1955ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் வரதராஜூலு நாயுடு பிறந்த நாள் விழாவில் பெரியாரும் முதலமைச்சர் காமராசரும் ஒரே மேடையில் பேசினார்கள். தமிழர் சமுதாயத்தின் உரிமைக்கும் விடுதலைக்கும் தன் ‘சுயத்தை’யே இழந்து உழைத்தவர் பெரியார் என்பதை வெளிப்படுத்தும் ஆழமான உரையை காமராசர் பிறந்த நாளையொட்டி ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது.

“தலைவர் காமராசர் என்னைப் பற்றிக் குறிப்பிட்டார் அதற்கு எனது நன்றி. திரு. காமராசரிடம் நான் அன்பு கொண்டு, என்னால் ஆன வழிகளில் ஆதரவு கொடுத்து வருகிறேன்.

காரணம், அவர் சில விஷயங்களில் தமிழன் என்கிற உணர்ச்சியோடு ஆட்சி நடத்துகின்றார். அதனால் அவருக்கு, பொறாமை காரணமாகக் காங்கிரஸ் வட்டாரத்திலும், வகுப்பு காரணமாக இரண்டொரு வகுப்பாரிடையிலும் சில எதிரிகள் இருந்து கொண்டு அவருக்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள். அத்தொல்லைகள் வெற்றி பெற்றால் தமிழர்களுடைய நிலைமை மோசமாகிவிடும்.

periyar with kamarajar

உத்தியோகத் துறையில் தமிழர்களுக்கு மிக மிக கெடுதிகள் ஏற்படலாம் என எண்ணுகிறேன். ஆதலாலேயே அவரது இன உணர்ச்சிக்கு எதிராக இருப்பவர்கள் வெற்றி பெறாமல் இருப்பதற்காக, என்னாலானதைச் செய்து வருகிறேன். அந்த யோசனை அற்றவர்களுக்கு நான் காமராசரை ஆதரித்ததாக ஆகி விடுகிறது. காமராசர் தமிழ் மக்களிடம் காட்டும் நேர்மையானது, அவர் எனக்கு ஏதோ ஆதரவு காட்டுவதாக ஆகிவிடுகிறது.

நான் அரசியல் தொண்டனல்ல, சமுதாய நலத் தொண்டனாவேன். அதிலும் பெரிதும் தமிழ் மக்கள் நலனுக்கென்றே பாடுபடுபவன். அதை முன்னிட்டு அரசியல் என்பதை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் எதிர்க்கவும் விட்டுக் கொடுக்கவும் துணிவேன். காமராசருக்கும் எனக்கும் அரசியல் கருத்துகளில் எவ்வளவு பேதம் காணப்பட்டாலும், தமிழர் நலத்தை முன்னிட்டு நானாகவே முன்னின்று அவரை ஆதரிக்கும் அவசியம் ஏற்பட்டிருக்கிறதே ஒழிய மற்றபடி எனது சுயநலத்தை முன்னிட்டோ, அல்லது அவர் விரும்புகிறார் என்று கருதியோ அல்ல. அவரும் என்னுடைய ஆதரவு தேவை என்பதாக என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டதும் கிடையாது.

குடியாத்தம் சட்டசபை தேர்தலில் நான் அவரை ஆதரித்தேன் என்றால், அப்பொழுதும் அவரிடம் சொல்லி விட்டு அவரை ஆதரிக்கவில்லை. அவரும் தன்னை ஆதரிக்க வேண்டும் என்று என்னைக் கேட்கவும் இல்லை.

திடீரென்று எனக்குத் தோன்றிய எண்ணத்தின் பேரில்தான் நான் வலியச் சென்று அவரை ஆதரிக்கும்படியாகியது. நானும் அந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தவனுமல்ல. அவர் விரும்புவார் என்று கருதினவனுமல்ல.

ஒரு நாள் நான் ஆத்தூர் பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தேன். அந்தச் சமயம் ஒரு தோழர் என்னிடம் ஒரு பத்திரிகையைக் கொடுத்து ‘முதல் மந்திரி அவர்கள் சட்டசபை தேர்தலுக்குக் குடியாத்தம் தொகுதியில் நிற்பதாக செய்தி வந்துள்ளது’ என்று சொன்னார். நான் அதை வாங்கிப் படித்துப் பார்த்து விட்டு, அதே கூட்டத்திலேயே என்னுடைய எண்ணத்தை வெளியிட்டேன்.

“திரு. காமராசர் அவர்கள் குடியாத்தம் தொகுதியில் தோல்வி அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாகும்” என்பதாக அப்போதே கூறி விட்டேன்.

இதற்கு யாருடைய யோசனையையும் சம்மதத்தையும் நான் கேட்கவில்லை. ஏனெனில், நான் ஜனநாயக ரீதியில் தொண்டாற்றுபவன் என்று சொல்லிக் கொள்பவன் அல்ல. நான், ஜனங்கள் உணராததை, கவலைப்படாததை, மற்ற யாரும் செய்ய முற்படாததை, எடுத்துக் காட்டி உணர்த்தி கவலைப்படும்படி செய்து அவர்களை அவசியமான நேர்வழியில் நடக்கச் செய்ய வேண்டும் என்கிற தன்மையில் தொண்டாற்றுபவன் என்னுடைய கவலையையும் அனுபவத்தையும் கொண்டு, மக்களுடைய இழிவும் குறைபாடுகளும் நீங்க, மக்களுக்கு வழிகாட்டும் பணியை ஆற்றுகிறவனாவேன்.

இந்தப் பணியை ஆற்ற நம்நாட்டில் ஆள் இல்லை. இது பெரும் தொல்லையும் பொறுப்பும் தன்னல மறுப்பும் கொண்ட பணி. ஆதலால் தக்க அறிவும் திறமையும் உள்ளவர்களும்கூட மறைந்து கொண்டும், பொறுப்பைத் தட்டிக் கழித்துக் கொண்டும், பொதுத் தொண்டு என்னும் பேரால் வயிறு வளர்க்கவும் பணம் சேர்க்கவும் பதவியும் பெருமையும் பெறவுமே, பொதுத் தொண்டு வேஷம் போட்டுக் கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள்தான் இலட்சத்தில் 99,999 பேர்களாகத் தமிழர்களில் காணப்படுகிறார்கள்.

இக்காலம் பொதுத் தொண்டில் மிகுதியும் நேர்மையற்றதாகிவிட்ட காலம். மக்கள் தன்மையும் அது போன்றதாகி வருகிறது. இந் நிலையில் ஜனநாயகத் தலைமையும் ஜனநாயக மக்களும் எப்படிப் பயனுள்ளதாக இருக்க முடியும்? ஆனதினால்தான் நான் எனக்கு சரி என்று தோன்றுகிறபடி, மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள் என்றுகூட கவனிக்காமல் மற்றவர்களையெல்லாம் என்னைப் பின்பற்றச் சொல்கிறேன்.

பின்பற்ற இஷ்டம் இல்லாவிட்டால், விலகிக் கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வளவு பெரிய காரியத்திற்கு நான் தகுதியா என்றாலும் எனக்கு இது தவிர வேறு வேலை இல்லாததாலும், வேறு யாரும் இப்பொறுப்பை ஏற்கப் பயப்படுவதாலும் இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளத் துணிந்து முன்வந்துள்ளேன். காமராசர் அவர்களையும் நான் அந்தப்படி கருதுவதால் அவர் போக்குக்கு என்னாலான ஆதரவைத் தருவது அவசியம் என்று கருதுகிறேன். அவருக்கு ஆதரவு தருவது பற்றி நான் வெட்கப்படவில்லை. அவரும் என்னைப் போலவே ஒரு துறவி ஆவார். எனக்காவது மனைவி உண்டு. அவருக்கு அதுவும் இல்லை.

இப்படிப்பட்ட துணிச்சலுக்கு மனைவி, மக்கள், சொந்த வாழ்வு இல்லாமை அவசியமாகும். இப்படிப்பட்டவர்கள் ஏதாவது தவறு செய்தாலும் செய்யலாம். ஆனாலும் தவறுதான் செய்யலாமே ஒழிய புரட்டு மோசம், சுயநலப் பற்று, வேஷம் செய்ய அவசியமுடையவர்களாக மாட்டார்கள். இயற்கையை முன்னிட்டு நான் இப்படிப் பேசுகிறேன்.

நண்பர் இராஜகோபாலாச்சாரி அவர்கள் முதன்மந்திரியாக ஆன பொழுது இப்பொழுது, காமராஜரை ஆதரிப்பது போலவே அவரையும் ஆதரித்தேன். அப்போது அவருடைய விரோதிகள் என்னைக் குறை கூறினார்கள். நான் இலட்சியம் செய்யவில்லை. ஆனால், ஆச்சாரியாருடைய போக்கு நாளுக்கு நாள் எங்களுக்கு மனவேதனையைக் கொடுக்கும் அளவுக்கு வந்தது.

கடைசியில் அவருடைய கட்சி ஒழிந்துதான் ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வரும் அளவுக்கு அவருடைய ஆட்சி எங்களுக்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்தது. எனவே எப்படியோ அவரும் பதவியிலிருந்து விலகினார்.

இதுமட்டுமில்லாமல், திரு. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் முதல் மந்திரியாக இருந்த காலத்தில்கூட, ரெட்டியார் அவர்களின் முதல் மந்திரி பதவி நீடிக்க வேண்டும் என்று பாடுபட்டவன் நான். அவருக்கு என்னால் முடிந்தவரை, அவர் விருப்பமில்லாமல் ஆதரவு கொடுத்தேன். அவர் எங்கள் கழகத் தலைவர்களைப் பல வழிகளில் கொடுமையாக நடத்தினாலும், அவருடைய ஆட்சியில் தமிழர் உணர்ச்சி இருப்பதாகத் தெரிந்ததாலும் எங்களுக்கு அது மனத்திருப்தியைக் கொடுத்ததாலும் தமிழரின் எதிரிகள் அவருக்குத் தொல்லைக் கொடுத்த காலத்தில், அவருக்கு ஆதரவு கொடுக்கும் நிலை ஏற்பட்டது. அதையும் அப்போது சிலர் வெறுத்தனர். பொறாமைக்காரர்களும் சூழ்ச்சிக்காரர்களும் ஏதோ பேசி ரெட்டியாரைக் கவிழ்த்தார்கள்.

என்னைத் தாடி உள்ள ராமசமி என்றும், அவரைத் தாடி இல்லாத கதராடை ராமசாமி என்றும் கூறினார்கள். அன்றியும் நான் ஆதரித்ததாலேயே அவருக்கு இதனால் பல பேருடைய விரோதமும் கிடைக்கும்படி ஆகி விட்டது. அதனாலேயே அவர் என்னுடைய ஆதரவு, பாராட்டுதல், புகழ்ச்சி இவை தனக்கு இல்லாமல் இருந்தால் நல்லது என்றுகூடச் சொன்னார்.

அதாவது அவர், “நாயக்கர் அடிக்கடி என்னைப் புகழ்ந்து பேச வேண்டாம் என்று சொல்லுங்கள். ஏனெனில், அதனால் பல பேர்கள் எனக்கு எதிரிகள் ஆகின்றனர்” என்று நண்பர் திரு.வி.க. அவர்களிடம் கூறி அனுப்பினார்.

அதைப் போன்றே நான் காமராசரை ஆதரிப்பது பற்றி, பலர் பொறாமை கொள்கிறார்கள். அவருடைய எதிரிகள் இந்தச் சாக்கை வைத்து அவரைக் குறை கூறுகிறார்கள். இன்றைக்குப் பார்ப்பனர்கள் எல்லாம் அவருடைய ஆட்சிக்கு எந்த விதத்திலாவது கேடு உண்டாக்க வேண்டுமென்று முயற்சிக்கிறார்கள் என்பதை நாங்கள் உணராதவர்கள் இல்லை. இதை அவரும் உணராமல் இல்லை.

இதைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் தெரிந்து கொள்ள வேண்டுமானால், குடியாத்தம் தேர்தலில் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்தவர்களைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

அத்தனை பார்ப்பனர்களும் கட்டுப்பாட்டோடு காமராசரை எதிர்த்தார்கள். அவருக்குத் தோல்வியை விளைவிக்கப் பலவிதத்திலும் முயற்சித்தார்கள். பணக்காரப் பார்ப்பனர்கள் எல்லாம் ஆயிரக்கணக்கில் பணத்தைச் செலவழித்தும் பார்த்தார்கள். ஆனால் அவர்களுடைய முயற்சி முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது.

எனவே, இப்படிப்பட்ட நிலையில் எங்களுடைய கழக முயற்சியை அதிக அளவில் காட்டும் நிலை ஏற்பட்டு, அதற்காக எங்கள் பணத்தையும் செலவழித்து ஆதரித்தோம். இன்றும் அவரது செல்வாக்கைப் பாதிக்கும்படியான தேர்தல் முதலிய காரியங்களில் அவர் விரும்பாமலே எங்களால் ஆனதைச் செய்து வருகிறோம்; செய்யவும் இருக்கிறோம். இதனால் நான் காங்கிரசையே ஆதரிப்பதாக நினைக்க வேண்டாம்.

இதுவரை நான் அவரை எந்தவிதமான உதவியும் கேட்டது கிடையாது. அவரும் என்னை எதுவும் கேட்டது கிடையாது. எங்கள் இருவருக்கும் சொந்த சங்கதி என்பதாக எதுவும் இல்லை. தமிழர் நலத்திற்காக அவர் தன்னாலானதைச் செய்ய வேண்டும் என்று நான் ஆசைப்படுவதுண்டு. தனிப்பட்ட நபர்களைப் பற்றி நான் அவரிடம் எதுவும் பேசுகிறதே இல்லை. இனியும் பேசப் போவதும் இல்லை. நாங்கள் இப்படிப்பட்ட சம்பிரதாய சம்பந்தமில்லாமல் தனிப்பட சந்திப்பதுமில்லை.

இன்றுகூட இந்த விழாவுக்கு என்னை அழைத்தபோது, காமராஜர் இங்கு வருவார் என்று தெரிந்திருந்தால் நான் கண்டிப்பாய் வர ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன். நான் இதுவரை எந்த மந்திரி பேசுகின்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதே இல்லை. அதில் கலந்து கொள்வதில்லை என்பது இதுவரை நான் செய்து கொண்டிருந்த முடிவான கருத்தாகும்.

ஆனால், இதில் மட்டும் கலந்து கொள்ளும்படியான நிலை ஏற்பட்டதானது, நான் இதற்கு வருவதற்கு ஒப்புக் கொண்ட பின்தான் முதல் மந்திரி அவர்கள் இதற்குத் தலைமை வகிக்கிறார் என்றும், சிலர் பேச வந்திருக்கிறார்கள் என்றும் தெரிய வந்தது. இதன் பிறகு நான் மறுத்துக் கூறுவது முறை இல்லை என்பதாகக் கருதி எதிர்பாராத இச்சந்தர்ப்பம் தவிர்க்க முடியாத சூழ்நிலையின் பேரில் அமைந்து விட்டது.

என்றாலும், நண்பர் வரதராஜுலு நாயுடு அவர்கள் பிறந்த நாள் விழாக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏற்பட்ட வாய்ப்பை நான் மிகப் பெருமையாகக் கொள்கிறேன். டாக்டர் நாயுடு அவர்களுக்கு இவ்வாழ்த்தும், பொது மக்கள் பாராட்டுதலும் வெகு நாளைக்கு முன்பாகவே நடந்திருக்க வேண்டிய காரியமாகும். இப்போதாவது நடந்ததில் பொது மக்களே மிகுதியும் பாராட்டுதலுக்குரியவராவார்கள் என்று சொல்லுவேன்.

கடைசியாக தலைவர் அவர்கள் (காமராசர்) என்னிடம் அன்பு காட்டி என்னைப் பற்றிச் சில குறிப்பிட்டதற்காகவும், இவ்விழாக் குழுவினர் எனக்கு இதில் கலந்து கொள்ள வாய்ப்பளித்ததற்காகவும், எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டு, டாக்டர் நாயுடு அவர்கள் உட்பட என்னிடம் உள்ள அன்பு என்றும் குறையாதிருக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டு, என்ன மாற்றம் ஏற்பட்டாலும் மனிதத் தன்மை முறையில் ஒருவருக்கொருவர் அன்பும் நாம் தமிழர்கள் என்கிற உணர்ச்சியும் எங்களிடமிருந்து மாறாது என்பதாக உறுதி கூறுகிறேன்.

இங்குக் கூடியுள்ள பொது மக்கள் எனது இச்சிறு சொற்களுக்கு இதுவரை பொறுமையாய் காது கொடுத்ததற்கும் நன்றி செலுத்திக் கொண்டு அமர்கிறேன்.

27.11.1955 அன்று சென்னை ராஜாஜி ஹாலில் நடைபெற்ற டாக்டர் பி. வரதராஜுலு நாயுடுவின் பிறந்த நாள் விழாவில் பெரியார் ஆற்றிய உரை - ‘விடுதலை’ (3.12.1955)