ஒபாமாவின் இந்தியப் பயணத்திற்கான காரணம் பற்றி பலவிதமாக பலர் கூறி வந்தாலும் ஒபாமா வெளிப்படையாக கூறும் காரணம் அமெரிக்க உற்பத்திப் பொருட்களுக்கு இந்தியாவில் சந்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான்.

சரி ஒபாமா கூற வருவது எந்த வகை உற்பத்திப் பொருட்கள் என்றும் அது எவ்வாறு உற்பத்தி செய்யபடுகிறது என்றும் பார்ப்போம். பல்லாயிரம் கோடி பெறுமான ஆயுதங்களை இந்தியாவிற்கு விற்க கையொப்பம் இட்டுள்ளார். நிச்சயம் இந்த ஆயுத தளவாடங்களின் பெரும் பகுதி அமெரிக்காவில் தான் உற்பத்தி செய்யப்படும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒபாமா மூச்சுக்கு முன்னூறு தடவை தன்னுடைய ஆதர்ச நாயகனாகக் கூறுவது மகாத்மா காந்தியடிகளையும் அவரது அகிம்சை தத்துவத்தையும் தான். காந்தியின் அகிம்சை வழியில் நாடுகளுக்கெல்லாம் ஆயுதத்தை விற்பது வடிவேலு பட காமெடி போல் தான் உள்ளது.

அமெரிக்காவில் முக்கியமாக உற்பத்தி செய்யப்படும் பொருள் ஆயுதத்துக்கு அடுத்தபடியாக கம்ப்யூட்டர் மென்பொருட்களாகத்தான் இருக்கும் . தற்போது இந்தியாவில் மென்பொருட்கள் விற்பனைக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. எனவே அவர் கூற வருவது நிச்சயம் கம்ப்யூட்டர் மென்பொருட்களாக இருக்காது. ஒபாமா முக்கியமாகக் கேட்பது சில்லறை வியாபாரத்தில் வால்மார்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு முழுமையான அனுமதியும் அமெரிக்க நிதி நிறுவனங்களுக்கு இந்திய வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் முழுமையான அனுமதியும் தான்.

முதலில் வால்மார்ட் கதைக்கு வருவோம். வால்மார்ட்டுக்கு இந்தியாவில் முழு அனுமதி கொடுப்பதால் எப்படி அமெரிக்கப் பொருட்களுக்கு சந்தை விரிவாகும் என்று பார்ப்போம். இன்று அமெரிக்காவில் வால்மார்ட்டில் விற்கப்படும் பொருட்களில் பெரும்பாலான பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடம் சீனா தான். எனவே வால்மார்ட் இந்தியாவில் கடைகளைத் தொடங்கினால் நிச்சயம் அமெரிக்கப் பொருட்களுக்கான சந்தை விரிவடையப் போவது இல்லை. அப்படி என்றால் ஒபாமா கூறிய அமெரிக்க உற்பத்திப் பொருள் எதுவாக இருக்கும்? இது பற்றி அறிந்து கொள்ள அமெரிக்கப் பொருளாதாரத்தில் கடந்த இரு ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்வுகளைப் பற்றி பார்ப்போம்.

கடந்த பொருளாதார நெருக்கடியை அடுத்து அமெரிக்காவில் பணப் புழக்கத்தை அதிகரிக்க முதல் கட்டமாக பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை சிறிது சிறிதாகக் குறைத்தது. தற்போது அங்கு வட்டி விகிதம் கிட்ட திட்ட 0 சதவிதமாக இருக்கிறது. எனவே அமெரிக்காவில் உள்ள நிதி நிறுவனங்கள் வட்டி இல்லாப் பணத்தை வாங்கி குவித்து உள்ளனர். அது மட்டுமன்றி அமெரிக்க நிதி நிறுவனங்களிடம் இருந்த நட்டத்தைக் கொடுக்கும் கடன் பத்திரங்களை எல்லாம் பணம் கொடுத்து வாங்கி விட்டது. அதன் விளைவு அமெரிக்க நிதி நிறுவனங்களிடம் பண கையிருப்பு நிறைய உள்ளது. தற்போது இந்தியாவில் கடனுக்கான வட்டி விகிதம் மிக அதிகமாகவே உள்ளது. மேலும் பொருளாதாரமும் மிக வேகமாக வளர்ந்து வருவதால் இந்திய நிதி நிறுவனங்களில் அன்னிய முதலீட்டை முழுமையாக திறந்து விட்டால், அமெரிக்காவில் வட்டி இல்லாமல் வாங்கிய பணத்தை இந்தியாவில் முதலீடு செய்து மிகப் பெரிய லாபம் அடைய முடியும். அவ்வாறு செய்வதால், அமெரிக்க நிதி நிறுவனங்கள் இந்தியப் பொருளாதாரத்தையும் அமெரிக்கப் பொருளாதாரத்தை போல சூதாட்ட களமாக்கி நடுத்தர மற்றும் ஏழை மக்களின் எதிர்காலத்தை, முக்கியமாக பணி ஓய்வு பெற்ற பின் வரும் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அடுத்தது வால்மார்ட் போன்ற கம்பெனிகளின் கதைக்கு வருவோம். அமெரிக்க மத்திய வங்கி கடன் விகிதத்தை 0% கொடுப்பதால் வெளி மார்க்கெட்டில் கம்பெனிகளின் பாண்டுகளுக்கான கடன் விகிதம் மிகக் குறைவாக உள்ளது. உதாரணமாக வால்மார்ட் நிறுவனம் 0.75% வட்டிக்கு அமெரிக்காவில் கடன் வாங்கியுள்ளது. இது போல் வட்டியில்லாக் கடன் மூலம் பல பில்லியன் வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் தொழில் நடத்த முழு அனுமதி கொடுத்தால், இவர்களுடன் தினமும் கந்து வட்டிக்கு கடன் வாங்கி கடை நடத்தும் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் போட்டியிட முடியாமல் நலிந்து போகப் போவது திட்ட வட்டம்.

அதைவிட முக்கிய நிகழ்வு தற்போது Quantitative Easing என்ற பெயரில் அமெரிக்காவில் நடந்து வருவது. தற்போது QE என்ற பெயரில் அமெரிக்க மத்திய வங்கி அமெரிக்க அரசின் கடனையும், அமெரிக்க நிதி நிறுவனங்களின் கடனையும் வாங்கி வருகிறது. மத்திய வங்கி அரசின் கடனை வாங்குகிறது என்றால், அது எந்த அடிப்படையும் இல்லாமல் பணத்தை பிரிண்ட் செய்து வெளியிடுகிறது என்று பொருள். அதாவது எந்த அடிப்படையும் இல்லாமல் பணத்தை உற்பத்தி செய்கிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பணத்தின் விளைவாகத் தான் அமெரிக்க வட்டி விகிதமும், பெரிய நிறுவனங்களின் கடன் பத்திரத்துக்கான வட்டியும் மிகக் குறைவாக உள்ளது. இது போல் உற்பத்தி செய்யப்படும் பணம் வளரும் நாடுகளுக்குள் வெள்ளமாகப் புகுந்து பங்கு சந்தை வீக்கம்-வாட்டத்தையும், வளரும் நாடுகளின் தொழில் துறையின் கட்டுப்பாடுகளை மிகப் பெரிய பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கும் கொண்டு செல்ல உதவுகிறது. இந்த நிகழ்வுகள் சுலபமாக நடக்கத் தேவையானவற்றை செய்ய வலியுறுத்துவதுதான் அமெரிக்க அதிபரின் பயணத்தின் முக்கிய குறிக்கோள்.

உண்மையில் இதன் மூலம் சாதாரண இந்தியருக்கோ அல்லது சாதாரண அமெரிக்கருக்கோ அதிக பயன் இருக்கப்போவது இல்லை. பலன் அனைத்தும் மிகப் பெரிய நிதி நிறுவனங்களுக்கும், மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தான்.

தைமூர் மற்றும் நாதிர் ஷா போன்றோரின் படையெடுப்பின் மூலம் இந்திய செல்வம் ஒரு முறை மட்டும் கொள்ளை போனது. ஆங்கிலேயர்களின் ஆட்சி மூலம் ஒரு சில நூற்றாண்டு செல்வம் கொள்ளை போனது. ஆனால் தற்போதைய ஒபாமாவின் படையெடுப்பின் விளைவு எப்படி இருக்கும் என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

அமெரிக்க அதிபர் கூறியபடி இந்திய சந்தையில் அதிக இடம் தேடும் அமெரிக்க உற்பத்திப் பொருள், தற்போது அமெரிக்க மத்திய வங்கி பெருமளவில் உற்பத்தி செய்யும் டாலராகத்தான் இருக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இன்றைய மற்றும் பிற்கால இந்தியர்களின் உழைப்பின் பலன்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது.