விருதுகள் பலவற்றைப் பெற்ற கலைஞர் என்னும் எல்லாவற்றையும் மீறி, மக்களின் மீதும் சமூகத்தின் மீதும் உலக நாடுகளின் மீதும் அக்கறை கொண்டவராக வாழ்ந்திருக்கிறார் என்பதுதான் அவருடைய மிகப்பெரிய பெருமையாக இருக்கிறது.

நம் மக்கள், அதிலும் குறிப்பாக இளைஞர்கள், திரைப்பட நடிகர்கள் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர்களாக இருக்கிறார்கள். கலைஞர்களை மதிப்பதோ, போற்றுவதோ குறைவானதில்லை. ஆனால் அவர்களுக்கே வாழ்க்கைப்படுவது என்பது அவ்வளவு சரியான காரியம் அன்று. நம்முடைய கதாநாயகன் அடி வாங்கினால்கூட இங்கே இருக்கிற இளைஞர்கள் கண்ணீர் விடுகிறார்கள். அந்த அளவுக்கு அவர்கள் மீது இவர்கள் அக்கறையுடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் திரைப்பட நடிகர்கள், அதே அளவுக்குச் சமூகத்தின் மீது அக்கறையுடையவர்களாக இருக்கிறார்களா என்று ஒரு கேள்வி எழுகிறது.

மார்லன் பிராண்டோ என்று ஹாலிவுட் நடிகர் ஒருவர் இருந்தார். அவரை நாம் மிக நன்றாக அறிவோம். உலகப் புகழ்பெற்ற நடிகர். இறுதியாக அவர் நடித்த காட்பாதர் என்கிற படம் உலகப் புகழ் பெற்ற படமாக இருந்தது. அவர் முதன் முதலாக மெக்சிகோவில் நடைபெற்ற ஒரு உழவர் புரட்சியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்திலேதான் நடித்தார். ஜபாட்டா என்கிற கூலி விவசாயிகளினுடைய தலைவன் பாத்திரத்தை மார்லன் பிராண்டோ ஏற்று நடித்தார். தோழர் எஸ்.வி. ராஜதுரை அவர்கள் மிக அண்மையிலே வந்திருக்கிற ஒரு புத்தகத்திலே மார்லன் பிராண்டோவைப் பற்றிய அவருடைய சமூக அக்கறை பற்றிய பல செய்திகளை வெளிப்படுத்தியிருக்கிறார். யுவான் ஜபாட்டா (ஜபாட்டா வாழ்க) என்று அந்தப் படத்திற்குப் பெயர். அந்த விவசாயிகளினுடைய தலைவராக அவர் நடித்தார். அது வெறும் நடிப்பல்ல. உண்மையிலேயே மக்களினுடைய பிரச்சனைகளில் அக்கறையுடையவராக, போராட்டங்களிலே ஈடுபடுகிறவராகத் தன் காலம் முழுவதும் மார்லன் இருந்திருக்கிறார் என்பதுதான் ஒரு புதிய செய்தியாக இந்த நூலிலே கிடைக்கிறது.

அவரை ஒரு மிகச் சிறந்த நடிகராக – ஹாலிவுட் நடிகராக – உலகப்புகழ் பெற்ற நடிகராக மட்டும்தான் நாம் அறிந்து வைத்திருந்தோமே தவிர, ஏழை மக்களினுடைய, ஒடுக்கப்பட்ட மக்களினுடைய போராட்டங்களிலே எல்லாம் தன்னை இணைத்துக் கொண்ட, அந்த ஊர்வலங்களில் பொதுக் கூட்டங்களில் அல்லது போராட்டங்களில் முன்னே நின்ற ஒருவராக மார்லன் பிராண்டோ இருந்திருக்கிறார் என்பது நமக்கு மிக வியப்பாகவும் அதே நேரத்திலே மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

1963 ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய போராட்டத்திலே அவர் பங்கேற்கிறார். அந்தப் போராட்டம் யாருக்காக? அது திரைப்பட நடிகர்கள் சார்ந்த போராட்டமோ அல்லது அமெரிக்கர்களுக்கான போராட்டமோ இல்லை. தென்னாப்பிரிக்கா கறுப்பின மக்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று நடத்தப்பட்ட போராட்டத்திலே பிராண்டோ முன்னணியிலே நிற்கிறார். அதைப் போலவே மார்ட்டின் கிங் ஜூனியரோடு சேர்ந்து ஊர்வலங்களிலே எல்லாம் பங்கெடுத்திருக்கிறார். 68 ஆவது ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்ட நேரத்திலே அதற்காக நடந்த பேரணியிலே கலந்து கொள்வதற்காகத் தன்னுடைய படப்பிடிப்புகளையெல்லாம்கூட ரத்து செய்து விட்டு பிராண்டோ வந்திருக்கிறார்.

64 ஆவது ஆண்டு லண்டனுக்குப் போகிறார். அவர் லண்டனுக்குப் போனது என்னவோ அவருடைய கலையுலகத் தொடர்பாகத்தான். ஆனால் அங்கேயும்கூட பிராண்டோ என்ன செய்கிறார் என்றால் அங்கே இருக்கிற தென்னாப்பிரிக்கக் கைதிகளை இங்கிலாந்து அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்லி அங்கு நடைபெறுகிற மெழுகுவர்த்திப் போராட்டத்திலே பிராண்டோவும் பங்கேற்றுக் கொள்கிறார். இப்படிப் பல்வேறு போராட்டங்களில், பல்வேறு மக்களுக்காக நடந்த போராட்டங்களிலே எல்லாம் பிராண்டோ முன் வரிசையிலே நிற்கிறார். அதனாலே அவருக்கு எந்தவிதமான சொந்த லாபமும் இல்லை. அவருடைய இன மக்கள்கூட இல்லை. அல்லது அவர் சார்ந்திருக்கிற கலைத்துறையிலும்கூட இல்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் அவர்கள் யாராக இருந்தாலும், யாராலே ஒடுக்கப்பட்டாலும் தன் தாய்நாட்டாரால் ஒடுக்கப்பட்டாலும், ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் தான் அவர் இருந்திருக்கிறார். இது ஒரு புதிய செய்தியாக நமக்கு இருக்கிறது.

இன்னொன்றையும் நாம் பார்க்க வேண்டும். அவர் காட்பாதர் படத்திலே நடித்ததற்காக ஆஸ்கர் விருது பெற்றார். அவரை நம்முடைய நடிகர் திலகம் சிவாஜியோடு அண்ணா அவர்கள் ஒப்பிட்டுக் கூறுவது வழக்கம். தமிழகத்தினுடைய மார்லன் பிராண்டோ சிவாஜி என்று சொல்வார். காட்பாதர் படத்திலே நம்முடைய நடிகர் திலகத்தைப் போலவே அவருடைய நடிப்பும் மிக ஆழமானதாக மிக அழுத்தமானதாக இருப்பதை நம்மாலே பார்க்க முடிகிறது.

அந்தப் பாத்திரமாகவே மாறி அவர் நடித்திருக்கிற அந்த இயல்புக்காக அவருக்கு ஆஸ்கர் விருது இரண்டாவது முறையாக வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த ஆஸ்கார் விருதை பிராண்டோ வாங்க மறுத்து விட்டார். என்ன காரணம் என்றால் அமெரிக்காவிலே இருக்கிற இந்தியர்கள் முறைப்படி நடத்தப்படவில்லை என்கிற தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காக, இந்தியர்களுக்காக ஆஸ்கார் விருதை அவர் மறுத்தார்.

இந்தியர்கள் முறைப்படி நடத்தப்பட வேண்டும். என் எதிர்ப்பை பதிவு செய்வதற்காகவே இந்த ஆஸ்கர் விருதை மறுக்கிறேன் என்று 15 பக்கத்திலே அறிக்கை எழுதி ஒரு நடிகையிடத்திலே கொடுத்து நீ போய் என் சார்பிலே அந்த மேடையிலே படி என்றார். ஆனால் அவர்கள் அந்த அறிக்கையை முழுமையாகப் படிக்க அனுமதிக்கவில்லை. முதலில் பிராண்டோவிடம் இருந்து ஒரு அறிக்கை வந்திருக்கிறது என்றபோது என்னவோ ஏதோ என்று கேட்கத் தொடங்கினார்கள். அந்த அறிக்கை போகிற பாதை. அந்த அறிக்கையிலே சொல்லப்பட்டிருக்கிற செய்தி. கொஞ்சங் கொஞ்சமாகக் கேட்கிற நேரத்தில் இவர் நேரடியாக அமெரிக்காவைத் தாக்குகிறார் என்று தெரிந்து கொண்டு அந்த அறிக்கையை முழுமையாகப் படிக்க விடாமல் கூச்சலிட்டுத் தடுத்து விட்டார்கள். கூச்சலிடுவது என்பது உலகம் முழுவதும் இருக்கிற ஒரு பழக்கமாகத்தான் இருக்கிறது.

எல்லாவற்றையும் தாண்டி தன்னுடைய 78 ஆவது வயதில் 2002 ஆம் ஆண்டு அமெரிக்கா ஈராக்கின் மீது போர் தொடுத்தபோது அதை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களிலே பிராண்டோ ஒருவராக இருந்தார். தனக்கு வயதாகி விட்டது. உலகத்திலே மிகப் பெரிய புகழ் எல்லாவற்றையும் பெற்றாகி விட்டது.

இனி வரக்கூடிய புகழோ, பதவியோ, பணமோ எதுவுமே இல்லை என்கிற நிலையிலேயும்கூட ஒரு போர்க்குணம் உடையவராகவே அவர் இருந்திருக்கிறார். ஈராக் மீது தொடுக்கப்பட்ட யுத்தத்தை எதிர்த்து, கண்டித்து அறிக்கை விட்டதோடு மட்டுமில்லாமல், அந்தத் தள்ளாத வயதில், உலகெங்கும் மக்கள் ஊர்வலம் போனபோது அவர்களில் ஒருவராக மார்லன் பிராண்டோவும் போயிருக்கிறார் என்பதைப் படிக்கிற நேரத்தில், அவர் ஒரு திரைப்படக் கலைஞர், விருதுகள் பலவற்றைப் பெற்ற கலைஞர் என்னும் எல்லாவற்றையும் மீறி, மக்களின் மீதும் சமூகத்தின் மீதும், உலக நாடுகளின் மீதும் அக்கறை கொண்டவராக வாழ்ந்திருக்கிறார் என்பதுதான் அவருடைய மிகப் பெரிய பெருமையாக இருக்கிறது.

எனவே நம் மக்கள், கலைஞர்கள் மீது வைத்திருக்கிற அன்பைப் போல, கலைஞர்களும் மக்களின் மீதும், சமூகத்தின் மீதும் அக்கறையுடையவர்களாக இருக்க வேண்டும். மார்லன் பிராண்டோவிடமிருந்த அந்தப் போர்க்குணத்தையும்கூட நம்முடைய கலைஞர்கள் கற்றுக் கொண்டால் அது அவர்களுக்கும் நல்லது, சமூகத்துக்கும் நல்லது.

Pin It