கீற்றில் தேட...

இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரைக்கு வந்த மோடியை தமிழகமே எதிர்த்து நின்றது. உள்ளுக்குள் பொறுமியவாறு சடங்குத்தனமாக உரையாற்றி விட்டு பறந்தார் மோடி. நேரில் வந்தால் மட்டும் என்றில்லை ‘நேரலை’யில் வந்தாலும் அதே சம்பவம்தான் என்பதை செய்து காட்டியிருக்கின்றனர், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்.

“தேர்வு கால பதற்றத்தை கையாள்வது எப்படி’’ என்பது மோடியின் நிகழ்ச்சிகளுள் ஒன்று. இந்தியில் இதற்குப் பெயர் “பரிக்ஷா பே சர்ச்சா 2.0’’ பதட்டம் குறையுதோ இல்லையோ நிகழ்ச்சியின் பெயரைக் கேட்டாலே மாணவர்களுக்கு எரிச்சல் வருவது நிச்சயம். இந்த நிகழ்ச்சியை மாணவர்கள் நேரலையில் கண்டு பயன்பெறுவதற்கு ஏற்ப ஏற்பாடுகளை செய்யச் சொல்லி “மேலிட உத்தரவாம்’’. கல்லூரியின் பெரியார் கலையரங்கத்தில் ‘படம் காட்ட’ ஏற்பாடுகளை செய்திருந்தது கல்லூரி நிர்வாகம். இந்நிகழ்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு வருகைப் பதிவு கிடையாது என மிரட்டி வரவழைத்திருக் கின்றனர். இவற்றையெல்லாம் காணச் சகிக்காத முற்போக்கு மாணவர்கள் சிலர், “கல்லூரி கலையரங்கமா, மோடியின் விளம்பர இடமா’’ என்று கேள்வி எழுப்பி அரங்கம் அதிர கலகம் செய்தனர். “எக்ஸாம் ஸ்ட்ரசுக்கா நடத்துறியா? எலெக்சன் ஓட்டுக்கா நடத்துறியா?’’ என்ற முழக்கங்களை எழுப்பினர். முற்போக்கு மாணவர்களுக்கு ஆதரவாக, கூடியிருந்த மாணவர்கள் எழுப்பிய கரவொலியும் விசில் சத்தமும் காதை பிளந்தது. மோடியின் நேரலை நிகழ்வும் அதோடு நிறுத்தப்பட்டது. மாணவர்கள் உற்சாகத்தோடு கலைந்து சென்றனர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை மத அடையாளமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் படி மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் முகப்பை ஒரு குறிப்பிட்ட மத அடையாளமான கோபுர வடிவில் அமைப்பது இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதசார்பற்ற தன்மைக்கு எதிரானது என்பதால் அந்த வடிவமைப்பை கைவிட வேண்டும் என்றும் மேம்படுத்தப்படும் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியாரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட வேண்டும் என்றும் மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்துத்துவ அமைப்புகள் சார்பில் பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை மீனாட்சியம்மன் பேருந்து நிலையம் என மாற்றவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேட்டியளித்த திராவிடர் விடுதலைக் கழத்தின் மதுரை மாவட்ட செயலாளர் மா.பா.மணியமுதன் பெரியார் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றினாலோ, மத அடையாள வடிவமைப்பை வைத்தாலோ தோழமை அமைப்புகளுடன் இணைந்து போராட்டம் அறிவிக்கப்படும் என அறிவித்தார்.

தற்போது “தந்தை பெரியார் பேருந்து நிலையம் எனும் பெயர் மாற்றப்படாது” என மதுரை மாநகராட்சி ஆணையர் பேட்டி அளித்துள்ளார்.

சங்கராபுரம் ஆணவப் படுகொலை கண்டனக் கூட்டத்தில் ஜாதி மறுப்புத் திருமணம்

kolathoor mani on honour killingபெரியார் அம்பேத்கர் நினைவு நாட்களை முன்னிட்டு “தமிழக அரசே ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்று” என்கிற தலைப்பில் விழுப்புரம் மாவட்டம் பாக்கம் (சங்கராபுரம்) கிராமத் தில் 19.12.2018 (தி.பி. 2049 புதன்) அன்று மாலை 5 மணி அளவில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

“அன்னை மணியம்மை” இசைக் குழுவினரின் பறை இசை மற்றும் பகுத்தறிவு சாதி ஒழிப்பு பாடல்களுடன் கூட்டம் தொடங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்ட துணைச் செயலாளர் நாகராசன், மாவட்ட அமைப்பாளர் சாமிதுரை பகுத்தறிவுப் பாடல்களை பாடினர்.

கூட்டத்திற்கு இரா.துளசிராசா தலைமை வகித்தார். பெரியார் பிரபு வரவேற்புரை ஆற்றினார். தனிமொழி, சோபனா, முத்துலட்சுமி, செந்தாமரை, சத்யா மற்றும் இராமச்சந்திரன், நீதிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரத்தினசாமி, துரைசாமி, அய்யனார், இராமர்,பெரியார் பாரதிதாசன் ஆகியோர் ஆணவக் கொலைகளின் பாதிப்புகள் குறித்து உரையாற்றினார்கள்.

கூட்டத்தில் சாதி மறுப்பு திருமணமும் நடைபெற்றது. பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் நூரோலையைச் சேர்ந்த ரஷ்யா ஆகிய இணையர்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்தார். இணையர்கள் “புரட்சி பெரியார் முழக்கம்” வார ஏட்டின் வளர்ச்சி நிதியாக ரூ. 2000 வழங்கினர். இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். இராசீவ்காந்தி நன்றியுரையாற்றினார்.