பள்ளிபாளையத்தில் 20.9.2019 அன்று நடந்த திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி)

இதற்கு முன்பாக மண்டல அளவில் தான் மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்து பணியில் அமர்த்தப்பட்டார்கள். இந்தியாவை ஒன்பது மண்டலங்கள் மற்றும் இரண்டு துணை மண்டலமாக பிரித்திருந்தார்கள். அதில் தேர்வு நடக்கும். நமக்கு கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு சேர்ந்தது மண்டலமாக இருந்தது. இப்போது அதை மாற்றி ஒரே நாடு கொள்கைப் படி அகில இந்தியத் தேர்வாக மாற்றி விட்டார்கள்.

kolathur mani 445இப்போது இந்திய அளவில் தேர்வுகள் நடைபெறுவதால் கேள்வித்தாளை இரண்டே மொழியில் தான் கொடுக்கிறார்கள். ஒன்று ஆங்கிலம், மற்றொன்று இந்தி. இதில் இந்தி பேசத் தெரிந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் தாய் மொழியில் தேர்வெழுதுவான். நாமெல்லாம் அந்நிய மொழியில் தேர்வெழுதுவோம். ஆங்கிலமும் நமக்கு அந்நிய மொழி தான்.

மோடி ஆட்சிக்கு வந்த பின் ஒரு நிகழ்வு நடந்தது. அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எப்.எஸ். ஆகிய உயர் பதவிகளுக்கான தேர்வில், ஆங்கிலத்தில் திறனறி தேர்வு முறை இருந்தது. வெறும் 25 மதிப்பெண்ணிற்கு அத்தேர்வு இருந்தது. ஆங்கிலத்தில் ஒரு செய்தியை சுருக்கமாக கொடுக்கிற ஆற்றல் இருக்கிறதா என்பது தான் அந்தத் தேர்வு முறை. ஆங்கிலத்தில் செய்திகளை பரிமாறிக் கொள்வதற்கான திறன் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காக நடத்தப்பட்டது. இதை எதிர்த்து வடநாட்டுக்காரர்கள் போராடினார்கள். நாங்களெல்லாம் கிராமத்தில் இருந்து வருகிறோம் எங்களுக்கு எப்படி ஆங்கிலம் தெரியும் என்று, அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எப்.எஸ். அதிகாரிகளாக வரக் கூடியவர்களே போராடினார்கள். மோடி உறுதியளித்தார். தேர்வு வேண்டுமானால் நடக்கட்டும், தரப்பட்டியல் எடுக்கும் போது அதை நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்றார்.

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எப்.எஸ்.க்கு ஆங்கிலம் வேண்டாமென்ற அந்த அரசு தான், நம் மாநிலத்தில் சாதாரண வேலைக்குப் போக வேண்டுமென்றால் கூட ஆங்கிலம் அல்லது இந்தியில் தேர்வெழுத வேண்டுமென்று கூறுகிறது. இங்கே 11 மற்றும் 12ஆம் வகுப்பு படித்தவர்கள் எப்படி அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற முடியும்? வடநாட்டுக்காரர்கள் தாய்மொழியான இந்தியில் தேர்வெழுதுவார்கள். எனவே தான் நாம் முன்வைத்தோம், மத்திய அரசு நிறுவனங்களுக்கு மாநில மொழிகளில் தேர்வு நடத்து, மாநில அளவில் நடத்து, மாநில மொழிகளில் கேள்வித்தாளை கொடு என்று.

1934ஆம் ஆண்டிலேயே சென்னை மாகாணத்திலிருந்து குரல் எழுந்தது; சென்னை மாகாணத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை கொடு என்று. எப்படி தமிழ்நாட்டுப் பணிகளுக்கு வகுப்புவாரி முறை இருக்கிறதோ அதேபோல் மத்திய அரசு பணிகளுக்கும் கேட்டார்கள். கேட்டுக் கொண்டே இருந்ததால் அப்போதிருந்த ஆங்கிலேய ஆட்சி 1935 ஆம் ஆண்டே ஏற்றுக் கொண்டது. தனியாக ஒரு சட்டத்தை இயற்றினார்கள். சென்னை பார்ப்பனரல்லாதோர் வகுப்புவாரி சிறப்புச் சட்டம். சென்னை மாகாணத்தில் உள்ள மக்களுக்கு, சென்னை மாகாணத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகளுக்கு வகுப்புவாரி ஒதுக்கீடு உண்டு என்று ஆங்கிலேயர்கள் சட்டம் போட்டார்கள். 1936லிருந்து நடைமுறையில் இருந்தது. இந்தியாவிற்கு விடுதலை வந்த பின்பு தான் நமக்கு அடிமைத்தனமே வந்தது. அந்த உரிமைகள் நமக்கு இல்லாமல் போனது.

தற்போது எல்லாமே தலைகீழாக நடக்கிறது. நாம் ஒரு காலத்தில் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று கேட்டோம்; சமஸ்கிருதம் படிக்கக் கூடாது என்றார்கள். வேதங்களில் என்ன இருக்கிறதென்று அறிந்து கொள்ளப் படிக்கிறோம் என்று கேட்டோம். நம்மைப் போன்றவர்கள் இல்லை, டாக்டர் அம்பேத்கர் போன்ற அறிவாளிகள், உலகின் மிகச் சிறந்த அறிவாளியாகக் கருதப்பட்ட அம்பேத்கர் போன்றவர்களெல்லாம் இந்த நாட்டு சாஸ்திரங்களை ஆய்வு செய்ய வேண்டும், புராணங்களைப் படிக்க வேண்டும், ஜாதி உருவாக்கத்தைப் புரிந்து கொள்ள முயற்சித்துக் கேட்ட பொழுது, சமஸ்கிருதத்தை கற்றுக் கொடுக்க மறுத்து விட்டார்கள். சின்ன ஜாதிக்காரர்கள் சமஸ்கிருதம் படிக்கக் கூடாது என்று மறுத்து விட்டார்கள். பார்சி மற்றும் ஆங்கில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட வேதங்களையும், புராணங்களையும் படித்துத்தான் அம்பேத்கர் ஆய்வுகளை மேற்கொண்டார், புத்தகங்களை எழுதினார். அப்பொழுது ஜாதியின் தோற்றத்தை தெரிந்து கொள்ள படிக்க வேண்டும் என்று கேட்ட பொழுது மறுத்தார்கள்; இப்போது சமஸ்கிருதம் வேண்டாம் என்கிறோம், ஆனால் கட்டாயம் படிக்க வேண்டும் என்கிறார்கள். அனைத்து வகுப்புகளுக்கும் சமஸ்கிருதம் உண்டு என்கிறார்கள். நம்மை மட்டுமல்ல ஆய்வுப் (ஞான) படிப்பைப் படிப்பவர்களுக்குக்கூட சமஸ்கிருத பாடம் உண்டு என்கிறார்கள்.

பார்ப்பனரல்லாதார் வேலைக்குச் சென்றபோது தகுதி திறமை குறைந்து விட்டது என்றார்கள். அப்போது தான் பெரியார் சொன்னார், ‘இப்போதிருக்கிற பரீட்சை முறை மாணவரின் அறிவை சோதிப்பதாக இல்லை, அவர்களுடைய ஞாபக சக்தியை சோதிப்பதாக இருக்கிறது’ என்று 1925லேயே கூறினார். இல்லை இல்லை இது தான் தேர்வு முறை என்று கூறினார்கள். நம் மாணவர்களும் சரி இதுதான் தேர்வு முறையா அதையும் பார்த்து விடலாம் என்று படித்தார்கள்; அதிக மதிப்பெண் பெற்றார்கள். வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

மருத்துவப் படிப்பில் 2800 இடங்களில் வெறும் 65 இடங்களை மட்டும்தான் பார்ப்பன மாணவர்கள் பெற்றார்கள். நீட் நுழைவுத் தேர்வு வருவதற்கு முன்னால் வரை, ஏனென்றால் நம் மாணவர்களும் படித்தார்கள், மனப்பாடம் செய்தார்கள், அதனால் அவ்வளவு இடங்களைப் பெற்றார்கள். இப்போது சொல்கிறார்கள், இதெல்லாம் இல்லை தகுதி திறமையெல்லாம் இல்லை, எல்லா ஜாதிக் காரர்களுக்கும் பிரித்துக் கொடுங்கள், பாவம் வசதி இல்லாத ஏழைகளுக்கு, யார் இவர்கள்? உயர்ஜாதி ஏழைகள். ஏழைகள் என்று சொல்லுங்கள், பொருளாதார இட ஒதுக்கீட்டை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை இருந்தாலும் ஏழைகள் என்று சொல்லுங்கள், ஆனால் உயர்ஜாதியில் உள்ள ஏழைகளுக்கு மட்டும் என்பது என்ன? ஏன் கீழ் ஜாதியில் உள்ள ஏழைகளெல்லாம் படிக்க கூடாதா?

அதையே தான் இந்த தேசியக் கல்விக் கொள்கையிலும் சொல்கிறார்கள், அனைத்து இடங்களிலும் ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். Urban Poors - நகர்ப்புற ஏழைகள் என்று கூறுகிறார்கள். சரி கிராமப்புற ஏழைகள்? நம்மைப் பற்றி எந்தப் பதிவும் இல்லை இந்த கல்வி அறிக்கையில். நகர்ப்புற ஏழைகளைப் பற்றி மட்டும் தான் பேசப்படுகிறது. அவர்களுக்கான கல்வியைப் பற்றி மட்டும்தான் பேசப்பட்டுள்ளது இந்த கல்வி அறிக்கையில். வேலை வாய்ப்பில் உயர்ஜாதி ஏழைகள், கல்வியில் நகர்ப்புற ஏழைகள். எப்படிப்பட்ட பித்தலாட்டமான அறிக்கையை நம்மிடம் கொடுத்துள்ளார்கள் பாருங்கள்.

நான் அடிக்கடி சொல்வதுண்டு, நம்மவர்கள் சொல்வார்கள் வேதத்தில் என்னென்னமோ உண்டு என்று சொல்வார்கள். என்ன இருக்கிறது என்று கேட்டால் தெரியாது. வேதத்தில் என்ன உள்ளது? ஊரில் பேசிக் கொள்வார்கள். ‘டேய் மாப்ள வாடா சரக்கு வாங்கி வெச்சுருக்கேன், கறி வறுத்து வெச்சுருக்கேன் இன்னைக்கு அவனை போட்ரனும்டா’ - இதே உரையாடல்கள் சமஸ்கிருதத்தில் இருப்பது தான் வேதம்! இந்திரனிடம், ‘உனக்கு சுரா பானம் படைக்கிறேன், சோம பானம் படைக்கிறேன். இன்னின்ன மாமிசங்களைப் படைக்கிறேன், அந்த கருப்பர்களை ஒழிப்பாயாக!’ இது தான் வேதங்களில் உள்ளது. நம்மவர்கள் படிக்காமலேயே வேதங்களில் அனைத்தும் உள்ளதென்று கூறுவார்கள். புதிய கல்விக் கொள்கை அறிக்கையும் அப்படித்தான்.

தமிழக அரசு தற்போது ஒரு ஆபத்தான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. ‘பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு நீதி போதனை செய்வதற்கு வெளியில் இருந்து ஆட்கள் வரலாம்’ என்று ஒரு சுற்றறிக்கை கொடுத்துள்ளது. இந்தக் கல்விக் கொள்கையில் பல இடங்களில் ஒரு சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆசிரியர்களுக்கு இந்த கல்விக் கொள்கையில் ஏராளமான கட்டுப்பாடுகளை வைக்கிறார்கள். ஆசிரியப் பயிற்சி இனி நான்காண்டுகள். முடித்தாலும் பணிக்குத் தேர்ந்தெடுப்பது அவர்கள் பாடம் நடத்துவதைப் பார்த்து தானாம், உறுதிப்படுத்துவதற்கு மூன்று வருடங்களாம், சம்பள உயர்வோ, பதவி உயர்வோ பணியாற்றும் திறமையைப் பார்த்துத்தான் கொடுப்பார்களாம், பணியாற்றிய காலம், அனுபவம் ஆகியவற்றைப் பார்க்க மாட்டார்களாம். மேலும், சொல்கிறார்கள், பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால் அத்தியாயம் 2 இல் Community Members-யை சேர்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்; அத்தியாயம் 7 இல் Civil Society Members-யை வைத்து வகுப்புக்கள் நடத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

அத்தியாயம் 8 இல் Civil Society Organization-யை வைத்துக் கொள்ளலாம் என்கிறார்கள். மற்றும் Eminent Persons அறிவார்ந்த உள்ளூர்காரர்களையும் பாடம் நடத்த வைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. நாங்க சொல்கிறோம், இவை யனைத்தும் ஆர்.எஸ்.எஸ்.சை மனதில் வைத்துத்தான் சொல்கிறார்கள்;. மேலே குறிப்பிட்டுள்ளதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். நபர்களை கல்வித் துறைக்குள் நுழைப்பதற்காகத்தான். நமது தமிழ்நாடு அரசும் அதற்கு ஆதரவாக ஒரு உத்தரவை வெளியிட்டு விட்டார்கள்.

இந்த மேடையில் குழந்தைகள் பாடினார்கள், காமராசரை நினைத்தால் கண்ணீர் வருகிறதென்று. இந்தக் கல்விக் கொள்கையை நினைத்தாலும் கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டே தான் இருக்கும். அனைவரும் கல்வி பெற வேண்டும் என்பதற்காக ஒரு கிலோமீட்டருக்கு ஒரு தொடக்கப் பள்ளி, அய்ந்து கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி என்று சொன்னதற்கு மாறாக குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூடி விட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார் இராஜகோபாலாச்சாரி. புத்தியில்லாத இராஜாஜி அவ்வாறு செய்தார். இராஜாஜியைப் பற்றி சொல்வார்கள், இராஜாஜிக்கு உடம்பெல்லாம் மூளை என்று. உடம்பெல்லாம் மூளை என்றால் அது வியாதி. தலைக்குள் மட்டும்தான் மூளை இருக்க வேண்டும். அவர் கூட பள்ளிக் கூடங்களை மூடினார். இவர்கள் (மோடி வகையறா) பள்ளிக்கூடங்களை இணைக்கப் போகிறார்களாம். குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் வரும் பள்ளிக்கூடங்களைப் பக்கத்துப் பள்ளிக்கூடங்களுடன் இணைத்து விடுவார்களாம். பள்ளியை வேறொரு பள்ளியோடு இணைத்து விட்டு, மூடப்பட்டப் பள்ளிக் கட்டிடத்தில் நூலகம் வைக்கப் போகிறார்களாம். பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கே மாணவர்கள் வராத காரணத்தினால் பள்ளிக்கூடத்தை மூடுவதாக சொல்லிவிட்டு நூலகம் வைத்தால் அதில் யார் வந்து படிப்பார்கள்? இதைத் தான் கல்விக் கொள்கையில் சொல்லியிருக்கிறார்கள்.

46 அரசு பள்ளிகளை மூடிய தமிழக அரசு

இன்னும் அந்தக் கல்விக் கொள்கை நடைமுறைக்கு வரவில்லை. ஆனால் தமிழ்நாடு அரசு இப்போதே குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள 46 பள்ளிக்கூடங்களை மூடிவிட்டது. மாணவர்கள் இல்லாமலில்லை, இலவசமாகக் கற்பிக்கும் அரசுப் பள்ளிக்கு வருவதில்லை; ஆனால் கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிக்கு செல்கிறார்கள். அதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைக் களைவதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் பள்ளிகளை மூடுவது ஏனோ?

மாவட்டங்களில், கிராமப்புறங்களில் மூடியதோடு, இப்போது சென்னை மாநகரில் மட்டும் 16 பள்ளிக் கூடங்களை கணக்கெடுத்து வைத்துள்ளார்கள் மூடுவதற்காக. மூடிய பள்ளிகளை நூலகமாக மாற்றப் போவதாகவும் அறிவித்து விட்டார்கள்.

3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்பது கல்விக் கொள்கையில் உள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு 5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை அறிவித்து விட்டார்கள். தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு எவ்வளவு உண்மையாகவும், விசுவாசமாகவும் இருக்கிறார்கள் என்று பாருங்கள்! மக்களுக்கு விசுவாசமாக இல்லை, மத்திய அரசுக்கு. இப்படிப்பட்ட நிலையில்தான் மக்களிடம் இதன் ஆபத்தை நாம் பேச வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மற்றொரு ஆபத்தும் அத்தியாயம் 18இல் உள்ளது அது, ‘வெளிநாட்டில் இருந்து பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் எல்லாம் வரலாம்’ என்று அனுமதி கொடுத்துள்ளது இந்த தேசியக் கல்விக் கொள்கை. அது மட்டுமில்லாமல் தற்போது அய்ம்பதாயிரம் கல்லூரிகள் உள்ளன. 2022இல் மோசமான கல்லூரிகளுக்கெல்லாம் அனுமதி இரத்து செய்து விடுவார்களாம், அதை மறுபடியும் நூலகமாக மாற்றி விடுவார்கள். இப்படித்தான் இந்த கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அய்ம்பதாயிரம் உயர் கல்வி நிலையங்களை 2035ற்குள் 12,300 ஆக குறைக்கப் போகிறார்களாம். மாணவர்கள் எண்ணிக்கை கூடக் கூட கல்லூரிகளை அதிகரிப்பார்கள் ஆனால் இந்த அறிவாளிகள் கல்லூரிகளைக் குறைக்கிறார்களாம். ஏன் என்றால்? 10ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை 8 முறை பொதுத் தேர்வுகளை வைக்கிறார்கள். எப்படியும் மாணவர்கள் வர மாட்டார்கள் என்று குறைக்கிறார்கள் போலிருக்கிறது. இந்தத் தேர்வுகளில் மாணவர்களுக்கு அதிக உரிமை தருகிறார்களாம்; எப்போது மாணவர் விருப்பப்படுகிறாரோ அப்போது எழுதலாம் என்று. மாணவர்கள் தற்போதிருக்கும் தேர்வு முறையில் தேர்ச்சி பெறுவதே கடினம். இப்படிச் சொன்னால் மாணவர்கள் எப்படி தேர்ச்சி பெறுவார்கள்?

B.A, B.Sc எல்லாம் நான்கு வருடங்களாக மாற்றிவிட்டார்கள். நான்கு வருடமென்று கவலைப்பட வேண்டாம். ஒரு வருடத்தில்கூட கல்லூரியை விட்டு வெளியேறலாம். அதற்கு Diplomo என சான்றிதழ் வழங்கப்படும். இரண்டு வருடம் படித்து விட்டு சென்றால் Special Diplomo என்று சான்றிதழ் தருவார்களாம். மூன்று வருடம் என்றால் வெறும் B.A., நான்கு வருடம் படித்தால் BLA (Batchelor of Liberel Arts) என்று சான்றிதழ் வழங்கப்படுமாம். நமது மாணவர்கள் நான்கு வருடம் முழுமையாக படிப்பார்களா?

(தொடரும்)

- கொளத்தூர் மணி