வன்முறை நமக்குப் பழக்கப்பட்டதுதான். மக்களை ஆளும் அரசு, அரசை எதிர்க்கும் புரட்சியாளர்கள், புரட்சியை விரும்பாத மதவாதிகள், மதவாதிகளை அண்டிப் பிழைக்கும் அரசியல்வாதிகள், அரசியல்வாதிகளைப் பின் தொடரும் ஊடகங்கள், ஊடகங்களை நம்பும் மக்கள்... என நாம் எல்லோருமே வன்முறையைப் பார்த்தும் பழகியும் எதிர்பார்த்தும் உருவாக்கியுமே காலத்தை நகர்த்துகிறோம். பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் மீதும், ஆதிக்க சாதியினர் தலித் மக்கள் மீதும், ஆண்கள் பெண்கள் மீதும், பெரியவர்கள் குழந்தைகள் மீதும் செலுத்தும் அதிகாரம்-வன்முறையின் வடிவத்திலேயே அன்றாடம் நிகழ்த்தப்படுகிறது. இங்கு வன்முறைக்கு யாரும் விதிவிலக்கல்லர். வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் எதிர்வினையாற்ற விழைகிறவர்களும் தங்களுக்கான ஆயுதமாக அவற்றையே கையிலெடுப்பதால்-காணச் சகிக்காத அவலங்களை நாள் தோறும் கண்டு கொண்டே இருக்கிறோம். இங்கு மனிதரை எவரும் சக மனிதராகக் கருதவில்லை. இந்த ஜாதி, இந்த மதம், இந்தப் பாலினம், இந்த நிறம், இந்த வயது, இந்தத் தெரு, இந்த ஊர், இந்த நாடு என்று ஒருவரையொருவர் பாகுபடுத்துவதில்தான் எத்தனை வரையறைகள்? வீடு தொடங்கி நாடாளுமன்றம் வரை இந்த வரையறைகளின் மூர்க்கம், முழு வீச்சோடு செயலில் இருக்கிறது. இதற்கு மாணவர்கள் மட்டும் விதிவிலக்காகி விடுவார்களா என்ன?

சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, நூறு வயதைக் கடந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. பல பல சட்ட மேதைகளை உருவாக்கிய இந்தக் கல்லூரியில் பயில்கிறவர்களில், மற்ற எந்தத் தொழில் படிப்பு கல்லூரிகளை விடவும் தலித் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக, கெல்லீசில் அமைந்துள்ள இச்சட்டக் கல்லூரியின் விடுதி பெரும்பாலும் தலித் மாணவர்களால்தான் நிறைந்திருக்கிறது. இதற்கு மிகக் குறிப்பான உளவியல் மற்றும் சமூகக் காரணங்கள் இருக்கின்றன:

lawcollege 1. டாக்டர் அம்பேத்கர் சட்டம் பயின்றவர் என்பது உளவியல் காரணம் 2. இன்னும் தனியார்மயமாகாத ஒரே தொழில் படிப்பு சட்டம் மட்டுமே! சட்டக் கல்லூரியும் தனியார் கைக்குப் போனால், தலித் மாணவர்களுக்கு அதுவும் எட்டாக் கனியாகிவிடும். பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை இங்கு மிகவும் குறைவு என்றாலும், இது பொது விடுதிதான். அரசு உதவித் தொகையை நம்பி கல்வி கற்க வேண்டிய அவசியம் தலித் மாணவர்களுக்கே பெரும்பாலும் இருக்கிறது என்பதால்-உணவுக்கும் உறைவிடத்திற்கும், போக்குவரத்திற்கும் செலவழிக்க வழியற்ற தலித் மாணவர்களுக்கு இந்த சட்டக் கல்லூரி விடுதியே தஞ்சம். இந்த கல்வி ஆண்டில் விடுதியில் உள்ள தலித் மாணவர்களின் எண்ணிக்கை 149; பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 7.

12.11.2008 அன்று, டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் இரு சாதி மாணவர்களுக்கு இடையில் நடைபெற்ற வன்முறை, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வெறும் ஏழு பேர்தான் என்ற நிலையில் எப்படி சாத்தியமாயிற்று? எண்ணிக்கையில் இவ்வளவு குறைவாக இருக்கிறவர்கள் இந்த அளவுக்குத் துணிவார்களா என்று நாம் யோசிக்கலாம். தேவர்களுக்கும் தலித் மாணவர்களுக்குமான மோதல் மட்டுமல்ல; பள்ளர்-பறையர் தாக்குதல்கள், சீனியர் -ஜுனியர் அடிதடிகள், விடுதி மாணவர்களுக்கும் -விடுதியில் இல்லாத மாணவர்களுக்கும் இடையே சண்டைகள் என டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியும், விடுதியும் பல தீவிரமான மோதல்களை தொடர்ச்சியாகக் கண்டு வந்திருக்கிறது. இங்கு நடைபெற்ற வன்முறைகளை விசாரிக்கும் பொருட்டு, இதுவரை நான்கு விசாரணை ஆணையங்களை தமிழக அரசு அமைத்திருக்கிறது.

1968இல் நீதியரசர் சோமசுந்தரம் ஆணையம், 1981இல் நீதியரசர் காதர் ஆணையம், 2001இல் நீதியரசர் பக்தவச்சலம் ஆணையம், தற்போது நீதியரசர் பி. சண்முகம் ஆணையம். ஆனாலும் சட்டக் கல்லூரியில் நடைபெறும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த அரசால் முடியவில்லை. அறிக்கைகளை வாங்கி அடுக்கி வைப்பதோடு கடமை முடிந்ததென அது இருந்து விடுகிறது. சட்டக் கல்லூரி மாணவர்களிடையே மேலோங்கி நிற்கும் பாகுபாடு, பிரிவுணர்ச்சி மற்றும் பழியுணர்ச்சியின் வேர் எது என்று ஆராய்ந்தால், அது கல்லூரி வளாகத்திற்கு மிக அருகிலேயே இருக்கும் நீதிமன்றத்தைச் சென்றடையும். வழக்குரைஞர்கள் சாதி ரீதியாகப் பிரிந்து செயல்படுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

சட்டத்தைக் காக்க வேண்டிய இவர்கள் எந்த வன்முறைக்கும் அப்பாற்பட்டவர்கள் அல்லர் என்பதைப் பல குற்றங்கள் நமக்கு நிரூபித்திருக்கின்றன. மேலும் அரசியலோடு தொடர்புடையவர்களாகவும் இவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விழைகிறார்கள். சட்டக் கல்லூரி மாணவர்கள், ஓர் அரசியல் கட்சியின் மாணவர் அணி செயலாளருக்கு இருக்கும் துடிப்போடும் மிதப்போடும் வலம் வருவதன் உளவியல் பின்னணி இதுதான். டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி எப்போதுமே ஒரு பதற்ற மான சூழலில் இருப்பதற்கு அடிநாதமாக இப்படியொரு பின்னணி இருந்தாலும், கடந்த பத்தாண்டுகளாக மட்டுமே உற்று நோக்கும்படியாக மூன்று முக்கியமான வன்முறைகள் இங்கு நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

இதில் முதலாவதாகக் குறிப்பிட வேண்டியது, 2001இல் காவல் துறை மாணவர்கள் மீது நடத்திய கொலை வெறித்தாக்குதல். இதற்கும் வலுவான சாதியப் பின்னணி உள்ளது என்ற போதிலும்-அது சட்டக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கும், காவல் துறைக்குமான பொதுவான மோதலாகவே திசை திருப்பப்பட்டது. விடுதிக்கு அருகில் இருந்த கணேஷ் செட்டிநாடு ஓட்டல் ஊழியர்களுக்கும் விடுதி மாணவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட சாதாரண கைகலப்பு, காவல் துறை தலையீட்டால் மிகப் பெரிய வன்முறையாக மாறியது. விடுதிக்குள் காவலர்கள் அத்துமீறி நுழைந்து மாணவர்களை கடுமையாகத் தாக்கினர். மோட்சம் திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வந்த பொது மக்கள்தான் மாணவர்களோடு சண்டையில் ஈடுபட்டதாக காவல் துறை பதிலளித்தாலும் அதில் உண்மையில்லை.

காவல் துறையோடு சேர்ந்து மாணவர்களை அன்று தாக்கியது, காவலர்களே அழைத்து வந்த ‘ரவுடி'களே என்று சட்டக் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல; ஆசிரியர்களும் நம்புகிறார்கள். காவல் துறைக்கு சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது குறிப்பாக விடுதியில் இருக்கும் தலித் மாணவர்கள் மீதிருந்த வெறுப்புணர்ச்சியே இந்த மோதலின் கரு என அவர்கள் குறிப்பிடுகிறார்கள். விடுதி முழுவதும் சூறையாடப்பட்டு, 35 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவர்களைத் தாக்கிய இந்தப் "பொது மக்களை' கைது செய்ய வாய்ப்பிருந்தும் அதைச் செய்ய காவலர்கள் தவறியதாக நீதியரசர் பக்தவச்சலம் விசாரணை ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்த போதும், அந்தப் பொது மக்கள் யாராக இருக்கக்கூடும் என்ற முக்கியமான விஷயத்தை மட்டும் ஆணையம் விசாரிக்கவில்லை. இறுதியாக, காவல் துறை மீது எந்தத் தவறுமில்லை என்றே அறிக்கை குறிப்பிட்டது.

lawcollege இதற்கு அடுத்ததாக 2005–2006இல் தலித் மற்றும் தேவர் மாணவர்களுக்கிடையே மோதல் நடந்தது. அந்த கல்வியாண்டில் விடுதியில் தலித் மாணவர்களின் எண்ணிக்கை 93; பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்படட மாணவர்களின் எண்ணிக்கை 67. முதன் முறையாக விடுதியில் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அப்போதுதான் இந்தளவு அதிகரிக்கப்பட்டது. அதற்கு காரணமாக இருந்தவர், அப்போதைய விடுதிக் காப்பாளராக இருந்த பேராசிரியர் வின்சென்ட் காமராஜ். மாணவர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் இருந்ததாலும், மாணவர்களை வழி நடத்துவதிலும் சமாதானப்படுத்துவதிலும் நடுநிலையாக செயல்பட்டதாலும் இவர் விடுதிக் காப்பாளராக நியமிக்கப்பட்டார்.இவர் பொறுப்பேற்ற அந்த ஆண்டில் விடுதியில் குறிப்பிடும்படியாக வன்முறை நிகழ்வு ஏதும் ஏற்படவில்லை. உணவு மேற்பார்வை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வெளியாட்கள் விடுதிக்கு வராமல் கண்காணிக்க ஒரு மேற்பார்வைக் குழு என குழுக்களை உருவாக்கி மாணவர்களை அதில் ஈடுபடுத்தினார்.

அந்த ஆண்டின் மே மாதத்தில் அவர் 15 நாட்கள் விடுமுறைக்காக வெளியூர் சென்றிருந்த நேரத்தில் தேவர் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர், தேவர் மாணவர்களுக்கு மட்டும் "கராத்தே' சொல்லிக் கொடுப்பதற்காக விடுதிக்குள் நுழைந்திருக்கிறார். மற்ற மாணவர்களும் கராத்தே கற்றுக் கொள்ள விரும்பிய போதும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சிறிய அளவில் சலசலப்பு ஏற்பட, விஷயம் வின்சென்ட் காமராஜிடம் தெரிவிக்கப்பட்டது, அவர் அதைக் கண்டித்திருக்கிறார். தேவர் மாணவர்கள் இதனால் அதிருப்தியடைந்தனர். இரவு குடித்துவிட்டு வந்து தலித் மாணவர்களிடம் தகராறு செய்ய, 11 மணிக்கு தொடங்கி 2 மணி வரை சண்டை நடந்திருக்கிறது. 25 பிற்படுத்தப்பட்ட மாணவர்களும், 10 தலித் மாணவர்களும் காயமடைந்தார்கள். வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். வழக்குகள் கிடப்பில் போடப்பட்டன.
மாணவர்கள் ஒத்துழைக்காததால் இன்று வரை அந்த விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த தகராறின் விளைவாக, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அதற்கடுத்த ஆண்டு விடுதியில் சேர முன் வரவில்லை. தலித் மாணவர்களே அதிகளவில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தலித் மாணவர்கள் மீது வெறுப்பு கூடியது. "முக்குலத்தோர் மாணவர் பேரவை' உருவானதன் பின்னணி இதுதான். விடுதியில் தலித் மாணவர்கள் ஒன்றிணைந்து இருப்பதால், கல்லூரியில் தேவர் மாணவர்களை ஒன்றிணைக்கும் பணி நடந்தது. பிற பிற்படுத்தப்பட்டோரும் தேவர் மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்தனர். புதிதாக வரும் மாணவர்களிலும் தங்கள் சாதிக்காரர்களை அடையாளம் கண்டு ஒன்று சேர்க்கும் பணியை, முக்குலத்தோர் மாணவர் பேரவையினர் செய்தனர். கல்லூரிக்குள் எந்த ஒரு சாதி சங்கத்திற்கும் அனுமதியில்லை என்ற போதிலும், கல்லூரி நிர்வாகத்தால் இதை தட்டிக் கேட்க முடியவில்லை. காரணம், இந்தப் பேரவையின் வேர் கல்லூரிக்கு வெளியே மிகவும் பலம் பொருந்தியவர்கள் இருக்கும் இடத்தில் நிலை கொண்டிருந்தது. தேவர் குரு பூஜையைக் கொண்டாடும் போது, தலித் மாணவர்களை கோபப்படுத்தும் வகையில் கூச்சலிடுவதும் வம்பிழுப்பதும் தொடர்ந்தது.

சென்ற ஆண்டு பிப்ரவரி இறுதியில் தலித் மாணவர்களைத் தாக்கும் நோக்கத்தோடு வந்த தேவர் மாணவர்களுக்கு தலைமையேற்ற பாரதி கண்ணன் (நவ.12 வன்முறை நிகழ்வில் கத்தியோடு ஓடி வந்தவர்), ஆயுதங்களோடு தலித் மாணவர்களை அடிக்க முற்பட்டார். இதனால் ஏற்பட்ட தகராறில் காவல் துறை அவரிடமிருந்து சுமார் 10 ஆயுதங்களை கைப்பற்றியது. இதைக் கண்டித்து தலித் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாரதி கண்ணன் மீது பி.சி.ஆர். வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்ற போதிலும் அவர் முன் ஜாமினில் வெளியே வந்துவிட்டார்.

நவம்பர் 12 அன்று நடைபெற்ற வன்முறை நிகழ்வுக்கு அடிபோட்டது, அக்டோபர் 30 தேவர் குருபூஜை. முக்குலத்தோர் மாணவர் பேரவை தொடங்கப்பட்டதிலிருந்து குரு பூஜையை தேவர் மாணவர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்கள். போஸ்டர் ஒட்டுவது, துண்டறிக்கை வெளியிடுவது, கோஷம் போடுவது, முளைப்பாரி கொண்டு போவது என கல்லூரிக்குள்ளும் குருபூஜை சடங்குகளைப் பின்பற்றியிருக்கிறார்கள் மாணவர்கள். முத்துராமலிங்கத் தேவருக்கு இருக்கும் ‘தேசியத் தலைவர்' என்ற பிம்பம், கல்லூரி நிர்வாகத்தை இதை தடுக்க விடாமல் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கல்லூரியின் சார்பாக டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் மட்டுமே கொண்டாடப்படுவது வழக்கம். அதற்குக் காரணம் இந்தக் கல்லூரி அவர் பெயரில் இருப்பது மட்டுமல்ல; அவர்கள் பயிலும் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவர் என்பது தான் ஆனால் இந்த அடிப்படை உண்மையைக் கூட ஏற்கவும் நம்பவும், அங்கீகரிக்கவும் தேவர் மாணவர்களால் முடியவில்லை. தேவர் குரு பூஜையை கொண்டாட, வெளியிலிருந்து சாதி சங்கங்களும் அரசியல் கட்சிகளும் ஊக்குவித்தன.

குரு பூஜையன்று அடிக்கப்பட்ட சுவரொட்டியில், “எக்குலமும் வாழணும், தேவர்கள் மட்டும் ஆளணும்'' என்ற வாசகம் இருந்தது. அதோடு டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் என்பதற்கு பதிலாக, ‘சென்னை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கல்லூரியின் பெயரையே மாற்றிக் குறிப்பிட்டதாலும், அம்பேத்கர் பெயரை வேண்டுமென்றே நீக்கியதாலும் கோபமடைந்த தலித் மாணவர்கள், தேவர் மாணவர்களை தட்டிக் கேட்டிருக்கிறார்கள். இதற்கு தேவர் மாணவர்கள் டாக்டர் அம்பேத்கரை ஒருமையில் குறிப்பிட்டு, “அவன் எங்களுக்கு என்னடா செஞ்சான், அவன் பேரை நாங்க எதுக்கு போடணும்'' என்று கூற, தலித் மாணவர்கள் “அப்படீன்னா எதுக்கு இங்க படிக்கிறீங்க, வேற நாட்டுக்குப் போங்க'' என்று கோபமாக பதிலளித்தனர்.

இதைத் தொடர்ந்த சண்டையில் தலித் மாணவர் ஒருவரின் தலையை தேவர் மாணவர்கள் உடைத்திருக்கிறார்கள். இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நேரம் என்பதால், நான்காம் ஆண்டு மாணவர்கள் கல்லூரி முதல்வரான சிறீதேவை சந்தித்து சுவரொட்டியின் வாசகங்கள் பற்றி முறையிட்டிருக்கிறார்கள். அதற்கு முதல்வர், "இதெல்லாம் தப்பு; போஸ்டரை உடனே கிழிச்சிடுங்க' என்று சொல்ல, தலித் மாணவர்கள் போஸ்டர்களை கிழித்திருக்கிறார்கள்.

இதனால் தலித் மாணவர்களை அடித்தே தீருவது என பாரதி கண்ணன் தலைமையிலான சில தேவர் மாணவர்கள், ஆயுதங்களோடு சுற்றுவதாக தகவல் வந்து கொண்டிருந்தது. இதனால் நவம்பர் 5 அன்று நடந்த தேர்வை தலித் மாணவர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். அடுத்த இரண்டு நாட்களில் தலித் மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் தேவர் மாணவர்கள் மீண்டும் தங்களை தாக்குவதற்குள் நாம் அவர்களைத் தாக்கிவிட வேண்டும் என்று தலித் மாணவர்கள் விடுதியில் பேசி முடிவெடுத்திருக்கிறார்கள். மூன்று நாட்களாக பாரதி கண்ணன் உள்ளிட்டோரை தலித் மாணவர்கள் தேடியிருக்கிறார்கள். அவர்கள் அகப்படவில்லை.

இந்நிலையில் நவம்பர் 12 அன்று தேர்வு எழுத வரும் தலித் மாணவர்களைத் தாக்குவதற்கு பாரதி கண்ணன் உள்ளிட்டோர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் கிடைக்க, தலித் மாணவர்கள் சுமார் 40-50 பேர் தேர்வு எழுதும் மாணவர்களைப் பாதுகாக்க உருட்டுக் கட்டைகளோடு கிளம்பி வந்து கல்லூரிக்குள் காத்திருந்தனர். கல்லூரிக்குள் மாணவர்கள் பதற்றமாகத் திரிவதாகத் தகவல் வரவே, காவல் துறையும் பத்திரிகை / தொலைக்காட்சி செய்தியாளர்களும் அங்கு வந்து குவிந்தனர். இந்நிலையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவர்கள் சிலர், கல்லூரியின் முன்னாள் மாணவரான வழக்குரைஞர் ரஜினிகாந்திற்கு தகவல் தெரிவிக்க, அவர் விஞ்ஞானி கோபால் என்பவருடன் விரைந்து வந்திருக்கிறார். அவர் தலித் மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், பாரதி கண்ணனும் ஆறுமுகமும் பைக்கில் வந்து இறங்கிய வேகத்தில்-பாரதி கண்ணன் கடுமையான வார்த்தைகளால் திட்டியபடி கத்தியோடு பாய்ந்து ஓடி வந்திருக்கிறார்.

தலித் மாணவர்கள் சுதாரித்து சிதறி ஓடுவதற்குள் சித்திரைச் செல்வன் என்ற நான்காம் ஆண்டு மாணவரின் காதிலும், தலையிலும் வெட்டு விழுந்தது. “ஒங்களக் கொல்லாம விடமாட்டேன்டா'' என்று பாரதி கண்ணன் மிக மூர்க்கமாக ஓடி வந்ததைப் பார்த்து தலித் மாணவர்கள் பின் வாங்கியதால், அது அவருக்கு இன்னும் கூடுதல் வெறியை ஊட்டியது. அய்ம்பதுக்கும் மேற்பட்டோர் திரண்டிருக்கிறார்கள். பிடிபட்டால் என்னாவோம் என்று யோசிக்க முடியாத அளவுக்கு வன்முறை வெறி அவர் மூளையை மழுங்கடித்திருந்தது.

திரைப்படங்களில் வரும் கதாநாயகனைப் போல தனியாளாக அத்தனை பேரையும் அடித்து நொறுக்கிவிடலாம் என்ற கணிப்பு, அடுத்த சில நிமிடங்களிலேயே பொய்த்தது. தலித் மாணவர்கள் கும்பலாகத் தாக்கியதில் பாரதி கண்ணனின் கத்தி கீழே விழுந்தது. கல்லூரியின் நுழைவாயிலருகே அவர் வந்துவிட்ட போதும், தப்பித்துச் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருந்த நிலையிலும் அவர் ‘வாங்கடா வாங்கடா' என்று வெறியோடு கத்திக் கொண்டிருந்தார். பாரதி கண்ணனோடு வந்த ஆறுமுகத்தையும், தேர்வு எழுத வந்திருந்த அய்யாத்துரையையும் (ஏற்கனவே தலித் மாணவர்களைத் தாக்கியவர்) தலித் மாணவர்கள் அடித்துத் துவைத்தனர். பாரதி கண்ணனும் ஆறுமுகமும் செயலிழந்து கீழே கிடந்த நிலையிலும், அவர்களை தலித் மாணவர்கள் தொடர்ந்து தாக்கினர். பாரதி கண்ணன் கத்தியோடு பாய்ந்து வந்த போது, அவர் கண்களிலும் உடலசைவிலும் இருந்த வெறி, அதன்பின் முற்றிலுமாக தலித் மாணவர்களிடம் இடம் மாறியது.

கல்லூரியின் வாசலில் நின்றிருந்த காவலர்கள், எந்த சலனமும் இல்லாமல் ஏதோ திரைப்படக் காட்சியைப் பார்ப்பது போல வேடிக்கை பார்த்தது, மன்னிக்க முடியாத குற்றம். அவர்கள் உள்ளே நுழைந்து மிகச் சிறிய அளவிலான தடியடி நடத்தியிருந்தால் கூட, இத்தகைய கொடுமையான காட்சிகளை சமூகம் பார்க்காமல் தப்பித்திருக்கும். 2001இல் காவல் துறை இதே சட்டக் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்தபோது அவ்வாறு நுழையலாமா என்று ஒரு வினா எழுப்பப்பட்டது. இதற்கான பதில் நீதிபதி பக்தவச்சலம் கமிஷன் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பான, “சட்ட விரோத கும்பலை கலைப்பதற்காக காவல் துறையினர் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிற அதிகாரத்தைப் பயன்படுத்துகிறபோது-அவர்கள் கல்லூரியின் முதல்வர் அல்லது பள்ளியின் தலைமையாசிரியர் போன்ற கல்வி நிறுவனங்களின் தலைமையிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை'' (கேரள சட்ட அறிக்கை 1971; பக்கம்: 376) என்பதை மேற்கோள் காட்டியே காவல் துறையினர் மீது தவறு இல்லை என்று ஆணையம் அவர்களை விடுவித்தது. அதனால் கல்லூரி முதல்வரின் அனுமதிக்காகக் காத்திருந்தோம் என்ற காவல் துறையின் பதிலில் துளியும் நியாயமில்லை. அதோடு கல்லூரி முதல்வர் எழுத்துப்பூர்வமான புகாரை அளித்ததாகக் கூறுகிறபோது, காவல் துறை அதை மறுப்பதன் பின்னணி புரியவில்லை.

காவல் துறைக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது வெறுப்புணர்ச்சி எப்போதுமே இருக்கிறது என்பதைப் பல மாணவர்களும் வழக்குரைஞர்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் உறுதிப்படுத்துகின்றனர். அதனால் மாணவர்களை தாக்குவதற்கு கிடைத்த வாய்ப்பை அவர்கள் நழுவவிடுவார்களா என்பது அய்யமே! வன்முறையை முதலில் தொடங்கியவர்கள் யார் என்று ஆளாளுக்குப் பட்டிமன்றம் நடத்துகிறார்கள். பாரதி கண்ணன் கத்தியோடு பாய்ந்ததாலேயே தலித் மாணவர்கள் அவரை திருப்பித் தாக்கினார்கள் என்று ஒருசாரார் நியாயப்படுத்த முயல்கிறார்கள். கத்தியோடு பாய்ந்த பாரதி கண்ணன் "இனச் சிங்க'மாக மற்றொரு சாரரால் சித்தரிக்கப்படுகிறார். மனிதரை மனிதர் தாக்கும் உரிமை மீறலை யார் யாருக்கு இழைத்தாலும் அது குற்றமே. இன்று இந்த வன்முறையை பார்த்துக் கொண்டிருக்கும் முதலாமாண்டு மாணவர்கள், சீனியர்களாகும் போது பதில் சொல்லக் காத்திருப்பார்கள். அதுவரை வன்மம் அவர்கள் மனதில் ஊறிக் கொண்டிருக்கும். வெறும் பதிலடி கொடுப்பதற்கு மட்டுமே வன்முறை உதவும். அது பிரச்சனைக்கான உண்மையான தீர்வை எப்போதுமே அளிப்பதில்லை.

வெறும் வன்முறையால் ஆக்கப்பூர்வமாக ஏதாவது விளைந்ததா என்று பார்த்தால், உலக அளவில் கூட நமக்கு எடுத்துக்காட்டுகள் இல்லை. இந்த சமூகமும் மக்களும் பிளவுபட்டிருப்பதைத் தான் அரசியல்வாதிகளும் ஆதிக்கவாதிகளும் விரும்புகின்றனர். இதுபோன்ற வன்முறைகள் மூலம் நாம் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டிக் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற வன்முறைகள் நிகழும் போதெல்லாம், எங்கே போகிறது மாணவர் சமுதாயம் என்று எல்லோருமே கேள்வி எழுப்புகிறார்கள். ஓர் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சமுதாயம் எங்கே இழுத்துச் செல்கிறதோ, அங்கேதான் மாணவர்களும் சென்று சேர்கிறார்கள்.

இந்த பிரச்சனை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரிக்கு மட்டும் உரித்ததல்ல. திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள இரண்டு ஆண்கள் கல்லூரிகளுக்கிடையே இதை விட மோசமான வன்முறைத் தாக்குதல்கள் அடிக்கடி நடந்தேறுகின்றன. சென்னையில் சில ஆண்கள் கல்லூரிகளுக்கிடையே தேங்கிக்கிடக்கும் வன்மம் ஊரறிந்ததே! அவ்வளவு ஏன் சட்டக் கல்லூரி மோதலைத் தொடர்ந்து, கொடூர நோய் கிருமியை விடவும் வேகமாக வன்முறை பரவி, தமிழகத்தின் பல சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். மாணவர்களிடம் சாதிய உணர்வும், கும்பல் மனப்பான்மையும் மேலோங்கி இருப்பதற்கு இந்த சாதிய சமூகமும், கும்பல் கலாச்சாரத்தை மட்டுமே நம்பி ஆட்சி நடத்தும் அரசியல்வாதிகளுமே முக்கியக் காரணம்.

சாதிய மேலாதிக்கம் எங்குதான் இல்லை! மிக அண்மையில் உத்தப்புரத்தில் தலித் மக்கள் ஆதிக்க சாதியினராலும் காவல் துறையாலும் தாக்குதலுக்கு உள்ளானார்கள். எந்த அரசியல் கட்சியும் வாய் திறக்கவில்லை. சட்டக் கல்லூரி மாணவர்களின் மோதலைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகக் கூறும் எல்லோரும்-தாங்கள் சாதியற்றவர்கள் தானா என்ற கேள்வியை எழுப்பிப் பாருங்கள். தன் மகன் தாக்கப்பட்டதற்காக கதறி அழும் பெற்றோர், அவர் தாக்குதலில் ஈடுபட்டதற்காக வருத்தப்படவும், அவமானப்படவும் வேண்டும். தேவர் மாணவர் தாக்கப்பட்டதை அரசியல் கட்சிகள் வெளிப்படையாகவே கண்டிக்கின்றன; குறிப்பாக அ.தி.மு.க. பாதிக்கப்பட்ட மாணவர்களைப் பார்க்கப் போகும் அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும்-பாரதி கண்ணனையும், ஆறுமுகத்தையும், அய்யாத் துரையையும் நலன் விசாரித்துவிட்டு சித்திரைச் செல்வனை புறக்கணிக்கிறார்கள். பாரதி கண்ணனுக்கு இப்போதே அ.தி.மு.க.வில் பதவி தயாராகி இருக்கும். எதிர்கால அரசியல்வாதிகளை இவர்களே வளர்த்தெடுக்கிறார்கள். பாரதி கண்ணன் தன் சமூக மாணவர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக எல்லோராலும் நிறுத்தப்படுகிறார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, கல்வி நிறுவனங்கள் சாதியப் பாகுபாட்டின் மய்யங்களாகவே இருக்கின்றன. நம் கற்பனைக்கும் எட்டாத அனைத்து வசதிகளும் கொண்ட கல்வி நிறுவனங்களில் பார்ப்பனர்களும்; எந்த அடிப்படை வசதியுமற்ற பள்ளி / கல்லூரிகளில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோரும் நிறைந்திருக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் 55 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. ஆசிரியர் பற்றாக்குறையால் பெரும்பாலும் வகுப்பு நேரத்தில் மாணவர்கள் சும்மாவே இருக்கிறார்கள். வழி நடத்த வேண்டாம்; பாடம் நடத்தக் கூட ஆசிரியர் இல்லாத நிலையில் மாணவர்கள் கட்டுப்பாடற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். சாதி சங்கத்தினரும் அரசியல்வாதிகளும் ரவுடிகளும் மாணவர்களைத் தேடி வந்து ஆக்கிரமிக்கிறார்கள். விடுதியில் 24 மணி நேரமும் இருக்கிற மாதிரியான காப்பாளர் இல்லை. வகுப்பெடுக்கும் பேராசிரியர் தான் காப்பாளராக நியமிக்கப்படுகிறார். இது குறித்து பக்தவச்சலம் ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவே அரசுக்கு நேரமில்லை. அதற்குள் அடுத்த வன்முறை நடந்து ஆணையம் நியமிக்கப்பட்டுவிட்டது. விசாரணையும் அறிக்கையுமே பாக்கி.

நாமெல்லாரும் நிகழ்வுகளுக்கு எதிராக மட்டுமே குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இங்கு நிலவும் சாதியக் கட்டமைப்பைப் பற்றிய புரிதல் எவருக்கும் இல்லை. டாக்டர் அம்பேத்கர் என்ற மாமனிதர் இந்த சமூகத்திற்கு ஆற்றியிருக்கும் பெருந்தொண்டைப் புரிந்து கொண்டவர்களும்-அதை எடுத்துச் சொல்கிறவர்களும் எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருக்கிறார்கள். அவர் தலித் மக்களின் தலைவர் என்ற அளவில் சுருக்கப்பட்ட சூழ்ச்சியின் விளைவே குருபூஜையன்று தேவர் மாணவர்கள், ‘அம்பேத்கர் எங்களுக்கு என்ன செய்தார்' என்ற அந்தக் கேள்வி. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர் என்ற விஷயம் கூட தெரியாதவர்கள் இங்கு அதிகம். (சட்டக் கல்லூரி வன்முறை தொடர்பான உண்மையறியும் குழு ஒன்றின் பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழகத்தின் முன்னணி நாளிதழின் செய்தியாளர், அம்பேத்கர் என்பது ஜாதி பேர். அவர் பேரை எதுக்கு கல்லூரிக்கு வெச்சிருக்காங்க. பேரை மாத்திட்டா பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்றார், துளியும் கூச்சமின்றி).

இன்று பிற்படுத்தப்பட்டோர் அனுபவிக்கும் சட்ட ரீதியான எல்லா உரிமைகளையும் உருவாக்கிக் கொடுத்தவர் அம்பேத்கர் என்ற உண்மையை எடுத்துச் சொல்ல ஆளில்லை. அம்பேத்கரை ஏற்றுக் கொள்ள பிற்படுத்தப்பட்டோர் எப்படி தயாராக இல்லையோ, அதே போல அவரை எல்லோருக்குமானவராக விட்டுக் கொடுக்க தலித் மக்களும் தயாராக இல்லை என்றே தோன்றுகிறது. இந்த சமூகத்தில் இருந்து சாதி வேரோடு அழிய வேண்டுமானால், அம்பேத்கரின் கருத்துக்களை முழு வீச்சில் பரப்பியாக வேண்டும். இந்த விஷயத்திலும் பார்ப்பனர்களின் சாமர்த்தியத்தை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஆகாத போகாத ஆட்களையெல்லாம் அவர்கள் 'பெரிய தலைவர்'களாக, ‘தியாகி'களாக எல்லோருக்குமானவர்களாக எப்படித் தூக்கிப் பிடிக்கிறார்கள்!

சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கரின் பெயர் சூட்டப்பட்டிருப்பதையே எதிர்க்கும் இந்த சமூகம், எவ்வளவு கீழ்த்தரமான சாதிய மேலாதிக்கத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கான எச்சரிக்கை இது என்பதை உணர்ந்து-அரசும், சமூக ஆர்வலர்களும், அம்பேத்கரின் கருத்துக்களை இந்த சமூகத்துக்கு கொண்டு சேர்ப்பதில் ஒன்றிணைய வேண்டும். தலித் மாணவர்களுக்கு எதிராக ஊடகங்கள், செய்தியையும் காட்சிகளையும் திரித்தும் மறைத்தும் வெளியிடுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் பற்றிய செய்திகளை அவை முன்னுரிமை கொடுத்து வெளியிடுவதில்லை. அப்படியே வெளியிட்டாலும் திரித்து எழுதி வெளியிடுவது என்பதே ஊடகங்களின் கொள்கையாக எப்போதும் இருக்கிறது. ஆகவே இது புதிதல்ல. இன்று செய்தி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் பெருமளவிலான வியாபார மய்யமாக மாறிவிட்டன. பரபரப்பான செய்திகள் மட்டுமே அவர்களுக்குத் தீனி. எதைக் காட்டுவது, எதை மறைப்பது, எதை எழுதுவது, எதைப் புறக்கணிப்பது என்ற அடிப்படையான அறிவும், பத்திரிகை அறமும் இதனால் மீறப்படுகிறது.

பாரதி கண்ணன் கத்தியோடு பாய்ந்து வந்ததை இரண்டாம் நாளில் இருந்து தொலைக்காட்சிகள் காட்டவில்லை. தலித் மாணவர்கள் பாரதி கண்ணனையும், ஆறுமுகத்தையும் தடிகளால் அடித்ததை மட்டுமே காட்டினார்கள். தேவர் மாணவரையோ, தலித்மாணவரையோ ஒரு யானை தூக்கிப் போட்டு மிதித்திருந்தாலும்-அதை அவர்கள் நாள் முழுவதும் காட்டிக் கொண்டு தான் இருந்திருப்பார்கள். 24 மணி நேரமும் திருப்பிய அத்தனை சேனல்களிலும் கொடுமையான இந்த வன்முறைக் காட்சிகளை எந்தத் தணிக்கையுமின்றி சேனல்கள் ஒளிபரப்பின. இது, குழந்தைகள் மனநிலையை பாதிக்காதா? மாணவர்களிடம் மேலும் வன்முறை உணர்வைத் தூண்டாதா என்று அக்கறைப்படவெல்லாம் அவர்களுக்கு ஏது நேரம்? ஊடகங்களின் இந்த பொறுப்பற்றத்தனத்தை எதிர்க்காமல், பாரதி கண்ணன் கத்தியோடு பாய்ந்ததையும் காட்ட வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோம்... நம் பலவீனம் அதுதான்... அதைத் தான் ஊடகங்கள் விற்றுப் பிழைக்கின்றன.

தன் சாதியை உயர்த்திப் பிடிக்கவும், கொண்டாடவும், வளர்த்தெடுக்கவுமே எல்லோரும் விழைகிறார்கள். உன் சாதிக்கு என் சாதி தாழ்ந்ததில்லை என்று நிரூபிக்கவே உழைக்கிறார்கள். மாறாக, சாதி என்ற ஒன்று பார்ப்பனர்களைத் தவிர மற்ற எல்லோரையுமே இழிவான நிலையில்தான் வைத்திருக்கிறது என்று புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். எல்லா சாதிகளையுமே ஆதிக்க சாதி ஆக்கிவிடும் முயற்சியும் போராட்டமுமே இங்கு நடந்து கொண்டிருக்கிறது. சாதியை அழிக்கவும் சாதியற்றவர்களாகவும் யாருக்கும் துணிவில்லை. சாதி தரும் கும்பல் மனப்பான்மையை ஒற்றுமையுணர்வு என்று நம்பி, இந்த சமூகம் ஏமாந்து கொண்டிருக்கிறது. ஒற்றுமையுணர்வு என்பது மதம், இனம், மொழி, சாதி, பாலினம் கடந்த ஒன்றாகவே இருக்க முடியும். அது இல்லாமல் மதம் தேடி, சாதி தேடி கூட்டு வைத்துக் கொள்வதும், கும்பல் சேர்வதும் நிரந்தரப் பிரிவினையை உண்டாக்கி, மனிதரை மனிதர் உயிரெடுக்கும் அவலம் தொடர் வதற்கு வழி வகுக்கும்.

சட்டக்கல்லூரி மாணவர்களின் சாதி வன்முறைச் செயலைக் கண்டு கவலைப்பட்ட அரசுக்கும், அதிர்ச்சியுற்ற பொது மக்களுக்கும், கண்டித்த சமூக அமைப்புகளுக்கும் என்ன தகுதி இருக்கிறது என்று புரியவில்லை. சாதிக்கும் வன்முறைக்கும் எதிராக ஒரு நிலையான, வலுவான போராட்டத்தை எங்காவது யாராவது நடத்திக் கொண்டிருக்கிறார்களா? அரசுக்கு ஏதாவது உறுதியான செயல் குறிப்பு இருக்கிறதா? பொது மக்கள் யாரும் தங்கள் பிள்ளைகளுக்கு சாதி உணர்வை ஊட்டுவதில்லையா? சமூக அமைப்புகள் இது போன்ற வன்முறை நிகழ்வுகள் நடக்கும் போது மட்டுமல்லாமல் சாதியை அழித்தொழிக்கவும், மக்களை சமத்துவமிக்கவர்களாக மாற்றவும்-தங்கள் அன்றாட அட்டவணைகளில் ஏதாவது செயல் திட்டம் வைத்திருக்கிறார்களா? பிறகெப்படி இது மாதிரியான வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியும்!

எந்த சமூகப் புரட்சியும் வன்முறையால் மலர்ந்ததில்லை. தனி மனித சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும வன்முறை ஒரு போதும் மதிப்பதில்லை. வன்முறை என்ற ஆயுதத்தை கையில் எடுப்பவர் யாராக இருந்தாலும், அது அடக்கப்பட்டவர்களாகவே இருந்தாலும்-அவர்கள் மனித இனத்துக்கு மிகப் பெரிய துரோகத்தையும் சமூக விடுதலையின் முக்கியக் கூறான சமத்துவத்திற்கு தீராத பங்கத்தையும் உண்டாக்குகிறார்கள். மிக முக்கியமாக, இந்த சமூகத்தின் தற்போதைய தேவை சிந்தனை மாற்றம். அதை நிச்சயம் வன்முறையால் உருவாக்க முடியாது.


Pin It