கீற்றில் தேட...

ஆராய்ச்சியாளர்களில் 33.3% பெண்கள் இருக்கின்ற போதும், தேசிய அறிவியல் கூடங்களில் (NSAs) 12% பெண்கள் மட்டுமே உள்ளனர். செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் 1:4 விகிதத்தில் தான் பெண்களும் ஆண்களும் உள்ளனர். ஒருங்கிணைந்த அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல் & கணிதத் துறைகளிலும் (STEM) பெண்களின் எண்ணிக்கை குறைவே! யுனெஸ்கோ புள்ளியியல் நிறுவனத்தின் கணக்கெடுப்பின் படி, உலகளவில் STEM துறைகளில் 29.3% பெண்களே உள்ளனர். ஐ.நா. சபையின் பிப்ரவரி 2020 தகவல்களின்படி, (1901 - 2019) வரை நோபல் பரிசைப் பெற்றவர்கள் 900 பேர்; அவர்களில் வெறும் 53 பேர் மட்டுமே பெண்கள். STEM துறைகளில் கற்கும் மாணவர்களில் 35% பேர் பெண்கள்.

அனைத்து துறைகளிலும் ஆண்களும் பெண்களும் சம பங்களிப்பை வழங்கும் நிலை ஏற்பட வேண்டுமென்று உலகத்தார் எவ்வளவோ முயன்று பார்த்த பின்பும் இன்னும் அந்த இலக்கை நாம் அடையவில்லை. அறிவியல் துறையும் இதற்கு விதி விலக்கல்ல. விஞ்ஞானத் துறையில் பாலினச் சமத்துவத்தை அடைவதற்காக 2015இல் இருந்து ஐநா சபை பிப்ரவரி பதினொன்றாம் நாளை “அறிவியல் துறையில் பணியாற்றும் பெண்களுக்கான தினமாக” அனுசரிப்பது குறிப்பிடத்தக்கது.

2022 ஐ.நா. சபை அறிக்கையின்படியும், ஆராய்ச்சி மானியங்களைப் பெறுவதில் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகவும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதை அறிய முடிகிறது.

செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட செய்தி ஊடகங்களில், காட்சிப்படுத்தப்பட்ட, பங்கேற்ற & பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட பெண்களின் எண்ணிக்கையை ஐநா சபை கணக்கெடுத்து, அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 114 நாடுகளை உள்ளடக்கியதாகவும் 20 ஆண்டு களின் தரவுகளை ஒருங்கிணைத்ததாகவும் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, செய்தி ஊடகங்களில் 24% பெண்கள் மட்டுமே கேட்கப்பட்டும், படிக்கப்பட்டும், காட்டப்பட்டும் உள்ளனர்.

இதே ஆய்வில், ஊடகங்களில் வெளியான 46% செய்திக் கதைகள், பாலினங்களைப் பற்றிய கற்பிதங்களை வலுவூட்டுவதாக உள்ளதும் தெரிய வந்துள்ளது. 4% செய்திக் கதைகள் மட்டுமே, இத்தகைய கற்பிதங்களை கேள்விக்குட்படுத்தும் விதமாக வந்துள்ளன. அதோடு, ஊடகங்களால் பேட்டி எடுக்கப் பட்டவர்களில், ஐந்தில் ஒரு பங்கினர் மட்டுமே பெண்களாவர்.

19ஆம் நூற்றாண்டில், பெண்களின் ஓட்டுரிமைக்காகவும் பூர்வீக அமெரிக்கர் களின் உரிமைகளுக்காகவும் போராடியவர் Matilda Joslyn Gage. பெண் விஞ்ஞானிகளின் சாதனைகள் ஒப்புக் கொள்ளப்படாமல் பாரபட்சம் காட்டப் படுவதற்கு, “Matilda விளைவு” என்று பெயர்.

“கண்டுபிடிப்பு மேதைமையும், இயந்திர மேதைமையும் இல்லாதவள் பெண் என்கிற கருத்தை விட அதிகமாக, பெண்கள் குறித்து வேறு எந்த பொதுவான கருத்தும் வலியுறத் தப்படுவதில்லை” என்றும், “பெண்களின் அறிவியல் கல்வி முற்றிலும் புறக்கணிக்கப் பட்டிருந்தாலும் கூட, உலகின் முக்கியமான சில கண்டுபிடிப்புகள் பெண்களால் நிகழ்த்தப்பட்டுள்ளன” என்றும் 1883இல் Matilda எழுதியுள்ளார்.

“Matilda விளைவு” என்ற சொற்றொடரை முதன் முதலில் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையில் உருவாக்கியவர், Cornell பல்கலைக்கழக பேராசிரியர் Margaret Roisiter ஆவார்.

“பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பலதரப்பட்டவை; உலகெங்கும் மாறு பட்டவை. ஆனால் அவை, “வளங்களுக்கான அணுகல் உரிமை இல்லாமை, வாய்ப்பு களுக்கான அணுகல் உரிமை இல்லாமை, கற்பிதங்கள் மற்றும் பாலினப் பக்கச்சார்புகள்” ஆகியனவற்றைச் சுற்றியே இருக்கின்றன. இவை, இந்தத் துறைகளில் நுழைவதற்கான சாத்தியக்கூறுகளைக் கூட, பெண்கள் கருத்தில் கொள்வதைத் தடுக்கின்றன” என்று பாலின ஆய்வு நிபுணரும் நெய்ரோபியில் (கென்யா நாடு) உள்ள சர்வதேச கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் சர்வதேச ஆலோசகருமான Katie Tavenner கருத்துரைத்துள்ளார்.

ஜூன் 2022 Nature ஆய்விதழின் அறிக்கையில், இளநிலை தொழிற்பதவிகளில் பெண்கள் அதிகமாகவும் முதுநிலை தொழிற் பதவிகளில் ஆண்கள் அதிகமாகவும் இருப்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது; பெண்களின் தொழில் ஆயுட்காலம் குறுகியதாக இருப்பதையும், பெண்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் குறைவாக இருப்பதையும் காண முடிகிறது.

இனி இந்தியாவுக்கு வருவோம். நவம்பர் 2021 Current Science இதழின் அறிக்கையில், அறிவியல் தொடர்பு & கொள்கை ஆராய்ச்சி தேசிய நிறுவனமும் (SCPR) அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி சபையும் (CSIR) இணைந்து நடத்தும், Science Reporter இதழைப் பற்றிய அறிக்கை வெளியாகி உள்ளது?

Science Reporter இதழில் (2010 - 2020) வரை வெளியான கட்டுரைகளில், பெண்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் ஏன் குறைவாக உள்ளன? பலர் இணைந்து எழுதிய கட்டுரைகளில் பலரில் ஒருவராக இருக்கும் பெண்கள், தனிக்கட்டுரைகளை எழுதாதது ஏன்? என்று இவ்வறிக்கை கேள்வி எழுப்பியிருக்கிறது. இந்தியப் பெண்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என்றும் இந்தியப் பெண்கள் தங்கள் குடும்பங்களை கவனிப்பதற்காக தொழிலை பாதியில் விட்டுவிட்டுச் செல்கின்றனர் என்றும் ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) இடித்துரைத்துள்ளது. 2018 இல் வெளியான உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில், 149 நாடுகளில் இந்தியா 108ஆவது இடத்தில் உள்ளது.

குழந்தைப் பிறப்பு, குழந்தை வளர்ப்பு, வீட்டு மேலாண்மை, வேலையிடங்களில் பாலின பக்கச்சார்புகள், கலந்தாய்வுக் கூட்டங்களில் உரையாடல்களை ஆண்களே வழிநடத்த முனைதல் போன்ற எண்ணற்ற சிக்கல்களை பெண்கள் எதிர்கொள்கின்றனர். அதே வேளையில், அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதும் மறுப்பதற்கில்லை.

எடுத்துக்காட்டாக, 1942இல் அன்றைய இந்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட CSIRஇல், 80 ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக, பொது இயக்குனர் பதவிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண் விஞ்ஞானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதே போல் மற்ற துறைகளிலும் பெண்கள் பெரும் விருதுகளின், பல்கலைக்கழக ஆய்வு வாய்ப்புகளின், ஆராய்ச்சி மானியங்களின் எண்ணிக்கைகள் சற்று அதிகரித்துள்ளன. எனினும், ஆண்களுக்கு நிகரான வளர்ச்சியை பெண்கள் பெறுவதற்கு இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது.

நாட்டின் அறிவியல் முன்னேற்றம் & சாதனைகளுக்குப் பயனளிக்கும் விதமாக, சமத்துவத்திற்கான தடைகளை அகற்றுவது, பன்முகத் தன்மையைக் கொண்டாடுவது மற்றும் நேர்மறை கலாச்சாரத்தை அதிகரிக்க பெண்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பது போன்ற செயல்களில் அதிக கவனத்தைச் செலுத்துவதே பாலினச் சமத்துவத்தை விரைவில் அடைவதற்கான வழிமுறை ஆகும்.

(Source: 2022 டிசம்பர் மாத Science Reporter இதழ்)