கூரையின்
முகத்தில் அறையும்
மழையைப் பற்றிய
எந்தக் கவலைகளும் அற்றது
புது வீடு
இலைகளை உதிர்த்தும்
காற்றைப் பற்றியும்
இரவில் எங்கோ காடுகளில்
அலறும் துர்ப்பறவையின்
பாடலைப் பற்றியும்
எந்தக்கவலைகளும்
கிடையாது
புது வீட்டில்..
ஆனாலும் என்ன
புது வீட்டின்
பெரிய யன்னல்களூடே நுழையும்
நிலவிடம் துளியும் அழகில்லை..

Houseஇந்தக் கவிதையை நாங்கள் அக்காவின் லண்டன் காசில்.. அல்லது லண்டன் கடனில் கட்டிய புதுவீட்டிற்கு குடிபோன அன்றைக்கு எழுதினேன். (இதைக் கவிதை என்று ஏற்றுக்கொள்வதும் விடுவதும் உங்கள் முடிவுக்கு விடப்படுகிறது).. நாங்கள் முதலில் ஒரு சின்ன அறையும் ஒரு பெரியறையும் (சாமியறை)ஒரு விறாந்தையும் கொண்ட வீட்டில் குடியிருந்தோம்.. தனித்தனி அறைகள் கிடையாது.. அப்போதெல்லாம் தனித்தனி அறைகளும் தனிமையும் பெரும் வசதிகளைத் தரும் என்று நினைப்பிருந்து கொண்டிருக்கும். ஆனால் அதெல்லாம் அமைந்த போது.. எங்களுக்குள் கொஞ்சம் விலகல் நிகழ்ந்து விட்டிருப்பதை உணரமுடிந்தது.

தனிமை வேண்டித் தவமிருந்த நாட்கள் என் வாழ்க்கையில் உண்டு.. ஒரு பாட்டுக்கேக்கிற பொட்டியோடும்(வோக்மேனோடும்) கொஞ்சப் புத்தகங்களோடும் எங்காவது தொலைந்து போய்விட வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன்.. அப்போதெல்லாம் நான் எழுதிக்கொண்டிருக்கும்போது..(அநேகமாக அது கணிணியிலாக இருக்கும்..) தட்டச்சும் என் கைகளுக்கு குறுக்கால் புகுந்து என் கதிரைநுனியில் தனக்கு போதுமான இடம் கிடைத்துவிட.. பூனைக்கு குட்டி டான்ஸ் ஆடுகிற அனிமேசன் காட்சியை உடனடினாகப் போடவேண்டும் என்று அடம்பிடிக்கிற ஒரு குட்டிப்பையனுக்கு நான் சித்தப்பாவாயிருந்தேன்.

நான் போடமறுக்கையில்.. அய்லன் என்று என்பெயரை தனக்கேற்ற மாதிரி உச்சரித்துக் கொக்கரித்து விட்டு ஓடிப்போய்.. தன் அம்மாவின் சோட்டிக்குப் பின்னால் ஒழிந்து கொள்ளும்.. அவனை விரட்டிப்பிடித்து அவன்.. கத்தக் கத்த தலைக்கு மேலாய்த் தூக்கிவீசிப் பிடித்துக் கொஞ்சுகையில் அவன் எழுதுவதைக் குழப்புவதாகத்தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.. இதோ இன்றைக்கு எந்த நிழலும் ஆடாத என் அறையின் வாசற்கதவைப் பார்க்கிறேன். ஒரு குட்டிப்பையனும்.. வருவதற்கில்லை.. காகிதம் பறந்து வெளியேறிப் போகிறது.. வெளியே விரவிக்கிடக்கும் கோடையின் தகிப்பு மட்டும் எஞ்சிக்கிடக்கிறது அறையுள்.. போராடுகிறது மின்விசிறி எனக்கு கொஞ்சம் காற்றைக் காட்டி விட.

நான்கு பல்லிகளும் திக்கொன்றாய் இரைதேடும் சுவர்களில் பெரிய பல்லியைக் காணோம்.. அவை ஒளித்துப்பிடித்து விளையாடுகின்றனவோ என்னவோ.. சுவர்களை விடவும் தகிக்கிறது மனம்.. கனவும் நிஜமும் சேரும் பிரமையின் புள்ளிகளில்.. துள்ளி ஓடுகிறது அய்லன் என்றழைக்கும் ஒரு குட்டிப்பையனின் குரல். எனது சொற்களின் குதூகலம் அவனிடமிருந்திருக்கிறது என்பது புரிந்தபோது.. பாக்கு நீரிணையை நான் கடந்து விட்டிருந்தேன். வீடு என்பதன் வெறுமையான அர்த்தங்களைத் தாண்டி அது தரும் பாதுகாப்புணர்வை கடல் கடந்த பின்னர் நான் தீவிரமாக உணரத் தலைப்பட்டேன்.. வீடு என்பது கட்டிடம் அல்ல.. என்பதன் குரூரம்.. சென்னை மாநகரில் எனக்கு புரிந்தபோது காலம் கடந்துவிட்டிருக்கிறதோ என்னமோ.

எட்டாம் வகுப்புக் காலத்தில் சொந்த வீட்டை விட்டு இடம்பெயர்ந்து போகும் போது புரியாதது.. மீண்டும் கிளிநொச்சிக்குத் திரும்பி உடைந்த வீட்டை திருத்திக் கட்டியபோது புரியாதது சிறிய வீட்டை பெரிய வீடாக்கி எல்லாருக்கும் தனித்தனி அறைகள் இருந்தபோது புரியாதது.. சென்னையில்.. தங்குவதற்கிடமில்லை என்றாகிய ஒரு இரவில் திடீரெனப் புரிந்தது.. வீட்டைக் காலி பண்ணச் சொல்லிக்கொண்டேயிருந்தார் வீட்டுக்காரர் காரணம் வாடகைப் பாக்கியில்லை.. கரண்ட்பில் கட்டாமல் இல்லை.. தண்ணி அடித்துவிட்டு நாங்கள் அவர் வீட்டு மொட்டைமாடியில் பண்ணிய அலப்பறையில்லை.. நான் சைற்றடிக்கக் கூடிய மாதிரி அவருக்கு பொம்பிளைப் பிள்ளைகள் இல்லை.. அவரிடம் இருந்த ஒரே காரணம் நான் சிலோன்காரன்.. அந்த ஒற்றைக்காரணம் போதுமானதாய் இருந்தது அவர் என்னை அவசரமாய் வெளியேறச் சொல்வதற்கு.

எங்காவது பேப்பரில் வருகிற இலங்கை வாலிபர் கைது என்று செய்தி வருகிறபோதெல்லாம் அவர் நான் இருக்கிறேனா என்று வீட்டிற்குள் வந்து பார்த்து உறுதிப்படுத்திக் கொள்வார்.. நான் வாடகைக் காசை நாள் பிந்தாமல் கொடுப்பதற்கு காரணம் நான் வெளிநாட்டில் இருக்கிற நண்பர்களின் உதவியோடு கிரடிட் காட் மோசடியில் ஈடுபடுவதுதான் என்று அவரது அறிவு அவருடைய கனவில் சொல்லிய நாளில் அவர் என்னை வெளியேறச் சொன்னார். நான் 7 நாள் தவணை கேட்டேன்.. தந்தார்.. ஆனால் என்ன நினைத்தாரோ 5ம் நாளே நான் வெளியே போயிருந்த நேரமாய் எனது பூட்டுக்களை அறுத்தெறிந்து விட்டு தனது பூட்டால் நான் வசித்த அறையைப் பூட்டிவிட்டு வெளியேறி விட்டார்.

நான் வந்து பார்த்தேன் வீட்டு ஓனரில் பூட்டு என்னை வேளியேறச் சொல்லி இளித்தது. அடுத்து எங்கே போவது அன்றைய இரவை எங்கே கழிப்பது என்பது போன் பல பிரச்சினைகள் எனக்குள் முளைத்தது. எனக்குத் தெரியாமல் எனது பொருட்கள் உள்ளே இருக்கும்போது.. பூட்டை உடைத்ததற்கு நியாயம் கேட்டு போலீசில் புகார் கொடுக்கலாம் என்று நினைத்தேன்.. பிறகு சிலநாட்களிற்கு முன்பு தான் அந்த வீட்டிற்கு அருகில் இருந்த கடை ஒன்றில்.. திருடு போய்விட்டிருந்தது.. அந்த திருடனை இன்னமும் போலீஸ் தேடிக்கொண்டுதான் இருக்கிறது.. இந்த நேரத்தில் நான் அங்கு போக ஆகா சிக்கிட்டான்யா மாப்ள என்று என்பெயரில்.. அந்தக் கேசுகள் எல்லாவற்றையும் போட்டுத்தாக்கிவிடும் வாய்ப்புகள் அதிகம் என்பதால்.. அந்த திட்டத்தைக் கைவிட்டேன்..

கேற்றை மெதுவாச் சாத்தப்பு பெரியம்மாவின் குரல் நினைவிலிருந்தும் மோட்டார் சைக்கிளால் உறுமியபடி கேற்றை இடித்துத் திறக்கிற நினைவெழுந்து படம் விரித்தாடியது..இரண்டாம் சாமங்களில்.. எனது மோட்டார் சைக்கிள் உறுமும் சத்தத்திற்கு தூக்கக் கலக்கத்திலும் எழுந்து வந்து சாப்பாடு போடட்டேப்பு என்று கேட்கும் அண்ணியின் குரல் நினைவுக்கு வந்த அடுத்த கணம் பீறிட்டுக் கிளம்பியது அழுகை.. நான் நின்று கொண்டிருப்பது நடுத்தெருவென சட்டை செய்யாத அழுகை.. சென்னை மாநகரத்தின் ஒரு தெருவில் நின்று நான் அழுகையை விழுங்கி விழுங்கி அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். அடுத்த நேரப்படுக்கைக்கு இடமில்லாமல் போகும் என்று நான் ஒரு போதும் கற்பனை செய்து கொண்டதில்லை.. அது எனக்கு நிகழ்ந்ததென்று என்னால் நம்பமுடியவில்லை..

இடப்பெயர்வில் எத்தனையோ இரவல் வீடுகள் மரநிழல்கள்.. சங்கடங்கள் இருந்தன.. கருணாகரனின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது..ஒரு இரவல் வீட்டில் வசிக்கிற அப்பா மகனுக்கு சொல்லுவது போன்றான ஒரு கவிதை.. பல ஆண்டுகளாயிற்று படித்து.. இந்தச் சுவற்றில் கீறாதே மகனே, கிணற்றடியில் தண்ணீரை ஊற்றவேண்டாம்.. என்பது போன்ற வரிகள் எல்லாம் வரும் (நான் முதல் முதலில் படித்த கவிதைத் தொகுப்பு அதுதான் ஒரு பொழுதுக்கு காத்திருத்தல்) இப்படியான அனுபவங்களின் போதெல்லாம் நான் அழுததில்லை.. ஏனெனில் எனக்கு என் வீட்டு மனிதர்கள் பக்கத்தில் இருந்தார்கள்.. அது எல்லாருக்கும் நிகழ்ந்தது.. இப்போது எனக்கு மட்டுமாய் நிகழ்ந்தது. அது தான் அழுகை..

நான் என்ன மாதிரித் தனித்து விட்டேன் என்கிற அச்சம் பிரமாண்டமாய் எழ நான் மட்டும் ஒரு தனித்தீவின் கரைகளைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தேன்.. அநேக நாட்களில் வீடு திரும்புவதேயில்லை.. பள்ளிக் கூடத்து மேசைகளிலோ.. நண்பர்கள் வீடுகளிலோ.. படுத்துவிட்டு காலையில் பல்லு விளக்காமல் வீட்டுக்குப் போகையில்.. முதல் கேள்வி இரவு சாப்பிட்டாயா என்பதாய்த் தான் இருக்கும் அப்போதெல்லாம் வீடு எனக்கு அளிக்கும் பாதுகாப்புணர்வை இன்னதென்று அறியாதிருந்தேன்.. வெட்கத்தை விட்டு விட்டால் ஏதாவது தெருவில் படுத்துவிடலாம்.. நான் விட்டாலும் அது நம்மை விடுவதாயில்லை.. இந்தப் பெருநகரில் ஒரு புழுப் பூச்சி கூட என்னைக் கவனிக்காது இருந்தும். கௌரவத்தின் கண்கள் என்னைக் கண்காணித்துக் கொண்டிருந்தன.. மன்மத மாசம் போட்டிருந்தார்கள் ஞாயிற்றுக்கிழமை சிறப்புக்காட்சி.(மேட்டர் படம் தான்) குமரன் தியட்டரில். தியட்டரை ஒரு அரை நாள் வீடாக்குவதெனத் தீர்மானித்தேன்..

வானம் பெருங்கூரை
நட்சத்திர அலங்கரிப்பு..
காலப்பெருவிளக்கு நிலா..
என் கனவுப் பாதையிலே..

ஏதேதோ தோன்றிற்று.. புலம்பலாய்.. குமரன் தியட்டர் வாசலில் ஒரு கழைக்கூத்தாடிக் கூட்டம் ஒன்று தங்கள் வண்டியை நிறுத்தி விட்டு தூங்க ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.. எனக்கு இன்றைக்கொரு நாளைக்குத்தான் இப்படி நாளைக்கு நான் வீடு தேடிவிடலாம்.. அல்லது இன்றைக்கே எதாவது லொட்ஜ்ஜில் அறையெடுத்து விடலாம்.. அவர்கள் பிறந்ததிலிருந்தே வானமே கூரையெனக் கொண்டவர்கள்.. அவர்களுடைய எந்தக் குழந்தையும் அடம்பிடித்து வீரிட்டு அழுததாய் நான் பார்த்ததேயில்லை.. நுளம்பு அவர்களைக் கடிக்காதா.. அந்தப் பெண்களிற்கு நாணம் இருக்காதா.. திரைப்படத்தின் முத்தக் காட்சிக்கே.. பரபரப்பாகிற கலாச்சாரம் பேசுகிற ஊரில் இருந்து கொண்டு தெருவில் புணர்ந்து தெருவில் பிறந்து தெருவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மனிதர்களைப் பார்த்தேன்..அழுது கொண்டிருந்த மனம் தளர்ந்தது.

இந்த மனிதர்களிற்கு வீடு பற்றிய கனவுகள் ஏதேனும் இருக்குமா என்கிற நினைப்பெழுந்தது.. இருக்கும் நிச்சயமாய் இருக்கும் என்று தான் தோன்றிற்று.. அவனது கனவில் வருகிற வீடு.. சாருக்கான் தனது மனைவிக்கு பரிசளித்த வீட்டைப் போலவோ.. அம்பானி தனது மனைவிக்கு பரிசளிக்க கட்டிக் கொண்டிருக்கிற வீட்டைப் போலவோ நிச்சயம் இருக்காது.. அது நிச்சயமாய் நான்கு மறைப்புச் சுவர்களும்.. ஒரு கூரையும் கொண்ட எளிய குடிசையாகத்தான் இருக்கும்.. ஒரு வேளை அவர்கள் பூசலாரைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ என்னவோ..

வீடுகள் அவரவர் கனவுகளைப் போல.. சிலது அவரவர் வசதியைப்போல.. புல்லை எடுத்து வேய்ந்து களிமண்ணை உருட்டிச் சுவர்வைத்த வீடு கூட சிலருக்கு கனவு வீடாகத்தான் இருக்கிறது.. அண்மையில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் வீட்டிற்குப் போனேன். தமிழகத்தை கொஞ்சமேனும் கலக்கிக் கொண்டிருக்கிற அரசியல்வாதி அவர். அரசியல் வாழ்விற்கு வந்து கால்நூற்றாண்டுகளாகிறதாம்.. அதனைக்குறித்த ஒரு ஆவணப்படத் தயாரிப்பு பணிகளில் ஈடுபட அல்லது அங்கே சென்று வாய் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.. அங்கனூரில் இருக்கும் அவரது வீட்டைப் பார்க்கையில் எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.. அது வீடல்ல குடிசை தொட்டதெற்கெல்லாம் ஊழலும் கட்டைப்பஞ்சாயத்தும் தலைவிரித்தாடுகிற அரசியல் சூழலில் ஒரு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு கட்சியின் தலைவராக இருக்கிறவரின் வீடு ஒரு குடிசை என்பது.. ஆச்சரியங்கள் தராமல் வேறென்ன தரும். அவருடைய வீடு மட்டுமில்லை..

அவருக்கு ஓட்டுப்போடுகிறவர்களான தலித் மக்களின் வீடுகள் எல்லாமே குடிசைகள் தான்.. அவர்களிம் மிச்சமிருப்பது நூற்றாண்டுகளாய் சாதியின் வன்கொடு நிழலில் வசித்த வசித்துக் கொண்டிருக்கிற ஆயாசம் மட்டும்தான்.. திருமாவளவன் நிச்சயமாய் அவர்களிற்கு விடுதலை தருவார் என்று நம்புகிறார்கள்.. நம்புவோம்.. இலங்கையின் அகதி முகாம்களில் இருக்கிற சிறிய வீடுகளை விடவும் மோசமான குடிசைகள் அவை.. யாருடைய வீட்டைச் சற்றியும் வேலிகள் கிடையாது.. இந்தியாவில் நகரங்களில் தான் மதில் கலாச்சாரம் கிராமங்களில் அநேகம் வேலிகள் கிடையாது.. (ஒரு கிடுகு வேலிக்கலாச்சாரத்தின் தேசத்திலிருந்து வந்தவனின் மனோ நிலை எனக்கு)

இலங்கையின் அகதி முகாம்களைப் பற்றிய நினைவெழுகையில்.. இந்தியாவில் இருக்கிற இலங்கை அகதி முகாம்களில் இருக்கிற வீடுகள் (அப்படி அவற்றை நிச்சயமாகச் சொல்ல முடியாது..) பற்றிய நினைவும் கூடவே எழுகிறது.. ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் நான் கழிக்கநேர்ந்த ஏறக்குறைய ஒரு மாத காலத்தில்.. அந்த வீடுகள் லயன்களை விடமோசமாயிருந்தன.. இலங்கையில் தோட்டத்தொழிலாளர்களிற்கு கட்டித்தரப்படுகிற வீடுகள்(லயன்) குறித்த விசனங்கள் பதிவு செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.. இந்தியாவில் அதேபோல வீடுகள்தான் ஈழத்தமிழ் அகதிகளிற்கு வழங்கப்படுகிறது. கக்கூஸ் முதல் சங்கக் கடை வரை எல்லாவற்றிற்கும் வரிசை வாழ்க்கையின் மிகக் கடினமான தருணங்கள் அவை.

நான் இதுவரை வசித்த வீட்டிற்கு கீழே சேட்டுக்காரர்கள் கடை வைத்திருந்தார்கள்.. அண்ணனும் தம்பியுமாக இரண்டு சேட்டுகள். அவர்களுடைய கடையின் கல்லாப்பொட்டி வரை போகும் அளவிற்கு நம்பிக்கையும் அன்பும் எங்களிடம் அவர்களிற்கு இருந்தன. நாங்கள் இந்த வீட்டிற்கு குடிவந்தபோது எங்களை இந்த வீட்டில் கொண்டு வந்து விட்ட ஆட்டோக்காரர் சொன்னார்.. சேட்டுக்காரன் ரொம்பக் குப்பையா இருப்பான்யா ராஜஸ்தான்ல தண்ணி கிடையாதுல்ல.. அதால பாத்றும்ல டாய்லெட்ல எல்லாம் தண்ணியை சிக்கனப்படுத்துகிறேன் என்று அதன் மணத்தை அதிகப்படுத்தி விடுவான்கள் என்று.. அதையும் மீறி நாங்கள் அவர்களோடு பழகினோம்.. இராஜஸ்தானில் இருந்து தனது எடையைவிட அதிக எடையுள்ள உலோகங்களை தன் உடம்பிலே போட்டுக்கொண்டு வருகிற சேட்டுக்களின் அம்மா.. பேட்டா என்று எங்களை அணைக்கையில் பெரியம்மாவின் நினைவெழுவதைத் தவிர்க்க முடியவில்லை.. அதெல்லாவற்றையும் விட.. அவர்கள் செய்து தருகிற சப்பாத்தியும் கிழங்கையும் அவ்வப்போது ஒரு பிடி பிடிக்கவும் நாங்கள் தயக்கம் காட்டியதில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக இராஜஸ்தானில் இருந்து கொண்டு வருகிற எள்ளுல செய்த ஒரு வகைப் பலகாரம் அதைச்சாப்பிடாதவனுக்கு இந்த ஜென்மம் சாபல்யம் அடையக் கூடாதெனச் சபிப்பேன் நான்.. ஆனால் என்ன அவர்கள் வீட்டில் எந்த ராஜஸ்தானி சின்னப்பொண்ணும் இல்லை என்பதுதான் என் ஒரே மனக்குறை.. அவர்களுடைய வீடாக தண்ணீர் அதிகம் பாவிக்காத ஒரு அசுத்தமான வீட்டைக் கற்பனை பண்ணி வைத்திருந்தேன். ஆனால் அவர்களுடைய வீட்டுக்குள் போனதும் எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.. துடைத்து வைத்தது மாதிரி அத்தனை சுத்தமாக இருந்தது சமையலையில் சமைக்கிறதற்காக சுவடுகளே தெரியாமல் அத்தனை சுத்தமாக இருந்தது.. நானே எனக்குள் அவர்களை அசுத்தமானவர்களாக கற்பனை பண்ணியதற்காக வெட்கப்பட்டுக் கொண்டேன்..

நான் குமரன் தியட்டரின் வாசலில் பீறிட்டுக் கிளம்புகிற அழுகையை வெட்கம் கருதி அடக்கிய படி படம் முடிவதற்காக தியட்டர் வாசலில் காத்திருந்தேன்.. யாரும் அவ்வளவு நெருக்கமான நண்பர்கள் கிடையாது.. யார் வீட்டிற்காவது போய் இன்றைய இரவைக்கழிக்கலாம் என்றால் எல்லா கல்யாணமாகாத இளைஞர்களின் வாழ்க்கையும். இட்டுமுட்டு அறைக்குள். தட்டுமுட்டுச் சாமான்கள் காலில் முட்டுப்படத் தூங்கும் வாழ்க்கைதான் இதில் நான் வேறு போய் ஏன் சிரமத்தைக் கொடுப்பான் என்று நினைத்தேன்.

டேய் பாடு என்னடா மேட்டர் படம் பாக்கப்போறியா என்றபடி சேட்டு தன் பைக்கை என்னருகில் நிறுத்தினான் சேட்டு.. ஆதரவான மனிதர்களை காணோம்.. என்று தவித்துக் கொண்டிருந்த அழுகை விடுவிடென ஊதடுகளில் விம்மித் தழும்பியது.. என்னடா வாடா.. என்று அவனது பைக்கில் போனேன்.. அவனது வீட்டிற்குப் போனதும் அழுகை பீறிட்டுக் கிளம்பியது.. அடக்கமுடியாத அழுகை பாத்ரூமில் நின்று அழுது தீர்த்தேன்.. லால்(சேட்டுகளில் அண்ணன்)இன் மனைவி ஹிந்தியில் ஏதோ சொன்னார்.. அநேகமாக வீட்டு ஓனரைத் சபித்து திட்டுகிறாள் என்று புரிந்தது.. டேய்.. நாங்க இருக்குமட்டும் நீ எதுக்கு யோசிக்காத எப்ப வேணா இங்க வா உன் வீடு மாதிரி இது.. ஹரி(சேட்டுகளில் தம்பி) சொன்னான்.

அவனது அண்ணி இன்னமும் போலீசில் சொல்லலாம் என்பது மாதிரி ஏதோ சொன்னாள்.. ஹரி என்னிடம் சொன்னான் இது எங்க ஊரு இல்ல மாப்ள நாங்க இங்க பிழைக்க வந்திருக்கம்.. இது நம்ம ஊரு கிடையாதுல்ல.. நாம எதுசொன்னாலும் வேலைக்காகாது அவன் சொல்றதுதான் எடுபடும். அதால பேசாம இருந்திட்டு நம்ம ஜோலியைப் பார்க்கணும்டா.. விடு எல்லாம் நல்லதுக்குத்தான்.. அவனது அண்ணி தேத்தண்ணி கொண்டு வந்து தந்தாள்.. அவளது குழந்தை என்னை நெருங்கி எனது தலைமுடியைப் பற்றி இழுத்தது..

வீடென்பது அறைகள் கொண்ட கட்டிடடம் அல்ல.. அது மனிதர்கள்.. கவனிப்புகளும் கனிவுகளாலும் நம்மை ஆட்கொள்கின்ற மனிதர்கள் நிறைந்த சொர்க்கம். துயரங்கள் என்னை அண்டாமல் காத்துநிற்கிற வேலி.. நான் விட்டுவிட்டு வந்திருப்பது கட்டிடத்தை அல்ல அந்த மனிதர்களின் கனிவை.. இனி எப்போது மறுபடி திரும்பமுடியும் என உறுதியாகச் சொல்ல முடியாத தொலைவுக்கு வந்துவிட்டேன்.. உலகெங்கும் தன்மையின் கொடுநிழலில் வசிக்கநேர்கிற ஒவ்வோரு தனியன்களினதும் துயரம் இதுவாகத்தானே இருக்கும்.. ஹரி எனக்காக ஒரு நான்கு சுவர்கள் கொண்ட கட்டிடத்தை வாடகைக்கு மறுபடி.. எடுத்துக் கொடுத்தான். அந்தகட்டிடமும் வீடாக முடியாது என்பதை நான் இப்போது உணர்ந்து கொண்டேன்.. நான் இனி எப்போது ஒரு வீட்டில் வசிக்கத் தொடங்குவேன்.. என் தம்பின்னு சொல்லியிருக்கேன்.. நீ சிலோன் அது இதுன்னு.. சொல்லாத.. ஹரி என்னிடம் சொன்னான். வீட்டுக்காரர் என்னை ஒரு சேட்டாக எண்ணுகிறார்.. அவரது விழிகளில்..ஒரு சந்தேகம் முளைத்துக் கிடக்கிறது.. கறுப்பு நிறத்தில் ஒரு சேட்டா இருப்பார்களா? இந்தக் கட்டிடமும் என்னை வெளியே தள்ளலாம்.. அதுவரைக்கும் அதன் சுவர்களிற்குள்ளிருந்து கொண்டு...

Pin It