திருச்சிப் பேரணி மாநாட்டு நிகழ்விலிருந்து ஒரு தொகுப்பு:

இலட்சியத்தில் உறுதி; கட்டுப்பாட்டின் அடையாளமே கருஞ்சட்டை என்பதை நிரூபித்தது பேரணி. காவல் துறைக்கு வேலையே இல்லை; தோழர்களே தங்களை ஒழுங்குப்படுத்திக் கொண்டு கட்டுப்பாட்டுடன் - இளம் பெண்களும் ஆண்களும் பேரணியில் அணி வகுத்தக் காட்சி - எந்த அரசியல் கட்சியிலும் பார்க்க முடியாத ஒன்று.

trichy karunchattai meeting marriageமூத்த தலைவர்களான திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனர் வே. ஆனைமுத்து; அடுத்த தலைமுறையைச் சார்ந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் ஒரே மேடையில் அடுத்தடுத்து அமர்ந்திருந்த காட்சி தோழர்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தந்தது.

மேடைக்குப் பின் திரையில் ஒளிக் காட்சிகளாக பெரியாரின் வெவ்வேறு நிழல் படங்கள் திரையிடப்பட்டன. உரைகளுக்கு இடையே பெரியாரின் ஒரு நிமிட உரை இரண்டு முறை ஒளிபரப்பப்பட்டது. பெரியார் குரலையும் கருத்தையும் கேட்ட இளைஞர்கள் கூட்டம் உணர்ச்சி மேலிட்டு கைத்தட்டி ஆரவாரம் செய்தது.

நிகழ்வுகளின் ஒளிப்பதிவுக்கான ஏற்பாடுகளை திரைப்படத் துறையைச் சார்ந்த பெரியாரியல் கலைஞர்கள் ஏற்றுக் கொண்டு மிகச் சிறப்பாக திரையிடலைச் செய்திருந்தனர்.

பேரணியில் கருஞ்சட்டை அணிந்த இளம் பெண்கள் பறை இசை முழங்கினர். வீர விளையாட்டு நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தன. குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் கருஞ் சட்டைத் தோழர்கள் உணர்ச்சி முழக்கமிட்டு வந்தனர்.

மேடையில் 3 - ஜாதி - சடங்கு மறுப்பு - சுயமரியாதை திருமணங்கள் நடைபெற்றன. இதில் இரண்டு திருமணங்கள் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களின் குடும்பத் திருமணங்கள் என்பதோடு, தலித் சமூகத்தைச் சார்ந்த மணமகனுக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மணமகளுக்கும் நடந்தவை.

மதுரை மோசூகுடி சாமிநாதன் - லட்சுமி இணையரின் மகள் வசந்தி; கோத்தகிரி சுந்தரம், யோகேசுவரி மகன் முத்துகுமாருக்கும் (மணமகன் முத்துக்குமார், திருப்பூர் மாநகர திராவிடர் விடுதலைக் கழக அமைப்பாளர்).

ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் சென்னிமலை செல்வராசு - பழனியம்மாள் இணையரின் மகன் இனியவன் - திருப்பூர் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் முத்துலட்சுமி-ஆண்டவன் இணையரின் மகள் சாரதா ஆகியோருக்கும்; மதுரை ஆனந்த ராஜ்-பிரித்தீ ஆகியோருக்கும் மேடையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திருமணங்களை நடத்தி வைத்தார். “திருமணத்துக்கு வந்தவர்கள் கட்டாயம் சாப்பிட்டுச் செல்ல வேண்டும்” என்ற திருமண வீட்டார் நிர்ப்பந்தம் இல்லாமல், உணவுச் சுதந்திரத்தை உங்களுக்கு வழங்கக் கூடிய திருமணங்கள் இவை என்று திராவிடர் கழகத் தலைவர் நகைச்சுவையுடன் குறிப்பிட்டபோது கரவொலி செய்து வரவேற்றனர்.

பண்பாட்டு ஆய்வாளரும் பெரியாரியலாளருமான தொ. பரமசிவம்-சக்கர நாற்காலியில் உடல் நலிவுற்ற நிலையிலும் நிகழ்வில் பங்கேற்றார். “பெரியாரின் கடவுள் - மதம் - ஜாதி - சாஸ்திர எதிர்ப்புகளின் நோக்கம் - அதன் அதிகாரக் கட்டமைப்புகளைத் தகர்ப்பதுதான் என்ற நோக்கில் பெரியாரியலைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

‘பெண் ஏன் அடிமையானாள்’ நூலை ரூ.10/-க்கு மலிவு விலையில் பரப்பி வரும் ‘நன்செய் பதிப்பகம்’ தோழர்கள் 500 பிரதியை விற்று மாநாட்டுக்கு நன்கொடையாகப் பெற்றுக் கொள்ள அனுமதித்தனர். 20 நிமிடங்களில் 500 பிரதியும் விற்றுத் தீர்ந்தன. ரூ.5000 மாநாட்டு நிதியில் சேர்க்கப்பட்டது.

திருமணங்களையும் பிறகு அதில் ஏற்படும் உறவு சிக்கல்களையும் மய்யமாக வைத்தே தொலைக் காட்சி ‘சீரியல்’களை மாதக் கணக்கில் இழுத்துக் கொண்டே போகும் எங்கள் தொழிலுக்கு இத்தகைய மேடைத் திருமணங்கள் ‘உலை வைத்து விடுகிறதே’ என்று நகைச்சுவையாக்கக் குறிப் பிட்டார் சின்னத் திரை தமிழ்ப் பண்பாட்டு அமைப்பைச் சார்ந்த கவிதா பாரதி. இனி அடுத்த மேடைகளில் இந்த எண்ணிக்கை 3 ஆயிரம் திருமணங்களாக உயர வேண்டும் என்றார்.

“பார்ப்பனர் என்று கூறாதீர்; ‘பிராமணர்’ என்றே கூறுங்கள்; வீணாக பார்ப்பனரைப் பகைத்துக் கொண்டால் திரைத்துறையில் உங்கள் வளர்ச்சி பாதிக்கும்” என்று பலரும் தன்னிடம் அறிவுரைக் கூறும்போது, அதை மறுத்து பார்ப்பனனை ‘சுவாமிஜி’ என்று அழைத்து, மீண்டும் அடிமைத்தனத்துக்கு இழுத்துச் செல்ல விரும்புகிறீர்களா, என்று தான் பதிலடி தந்ததை சுட்டிக்காட்டிப் பேசினார், இயக்குனர் கோபி நயினார். ஒரு போதும் ‘பிராமணன்’ என்று அழைக்க மாட்டேன்; ‘பார்ப்பனர்’ என்றே அழைப்பேன் என்று கூறிய இயக்குனர், ஜாதி ஒழிப்புக்கு பல்வேறு சமூகங்களுக்கிடையே ஓர்மையும் உரையாடலும் அவசியம் என்று வலியுறுத்தினார்.

கடும் பொருளாதார நெருக்கடியில் வசதி வாய்ப்புகள் இல்லாத இயக்கங்களால் நடத்தப்பட்டது இந்த மாபெரும் நிகழ்வு. நிதி நெருக்கடியால் கூட்டத்தில் துண்டேந்தி நிதி திரட்டப்பட்டது. மக்கள் அளித்த தொகை ஒரு இலட்சத்து ஓர் ஆயிரத்து 402 ரூபாய் என்று மேடையில் அறிவித்தபோது பலத்த கரவொலி எழும்பியது. வலிமையான கொள்கை வீரர்களின் பாசறையே திரண்டிருந்த கூட்டம் என்பதை இந்த நிதியின் எண்ணிக்கை பறையாற்றியது.

‘நிதி திரட்ட - மேடைக்கும் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்தேன்; ஆனால் வரவில்லை; எனவே நிகழ்வுக்கு என்னுடைய பங்களிப்பை வழங்குவதாக ஒரு தொகையை இயக்குனர் பழனியப்பன், திருமுருகன் காந்தியிடம் வழங்கினார். தான் தெரிவித்த எந்தக் கருத்தையும் நிர்ப்பந்தத்துக்காக எந்த நிலையிலும் மாற்றிக் கொள்ளாத நேர்மைதான் பெரியாரின் தனிச் சிறப்பு என்று அவர் உரையில் குறிப்பிட்டார்.

7 தமிழர் விடுதலை தீர்மானம் மாநாட்டின் முத்தாய்ப்பாக இறுதி தீர்மானமாக படித்தபோது கூட்டமே பலத்த கரவொலியால் அதிர்ந்தது.

பேரணியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர், மோடி இந்துத்துவ மக்கள் விரோதக் கொள்கைகளை விளக்கிடும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.

திருப்பூர் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், பெரியார் 45ஆவது நினைவு நாளைக் குறிக்கும் வகையில் 45 அடி உயர பெரியார் உருவப் படத்தைப் பேரணியின் முகப்பில் எடுத்து வந்தது அனைவரையும் கவர்ந்தது.

மே 17 இயக்கத் தோழர்கள் சென்னையிலிருந்து ஏற்பாடு செய்த வாகனங்களுக்கு, கடைசி நேரத்தில் காவல்துறை மிரட்டலால் பெரும் நெருக்கடியைச் சந்தித்தனர். வாகன உரிமையாளர்கள் வர மறுத்த நிலையில் கடைசி நேரத்தில் தனித் தனி மாற்று வாகனங்களை ஏற்பாடு செய்து திருச்சிக்கு திட்டமிட்டபடி வந்து சேர்ந்தனர். இளம் பெண் தோழர்கள் கருஞ்சட்டையுடன் பறை இசை முழக்கி வந்தனர்.

பேரணியில் திரண்டிருந்த கூட்டத்தினரின் சராசரி வயது 25தான். இவர்கள் பெரியார் மரணத்துக்குப் பிறகு பிறந்த பெரியாரைப் பார்க்காத இளைஞர்கள் என்று கரு.பழனியப்பன் தனது உரையில் சுட்டிக் காட்டினார்.

1938 இந்தி எதிர்ப்பு; 1946இல் கருஞ்சட்டைப் படை மாநாட்டுப் பந்தலுக்கு எதிரிகள் தீ வைப்பு; 1951இல் வகுப்புரிமைப் போராட்ட வரலாறு என்று வரலாறுகளை பட்டியலிட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, 1973 டிசம்பர் 19ஆம் தேதி பெரியார் இறுதி உரையில் “தமிழருக்காக நான் பலிகடாவாகிறேன்” என்று பேசியதைக் குறிப்பிட்டு, தமிழரின் விடுதலைக்கு ‘பலிகடா’க்களாக நாம் மாறுவோம் என்று சூளுரைத்தார்.

மாநாட்டுக்கு எதிரே அமைக்கப்பட்ட முகப்பில் பெரியார் - அம்பேத்கர் - அயோத்திதாசர் - ஏ.டி. பன்னீர்செல்வம் - பிரபாகரன் - திருவள்ளுவர் - காரல் மார்க்ஸ் படங்கள் இடம் பெற்றிருந்தன.

உரையாளர்களுக்கு பெரியார் படம் பொதிந்த கேடயம் நினைவுப் பரிசுகளாக வழங்கப்பட்டன. மேடை நிகழ்வுகளை தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே.எம். செரீப் ஒருங்கிணைத்தார்.

கருஞ்சட்டைப் பேரணியைத் தொடர்ந்து, நீலம், செஞ்சட்டைப் பேரணிகளையும் அடுத்தடுத்து நடத்துவோம் என்ற அறிவிப்பை திருமுருகன் காந்தி வெளியிட்டார்.

கருப்பு - நீலம் - சிவப்பு என்பதோடு, சூழலியல் அடையாளமாக பச்சை நிறத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும், சமூகநீதிக்குள் ‘சுற்றுச்சூழல் நீதி’யும் அடங்கியிருக்கிறது என்ற வேண்டுகோளையும் முன் வைத்தார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன்.

‘நியூஸ் 18’ தொலைக்காட்சி மட்டும் நிகழ்வுகளை அவ்வப்போது நேரடி ஒளிபரப்பு செய்தது. ‘சன்’, ‘நியூஸ் 7’ தொலைக்காட்சிகள் செய்திகளில் ஒளிபரப்பின. ஏனைய ஏடுகளும் அனைத்து ஊடகங்களும் பேரணி மாநாட்டைக் கட்டுப்பாடாக இருட்டடிப்புச் செய்துவிட்டன.

பெரியார் நினைவு நாள் பேரணி மற்றும் மாநாட்டுக்கு தடை போட்ட தமிழக முதல்வரும் அமைச்சர் களும் அடுத்த நாள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நகைச்சுவைக் காட்சிகளைத் தமிழ்நாட்டு மக்கள் பார்த்து இரசித்தார்கள்.

பேரணியிலும் சுவரெழுத்துகளிலும் சொற் றொடர் ஒன்று உயிரோட்டம் பெற்று நின்றது. அது இது தான் - ‘காவிக்கு மறுப்பு - பெரியாரின் கருப்பு’.

தொகுப்பு : விடுதலை இராசேந்திரன்

‘பெண் ஏன் அடிமையானாள்’ நூலுக்கு மட்டும் புத்தகக் கண்காட்சியில் தனி அரங்கு

‘பெண் ஏன் அடிமையானாள்’ நூலை ரூ.10க்கு மலிவு பதிப்பாக்கி இலட்சக்கணக்கில் விற்பனை இயக்கம் நடத்தி வரும் நன்செய் பதிப்பகத் தோழர்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த நூலுக்கு மட்டுமே தனி விற்பனை அரங்கு எடுத்துள்ளனர். இலட்சங்களையும் தாண்டி பிரதிகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன. அரங்கின் எண். 543

Pin It