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மலபார் பகுதியில் அரிதாகவே இருந்திருப்பர் என்பதனை அறிந்தவராகவே சந்துமேனன் இருந்தார். அறிவுஜீவிகள் காலனியத்திலிருந்து எதனைப் பெற நினைக்கிறார்கள் என்பதனை இந்நாவல் கோடிட்டுக் காட்டுகிறது. ஆனால், நடப்பு வாழ்வில் ஆசைக்கும், நடைமுறைக்கும் இடையே இடைவெளி உண்டு.

காலனிய இடையீட்டினால் எந்தவொரு வட்டாரத்தினுடைய பண்பாட்டுக் கூறுகளும் பாதிப்பிற்கு உள்ளானது என்பது உண்மை. இருந்தும், வளமையான பலகூறுகளை உடைய இந்திய நாகரிகத்தின் கூறுகள் தாக்குப் பிடித்து நின்றன. காலனியத்தின் சாதனை என்பதும், வெற்றி என்பதும், ஓரளவே உண்மை; முழுமையாக மறு கட்டமைப்புச் செய்யவில்லை. காலனியமயமாதலைப் பொறுத்தவரை இத்திட்டம் இந்தியாவில் இல்லை. காலனியத்தின் பண்பாட்டுக் கொள்கை என்பது படிப்படியாக மாற்றுவதுதான்; ஒரேயடியாக அன்று. இதனாலேயே காலனிய அரசு மிசினரி மார்களின் கல்விக் கொள்கையினைப் போற்ற வில்லை. இந்தியாவை ஐரோப்பியமயமாக்கவும் இல்லை. பேரரசு தம்மை நிலைநிறுத்திக்கொள்ள சுரண்டலையும் சமாதானத்தினையும் மாற்றி மாற்றி ஓர் அரசியல் உத்தியாகப் பின்பற்றியது. இருந்தபோதும் பண்பாடு போட்டிக்களமாக அமைந்தது. சில கொள்கைகள் காலனியானவர் களின் பண்பாட்டு அடையாளங்களில் பதிந்திருந்தன. காலனியக் கூறுகளை தாக்குப் பிடித்து நிற்பது என்பது மரபுக்கூறுகள் புத்துயிர் பெறுவதாகும்.

சமயங்களை இறுகப்படுத்துவதிலும் புத்துயிர்ப்பு செய்வதிலும் ஒரு கிரியா ஊக்கியாகச் செயல்பட காலனியம் போதுமான கவனத்தினைப் பெறவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் கூற்றில் உருவான மண்ணின் மைந்தன் என்ற கருத்தாக்கம் அக்கால கட்டத்தில் காலனியம் சமூகப் பண்பாட்டுத் தளத்தில் உண்டாக்கிய இடையீட்டினால் நிகழ்ந்தது. காலனியத்திற்கு எதிரான பண்பாட்டுநிலை என்பது Edward said குறிப்பிடுதல் போன்று மண்ணின் மைந்தர் என்பது தம் நிலப்பரப்பிலேயே அகதியாவதாகும். அதன் மூலம் தூய்மையான உள்ளூர்ப் பண்பாட்டினைத் தேடி அறியலாம்.11 பழம்பண்பாட்டினைத் தேடி அறிவது முதன்மையான சான்றுகளைத் தேடுவ தாகும் என்று Amilcar Cabral குறிப்பிடுகிறார்.12 இத்தேடல் குறிப்பாக இந்துக்களுக்கு சமூக ஒருங் கிணைப்பினை உண்டாக்கவும் பண்பாட்டுப் பெருமையினைப் பெறவும் வழிகோலியது. காலனிய அரசு சதிமுறையினை ஒழித்ததும், குழந்தைத் திருமணமுறையை ஒழித்ததும், திருமணத்திற்கான வயதினை வரைமுறை செய்ததும் இந்துப் பண் பாட்டுக் கூறுகளை கேலிக்குள்ளாக்குவதாக ஒரு வாதம் எழுந்தது. இம்மாற்றத்தினை எதிர்ப்போரும் ஆதரிப்போரும் ஒரே விதமான சமய நூல்களைப் படித்தனர். இவ்விவாதம் நாடு முழுக்க நிகழ்ந்தது. இது சமய எல்லைகளை மேலும் விரிவாக்கியது. முக்கியமாக இந்துக்களிடையே சமய எல்லைகளை உடைத்து ஒருங்கிணைப்பதில் இப்போக்கு முதன்மை பெற்றது.

கிறித்தவ மிசினரிமார்கள் கல்வி புகட்ட லோடு இதனிலும் கவனம் செலுத்தினர். மிசினரி மார்களுக்கும், காலனிய அலுவலர்களுக்கும் இடை யிலான உறவு இதனை வலுப்படுத்தியது. காலனிய அரசு மிசினரிமார்களின் பிரசங்கத்தினை அரசியல் தீர்வாகக் கணிக்கவில்லை. மிகவும் வேகமான இவர்களது சமயப் பிரசாரம் நம்பிக்கையின் மீதான பயத்தினை உருவாக்கும் என்று நம்பினர். தத்துவ போதினி பத்திரிகா என்ற இதழில் இக்கருத்து வெளியிடப்பட்டது.13 மிசினரிமார்களின் சமயப் பிரச்சாரத்திற்கு எதிரான பிரச்சாரத்தினை மேற் குலகில் விஷ்ணுபவ பிரம்மச்சாரி சிரத்தையுடன் மேற்கொண்டார்.14 ஆனாலும் மிசினரி நடவடிக் கைக்கு எதிரான பிரச்சாரம் இந்தியாவில் வன்மை யாக எடுபடவில்லை. இம்முயற்சி ஓரளவு சமயங் களைப் பாதுகாத்தது. ஒருவகையான ஒருங்கினை வினை நிலைப்படுத்தியது.

காலனிய பண்பாட்டு மேலாதிக்கத்தினை எதிர்கொள்வதன் மூலம் இந்துக்களும் இஸ்லாமியர் களும் தம்மைச் சரிசெய்துகொண்டனர்; சுய பண் பாட்டு வழக்கங்களைப் புத்துயிர்ப்பு செய்தனர். தம் தம் பழமையினைத் திரும்பிப் பார்ப்பதன் மூலம் பழமை என்பதும் இந்து என்பதும் ஒன்று என்று கணிக்கப்பட்டன. எனவே, பழங்காலம் இந்துக்களின் பொற்காலம் என்று கொண்டாடப் பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியச் சிந்தனையினை வெளிப்படுத்திய பங்கிம் சந்திர சட்டர்ஜி, தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர், அரபிந்த கோஷ் போன்றோரால் இம்மாதிரி உணர்வு வெளிப்படுத்தப்பட்டது. அவர்களின் சமயம் தொடர்பான ஒப்பாய்வு சர்வசமயம் என்ற கருத்தினை ஒலிப்பதற்குப் பதிலாக இந்துமதமே உயர்வானது என்ற கொள்கை உயர்த்திப் பிடிக்கப் பட்டது. இதுபோன்ற சமயவாத சருத்துகள் இனப்பாகுபாட்டினை உருவாக்கியது. காலனிய சிந்தனையாளர்கள் வரலாற்றைச் சமயவாதப் பின்னணியில் கணித்தார்கள் – James Mill இந்திய வரலாற்றை இந்துக் காலம், இஸ்லாம் காலம் என்ற பகுத்தது ஓர் உதாரணம். இக்கருத்தினைச் சமயச் சாய்வுடைய இடைத்தட்டு வர்க்கம் மிகவும் சிலாகித்து பெரிதாக்கியது. சிலர் இந்துக்களின் அண்மைக்காலத்திய வீழ்ச்சிக்குப் பிறரின் ஊடுருவலே காரணமென முடிவெடுத்தனர். சிலர் எதிர்காலத்திற்கான திட்டத்தினை வரையறுத்தனர். U.N. Mukherji, என்பவர் Dying Race என்றொரு திட்டம் வரைந்தார். அதனடிப்படையில் இந்துத்துவ மறுகட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்று திட்டமிடப்பட்டது.15

காலனிய பண்பாட்டு விளைவுகள் தற்போதைய வாதங்களுக்குப் பொருத்தமுடையனவாக உள்ளன. காத்திரமான வகையில் ஆய்வு செய்வோரும், புதிய காலனியப் பார்வையில் ஆய்வு செய்வோரும் முன்பு மேற்கொள்ளப்பட்ட தேசியவாத ஆய்வுமுறை யினையும், மார்க்சிய ஆய்வுமுறையினையும் மறுமதிப்பீடு செய்கின்றனர். பிரிட்டிஷாரின் மேலாதிக்கக் கோட்பாட்டினால் எந்த மனித இனம் லாபமடைந்தது, எந்த மனிதஇனம் அவதி யுற்றது என்ற ஆய்வுகள் வந்த வண்ணம் உள்ளன. காலனியம் சமூக மாற்றத்திற்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இயைபாக அமைந்தது என்ற வாதமும் எழுந்துள்ளது. இதனால் காலனிய நாடுகள் பெரும் வளர்ச்சியடைந்தன. காலனியத்தின் வளர் முகத் தன்மையினை கார்ல் மார்க்ஸ் தம் எழுத்துக் களில் சுட்டியுள்ளார். இந்தியாவில் சமூகப் புரட்சி ஏற்பட இங்கிலாந்து ஒரு வரலாற்றுக் கருவியாக இருந்துள்ளது என்ற அவருடைய கருத்து அடிக் கடி மேற்கோள் காட்டப்படுகிறது. ஆனால், ஐரோப்பிய காலனியம்பற்றி மார்க்ஸ் வகைப்படுத்து கையில் காலனிய வளர்ச்சியை ரத்தப்போக்கு என்பார் (bleeding process).16

இந்திய வரலாற்றியலின் மறுவாசிப்பில் காலனிய ஆட்சி பெருமளவில் முந்தைய ஆட்சியிலிருந்து மாற்றம் பெறவில்லை என்று வாதிடுகிறது. சொல்லப் போனால் இது முந்தையதின் தொடர்ச்சியே எனலாம். இரு வழிகளில் இத்தொடர்ச்சியைக் காணலாம். ஒன்று : பிரிட்டன் ஆதிக்கப் போட்டியில் நுழைந்தது. ஒரு அந்நியராக, புதிய வழிமுறைகளுடனும் கொள்கைகளுடனும் அல்ல; இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு அரசியல் முறையாக. ஆனால், பிற ஐரோப்பிய அதிகாரி களைவிட பிரிட்டன் மேலதிக ஆக்கிரமிப்புச் சக்தியினைப் பெற்றது. இரண்டு : இந்திய ஆட்சி யாளர்கள் சாதித்ததைவிட குறுகிய காலத்திற்குள் ஐரோப்பியர் சாதித்துவிட்டனர். இந்தியர்கள் அய்ரோப்பிய ஆக்கிரமிப்பினை வேடிக்கை பார்த்தனர் என்பதைவிடவும், பாதிக்கப்பட்டனர் என்பதைவிடவும் காலனியத்தினைப் பரப்பும் யபநவே ஆக மாறினர் என்றே சொல்ல வேண்டும். இது ஒரு வகையான வாதம். காலனியம் என்பது தெற்காசிய வரலாற்றில் முதலாளித்துவ வளர்ச்சியின் வெளிப் பாடு என்று சொல்வாரும் உண்டு. பார்த்தா சட்டர்ஜியின் கருத்து யாதெனில் காலனியத்தின் அரசியல் பொருளாதார அரசியல் உருவாக்கம் இந்திய வரலாற்றின் முதலாளித்துவ வளர்ச்சியின் வெளிப்பாடாகும். காலனியத்தால் உருவான எந்தவொரு சட்டமும் தவிர்க்க இயலாத வரலாற்றுக் கோட்பாட்டினால் (history theory) உருவானவை. அது காலனிய நாடுகளின் வரலாற்றுக் கூறுகளில் ஒன்றாகவும் உள்ளது. இதனால் 1820-1850 காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரம் மறுகட்டமைப்பிற்கு உட்பட்டது. இக்காலகட்டத்தில்தான் காலனியக்கூறுகள் நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருந்தன. இதனை வெளியிலிருந்து வந்த தடையாகக் கணிக்கமுடியாது; இந்திய முதலாளித்துவ வரலாற்றின் தனித்த தன்மை.17

ஒருவித வரலாற்றுத் தொடர்ச்சி இருந்ததா? இல்லையா? என்பதல்ல கேள்வி. அப்படி ஒன்றும் இல்லை என்றாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. பண்பாட்டுத்தளத்தில் ஒரு தொடர்ச்சி இருந்தது. காலனியப் பண்பாட்டில் மாறுதலை உண்டாக்கி யதில் முழுமையாக வெற்றியடையவில்லை. காலனிய ஆட்சியாளர்கள் இப்போக்கில் பெரும்பங்கு வகித்தனர். ஆனால் உள்ளூர் அடையாளத்தினைப் போற்றவுமில்லை, மறுக்கவுமில்லை. வரலாற்றுக் கோட்பாட்டின்படி வரலாற்றினை மறுவாசிப்பு செய்வோர் காலனியத்திற்கு ஒரு அறிந்தேற்பு தர முன்வருகின்றனர். இது ஒரு புதிதான அரசியல் கட்டமைப்பு என்றும் ஆனால் முன்பிருந்தவற்றி லிருந்து பெரும்பாலும் வேறுபட்டதல்ல என்றும் சொல்லவருகின்றனர். இதுபோன்ற பார்வை இந்திய வரலாற்றில் காலனியம் ஏற்படுத்திய சில முக்கியமான முடிவுகளையும், தனித்தன்மைகளையும் குறைத்து மதிப்பிட வைக்கும். பின்நவீனத்துவ வாதிகள் காலனியம் என்னும் பெருங்கதையாடலை சந்தேகத்துடன் அணுகுகின்றனர். இதன்மூலம் வரலாற்றினை மறுவாசிப்பு செய்யும் போக்கு தெரிகிறது.

காலனியத்தைப்பற்றிப் பேச வேறுவேறு நிலைப் பாடுகள் இருந்தாலும் அதனைக் கொடுமையாகக் காட்டிச் சித்திரிக்கும் போக்கும் உள்ளது, சுரண்டல் தன்மைகளை வெளிப்படுத்தும் போக்கும் உள்ளது; ஏற்றுக்கொள்ளும் போக்கும் உள்ளது. காலனியத் திற்கான இவ்வறிந்தேற்பு அது உண்டாக்கிய புதிய காலனிய உலகமயமாதலால் ஏற்பட்டதாகும்.

வரலாற்றின் மறுவாசிப்பில் காலனிய பண் பாட்டின் இடையீடு என்பது மரபு ரீதியான வாழ்க்கை முறையினை ஒதுக்கிப் பார்க்கவில்லை. மரபு ரீதியான வாழ்க்கைமுறை காலனிய பண் பாட்டு இயல்பிற்கு முகம் கொடுத்தது. இது பன்முகத் தன்மை உடையது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மீட்டுருவாக்கத்திற்குப் பெரிதும் உதவியது. இம்மீட்டுருவாக்கத்தின் பண்பாட்டி லிருந்து அரசியல் சற்று விலகி நின்றது. உண்மையைச் சொன்னால் பண்பாட்டுக் கூறு சிறப்புச் சலுகை யினைப் பெற்றது. இதனால் பழைய சமூகப் பண் பாட்டுக் கூறுகள் புத்துயிர் பெற்றன. இப்போக்கில் தேசிய பண்பாட்டின் தோற்றுவாயினைக் கண்டறிய வரலாறு மூலாதாரமாகத் தூண்டப்பட்டது. இதனால், இந்து மீட்டுருவாக்கம் பண்பாட்டு மீட்டுருவாக்கமாகக் காணப்பட்டது. இது பிற பண்பாட்டுக் கூறுகளைப் புறந்தள்ளியது. ஆனாலும் இந்தியப் பண்பாட்டின் கூரியத் தன்மைகளையும் வலியுறுத்தியது. மேலைப் பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கிக்கொள்ள இயலாமல் திணறியதுடன் அது அயல்கூறுகள் என்றும் கருதப்பட்டன. எனவே, இந்திய நாகரிகங்களின் வீழ்ச்சிக்கும், தேய்விற்கும் காரணம் அயலில் இருந்து வந்த இஸ்லாமியர் என்று கருதப்பட்டது. விளைவாக, காலனிய இந்தியாவும் இந்து மீட்டுருவாக்கம் என்ற பெயரில் வகுப்பு வாதம் உறுதியாக வளர்ந்தது.

மறுமலர்ச்சி என்பதும், மீட்டுருவாக்கம் என்பதும், அடையாளத்தினைத் தேடுதலே. காலனியம் இதனை மேலும் வலுவூட்டியது. இவை இரண்டும் காலனியத்திற்கு எதிரானதல்ல; ஒரு மாற்றுப் பண்பாட்டினை உருவாக்க முயன்றது. இதற்குப் பழமை வரலாறு பெரிதும் பயன்பட்டது. இதில் மறுமலர்ச்சி மீட்டுருவாக்கத்திற்குப் பெரிதும் வலுசேர்த்தது. மறுமலர்ச்சிக் கூறுகள் சமயச் சார்பின்மைக்குத் தளம் அமைத்தது. ஆனால், வகுப்புவாதக்கூறுகள் சில சிக்கல்களை உருவாக்கின.

மறுமலர்ச்சி என்பதும், மீட்டெடுத்தல் என்பதும், அடையாளத்தினைத் தேடுதலே, அதன் பண்பாட்டு இருப்பினைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பினை காலனியம் வழங்கியது. மேற் சொன்ன இருமுயற்சிகளுமே காலனியத்திற்கு எதிரானது இல்லை. இரண்டுமே மாற்றுப் பண்பாட்டினைக் கட்டமைக்கும் முயற்சியில் இறங்கின. இம்முயற்சியில் பழமையும்/கடந்த காலமும் முதன்மையான பங்கு வகித்தன. மறு மலர்ச்சிக்குப் பழமைத்துவம் நல்ல தொடக்க சக்தியாக அமைந்தது; மீட்டுருவாக்கத்தினை முடித்து வைத்தது. மறுமலர்ச்சிக் கருத்துகள் சமயச்சார்பற்ற சமூகத்திற்கு அடித்தளமிட்டது. மீட்டுருவாக்கத்தில் சில சமயச் சார்பான கூறுகள் இடம்பெற்றன. இவ்விரு கூறுகளில் இருந்துதான் தற்கால இந்தியாவின் பண்பாட்டுக் கூறுகளைக் கண்டறிய வேண்டும். தேசிய அடையாளத்தினைத் தெளிவாகக் கண்டறிகையில் அதற்கான பொருள் பண்பாட்டுப் பின்னணியிலும் பார்க்கப்பட்டது. அரசியல் பின்னணியிலும் பார்க்கப்பட்டது. ஆனால் அரசியல் கருத்துகளே நிலைபெற்றன.

தமிழில் : கி.இரா.சங்கரன்

குறிப்புகள்

1. Ngugi Wa Thiango, Decolonizing the Mind: The Politics of Language in African Literature, London, 1986. P2.
2. காட்டாக காலனிய காலத்தில் உள்ளூர் மருந்துகள் அவ்வளவாகக் கண்டுகொள்ளப் படவில்லை. மேலதிக விவரங்களுக்கு : பார்க்க ‘Indigenous Medicine and Cultural Hegemony’ in this Volume.
3. மேலதிக விவரங்களுக்கு; பார்க்க, இயல் 6 ‘The Great Shoe Question” Tradition, Legitimacy and Power in Colonial India, in this volume.
4. Sayed Hussain Altars, The Myth the Lazy Native London, 1973
5. ஜேம்ஸ் மில் இந்துக்களைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார் “இந்துக்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்து வதில்லை, பொய்யர்கள்.... பொய்யின் உச்சத்தில் இருப்பவர்கள். உலகில் மனித இனங்களில் அவர்களுக்கு உதாரணம் காட்ட இயலாது. பார்க்க : James Mill, The Histroy of India with Notes and Continuation by Horace Hayman Wilson, Vol.I, London, MDCCL viii.p.324.
6. J.C.Gosh (ed), The English Works of Raja Rammohan Roy, Allahabad, 1906, pp.241-242.
7. O.Mannonai, Galiban and prospero: The Psychology of Colonization, Ann Arbor, 1990, p.8.
8. Edward Shills, The Intellectual between Tradition and Modernity : The Indian Situation, The Hague, 1961, pp.27-28
9. For an elaboration of this, see Chapter 9, ‘Novel as Colonial Narrative, in this Volume.’
10. O.Chandu Menon, Indhulekha, English Translation by W.Dumergue, Calicut, 1965, p.10.
11. Edward Said, Culture and Imperialism, London, 1993.332.
12. Amil Cabral, Return to the Sources : Selected speeches of Amircal Cabral, New York, 1973, pp.9-28
13. Arundhati Mukhopadhyaya ‘Attitudes Towards Religion and Culture in 19th Century Bengal : Tattawabodhini Sabha, 1839 - 1859’ in Studies in History, 3 (1), Jan - June, 1987, pp.9-28
14. For details, see Frank F.Cohlou, ‘The Polemic Process in the 19th Century Maharashtra : Vishnubhara Brahmachari and Hindu Revival in Kenneth W.Jones, Religious Controversy in British India, New York, 1992. pp.5-26.
15. 1871 முதல் 1901 வரையுள்ள மக்கள்தொகைக் கணக்கு எடுப்பின் அடிப்படையில் வங்காளத்தில் இந்துக்கள் விரைவில் சிறுபான்மை இனத்தவராவர் என்றும் எதிர் காலத்தில் அங்கு இந்துக்கள் இல்லாமலே ஆகலாம் என்றும் முகர்ஜி வாதிட்டார். “வெவ்வேறு வகைகளில் மக்கள் சுரண்டப்படுகிறார்கள். இறுதியில் தம் நாட்டிலேயே அவர்கள் காணாமல் போ வார்கள். இது தாமே தம் தலை எழுத்தினை எழுதிக்கொள்வது போன்று” இது அவருடைய கூற்று. VN.Mukherji, A Dying Race, Culcutta, 1910, pp.13. see also Pradeep Kumar Dutta, ‘Dying Hindus: Production of Hindu Commercial Commonsense in Early 20th Century Bengal, EPW, 28 (25) 19 June 1993, pp.1305 – 19 and also Carving Blocs: Communal Ideology in Early 20th Century Bengal, New Delhi, 1999, pp.28-63.
16.  For a Critique of this Revisional Interpretation, see Ajiz Ahmed, Lineage of the Past, New Delhi, 1996, pp.1-43.
17. Partha Chatterjee, The Nation and its Fragments, Delhi, 1995, pp.29-28.

Pin It