தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து. (சென்ற இதழ் தொடர்ச்சி)

தேச விரோதிகள், அரசியல் சட்டத்தை மதிக்காதவர்கள் என்று கூக்குரல் போடுவோர், எத்தகைய ‘தேசபக்தர்கள்’? நாம் கேட்பது, “நீங்கள் கூறும் தேசபக்தியின் அளவுகோலை உங்களுக்கே பொருத்திப் பாருங்கள்” என்பது தான். சட்டங்களையோ, அரசு அமைப்பையோ விமர்சித்துப் பேசுவதே ‘தேசவிரோதம்’ என்றால், சங்பரிவாரங்களே! உங்களின் வரலாறு என்ன என்பதுதான் நமது கேள்வி!

இந்திய அரசியல் சட்டம் குறித்து 1993ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி ஆர்.எஸ்.எஸ். ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அந்த வெள்ளை அறிக்கை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இந்துக்களுக்கு எதிரானது என்று கூறுகிறது. இவர்கள்தான், இப்போது அம்பேத்கரையும் தங்கள் ‘இந்துத்துவ’ அணியில் இழுத்துக் கொண்டு தலித் மக்களை ஏமாற்றலாம் என்று கனவு கண்டு கொண்டிருக் கிறார்கள். அந்த அரசியல் சட்டம் குறித்த  வெள்ளை அறிக்கையின் முன்னுரை இவ்வாறு கூறுகிறது (முன்னுரை எழுதியவர் சுவாமி ஹீரானந்த்):

“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முதலில் செயலிழக்கச் செய்ய வேண்டும். அதற்குப் பிறகுதான் நம்முடைய (இந்துக்களுடைய) பொருளாதாரக் கொள்கை நீதித் துறை மற்றும் நிர்வாக அமைப்புள்ள மற்ற தேசிய நிறுவனங்கள் ஆகியவை குறித்த மறு சிந்தனையில் ஈடுபட வேண்டும். அதனை (அரசிய லமைப்புச் சட்டத்தை) முழுமையாக ஒதுக்கித் தள்ளுவதற்கே முன்னுரிமை தரப்படவேண்டும். இந்த அரசியல் அமைப்புச் சட்டம் விளைவித்த தீங்கு களுடன் ஒப்பிடும்போது 200 ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுத்திய சேதாரங்கள் மிகவும் குறைவானதே. பாரதத்தை இந்தியாவாக மாற்றுவதற்கான சதி தொடர்கிறது.”

(ஆதாரம்: ஏ.ஜி. நூரானியின் ‘ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும்’ நூல்)

இதுதான் அரசியல் சட்டம் குறித்த ஆர்.எஸ்.எஸ். பார்வை. பிரிட்டிஷ் ஆட்சி கொடுமையைவிட மிகவும் கொடுமையானது அரசியல் சட்டம் என்று கூறுவதற்கு இவர்களுக்கு உரிமை இருக்கும்போது அந்த அரசியல் சட்டத்தை விமர்சிக்கும் உரிமை மற்றவர்களுக்கு கிடையாதா?

1942ஆம் ஆண்டு, காந்தி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை அறிவித்தபோது, ஆர்.எஸ்.எஸ். தேசபக்தர்கள் அந்த இயக்கத்தை ஆதரித்தார்களா? எதிர்த்தார்களா? ‘தேசபக்த திலகங்கள்’ பதில் சொல்ல வேண்டும். அந்த இயக்கத்தையும் காந்தியையும் எதிர்த்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு துணை நின்றது ஆர்.எஸ்.எஸ். மறுக்க முடியுமா? காங்கிரஸ் வரலாற்றை எழுதியுள்ள பட்டாபி சீத்தா ராமையா, தனது நூலில் இது குறித்து பல்வேறு செய்திகளை பதிவு செய்துள்ளார். இந்த ‘தேச பக்தர்களின்’ முகத்திரையை கிழித்து தொங்க விட்டிருக்கின்றது, அந்த வரலாறு. அவற்றை இவ்வாறு பட்டியலிடலாம்.

• காந்தி கைது செய்யப்பட்ட அதே நாளில் “காங்கிரஸ் கட்சியின் பிரிட்டிஷ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு காட்ட வேண்டாம்” என்று சாவர்க்கர் (சங்பரிவாரங்களின் முன்னோடி இவர்தான்) இந்துக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

• அரசுப் பணிகளில் இருக்கும் ‘இந்துக்கள்’ காந்தியின் இயக்கத்தை ஆதரித்து பதவி விலகாமல் தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்று இந்து மகாசபையின் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது.

• இந்து மகாசபையின் கதை இது என்றால் ஆர்.எஸ்.எஸ். கதை என்ன? காந்தியின் இயக்கத்தால் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப் பட்டு விடக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த கோல்வாக்கர் அஞ்சினார். இராணுவத்தைப் போன்ற உடற்பயிற்சி களுக்கு பிரிட்டிஷ் அரசு தடை விதித்தது. உடனே ஆர்.எஸ்.எஸ். நடத்தி வந்த உடற்பயிற்சியை நிறுத்திக் கொண்டது. அரசு சார்பற்ற அமைப்புகளைச் சார்ந்தவர்கள் சீருடை எதையும் அணியக் கூடாது என்று பிரிட்டிஷ் ஆட்சி தடை விதித்தவுடன் ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிவதை நிறுத்தி விட்டது. இராணுவ அணி வகுப்புப் பயிற்சி களை நிறுத்தி விட்டதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வாக்கர் அறிவித்தார்.

• கோல்வாக்கர் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான சட்டமறுப்பு இயக்கத்தை ஏற்காமல் சட்டத்துக்கு உடன்பட்டு நிற்க வேண்டும் என்று  குறிப்பிட்டிருந்தார். இது தற்காலிகமான ஒரு நடவடிக்கை என்று, சங்பரிவாரங்கள் நியாயம் கற்பிக்கின்றன. கோல்வாக்கர் சுற்றறிக்கை இதையும் தெளிவு படுத்துகிறது. “சட்டத்துக்கு கீழ் பணிந்து நடக்கும் எந்த அமைப்பும் இப்படித்தான் செயல்பட வேண்டும்.

 ‘இது தற்காலிகமான நிறுத்தம்; சூழ்நிலைகள் விரைவில் மாறும்’ என்று கூட நாம் கூறலாம். ஆனால் நாம் அப்படி கூறத் தயாராக இல்லை; நாம் நமது பயிற்சிகளை சீருடை அணி வகுப்பை முழுமையாக நிறுத்தி விட்டோம். காலம் மாறும் என்று நாம் காத்திருக்கப் போவது இல்லை. பயிற்சிகள் தொடர்பாக நமது அமைப்பின் தனிப் பிரிவையே கலைத்து விட்டோம் என்று கூறுகிறது கோல் வாக்கரின் சுற்றறிக்கை.. (ஆதாரம்: வால்டர் கே. ஆன்டர்சன் - ஸ்ரீதர் டி. டாம்ப்லே இணைந்து எழுதிய ஆய்வு நூல் “The Brotherhood in Saffron””)

• ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ பற்றி பம்பாய் மாநில உள்துறை நிர்வாக அறிக்கை இவ்வாறு கூறியது: “குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். 1942இல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு இயக்க’ங்களில் நடந்த கலவரங்களில் பங்கேற்கவில்லை” என்று கூறியது. பிரிட்டிஷ் ஆட்சியிடம் ஆர்.எஸ்.எஸ். பெற்ற நன்னடத்தை சான்றிதழ் இது. இதுதான் அவாளின் தேசபக்தி.

• அது மட்டுமா? ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ நடந்தபோது வங்காளத்தில் நடந்த மாகாண ஆட்சிக்கு தலைவர் (அப்போது பிரதமர் என்ற பெயர் - முதல்வர் அல்ல) முஸ்லிம் லீக் கட்சியைச் சார்ந்த பஸ்லுல்ஹக். (குறிப்பு: பிரிட்டிஷ் ஆட்சி 1935இல் இந்தியாவுக்காக ஒரு சட்டத்தை உருவாக்கி, அதனடிப்படையில் இந்தியாவில் மாகாணங்கள் தேர்தல் நடத்தி ஆட்சி அமைக்கும் உரிமையை வழங்கியிருந்தது) முஸ்லிம் தலைமையிலான வங்காள அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் சியாம் பிரசாத் முகர்ஜி எனும் வங்காள பார்ப்பனர். ‘ஜன சங்கம்’ என்ற ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் கட்சியை நிறுவியவர் இவர்தான். ஆர்எஸ்.எஸ் ‘குடும்பத்தின்’ வழி காட்டும் தலைவராக ஏற்கப்பட்டவர். காந்தி - ஒத்துழையாமை இயக்கத்தை அறிவிப்பதற்கு 10 நாட்கள் முன்பே மாகாண கவர்னருக்கு முகர்ஜி ஒரு கடிதம் எழுதினார். அதில், “இரண்டாவது உலக யுத்தம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நடக்கும் கிளர்ச்சிகளை மாகாண அரசாங்கம் எதிர்த்தாக வேண்டும்” என்று பிரிட்டிஷ் கவர்னருக்கு கடிதம் எழுதி ஆலோசனை கூறினார்.

சர். ஜான் ஹெட்பாட் என்பவர் அப்போது இந்த மாகாணத்தின் ஆளுநராக இருந்தார். இரும்புக் கரம் கொண்டு இயக்கங்களை அடக்குபவர் என்று பெயர் பெற்றவர், இந்த ஆளுநர். அதன்படி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினர் மீது வங்காளத்தில் மிருகத்தனமான அடக்குமுறை ஏவி விடப்பட்டது. ஒத்துழையாமை இயக்கத் துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதை யும் தாண்டி, அதை எதிர்த்தார்கள். அமைச்சர்களாக உட்கார்ந்து கொண்டு பிரிட்டிஷ் கவர்னருக்கு அடக்குமுறைகளை ஏவிவிட ஆலோசனை வழங்கியவர்கள் இவர்கள்!

மெரினா கடற்கரையில் ‘தேச விரோதிகள்’ ஊடுருவி விட்டார்கள் என்று மிரட்டிப் பார்க்கும் தேசபக்த கொழுந்துகளே! உங்கள் தேசபக்தியின் கதையை திருப்பிப் பாருங்கள்! இந்த வரலாறு யாருக்குத் தெரியப் போகிறது என்று நினைத்து விட்டார்கள் போலும்! சரி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கதை என்ன?

• ம.பி. மாநிலத்தில் படேஸ்வர் எனுமிடத்தில் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ தொடர்பாக கலவரத்தில் ஈடுபட்டதாக வாஜ்பாய் அவரது சகோதரர் பிரேம் பிகார் லால் பாஜ்பாய் உள்ளிட்ட சிலரும் கைது செய்யப்பட்டனர். அப்போது இந்த கலவரத்தில் பங்கேற்று கைது செய்யப்படாமலிருந் தவர்களின் பெயர்ப் பட்டியலை காவல் துறையிடம் ஒப்படைத்து அவர்களைக் காட்டிக் கொடுத்து மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விடுதலையானவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். இந்த மன்னிப்பு கடிதத்தையே ஆவணக் காப்பகத்தி லிருந்து தேடிப் பிடித்து ‘பிரன்ட் லைன்’ பத்திரிகை வெளியிட்டது; மறுக்க முடியுமா?

தேச பக்திக்கு ‘குத்தகைப் பாத்தியதை’ கொண்டாடும் இவர்களின் கதையை ஏராள மாகப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

(தொடரும்)