கூனிக் குறுகிய கருத்த உடம்பில்
புதைந்து போன புழுதியை
சேறாக்கி பாயும் விய‌ர்வை,
அடங்க மறுத்து புடைத்த நரம்புகள்
இரத்தம் சிதறி வெடிக்கும்,
இமைத்திரை கிழித்துப் பிதுங்கும்
கலங்கிய கருமுட்டை விழிகள்,
மலக்குடல் வெடித்து
இரத்த சாயம் பூசும்
வெறி பிடித்த மூர்க்கமான முனகல்கள்,
பாரம் தாங்காமல் புதையுண்டு போகும்
தேய்ந்து போன என் கால்கள்,
சுண்டிப் போன இரத்த ஓட்டம்
அதனால் காயத்தில் ஒழுகும் வெற்று வலி!
உயிரின் விளிம்பிலிருந்து
திரட்டுகிறேன் ஒட்டு மொத்த சக்தியையும்
ஆனாலும்,
பற்றி எரியும் எண்ணெய்க் கிண‌ற்றில்
விழும் முன் மறையும் ஒரு துளி நீர்
என் காணாமல் போகும் உழைப்பு..
முன்பை விட இன்னும் பல மடங்கு
என்னை அழித்து திரட்டுகிறேன்
என்னிலிருந்து வரும் மொத்த உழைப்பும்
என் வாழ்நாள் கன‌விற்காக...
மண்டை மண்ணுக்குள் போகும் வரையும் தொடரும்
“சோறு தின்று உயிர் வாழும்" என் இராட்சச கன‌வு.
ஆகட்டும் பார்கலாம் என் சோற்றுக் கன‌வோடு,
என் நாட்டின் வல்லரசுக் கன‌வினையும்...

- இராசகம்பீரத்தான் மால்கம் X

Pin It