மாநாடு என்பது கூடி கலைவதற்கு அல்ல கடந்தகால வரலாற்றை உள்வாங்கி, தவறுகளை சரி செய்து கொண்டு எதிர்காலப் பாதையை தீர்மானிப்பது.

ஆம், இத்தகைய எழுச்சியோடு நடைபெற்ற டி.ஒய்.எப்.ஐயின் மாநில மாநாடு கோவை மாநகரை குலுங்கச் செய்தது. இளைஞர்களின் கனவுகளை நனவாக்க, தியாகத் தழும்பேறியவர்கள் பங்கேற்ற மாநாடாக 2010 செப் 24_27 வரை நடந்தது.              அமைப்பின் விதையாகவும், தியாகத்தின் முகவரியாகவும் மாறிய பழனிச்சாமியையும், ரத்தினசாமியையும் ஈன்றெடுத்த மண்ணில் நடைபெற்ற மாநாடு எதிர்காலத்தை தீர்மானித்தது.

கடந்து வந்த பாதையை நினைவூட்ட முன்னாள் தலைவர்களின் அனுபவ எழுச்சியுரையோடு தொடங்கி, கல்வியில், தளராத சமூகப் பணியில், விளையாட்டில் சிறந்து விளங்கியவர்களுக்கு பாராட்டுவிழாவோடு மாநாடு தொடங்கியது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சாதிக்கொடுமைக்கு எதிராக, கள்ளச்சாராயத்திற்கு எதிராக, மதவாதத்திற்கு எதிராக, கந்து வட்டி கொடுமைக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த தியாக திருவுருங்களின் நினைவாக கொண்டு வரப்பட்ட நினைவு ஜோதிகளை வெண்சீருடையில் ராணுவ மிடுக்கோடு இளந்தோழர்கள் அணிவகுத்து அழைத்து தர அடுத்த தலைமுறை ஆவலோடு அதனை பற்றிக்கொண்டது. சின்னியம்பாளையம் தியாகிகளின் நினைவாக கொண்டுவரப்பட்ட கொடிக்கம்பத்தில், கண்டமங்கலம் சுரேக்ஷின் நினைவாக விழுப்புரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட வெண்கொடி, வானில் உயர்ந்த போது தோழர்கள் உணர்ச்சியோடு எழுப்பிய முழக்கங்கள் பார்த்தோரையும் வீறுகொள்ளச் செய்தது. முழக்கமிட்ட ஒவ்வொரு தோழனும் நெஞ்சை நிமிர்த்தி, கையை முறுக்கி இட்ட முழக்கம் இடியென இடித்தது.

மாநாட்டில் 84 பெண் தோழர்கள் உள்பட 547 பிரதிநிதிகள் பங்கெடுத்தனர். கல்வி, வேலை, சுகாதாரம், விளையாட்டு, ஊழல், தீண்டாமை, அரசியல் என 30க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டு நிகழ்வில் பங்கேற்ற முனைவர். ச. முத்துக்குமரனும், கல்வியாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபுவும் கல்வி குறித்த பிரச்சனையில் அரசின் ஏமாற்று வேலையையும், முறைகேடுகளையும், குளறுபடிகளையும் தோலுரித்தனர்.

மாநாடு என்றால் அண்ணன் அழைப்பார், தலைவர் அழைப்பார், அம்மா அழைப்பார் இப்படி தனி நபர்கள் புகழ்பாடும் பேனர்களோடு, குவாட்டரும், பணமும், இலவச சீருடையும் கொடுத்து அழைப்பார்கள். ஆனால் நமது மாநாடுதான் நாட்டின் அவலங்களைக் கூறி இதை முறியடிக்க

சிக்கலில் இருக்குது தேசம்

என்ன செய்வதாய் உத்தேசம்

புறப்படுத் தோழா போராட

பொன்னுலகம் படைப்போம்.

என ஒரு புதுக் கவிஞன் கூறியதைப்போல அணி அணியாய் அணி வகுத்து வா, என சங்கம் விடுத்த அறைகூவலை ஏற்று, தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலிருந்து நாளை வரலாற்றை நமதாக்குவோம் என முழங்கி பேரணியில் அணிவகுத்தனர். ஏழை உழைப்பாளிக்கும், விவசாயிகளுக்கும், வாழ்வின் வசந்தத்தை கனவுகளோடு சுமந்து திரியும் இளைஞனுக்கும் தான் இந்த தேசம் என பகத்சிங்கின் வாரிசுகளாய், சேகுவேராவின் வாரிசுகளாய் 50 ஆயிரம் இளைஞர்கள் கோவை மாநகரை திணற வைத்தனர்: நாளைய விடியலுக்கு அச்சாரமிட்டனர்.

கல்வியும், வேலையும், சுகாதாரமும் நமது பிறப்புரிமை. அதை யாரிடமும் யாசகம் கேட்பது இல்லை. எடுத்துக் கொள்வோம். கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்றுதான் பைபிள் சொல்கிறது. சுதந்திர இந்தியாவில் 63 ஆண்டுகளாக கேட்டுக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனாலும் கிடைக்கவில்லை. ஆண்டவர்களும், ஆள்பவர்களும் ஏழைகளின் குரலை ஏளனமாய் பார்க்கின்றனர். இதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?

கல்வி

அனைவருக்கும், இலவசக் கட்டாய கல்வி சட்டம்2009, 6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவசக் கட்டாய அடிப்படை கல்வி வழங்க வேண்டும் என்கிறது. தமிழகத்தில் இப்படி நடக்கிறதா? தமிழகத்தில் சுமார் 12,000 தனியார் பள்ளிகள் உள்ளன. எந்த தனியார் பள்ளியாவது இலவசக் கல்வி கொடுக்கிறதா? அப்படி என்றால் சட்டம் எதற்கு? தனியார் கல்வி நிறுவனங்கள் எவ்வித கட்டணமுமின்றி 25 சதவீதம் மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது எங்காவது அமலாகிறதா?

தமிழகத்தில் கல்வி கட்டணத்தை ஒழுங்குபடுத்த 2009ல் கோவிந்தராஜன் கமிட்டியை அமைத்தது. இக்கமிட்டி அதிகபட்சம் 11ஆயிரம் ருபாய் வசூலிக்கலாம் என்றது. இந்த கட்டண விகிதம் ஏற்புடையது அல்ல என்று தனியார் பள்ளிகள் உயர்நீதி மன்றத்தில் இடைக்கால தடை உத்தரவை வாங்கினர். இதனை எதிர்த்து உடனடியாக அரசு மேல்முறையீடு செய்திருக்க வேண்டாமா?

டாஸ்மாக் ஊழியர்களுக்கு மே தினத்தன்று விடுமுறை அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த அரை மணி நேரத்தில் மேல் முறையீடு செய்யும் அரசு, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் பாதிக்கின்ற இந்த தடை உத்தரவை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்யாதது ஏன்? தனியார் பள்ளிகளின், வழக்கறிஞர்கள் வாதாடிய போது அரசு வழக்கறிஞர்கள் வாய்மூடி மவுனம் காத்தது ஏன்?

நம்மைப் போன்ற அமைப்புகள் மேல்முறையீட்டிற்கு சென்றபிறகு மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நின்ற காரணத்தால் வேறு வழியின்றிதானே அரசு மேல்முறையீடு செய்தது?

வாலிபர் சங்கம் தொடர்ச்சியாக கல்வி பிரச்சனைகளுக்கு போராட்டங்கள் நடத்திய போது பங்கேற்காத பெற்றோர்களும், மாணவர்களும் ஆங்காங்கே தன்னெழுச்சியாக போராடுகின்ற சூழலில் நாம் எந்தெந்த வகையில் வலுவாக தலையிடுவது என்பதை யோசிக்க வேண்டாமா? பற்றி எரிந்து கொண்டிருக்கிற பிரச்சனையில் நாம் தலையிடா விட்டால் வேறு யார் தலையிடுவார்கள்?

வேலை

வண்ணத்துப்பூச்சியாய் வானில் வட்டமிட வேண்டிய நமது இளைஞர்கள் வேலையில்லாமல் எதிர்கால கனவுகளை தொலைத்துவிட்டு வீதி வீதியாய் நடைபிணங்களாய் சுற்றித் திரிகின்றனர். நமது எதிர்காலத்தை காலில் போட்டு மிதிக்கிற மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்?

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, தமிழகத்தில் 68லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்துகிடக்கும் போது, முதியோர்களுக்கு அரசு வேலை என்று அரசாணை எண் 170ஐ திமுக அரசு பிறப்பித்தது. காலிப் பணியிடங்களை நிரப்பு, இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்காதே என நாம் முழங்கி நடத்திய போராட்டத்தினால் அச்சம் கொண்டது. களத்தில் நின்ற 600 தோழர்களை சிறையிலடைத்தது. நமது போராட்டம் ஓய்ந்ததா? தொய்வடைந்ததா? இல்லையே. நமது போராட்டத்தின் வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திமுக அரசு பணிந்தது.

ஆட்சிக்கு வந்தால் வேலையில்லாக்கால நிவாரணம் தருவோம் என்றது திமுக, ஆட்சிக்கு வந்த திமுக எத்தனை பேருக்கு வேலையில்லாக்கால நிவாரணம் வழங்குகிறது? 68லட்சம் பேரில் 3.50 லட்சம் பேருக்குதானே வழங்குகிறது. தமிழகத்தில் பிற சமூக நலத்திட்டங்களுக்கு வழங்கப்படுகிற தொகையை விட மிக சொற்ப்பமான தொகையைத்தானே வழங்குகிறது. அப்டியென்றால் இந்த அரசிற்கு நம்முடைய நலனில் என்ன அக்கறை இருக்கிறது?

அரசுத்துறைகளில் சுமார் 5 லட்சம் காலி பணியிடங்கள் இருந்தும் திமுக அரசு நிரப்ப மறுக்கிறது? தமிழகத்தில் கிராபைட், வெண்பிளாட்டினம், டைட்டானியம், நிலக்கரி, இயற்கை எரிவாயு, தோரியம், கிரானைட், நிலவளம், நீர்வளம் என ஏராளமான கனிம வளங்கள் குவிந்து கிடக்கின்றன. இவற்றை கொண்டு நவீன தொழிற்சாலைகளை உருவாக்கி, வேலை வாய்ப்பை வழங்க மறுக்கிறது. இதற்கெதிராக நம்மை விட்டால் வேறு யார் குரல் கொடுப்பார்கள்?

சுகாதாரம்

சுகாதாரம் என்றால் மருத்துவம் மட்டுமே நமது மனதில் உள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீர், மாசற்ற காற்று, குப்பை, கழிவுகள் இல்லாத குடியிருப்பு பகுதி, பாதாள சாக்கடை, கழிப்பறை வசதிகள் என அடிப்படையான வசதிகளும் இணைந்ததுதான் சுகாதாரம்.

இந்த அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மறுக்கப்படுகிறது. கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் மறுக்கப்படுகிறது. கோபாலபுரம், போட்கிளப் சாலை, போயஸ் தோட்டம் போன்ற பகுதிகள் ஒரு நாளைக்கு மூன்று வேளை சுத்தம் செய்யப்படுகிறது. ஆனால், ஏழை மக்கள் வாழக்கூடிய குடிசைப் பகுதிகள் ஒட்டுமொத்த குப்பை, கழிவுகளின் கிடங்காக மாற்றப்பட்டுள்ளது.

பணம் படைத்தவனுக்கு மட்டுமே சுகாதாரம் என்பதுதான் சுதந்திர இந்தியாவின் நிலை. பணம் கட்டி கிடைக்கக் கூடிய மருத்துவமே சிறந்தது என்ற சிந்தனை மக்கள் மத்தியில், ஆட்சியாளர்களால் நஞ்சாக விதைக்கப்பட்டுள்ளது. காசில்லாதவன் அரசு மருத்துவமனையில் தவம் கிடக்க வேண்டி உள்ளது. ஆட்சியாளர்களோ அதிகாரிகளோ அரசு மருத்துவமனையை பயன்படுத்துவது இல்லை. அரசு மருத்துவமனை வக்கற்றவர்களுக்கு என்று மாற்றி அடிப்படை வசதிகள் கூட செய்துதருவதில்லை. அவ்வப்போது சுகாதார அமைச்சர் ஆய்வு என்ற பெயரால் நாடகம் நடத்திக் கொண்டு இருக்கிறார்.

2009ஆம் ஆண்டு உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீடு திட்டம் என்ற பெயரில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு 400 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதில் அந்நிறுவனம் ஏப்பம் விட்ட பணம் 120 கோடி ருபாயாம். அப்படி என்றால் நம்முடைய வரிப்பணம் ரூ.480 கோடி இலாபம் என்றால் இந்த காப்பீட்டு திட்டம் மக்களுக்காகவா? அல்லது தனியார் நிறுவனத்திற்காகவா?

தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடியை தாண்டி விட்டது. இந்த மக்களின் சுகாதார தேவைக்காக ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள்? ஒரு பஞ்சாயத்திற்கு, ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்றால் கூட தமிழ்நாட்டில் 13ஆயிரம் சுகாதார நிலையம் இருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் 1215 ஆரம்ப சுகாதார நிலையமும், 8706 துணை சுகாதார நிலையமும் மட்டுமே உள்ளது. இந்நிலையில் கிராமப்புற ஏழை, எளிய மக்களின் சுகாதாரம் எங்கே உள்ளது?

எனவேதான் தோழா, நமது மாநில மாநாட்டில் அடிப்படை பிரச்சனையான கல்வி, வேலை, சுகாதாரம் ஆகிய பிரச்சனைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க டிசம்பர் 2வது வாரத்தில் களம் காண அறைகூவல் விடுத்துள்ளது.

விதி என்று வீதியில் புலம்பினால் எந்த பிரச்சனையும் தீராது. மக்கள் சக்தியின் முன்னால் எந்த மகேசனும் ஒன்றும் செய்ய முடியாது. ஆம் தோழா நமக்கான களம் விரிந்து கிடக்கிறது. பிரச்சனைகள் மண்டி கிடக்கிறது. நாளைய வரலாற்றை வென்றெடுக்க இன்றைய அடிமை சங்கிலியின் இணைப்பை உடைத்தெறிய புறப்படுவோம். நாளைய விடியலை நமக்கானதாக்க வா தோழனே ஒன்றிணைவோம், களம் காண்போம், வெற்றிபெறுவோம்.

Pin It