வீட்டு வேலைகள் ஆண்களுக்கு கட்டாயம்; பெண்கள் வீட்டு வேலைக்கு ஊதியம்
“தேர்தல் அரசியல் இல்லாத கியூபா நாட்டில் (ஒற்றைக் கட்சி ஆட்சிமுறை), மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி குடும்பச் சட்டங்களை வகுத்து முதல்முறையாக வெளியிட்டுள்ளது அரசு. LGBT+ (வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட சமூகத்தை உணர்த்தும் குறிப்புச் சொல்) நலன், பெண்கள் நலன், குழந்தைகள் நலன், முதியோர் நலன் உள்ளிட்ட அனைத்து நலன்களும் பேணிப் பாதுகாக்கும்படியாக இக்குடும்பச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வாக்குரிமை உள்ளவர்களில் 74.01% மக்கள் வாக்களித்துள்ளனர். இவர்களில் 66.87 சதவீதத்தினர் புதுக் குடும்பச் சட்டத்திற்கு ஆதரவாகவும் மற்றவர்கள் எதிர்ப்பாகவும் வாக்களித்துள்ளனர். மூன்றாண்டுகளாக அரசின் தொடர்ச்சியான, தொலைக் காட்சி & வானொலிப் பிரச்சாரங்களே மக்களின் மனமாற்றத்திற்குக் காரணமாக இருந்துள்ளன.
1959இல் நடந்த கியூபா புரட்சிக்குப் பிறகான காலகட்டத்தில், 1960களிலும் 1970 களிலும், LGBT+ மக்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்; சிறையில் அடைக்கப் பட்டனர்; தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். 1979இல் ஓரினச் சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்திருந்தாலும் கூட, பகிரங்கமாக ‘ஓரினச் சேர்க்கையாளர்’ என்பதை வெளிப்படுத்துவது தடை செய்யப்பட்டிருந்தது (விதி 303a). 1988இல் வேற்றுமைகளுக்கு எதிரான பாலியல் கல்விப் பட்டறைகள் நடத்தப்பட்டன. 1993இல் இருந்து LGBT+ மக்களும் ஆயுதப் படைகளில் சேர்க்கப்பட்டனர். 2008இல் இருந்து மருத்துவர்கள் ‘பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை’களைச் செய்ய அனுமதிக் கப்பட்டனர். 2019இலேயே LGBT+ ஜோடிகளின் திருமணத்திற்கான முழுமையான சட்ட அங்கீகாரத்தை அரசு வழங்க முயற்சிகள் மேற்கொண்டிருந்தாலும், கத்தோலிக்க கிறித்தவ மத குருக்களின் எதிர்ப்பால் அரசின் முயற்சிகள் கைவிடப்பட்டன. மூன்றாண்டுகள் கழித்து தற்போது (2022 செப்டம்பர்), அவர்களின் உரிமைகளை நிலைநாட்டும் விதமாகக் குடும்பச்சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. ஓரினச் சேர்க்கை இணையர்களின், “குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமை”யும் நிலைநாட்டப்பட்டுள்ளது.இச்சட்டத்தில் இன்னும் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. வெறும் சட்ட விதிகளாக மட்டுமில்லாமல், “வீட்டு வேலைகளை ஆண்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்பது போன்ற பல அறிவுரைகளின் தொகுப்பாகவும் கியூபா குடும்பச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளும் கூட சம்பளத்துக்குரிய வேலைகளாகக் கருதப்பட்டு, அந்த வேலைகளும் “தொழிலாளர் உரிமை” வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மற்றொரு சோசியலிச நாடான வெனிசுலாவில், 2007இல் இருந்து குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஊதியம் வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது. நம்முடைய திமுக அரசும் கூட, விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதை, நாம் அறிவோம். இதன் மூலம் வீட்டு வேலைகளும், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வரம்புக்குள் கொண்டு வரப்படுகின்றன.
கியூபா நாட்டில் மட்டும், கோவிட் பெருந் தொற்று காலத்தில் ஆண்களைவிட பெண்கள் ஒவ்வொரு வாரமும், (14-18) மணி நேரம் அதிகமாக உழைத்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நிறைய நேரம் இதிலேயே செலவாவதால், பெண்கள் பெறும் வெளிவேலைவாய்ப்புகளின் விகிதம் குறைவதும் தெரிய வந்துள்ளது. அதேபோல ஏழைகளின் உழைப்பைச் சுரண்டாமல், “பொதுநல நோக்கோடு செய்யப்படும் ‘வாடகைத் தாய்’ முறையை”யும் (surrogacy) இச்சட்டம் அங்கீகரித்துள்ளது. முதியோர்கள் குழந்தை வளர்ப்பில் ஈடுபடு வதும் தொழிலாளர் உரிமை வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு உடல்ரீதியாக தண்டனை வழங்குவதும் தடுக்கப்பட்டுள்ளது. “குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களின் அதிகாரம் சார்ந்த ஒன்றல்ல; அது பொறுப்பு சார்ந்தது” என்று வரையறுக்கப் பட்டுள்ளது. மனிதவளக் குறியீட்டில் (HDI), கியூபா 76ஆவது இடத்திலும் இந்தியா 132ஆவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத் தக்கது. தமிழ்நாட்டு மனிதவளக்குறியீடு, 110ஆவது இடத்தில் இருக்கும் ஜமைக்கா நாட்டோடு பொருந்துகின்றது.
கடந்த ஆண்டு (2021) மார்ச் மாதம், தமிழ்நாட்டு காவல்துறையிடம் இருந்தும் பெற்றோர்களிடமிருந்தும் பாதுகாப்புக் கோரி ஒரு ஓரினச்சேர்க்கை பெண்பால் இணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தனர். அதன் தொடர்ச்சியாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், LGBT+ சொற்களஞ்சியத்தை (Glossary) அரசு வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இதன் விளைவாக இந்திய மொழிகளில் முதன்முறையாக, Intersex (இருபால்), Transgender (மருவியப் பாலினம்), Gender non conforming person (பாலின வெளிப்பாட்டு அடையாளங்களோடு ஒத்துப் போகாதவர்), Trans Woman (திருநங்கை), Trans Man (திருநம்பி), Gender non binary (பாலின இருநிலைக்கு அப்பாற் பட்டவர்), Gender fluidity (நிலையற்றப் பாலினம்), Bisexual (இருபால் ஈர்ப்பு), Pansexual (அனைத்துப் பால் ஈர்ப்பு), Asexual (அல்பால் ஈர்ப்பு), Queer (பால் புதுமையர்) உள்ளிட்ட பலப் புதுச் சொற்களை அரசு உருவாக்கி, கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
இதன் தொடர்ச்சியாக அக்டோபர் 27இல், தமிழ்நாடு திட்டக்குழு ஒரு LGBT+ கொள்கை முன்வரைவை உருவாக்கியது. இந்த முன் வரைவு, சமூக நலன் & பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறைக்கு நவம்பர் 15ஆம் நாள் முன்னனுப்பப்பட்டது. இதுகுறித்துச் சமூக நலத்துறை இயக்குனர், சம்பந்தப்பட்ட பங்கேற்பாளர்களுடன் டிசம்பர் 01இல் சந்திப்பை நிகழ்த்தினார். சந்திப்பு தொடர்பான அறிக்கையை டிசம்பர் 05ஆம் நாள் அரசுக்கு அனுப்பினார். டிசம்பர் 09இல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்த போது, LGBT+ மக்களைப் பாதுகாக்க, பொது மக்களிடம் கருத்துகளைக் கேட்ட பின்பு, மூன்று மாதத்துக்குள் கொள்கைகளை வகுத்து, நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாக அரசு உறுதியளித்துள்ளது. முதற்கட்டமாக, உரிய சட்ட விதிகளை இம்மாத இறுதிக்குள் கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், LGBT+ மக்கள் சந்திக்கும் சவால்களைப் பற்றி, பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்க்கப்படும் என்றும், ஏற்கனவே ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலமாக LGBT+ மக்களைப் பற்றிய புரிதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், விண்ணப்பப் படிவங்களில் ஆண் பெண் ஆகிய கட்டங்களோடு மூன்றாம் பாலினங்களைக் குறிக்கும் கட்டமும் சேர்க்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மருத்துவர்களை “பாலின மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை”களைச் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று தமிழ்நாடு மருத்துவ மன்றமும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தன்னுடைய மகனோ மகளோ “LGBT+” என்று பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் நிலையில், இத்தகைய முறையற்ற அறுவை சிகிச்சைகளைச் செய்து அவர்களுடைய பாலினத்தை மாற்றும் முயற்சிகளில் ஈடுபடுவதே, மருத்துவ மன்றம் இதனை எதிர்க்கக் காரணமாகும். திமுக அரசின் செயல்பாடுகளைப் பாராட்டிய நீதிபதி, வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.
பெரும்பான்மை மக்கள் மத்தியில், ஆண் களுக்கு பெண்கள் மீது ஈர்ப்பு ஏற்படுவதும் (Straight Man)) பெண்களுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படுவதும் (straight woman) இயற்கையானதாக இருப்பதைப் போலவே, சிறுபான்மை மக்கள் மத்தியில், ஒரு ஆணுக்கு ஆண் மீதோ (Gay) ஒரு பெண்ணுக்கு பெண் மீதோ (Lesbian) அல்லது ஒரு பாலினத்தவருக்கு அனைத்து பாலினத்தவர் மீதோ ஈர்ப்பு இருப்பதும் ஒரு சாராரின் இயற்கை தான்; (அல்லது) ஒரு பாலினத்தவருக்கு எந்த பாலினம் மீதும் ஈர்ப்பு ஏற்படாமலும் (அல்லது) ஒருவர் எந்த பாலினத்தையும் சேராதவராக இருப்பதும் கூட ஒரு சாராரின் இயற்கை தான். “இது ஒரு மனநல பிரச்சனை கிடையாது” என்று மருத்துவ உலகம் அறிவித்து பல பத்தாண்டுகள் கடந்துவிட்ட பின்பும் கூட, இந்த இயற்கையை இயற்கையாகவே அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மக்கள் மனதில் இன்னமும் உருவாகவில்லை.
திருநங்கையாகவோ திருநம்பியாகவோ தன்னுடைய மகனோ மகளோ இருக்கிறார் என்பதையே தாங்கிக் கொள்ள முடியாத இந்திய பெற்றோர்களால், திருநங்கை களையும் திருநம்பிகளையும் வீட்டை விட்டு வெளியேற்றும் இந்திய பெற்றோர்களால் ஓரினச்சேர்க்கையாளர்களை எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? எனவே கியூபா அரசின் தொலைக்காட்சி & வானொலி பிரச்சாரங்களைப் போலவே, தமிழ்நாடு அரசும் இதுகுறித்த அறிவியல் பூர்வமான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் LGBT+ மக்கள் அனுபவிக்கும் சித்திரவதைகளில் இருந்தும், சொல்லொணாத் துயரங்களில் இருந்தும் அவர்களுக்கு விடுதலை கிடைக்கும்.”
- ம.கி.எட்வின் பிரபாகரன்