மத்திய தேர்வாணையம் நடத்திய 2015ஆம் ஆண்டுக்கான அய்.ஏ.எஸ். தேர்வில் முதலிடம் பெற்று முதல் முயற்சியிலேயே சாதனைப் படைத்தவர் ஒரு தலித் மாணவி. 22 வயதே நிரம்பிய அவரது பெயர் தினாதபி. இவருக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் தேர்ச்சிப் பெற்றவர் ஒரு இஸ்லாமிய மாணவர். அவரது பெயர் அதார் அமிர்-உல்-ஷஃபிகான். இருவரும் முசோரியில் உள்ள தேசிய பயிற்சி அகாடமியில் இப்போது பயிற்சிப் பெற்று வருகிறார்கள். புதுடில்லி தலைமைச் செயலகம் அமைந்துள்ள ‘சவுத் பிளாக்கில்’ இருவரும் முதன்முதலாக சந்தித்தார்கள். அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. தங்கள் காதலை முகநூலில் வெளிப்படையாகவே பதிவு செய்து வருகிறார்கள். இருவர் வீட்டின் பெற்றோரும் திருமணத்துக்கு ஒப்புதல் வழங்கிவிட்டனர். விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.
தினாதபி இது பற்றி கூறுகையில், “நான் சுதந்திர உணர்வு கொண்ட ஒரு பெண். நான் விரும்பிய கணவரை தேர்வு செய்துள்ளேன். ஆனால், நான் வேறு மதக்காரரை திருமணம் செய்து கொண்டதற்காக முகநூலில் மிக மோசமாக சிலர் எழுதுகிறார்கள். இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் எழுதுகிறார்கள். அது குறித்து நான் கவலைப்படவில்லை. இன்னும் நான் வெகுதூரம் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. ஒரு தலித் என்பதால் அந்த ஜாதியோடு இணைந்திருக்கும் சமூகப் பார்வையை தகர்த்து, நான் மக்களின் சமூக மேம்பாட்டுக்காக பாடுபடுவேன்” என்று கூறியுள்ளார்.
‘தகுதி திறமை’க்கு சொந்தம் கொண்டாடும் பார்ப்பனியத்தின் பொய்மையை கிழித்துக் காட்டி, ஜாதி, மத மறுப்பு மணவிழா காணும் இணையர்களை நாமும் வாழ்த்துவோம்!