இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சிகள்தான் போட்டியிட வேண்டுமென்று ஒரு சமூக நல ஆர்வலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.அதற்குக் காரணமாக அவர் மாநிலக் கட்சிகள் பாராளுமன்றத்தை நடைபெறவிடாமல் தடுப்பதாகக் குற்றம் சாட்டுகின்றார். இது மேம்போக்காகப் பார்த்தோமேயானால் மிகவும் சிறந்த முயற்சியாகத் தோன்றும். நமது பத்திரிக்கைகளும் அதை ஒரு சிறந்த முயற்சியாகத் தாங்கிப் பிடிக்க எல்லாவித முயற்சிகளையும் மேற்கொள்ளும். ஆனால் உண்மையில் என்ன நடக்கின்றது.
நமது தேர்தல் முறைகளில் மாற்றம் வேண்டும் நபர்கள் பலவித கட்சிகள் சார்ந்த / கட்சி சாராத பலதரப்பட்ட வேட்பாளர்களாகப் போட்டியிடும் காலத்திலேயே தங்களுக்கு யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற 49(o) படிவம் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் சூழ்நிலையில் இரு கட்சிகள் மட்டும் போட்டியிடவேண்டும் என்ற வாதம் எப்படிச் சரியானதாயிருக்க முடியும்?
மக்கள் பிரதிநிதிகள்தான் பாராளுமன்றத்தின் நோக்கமே தவிர, அத்தகையவர்களை அவர்களின் செயல்பாடுகள், கொள்கைகளைக் கொண்டு கட்சி சார்ந்தவர்களையோ, கட்சி சாராதவர்களையோ தேர்ந்தெடுப்பதில் என்ன தவறு??
மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் பின்னணியையும், மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியின் காரணங்களையும் புரியாமல் எழுப்பப்படும் வாதம்தான் இந்த இரு கட்சி ஆட்சிமுறை. மாநிலக் கட்சிகள் தங்கள் பகுதி மக்களுக்காக மத்தியில் அழுத்தம் தரக் கூடாதென்றால் மக்களாட்சியெனும் தத்துவமே தேவையற்றதாகி விடாதா?
சென்ற அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது அதிகமான நாட்கள் பாராளுமன்றத்தை முடக்கியது பாரதீய ஜனதாக் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும்தான். குறிப்பாக பாரதீய ஜனதாதான். அதனால் பாரதீய ஜனதாக் கட்சியை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று ஆணையிட முடியுமா? அல்லது நீதியாணைதான் பெற முடியுமா??
ஒரு புறம் அதிகாரப் பகிர்வு என்று கூறி மாநில அரசின் அதிகாரங்களை மாநகராட்சி,நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டி பரவலாக்குவதும் மற்றொருபுரம் மத்திய அரசு நினைத்தால் எதையும் மாற்ற இயலுமாறு அதிகார குவிப்புக்கு வித்திடுவதாகவும்தான் இத்தகைய முயற்சிகள் அமையும்.
இன்று உலக மயமாக்கலில் நுகர்வுக் கலாச்சாரத்தில் பலவிதங்களிலும் போட்டிகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாடு உள்ளபோது பாராளுமன்றத் தேர்தலில் மட்டும் பலமுனைப் போட்டிகள் கூடாது என்பது என்ன நியாயம்??
மற்றுமொரு முறையில் சிந்தித்துப் பார்த்தோமேயானால் இவர் இந்த முறையை ஏன் பாராளுமன்றத்திற்கு மட்டும் தேவை என நினைக்கின்றார். மிகவும் நேர்மையான முறையில் சிந்த்துப் பார்த்தோமேயானால் ஒரு காலத்தில் கேரள சட்டமன்றப் பெரும்பான்மையானது சில சுயேட்சை அல்லது சிறு கட்சிகளின் ஓரிரு சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டில் ஊசலாடியது. அத்தகைய நிலையானது நமது தேர்ந்த வாக்காளர்களால்தான் நிராகரிக்கப்பட்டதேயன்றி எந்தவொரு நீதிமன்றத் தலையீடுகளாலோ அல்லது சட்டத்தின் மூலமாகவோ அல்ல என்பதை நாம் இன்று நினைத்துப் பார்த்திட வேண்டும்.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவமானது அந்தக் கொள்கையில் பிடிப்புள்ள கட்சிகளால் நிறைவேற்றப்பட்டதோ, இல்லையோ இன்று நமது மக்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அப்படியே அது தேவையில்லையென்றாலும் அதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டுமேயன்றி ஒரு சில நீதிபதிகள் கோடிக்கணக்கான மக்களின் மீது இந்த இருவரில் ஒருவருக்குத்தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என உத்தரவிடுவதாக அமையக் கூடாது.
தத்தெடுக்க வந்த நபரிடம் தனது குழந்தைகளிலேயே நல்ல குழந்தை, எதிர் வீட்டுக் கூரையில் தீயிட்டுக் கொண்டிருக்கும் குழந்தைதான் என்பது போல, இன்று சிறந்த கட்சி என்பது (மாநிலக் கட்சியோ, தேசியக் கட்சியோ) அந்தக் குழந்தை போன்றுதான் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் அந்தக் குழந்தையைப் போட்டியில் இருந்து நீக்கி விட்டால் அதை விடவும் அபாயகரமான கட்ச்சிக்குத்தான் நாம் வாக்களிக்க நேரிடும்.
மக்களுக்கான சட்டங்கள், மக்களின் ஆட்சி என்றால் அது மக்களின் நியாயமான ஆசைகளை பூர்த்தி செய்வதாய் மக்கள் பிரச்சனைகளில் ஈடுபாடுடையதாய், மக்களுடன் தொடர்பு கொள்ளக் கூடியதாய் இருக்க வேண்டும். படிக்காதவனின் பிரச்சனைகளை படிக்காதவன் முழுமையாய்த் தெரிந்து கொள்ள முடியும், கண்ணில்லாதவன் துயரை என்னதான் நாம் உணர முடிந்தாலும் முழுமை என்பது அவன் உணர்வதுதான், அது குறித்து அவனை விடக் கருத்துச் சொல்ல கண்ணற்றவர் துயரை மிக உயரிய அளவில் நேசிக்கக் கூடிய மனிதரன்றி யாராலும் இயலாது. அத்தகைய பிறர் துயரை தன் துயராய் எண்ணி உணர்வோர் ஒரு சிலரே!! எனவே அவரவர் துயரை அவரவர், அவர் அருகாமையிலுள்ளோர்தான் கூறவோ உணரவோ இயலும். அந்த வகையில் பார்த்தோமேயானால் மாநில மக்களின் அருகாமையில் மாநிலக் கட்சிகள் இருந்ததாலேயே மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கின்றனர். அவர்களை விட்டு வெகு தூரம் விலகிச் சென்று விட்ட தேசியக் கட்சிகள் இந்த மாநிலக் கட்சிகளின் துணையின்றி எப்படி வாக்கு வாங்க முடியும். அப்படியொரு சூழ் நிலை உருவாகுமேயானல் அது வேறு வழியின்றி வற்புறுத்திப் பெறும் வாக்காகவே அமையும். மக்களின் தேவைகளை உணராத மத்திய அரசு எந்த வகையில் இந்த மக்களுக்கு சேவை செய்ய இயலும்.
அப்படியென்றால் இன்னொன்றையும் நாம் தெளிவு படுத்துக் கொள்ள வேண்டும், மாநில அதிகாரங்களை மத்திய அரசு பாதிக்காமல் இருக்க வேண்டும்,அந்தந்த மாநில மக்களுக்கான நலத் திட்டங்கள் போன்றவற்றை அந்தந்த மாநிலத்திடமே விட்டு விட வேண்டும். மாநில நீதிமன்றங்களை உச்ச நீதிமன்றங்களாக்கிட வேண்டும், தலைமை நீதிபதியென்பவர் அந்தந்த மாநிலம் நியமிப்பவராகத்தானே இருக்க இயலும்.எல்லாவற்றுக்கும் அமெரிக்காவை எடுத்துக் காட்டும் நம்மவர்கள் அங்கு இருக்கும் அதிகாரப் பகிர்வுகள் பற்றியோ, சட்டபூர்வமாக கருப்பின மக்களுக்கான இட ஒதுக்கீடு பற்றியோ ஏன் அதிகம் எழுதுவதில்லை.
மேலும் நமது அரசமைப்புச் சட்டத்தில் உள்ளது போல் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் இரு அரசுகளுக்கிடையேயான அதிகாரப் பகிர்வு என்பது பல்வேறு விதமான நடைமுறைச் சிக்கல்களில் செல்லும் அபாயமும் உள்ளது. இரு தேசீயக் கட்சிகளும் இணைந்து தங்கள் அதிகாரத்தை அனைத்து மாநில அரசின் மீதும் செலுத்தக் கூடிய அபாயமும் அதைப் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெகு எளிதாக நிறைவேற்றி விட்டு, மாநிலங்களில் தங்கள் கட்சி ஆட்சியதிகாரம் பெற்றுள்ள சில மாநில அரசுகளின் மீது தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறைவேற்ற முயற்சி செய்யாமலிருக்கும் என்பது என்ன நிச்சயம்?
இன்று வரையறை செய்யப்பட்ட கல்வி, விவசாயம் போன்றவற்றிலேயே கருத்து முரண்பாடுகள் வரும் போதில், இத்தகைய அதிகாரக் குவிப்பு என்ன நல்லதைச் செய்து விட முடியும்? பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை ஆளும் காங்கிரஸ் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியும் ஒன்று கூடி நிறைவேற்ற முற்படுவதைப் பார்த்தோமேயானால் இந்த நடைமுறைச் சிக்கல் எளிதில் புரிய வரும். இதை சில பத்திரிக்கைகள் அந்தக் கட்சிகள் பெண்கள் மசோதாவில் அவர்களுக்குள்ள பிடிப்பாகக் கருதுவதுதான் இன்னும் கொடுமை.(தமிழக அரசியல் - 12.03.2010). அதாவது ஜாதிகளாலேயே வேட்பாளர்கள் நிர்ணயிக்கப்படுவதாகவும் அதனால் பெண்கள் இட ஒதுக்கீட்டின்படியும் உள் ஒதுக்கீடு இல்லாத நிலையிலும் கூட எப்படியும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களே அதிகமாக இடம் பெறுவர் என கூறுகின்றனர்.கட்சிக் கொறடா உத்தரவுகளால் மனசாட்சியை அடகு வைத்துச் செயல்படும் நமது பாராளுமன்ற உறுப்பினர்களை இன்றைய பல கட்சி ஆட்சி முறைகளிலேயே நம்ப முடியாத நிலையில் இருகட்சி ஆட்சியில் எவ்விதம் முடியும்?
நமது ஜனநாயகம் பற்றித் தெரிந்தும் இவர்கள் இதைக் கூறுவதுதான் வேடிக்கை. கட்சி அரசியலில் கட்சித் தலைவர்கள் பார்த்து நிறுத்தும் எந்த வேட்பாளரும் வெற்றி பெறும் சூழலில், நமது யானை ராஜேந்திரன் அவர்கள் கூறுவது போல் காங்கிரசும் பாரதீய ஜனதாவும் மட்டும் போட்டியிடும் பட்சத்தில் என்ன நடக்கும்? உலகிற்கு நமது கொடையாகக் கொடுத்த வர்ணப் பிரிவுகளை ஒழிக்க எந்த நடவடிக்கையும் இதுவரையில் தெளிவாக எடுக்கப்படாத சூழ்நிலையில் சாதி வாரிக் கணக்கெடுப்புக்கு குரல் கொடுக்க மறுப்பதும் பின் அதையே இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பயன்படுத்துவதும் இந்த இரு கட்சிகளுக்கும் இன்றுவரை விளங்காததாயிருப்பதும், இன்றும் நீதியரசர்களுக்குக் கூட விளங்காமல் கிடக்கும் நிலையில் இது போன்ற இருகட்சி ஆட்சிமுறை யாருக்கு நலன் பயக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
மக்களின் உணர்வுகளையும், தேவைகளையும் அறியாத தேசியக் கட்சிகள், சொல்லப்போனால் இந்த மக்களின் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட வரலாறு அறியாத தேசியக் கட்சிகள் அவர்களின் அருகாமையில் வர இயலாதபோது இந்த மண்ணின் மக்களுக்கான கட்சிகளாய் அவை மாற இயலாதபோது, மக்களை அந்தக் கட்சிகளுக்குத்தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என நிர்ப்பந்திப்பது சர்வாதிகாரமன்றி வேறு அல்ல.
இறுதியாக எந்த மக்களாட்சியும், மக்களுக்காக , மக்களால், மக்களைக் கொண்டு அமைக்கப்படுவதாக இருக்கவேண்டுமேயன்றி நீதியாணைகளால் அமைக்க முடியாது. அதை அமைக்க முற்படுபவர்கள் மக்களாட்சியில் நம்பிக்கையற்ற பெரும்பான்மை மக்களின் மனதறியாதவர்களாகத்தான் இருப்பர்.
- ரெ.கா.பாலமுருகன் (