பெரியார் இயக்கத்தை நோக்கி சமூக வலைதளங்களில் பார்ப்பனிய சக்திகள் முன் வைத்து வரும் கேள்விகளுக்கு நெத்தியடி பதில்.

கேள்வி: ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று ‘பிராமணனையே’ குறி வைக்கின்றீர்களே... தமிழகத்தில் ‘பிராமணரைத்’ தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா? அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா?

பதில் : ‘பிராமணர் என்பது ஜாதி அல்ல; இது ‘வருணம்’ ஆகும். பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருண பேதங்களில் தலைமைத்துவம் தாங்கி, சாதிப் பாகுபாடுகளை உருவாக்கி மக்களை இழிவுபடுத்தி வருவதே ‘பிராமண’ வருணமாகும்.

பிரம்மாவின் முகத்தில் இருந்து தோன்றியதாகக் கூறப்படும் ‘பிராமண வருணத்தாருக்கு’ ஏனையோர் பணி செய்து கிடப்பதே கடமையாகும் என்பதால், கீழுள்ள அனைவரும், அவர்தம் சாதிகளும், பிராமணரின் ஏவலர்களாக, ஒரே வர்ணமாக ‘சூத்திரர்கள்’ எனக் குறிக்கப்பட்டு விட்டனர்.

‘சூத்திரர்கள் யார்’ என மனுதர்ம சாஸ்திரத்தில் ஏழு வகையாக எழுதப்பட்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ‘இந்து லா’ எனும் பிரிவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு விட்டது.

அந்த ஏழு குணாம்சங்களில் ஒன்று, பிராமணர்களின் வேசிகளுக்குப் பிறந்தவர்கள் என சூத்திர மக்களாக, தமிழ் மக்களை இழிவுபடுத்தியுள்ளது. தமிழர்கள் மட்டுமின்றி, இந்நாட்டுப் பழங்குடி மக்களான மண்ணின் மைந்தர்கள் அனைவரையும் இழிவுபடுத்துகிறது. எனவேதான், சாதி இழிவுகளைக் கற்பித்து, சூழ்ச்சியுடன் அதனை அரசமைப்புச் சட்ட விதிகளில் புகுத்திவிட்ட ‘பிராமண வருணத்தை’ எதிர்த்து வடக்கே அண்ணல் அம்பேத்கரும், தெற்கே தந்தை பெரியாரும் போர் தொடுத்தனர்.

சாதி வேறுபாடுகளைக் கற்பித்துப் பரப்பி விட்ட மூல விசையை எதிர்த்தே பெரியாரியக்கம் போராடுகிறது. அந்த வேர் வெட்டப் பட்டதும், ஏனைய ஜாதிக் கிளைகள் பட்டுப் போய்விடும். இதனை பெரியாரியக்கம் தொடர்ந்து செய்து வெற்றி பெற்றே தீரும்.

கேள்வி : கடவுள் இல்லை என்று கூறும் நீங்கள் கிறிஸ்து இல்லை, அல்லா இல்லை என்று தைரியமாகக் கூற முடியுமா?

பதில் : கடவுள் இல்லை என்று கூறப்படும் கருத்து, உலகத் தோற்றத்தைப் பற்றிய கருதுகோளை அடிப்படையாகக் கொண்டது. இது பற்றி உலகில் 80 சதவீதமான மக்கள் அறிவியல் பார்வையைப் பெற்று விட்டனர்.

ஆக, உலகத் தோற்றமானது, பொருள் முதல்வாதக் கருத்துடையது என்பதே கடவுள் மறுப்பாளர்களின் உறுதியான நிலைப்பாடு இல்லை... இல்லை... இவ்வுலகம் தத்தமது கடவுளர்களால் படைக்கப்பட்டது என்போர், கருத்து முதல்வாதிகளாவர். வளர்ந்து வரும் விஞ்ஞானக் கருத்துகள், கருத்து முதல் வாதத்தை வீழ்த்தி, பொருள் முதல்வாதத்தை வெற்றி பெற வைத்துள்ளது என்பது கண்கூடு.

மேலை நாடுகளில் இங்கர்சால் போன்ற பேரறிஞர்களும், ஜீன் மெஸ்லியர் போன்ற பாதிரிமார்களும், கிறிஸ்துவத்தை மறுத்துக் கருத்துப் புரட்சி செய்தவர்களாவர். இவர்களது கருத்துகளை தமிழ்நாட்டில் கேள்வி கேட்பவரின் மூதாதையர் கோவணம் கட்டாது திரிந்த பால்யப் பருவத்திலிலேயே, பெரியாரவர்களால் தமிழில் ‘ஜீன் மெஸ்லியரின் மரண சாசனம்’ என்ற தலைப்பில் மூன்று பாகங்கள் வெளியிடப்பட்டது. ‘பைபிலோ பைபிள்’, ‘நான் ஏன் கிறித்துவனல்ல’என்ற நூல்களும் வெளியிடப்பட்டது. இந்த மதவாத எதிர்ப்புக் கருத்துகளையேற்று, பெரியாரியக்கத்தில் நாகை பாட்சா உள்ளிட்ட பிறப்பால் இஸ்லாமியர்களாக இருந்தவர்களும், அண்மையில் படுகொலை செய்யப்பட்ட தோழர் பரூக் போன்ற போராளிகளும் தங்களை இணைத்துக் கொண்டு களப் போராளி களாக செயல்பட்டனர். எனவே, எம்மை இழிவுபடுத்தும் ஆரியப் பார்ப்பன காவி இந்து மதத்தை எதிர்த்துக் களமாடும் வேளையில், எம்மை திசை திருப்பும் நோக்கம் கொண்டதே உமது கேள்வி.

கடவுளர்கள் எந்த மதமானாலும் அதை எதிர்த்து, அறிவொளி பரப்பிடும் துணிவு எமக்கு எப்போதும் உண்டு. வேத மதத்தை இந்து மதமாக்கி பெரும்பான்மை இந்துக்களை சூத்திரர்களாகவும் தீண்டப்படாதவர்களாகவும் வைத்திருக்கும்போது அதை எதிர்ப்பதே எங்கள் முதன்மைப் பணி. சொந்த வீட்டுக்குள் தான் முதலில் ஓட்டையை அடைக்க வேண்டும்.

கேள்வி : தியாகராஜர் ஆராதனையைக் கேலி செய்யும் உங்களுக்கு முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை கேலி செய்து அறிக்கை விடும் அளவுக்கு தைரியம் இருக்கிறதா?

பதில் : முதலில் எவரையும் ‘கேலி’ செய்து மகிழும் போக்கு பெரியார் இயக்கத்தவரிடம் இருந்ததில்லை என்பதை அறிக. விமர்சிப்பது வேறு, கேலி செய்வது வேறு எனும் அடிப்படையை உணராத மன நிலையில் உங்கள் கேள்வி உள்ளது. நிற்க.

‘இசைமேதை’ தியாகராஜய்யரை, பெரும் இசைஞானி யாகக் கருதி ‘அவாள்’ ஏற்றிப் போற்றி பாடுவது இனக் குணம். அவர்களோடு சேர்ந்து ‘சூத்திர’ உல்லாசத் தமிழர்களும் ‘லாலி’ பாடும் அடிமைத்தனத்தையே நாம் எதிர்க்கிறோம்.

தமிழ் இசைக்கு மூலவர்களாக, பார்ப்பனர்கள் தங்கள் இசை மேதைகள் என தியாகய்யர், சியாமா சாஸ்திரி, முத்துசாமித் தீட்சிதர் ஆகியோரைப் பரப்புரை செய்து வருகிறார்களே அது உண்மையா?

இந்த ஆரியப் பார்ப்பனர்களுக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய சீர்காழி முத்துத் தாண்டவர், தில்லை விடங்கம் மாரிமுத்தாப் பிள்ளை, தில்லையாடி அருணாசலக் கவிராயர் ஆகிய தமிழிசை மும்மூர்த்திகள் பல்வேறு இராகங்களையும், ஆலாபனை களையும், இசைக் குறிப்புகளையும், கீர்த்தனைகiயும் தொகுத்துத் தமிழர் இசை வரலாற்றில் முத்திரை பதித்துச் சென்றுள்ளனர். ஆனால், நம்மவர்களான இவர்களை மறைத்து, தாங்களே தமிழிசை மும்மூர்த்திகள் எனத் தம்பட்டம் அடித்து வரும் நிலையை அம்பலப்படுத்தியதே எமதியக்கம் தான். ‘தமிழிசை’ என்பதை மறுத்து, வடமொழி சுரங்களைப் பாடிய மேடையில், தமிழிசை இசைத்ததால், அந்த மேடை தீட்டாகிவிட்டது என தண்ணீரூற்றிக் கழுவிய பாதகர்கள் - தியாகய்யர் வழி வந்த பார்ப்பனர்கள். எனவேதான், தனது இளம் வயதில், ‘குடி அரசில்’ கலைஞர் ‘தீட்டாயிடுத்து’ எனும் தலைப்பில் கட்டுரையே எழுதினார், தேவர் ஜெயந்தி கொண்டாடுவது அந்த இனக் குழு மக்களின் தலைவரைப் போற்றும் செயல். அது தமிழையோ, தமிழரையோ இழிவு செய்வதற்கல்ல. தியாகய்யர் ஜெயந்தி தமிழர் இசையை மறுக்கும் ஈனச் செயல்.

கேள்வி : பிராமணனின் பூணூலை அறுக்கத் துணிந்த உங்களுக்கு ஒரு கிறித்துவனின் சிலுவை டாலரையோ, ஒரு முஸ்லிமின் தொப்பியையோ அல்லது ஒரு சிங்கின் தலைப்பாகையையோ அகற்றும் ‘ஆண்மை’ உண்டா?

பதில்: முதலில் ‘ஆண்மை’ எனும் பதத்தையே பெரியாரியக்க வாதிகள் ஏற்பதில்லை. ஆண்மை எனும் பதம் அழிக்கப்பட்டால்தான் ‘பெண்கள்’ விடுதலை பெறுவர் என்பது பெரியார் கருத்து. மற்றபடி, ‘ஆண்மை’ என்பதே ‘பெண்மை’யைப் காப்பாற்றுவதாகும். நிற்க. ‘பிராமணர்’ யார் என்பது பற்றி முதல் கேள்வியிலேயே எமது பதில் விளக்கமாகவுள்ளது. எம்மினத்தை ‘சூத்திரர்’ எனச் சுட்டிக் காட்டும் அடையாளமாக, தம்மை ‘பிராமணராக’அடையாளம் காட்டிடும் உயர் வருணத் திமிரின் வெளிப்பாடாகவே நாம் ‘பூணூலை’க் கருதுகிறோம். எனினும் இதுவரை ‘பூணூல் அறுப்புப் போராட்டம்’ என எதனையும் பெரியார் இயக்கத்தவர், அய்யா காலம் முதல் இதுவரை அறிவித்ததில்லை. தற்போது நாடு போகும் நடப்பு நிலை காண்கையில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்க அத்தகையப் போராட்டங்களை நடத்த நேரிடுமோ என அஞ்சுகிறோம்.

‘பூணூல்’ எம்மை சட்டப்படி, சாஸ்திரங்களைக் காட்டி, ‘இந்துலா’ எனும் பிரிவுப்படி, பார்ப்பனரின் வேசி மக்களாக அறிவிக்கும் சாதனமாக இருப்பதால், பெரியாரியக்கம், மக்களிடையே அதன் உண்மைத் தன்மையை எடுத்து விளக்கிப் பிரச்சாரம் செய்கிறது. ஆனால், ஒரு போதும் வன்முறையில் ஈடுபடுவதையோ பூணூலை அறுத்திடவோ பரிந்துரைக்கவில்லை.

சில வேளைகளில், பெரியார் சிலைகள் அவமதிக்கப்படும்போதும், எமது தலைவர்களை காவிக் கூட்டத்தினர் இழிவு செய்து பேசும் போதும், ஆங்காங்கு இளைஞர்கள் உணர்வு வயப்பட்டு, பூணூல் அறுப்பு நிகழ்வுகளில் ஈடுபட்டதுண்டு. அதற்காக தண்டிக்கப்பட்டு, பல மாதங்கள் சிறையேகியும் உள்ளனர்.

கிறித்துவர் உள்ளிட்ட எவரது அடையாளமும் அவரது நம்பிக்கையின் பாற்பட்டதே தவிர, பிற மக்களை இழிவுபடுத்தும் அடையாளங்கள் அல்ல. எனவே, அவற்றை நோக்கிப் போர் தொடுக்க வேண்டிய தேவையும் இல்லை.

மதத்தின் அடையாளங்களான சிலுவையும், தொப்பியும், தலைப் பாகையும், அம்மதக்காரர்கள் அனைவரும் அணிந்து கொள்ளலாம். அவை சொந்த மதக்காரர்களை இழிவு செய்யவில்லை. அடுத்த மதக்காரர்கள் தங்களுக்குக் கீழானவர்கள் என்று அறிவிக்கவும் இல்லை. ஆனால் ‘பூணூல்’ அணியும் உரிமை ‘இரு பிறப்பாளரான’ பிராமணர்களுக்கு மட்டுமே உண்டு என்று கூறி, ஆண்டுதோறும் காயத்ரி மந்திரம் ஓதி, பூணூலை புதுப்பித்துக் கொள்கிறீர்கள். சரி; ஒரு கேள்வி. ஒரு சூத்திரனோ பஞ்சமனோ பூணூல் அணிந்து கொண்டு தன்னை பிராமணனாக்கிக் கொள்வதை உங்களது மதம் ஏற்குமா?

‘நெத்தியடி’ தொடரும்