இராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து ‘ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு’ சார்பாக, சென்னை, வள்ளுவர் கோட்டம் முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை அதில் பங்கேற்றுள்ள அமைப்புகள் நடத்தியுள்ளன. ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு பங்கேற்ற திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், இன்றைய தினம் ஈழத் தமிழர்களின் உரிமைகளைக் காவு கொடுத்து, பா.ஜ.க.வின் நரேந்திர மோடி அரசும்-சிங்கள இன வெறி அரசின் பிரதமரான இராஜ பக்சேவும் இணைந்து நடத்திடும் ஈழத் தமிழரின் தேசிய இன அடையாளமழித்து, அங்கு ஒற்றை ஆட்சி முறையை, ஆழ வேரூன்றச் செய்வதற்காக மேற் கொள்ளும் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தி உரையாற்றினார். அவரது உரையில் குறிப்பிட்டதாவது :

இலங்கைப் பிரதமர் மஹிந்த இராஜபக்சே 5 நாள் அரசு முறைப் பயணமாக 07.02.2020 அன்று புது டெல்லிக்கு வருகை தந்திருக்கிறார். இவரை விமான நிலையம் சென்று வரவேற்றிருக்கிறார், இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சஞ்சய் தோட்ரே.

“இராஜபக்சே புதுடெல்லிக்கு வருகை தந்திருக் கிறார். ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பற்றியோ, ஏற்கனவே ‘காணாமல் போனவர்கள்’ இறந்து விட்டார்கள் என்று திமிரோடு அறிவித்துள்ள அதிபர் கோத்தபயாவின் அறிவிப்பு - மாபெரும் இனப்படுகொலை அல்லவா என கேட்பதற்கோ, ஈழத்தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் வழங்குவதற்கான இராஜீவ் காந்தியால் இலங்கை அரசுடன் போடப்பட்ட 13ஆவது அரசமைப்புச் சட்ட அமலாக்கம் பற்றியோ, தமிழர் பகுதிகளில் இருந்து முற்றாக இராணுவத்தை வெளி யேற்ற வேண்டும் என வலியுறுத்துவதற்காகவோ இராஜ பக்சேவை, இந்தியா அழைக்கவில்லை. இந்த அழைப்பிற்குப் பின்னால்,வேறுபல அரசியல் காரணிகள் இருப்பதாக ஆங்கில நாளேடுகள் செய்திகளை விரிவாக வெளியிட்டுள்ளன. இலங்கை அரசு, திருப்பிச் செலுத்த முடியாத அளவிற்கு சீனாவின் கடன் வலையில் சிக்கி மீள முடியாது உள்ளது. எனவே, இந்தியா, இலங்கைக்குப் புதிய உதவிகளைச் செய்வதற்கான அறிவிப்புகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே, அதிபர் கோத்தபயா வந்தபோது இந்தியா, இலங்கைக்கு 450 மில்லியன் டாலர்களை நிதியாக அளித்தது. அதிலே, 50 மில்லியன் டாலர்களை இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகத் தருவதாக அறிவித்தது இந்தியா. ஏற்கனவே,பயங்கரவாத நாடாக ஈழத் தமிழர்களைக் கொன்றழித்துள்ள இலங்கைக்கு, பயங்கரவாத ஒழிப்புக்கு தனி நிதி தருவது எஞ்சியுள்ள தமிழர்களையும் கொன்று குவிப்பதற்கா? கடந்த முறை இராஜ பக்சே அதிபராக இருந்தபோது, சீனாவுடன் நெருக்கமான உறவு கொண்டு, சீனா ஏராளமான முதலீடுகளை இலங்கையில் செய்வதற்கும், அம்பன் தோட்டா துறைமுகம், சாலை வசதிகள் என பல பில்லியன்களை முதலீடு செய்வதற்கும் துணை போய், அந்நாட்டோடு மிக நெருக்கமான உறவினைக் கொண்டிருந்தார். இந்தப் பிணைப்பால் எரிச்சலுற்ற இந்தியா, இலங்கையைத் தன் பக்கம் இழுக்கவும், இராஜபக்சேவை ஆட்சியை விட்டு அகற்றவும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. இதனால், எதிர்க் கட்சிகளாக இருந்த சிறீசேனா-இரணில் விக்கிரம சிங்கே இடையே கூட்டணியை ஏற்படுத்தி, ராஜபக்சேவை வீழ்த்து வதற்கு இந்தியா,தனது இராஜதந்திர நடவடிக்கை களை மேற்கொண்டது. இதனை அறிந்த ராஜ பக்சே, ‘இந்தியா தனக்கு எதிராகச் சதி செய்வதாகவும், இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் உயரதிகாரியாக இலங்கையில் பணியி லிருந்த இளங்கோ உடனடியாக வெளியேறிட வேண்டும்' எனவும் உத்திரவிட்டார். இவ்வாறு வெளியேற்றப்பட்டு, டில்லி திரும்பிய அதிகாரிக்கு அதைவிட உயர் பதவி அளித்தது பாஜக அரசு. தேர்தலில் ராஜபக்சே தோல்வியடைந்து சிறீசேனா- ரணில் கூட்டணி ஆட்சி அமைத்தும், அது நிலையான ஆட்சியாக தொடர முடியவில்லை.

இந்தச் சூழலில், சிறீசேனா தலைமையிலான ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும், கோத்தபயா அதிபர் ஆவதற்குமாகவே, இலங்கையில் கிறித்துவ தேவாலயங்கள் மீது இஸ்லாமியத் தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ‘Frontline’ ஏடானது முக்கியச் செய்தியினை வெளியிட்டது. இந்த வெடி குண்டுத் தாக்குதல் பற்றி விசாரணை நடத்திய இலங்கை நாடாளுமன்றத் தேர்வுக் குழு வெளியிட்ட அறிக்கையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்தன. குண்டு வெடிப்புச் சதி வேறு எந்த வெளி நாட்டிலிருந்தும் தீட்டப்பட வில்லை; அது உள் நாட்டிலேயே தீட்டப்பட்ட சதி என்றும், இலங்கைப் புலனாய்வு அமைப்புகளுக்கு இதுபற்றி தகவல் தெரிய வந்தும் அதனைத் தடுக்க முன்வரவில்லை என்றும், இது குறித்து இந்திய அரசு முன்கூட்டியே எச்சரித்தும், அது கண்டு கொள்ளப் படவில்லை என்றும், இந்த குண்டுவெடிப்பு சதியின் முக்கிய நோக்கமே மீண்டும் இராஜபக்சே சகோதரர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே என்றும் இலங்கை நாடாளுமன்றத் தேர்வுக் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

குழுவின் அறிக்கை மேலும் இவ்வாறு கூறியது: “கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சு குறித்து புலனாய்வுத் துறையிலுள்ள ஒரு பிரிவு முன் கூட்டியே தகவல் தெரிந்த நிலையிலும் ஏன் அலட்சியம் காட்டியது என்பதை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், எந்த இஸ்லாமிய அரசுகளும் இந்த குண்டு வெடிப்பை நடத்தவில்லை. இது இலங்கையிலே உருவான உள்நாட்டு சதி என்றும் அறிக்கை கூறியது. கிறிஸ்தவர்கள்மீது நடந்த குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து, பாதுகாப்புத் துறை செயலாளராக ஹேம சிறீபெர்னாண்டோ என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் நடத்திய தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் குண்டு வெடிப்புக்கு பொறுப்பு ஏற்பதாக அறிவித்த ‘தேசிய தவ்ஹீத் ஜமாத்’ என்ற அமைப்பு குறித்தோ அதன் செயல்பாடுகள் குறித்தோ எந்த விவாதமும் நடந்து விடாமல் தவிர்க்கப்பட்டதோடு, தொடர்பில்லாத வேறு பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தந்து விவாதிக்கப்பட்டன. சதி உள் நாட்டிலேயே உருவானது என்பதை மறைப்பதற்கான முயற்சியா என்பது குறித்து விசாரிக்க வேண்டும்” என்று நாடாளுமன்றக் குழு அறிக்கை (அக். 30, 2018இல் வெளியானது) கூறுகிறது. இத் தகவல்களை யெல்லாம் ‘பிரண்ட் லைன்’ ஆங்கில ஏடு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி இரண்டு கட்டுரைகளை வெளியிட் டிருக்கிறது. (2019, ஜுலை 15 மற்றும் 2019 நவம்பர் 22, இதழ்கள்.

மக்களை பாதுகாக்கத் தவறிய சிறீசேனா அரசு என்று செய்யப்பட்ட பிரச்சாரத்தால், திட்டமிட்ட படி, கோத்தபயா-இராஜபக்சே சகோதரர்கள் இலங்கை ஆட்சியைக் கைப்பற்றி விட்டனர் இந்தச் சூழ்நிலையில் தான், இலங்கை அதிபராகிய கோத்தபயா கடந்த நவம்பர் மாதமும், இப்போது ராஜபக்சேவும் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.

இடையே இலங்கை வெளிவிவகார அமைச்சரும் டெல்லிக்கு வந்து மோடியைச் சந்தித்துச் சென்றுள்ளார். இதனூடாக, இந்திய வெளிவிவகார அமைச்சர், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும் கொழும்பு சென்று திரும்பினர். இந்தப் பின்னணியில், ராஜபக்சேவின் 5 நாள் வருகையில், இந்தியப் பெருங்கடலில் சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துகின்ற வகையில், இந்தியா, இலங்கை, மாலத்தீவு நாடுகளுக்கு இடையே கப்பல் படை கண்காணிப்பு ஒப்பந்தம் ஒன்று உருவாகிக் கொண்டிருப்பதாகவே ஆங்கில ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. எனவே, சீனாவின் கடன் வலை, முதலீட்டு வளையங்களில் இருந்து இலங்கையை மீட்டு, தன் பக்கம் இழுக்கவேண்டும் என்ற நோக்கத்துடனும், இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் உடன்பாடு ஒன்றை உருவாக்கவும் இந்தியா செயல்படுகிறதே தவிர, ஈழத் தமிழர்களின் நலன் மீது எந்த அக்கறையும் மோடி அரசுக்கு இல்லை.

மோடியை சந்தித்தப் பிறகு இராஜபக்சே அளித்த பேட்டியில் - இருநாடுகளுக்கிடையே வர்த்தக இராணுவ உறவுகளை வலிமைப்படுத்துவது குறித்தே பேசினோம் என்று கூறியதோடு, ஈழத் தமிழர்களுக்கு 13ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் உரிமைகள் வழங்குவதை பெரும்பான்மை சிங்களர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று வெளிப்படையாகவே பேட்டி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி ஈழத் தமிழர் உரிமைகள் பற்றி விவாதித்ததாக மோடி தரப்பில் வெளியான அறிக்கை - தமிழர்களை ஏமாற்றும் கண்துடைப்பு என்பதை ராஜபக்சேவே அம்பலப்படுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தேசிய கீதத்தில் தமிழில் இசைக்கப் பட்டது நீக்கப்பட்டு உள்ளது. மாவீரர் நாளுக்கு தம் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தத் செல்லும் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள், யாழ். பல்கலை மாணவர்கள் மிரட்டப்படுகிறார்கள். சிங்கள அரசு, தமிழர் அடையாளங்களை இல்லாதொழித்து, அங்கு ஒற்றை இன ஓர்மையைத் தமிழர்கள் மீது இராணுவத்தைக் கொண்டு திணித்து வருகிறது. இதே பாணியில், இந்தியாவிலும், மோடியின் காவி ஆட்சி, மாநில உரிமைகளைப் பறித்து, தேசிய இனங்களின் அடையாளங்களைச் சிதைத்து ‘இந்திய’ ஓர்மையை திணித்திடத் துடிக்கிறது. இந்தப் பின்னணியில் தான், இலங்கை அரசினைக் குளிர வைத்திட, ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை இல்லை என்று மோடி அரசு அறிவித்திருக்கிறது.

மொத்தத்தில், தங்களது புவிசார்-பூகோள நலன்களுக்காக இந்திய-இலங்கை அரசுகள் ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை காவு கொடுத்துள்ளன. எனவே, உலகத் தமிழ்ச் சமுதாயம், இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும், தமிழர் களிடையே வாக்கெடுப்பு நடத்தி தேசிய சுய நிர்ணய உரிமையைப் பெற வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை மட்டும் முன்வைத்து சர்வதேச அரங்குகளில் போராடிட முன் வரவேண்டும் என உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் விடுதலைக் கழகம், இளந் தமிழகம், மே-17 உள்ளிட்ட அமைப்புகளின் தோழர்கள் கலந்து கொண்டனர்.