அடக்குமுறைகள், கருத்துரிமை பறிப்புகள் என்று அரசுகளின் தடைகளைத் தாண்டி, திராவிடர் விடுதலைக் கழகம் எதிர் நீச்சலில் களப்பணியாற்றிய ஆண்டு 2014. தமிழக உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் கூட்டங்கள் என்றாலும், பகுத்தறிவு பரப்புரையானா லும் தமிழர் திருநாள் விழாவானாலும் திராவிடர் விடுதலைக் கழக செயல்பாடுகளுக்கு தொடர்ந்து தடைகளையும் அடக்குமுறைகளையும் ஏவிய தமிழக காவல்துறை அதன் வழியாக தனது ‘கொடூர முகத்தை’ வெளிச்சப்படுத்தியது.

இதற்காக கழகத் தோழர்கள் கொடுத்த விலை அதிகம். 8 மாதங்கள் வரை கழகத் தோழர்கள், கழகத் தலைவர் - தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை யிலடைக்கப்பட்டனர். அடக்குமுறைகளை எதிர் கொண்ட கழகம், உறுதியாக தனது கொள்கைப் பயணத்தைத் தொடர்ந்தது. மக்கள் சந்திப்பு இயக்கம், கழகத் தீர்மானங்கள், விளக்கப் பரப்புரை, அகமண முறை எதிர்ப்புப் பரப்புரை, கிராமம் கிராமமாக பகுத்தறிவு பரப்புரை (சேலம் மேற்கு மாவட்டம் 20 ஊர்களில்) என்று ஒரே நேரத்தில் நான்கு பரப்புரை இயக்கங்களை - ஒரு வாரம், 10 நாள்கள், ஒரு மாதம் என்று நடத்தி கழகத்தினர் களச் செயல்பாடுகளில் சாதனை புரிந்தனர். கழகத்தின் வார ஏடு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தனது பயணத்தை தொய்வின்றி தொடர்ந்தது. இயக்கம் சார்ந்த செயல்பாடுகளைத் தவிர, கூட்டியக்கங்களிலும் கழகம் தனது பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கி வந்தது. கழகத்துக்கு பரப்புரை வாகனங்கள் வாங்கப்பட்டன. நாடாளு மன்றத் தேர்தலில் கொள்கைப் பார்வையில் ‘ஆதரவு’ நிலை எடுத்த கழகம், பார்ப்பன-இந்துத்துவ பரப்புரையையும் மேற்கொண்டது.

கட்டமைப்பு வலிமையோ, பொருளியல் சக்தியோ இல்லாத கொள்கை உறுதியைக் கொண்ட ஓர் பெரியாரியல் அமைப்பாக களப்பணியாற்றி வரும் திராவிடர் விடுதலைக் கழகம் 2013ஆம் ஆண்டில் கடந்து வந்த சுவடுகளின் தொகுப்பு இது:

ஜனவரி:

ஓமாந்தூரார் தோட்டத்தில் தலைமைச் செயலகத்துக்காகக் கட்டப்பட்டு, பிறகு முதல்வர் ஜெயலலிதாவால் ‘சூப்பர ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனையாக அறிவிக்கப்பட்ட மருத்துவ மனையில் இடஒதுக்கீட்டைப் புறக்கணித்து, ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களை தேர்வு செய்யும் அரசு அறிவிப்பை எதிர்த்து மாவட்ட தலைநகர்களில் திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட் டங்களை (ஜன. 25இல்) நடத்தியது.

இராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் குள்ளாகி 23 ஆண்டுகாலம் சிறையில் அடை பட்டிருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் - தூக்குத் தண்டனையை நீண்டகாலமாக தாமதப்படுத்தி, நிறைவேற்றாததின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்து வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது - இந்த ஜனவரியில் தான் (ஜன.21). திருப்பூரில் கழகம் தமிழர் திருநாள் விழாக்களை சிறப்பாக நடத்தியது.

தலைநகரில் கழகம், அனைத்துக் கட்சியினரையும் இணைத்து, பல ஆண்டுகளாக நடத்தி வரும் தமிழர் திருநாள் விழாவுக்கும் கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்தது. கழக வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண் முயற்சியால் உயர்நீதிமன்ற வழியாக தடையை தகர்த்து திட்டமிட்டபடி தமிழர் திருநாளை (ஜன. 12) சிறப்பாக கழகம் நடத்தியது.

பிப்ரவரி:

பெரியாரியலின் தேவையை காலத்தின் அறைகூவலுக்கேற்ப வளர்த்தெடுத்து வரும் திராவிடர் விடுதலைக் கழகம், சுயமரியாதைக கொள்கைகளோடு 1932இல் பெரியார் உருவாக்கிய சமதர்மத் திட்டத்தின் தற்போதைய வரலாற்றுத் தேவையை கருத்தில் கொண்டு சுயமரியாதை - சமதர்ம பரப்புரை இயக்கத்துக்கு திட்டமிட்டது; ஊர் ஊராக மக்களை நேரடியாகச் சந்தித்து, பார்ப்பன-பனியா-பன்னாட்டுச் சுரண்டல்களை விளக்கிடும் பரப்புரை இயக்கம் 10 நாள்கள் சுமார் 30 பகுதிகளில் நடந்தது. சிவகங்கையில் தொடங்கி, மேட்டூரில் நிறைவடைந்தது (பிப். 16-25). மேட்டூரில் பயண நிறைவு விழா, ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ - ஜாதி எதிர்ப்பு மலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி களோடு ‘தீ விரைவு’ என்ற அகமண முறையின் பாதிப்புகளை விளக்கிடும் ஆவணப் படமும் திரையிடப்பட்டது.

இராஜபக்சே கொழும்பில் கூட்டிய ‘காமன் வெல்த்’ மாநாட்டில் மன்மோகன்சிங் பங்கேற்பதை எதிர்த்து சேலம் வருமான வரித்துறை அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெயில் தோய்த்த சாக்குப் பையை எரித்து வீசினார்கள் என்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகத் தோழர்கள் நங்கவல்லி கிருட்டிணன், அருண்குமார், அம்பிகாபதி ஆகியோர் 5 மாதம் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர் (பிப். 15) - சேலம் சிறைவாசலில் உற்சாக வரவேற்பு தரப்பட்டது.

கோவை திராவிடர் விடுதலைக் கழகம், “காதலர் நாளை” மாநாடுபோல் சிறப்பாக கொண்டாடி, 46 ஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருதுகளை வழங்கியது (பிப்.14). ‘அகமண முறையை ஒழிப் போம்’ என்று முழக்கத்தை முன் வைத்து, பரப்புரைப் பயணம் காரைக்குடியில் தொடங்கியது (பிப்.16).

ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைந்ததைத் தொடர்ந்து, ஏற்கெனவே ஆயுள் தண்டனை பெற்றிருந்த

4 பேரையும் சேர்த்து 7 பேரையும் மாநில அரசுக்குரிய உரிமையைப் பயன்படுத்தி விடுதலை செய்யப்படு வார்கள் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தது, இதே பிப்ரவரியில் தான் (பிப்.19).

விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஒரு நாள் பரப்புரை இயக்கத்தை ஜாதி எதிர்ப்பை முன்வைத்து நடத்தியது. குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, மக்கள் வாழ்விட உரிமைக்காக திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது (பிப்.21) கோரிக்கை வெற்றி பெற்றது.

மார்ச் :

சென்னையில் தலைமை நிலையத்தில் கழகத்தின் தலைமை செயற்குழு கூடியது (மார்ச் 11). தேர்தல் ஆணையம் - அரசியல் கட்சித் தலைவர்கள் சிலைகளை மூட ஆணையிட்ட உத்தரவைக் காட்டி, மன்னார்குடி, திருப்பூரில் பெரியார் சிலைகளை துணி போட்டு அதிகாரிகள் மூடியதை எதிர்த்து, உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு, மன்னை-திருப்பூர் கழகத் தோழர்கள் பெரியார் சிலை மூடப்பட்டதை அகற்றினர்.

நாகை மாவட்ட கழகம், மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டத்தை சிறப்பாக நடத்தியது (மார்ச் 29). நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமையாது தடுக்கும் நோக்கத்தில் இடதுசாரி கட்சிகள், இஸ்லாமிய கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை ஆதரிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. தர்மபுரியில் ஜாதி வெறியை உசுப்பி விட்டு களத்தில் நின்ற பா.ம.க. வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்ற முடிவையும் கழகம் எடுத்தது.

32 பேர் அமர்ந்து பயணிக்கக்கூடிய பரப்புரை வாகனம் - கழகத்துக்காக வாங்கப்பட்டது. மயிலாடு துறை மாநில செயற்குழுவில் தோழர்கள் பார்வைக்கு வாகனம் கொண்டு வரப்பட்டது. ஈரோடு மாவட்டக் கழகம் மற்றொரு வாகனம் வாங்கியது. பா.ஜ.க.வின் மதவெறி செயல்திட்டங்களை விளக்கி, ‘மோடித்துவ முகமூடி’ எனும் வெளியீட்டையும் கழகம் கொண்டு வந்தது.

இராஜபக்சே மீதான போர்க் குற்ற விசாரணையை நீர்த்துப் போக வைக்கும் இந்திய அரசின் முயற்சியைக் கண்டித்து ஆளுநரின் மாளிகையை நோக்கிய முற்றுகைப் போராட்டத்தில் கழகம் பங்கேற்றது; தோழர்கள் கைதானார்கள்.

ஏப்ரல்:

சென்னை மாவட்ட கழகம், பா.ஜ.க. மதவெறி எதிர்ப்பு பரப்புரை கூட்டங்களை 6 நாள்கள் நகரில் பல்வேறு பகுதியில் தொடர்ந்து நடத்தியது. (ஏப்.5-10).

கழக ஆதரவுள்ள இணைய செயல்பாட்டாளர் களின் கலந்துரையாடல், சென்னையில் ‘பிரிட்ஜ் அகாடமி’ எனும் பயிற்சி மய்யத்தில் கூடி இணையதள செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது (ஏப்.6).

மே:

நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித் திருந்த சூழலிலும் கழகம் தனது இயக்கப் பணிகளைத் தொடர்ந்து நடத்தி வந்தது. பேராவூரணியில் கழகத்தின் ஒரு நாள் பயிலரங்கம் நடத்தப்பட்டது (மே 24). திருப்பூரில் கழக தலைமை செயற்குழு கூடியது (மே 31). கரூர்-திருச்சி பகுதிகளில் மக்கள் சந்திப்புத் திட்டத்தை கழகத்தின் பரப்புரை வாகனத்தைப் பயன்படுத்தி தோழர்கள் 9 நாள்கள் நடத்தினர். கழக செயல்பாடுகளை விளக்கும் துண்டறிக்கைகளை வழங்கி, நபர் ஒருவரிடம் ரூ.10 என்ற திட்டத்தோடு நன்கொடை திரட்டி, கழக நூல்களையும் விற்பனை செய்தனர் (மே 22-30). கழகத்தின் சார்பு அமைப்பான ‘தமிழ்நாடு அறிவியல் மன்றம்’ சார்பாக கொடைக்கானலில் ‘குழந்தைகள் பழகு பயிற்சி’ முகாம் சிறப்புடன் நடந்தது (மே 15-19).

ஜூன் :

கோவை பகுதியில் இரண்டாம் கட்ட மக்கள் சந்திப்பு இயக்கத்தைத் தோழர்கள் நடத்தினர். கோவையில் கழக செயலவை கூடி முக்கிய முடிவுகளை எடுத்தது (ஜூன் 27). ஜூலை 17 தொடங்கி ஆகஸ்டு 18 வரை மத்திய அரசுப் பதவிகளில் குவியும் வடநாட்டு ஆதிக்கம், மத்திய பா.ஜ.க. ஆட்சியின் பார்ப்பனிய சமஸ்கிருத பன்னாட்டு சுரண்டல் கொள் கைகளை விளக்கி பரப்புரைக் கூட்டங்கள் நடத்தவும், மத்திய தேர்வாணையத்தை முற்றுகை யிடும் போராட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப் பட்டது.

பெரியாருக்கு எதிராக சில தமிழ் தேசிய அமைப்புகள் வரலாற்றுப் புரட்டல்களோடு முன் வைத்த விமர்சனங்களை ஆதாரங்களோடு மறுத்து ‘கண்டதைப் படிப்பவன்’ என்ற புனைப் பெயரில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி எழுதிய கட்டுரைத் தொடர் தொடங்கியது ஜூன் மாதத்தில் தான்!

இராஜபக்சே கொழும்பில் நடத்திய காமன் வெல்த் மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி, சென்னையில் அஞ்சலகத் தில் வெடிகுண்டுகள் வீசியதாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் உமாபதி, இராவணன், மனோ கரன், மாரிமுத்து ஆகியோர் 8 மாத சிறைவாசத்துக்குப் பின் விடுதலையானார்கள் (ஜூன் 25). மே நாள் பொதுக் கூட்டத்துக்குக்கூட காவல்துறை அனுமதி மறுத்ததால் நீதிமன்றம் வழியாக அனுமதி பெற்று திருப்பூர் கழகத் தோழர்கள் ஜூன் மாதத்தில் மே நாள் பொதுக் கூட்டத்தை நடத்தினர் (ஜூன் 21).

ஜூலை :

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி பா.ம.க.வின் சமூக நீதிப் பேரவை தொடர்ந்த வழக்கில் சட்டத்துக்கு ஆதரவாக திராவிடர் விடுதலைக் கழகம் தன்னையும் இணைத்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. கோவை செயலவை தீர்மானப்படி ஒரு மாத பரப்புரை இயக்கம் பழனியில் தொடங்கியது (ஜூலை 15). மத்திய அரசு பணிகளில் வடநாட்டார் குவிக்கப்படு வதைக் கண்டித்து, சென்னையில் உடன்பாடுள்ள அமைப்புகளை இணைத்து கழகம் தேர்வாணைய முற்றுகைப் போராட்டத்தை நடத்தியது. தோழர்கள் கைதானார்கள்.

ஜூலை 17ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடந்த நிலையில், இதற்காக வடமாநிலங்களில் முறைகேடுகள் நடந்ததாக நிறுத்தி வைக்கப்பட் டிருந்த தேர்வுகள் சென்னையில் 20ஆம் தேதி நடக்க இருப்பதாக 19ஆம் தேதி செய்தி கிடைத்தவுடன், தோழர்கள் களமிறங்கினர். அடுத்த நாள் 20 ஆம் தேதி தேர்வு நடந்த திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்லூரி முன் தேர்வு நாளன்று முற்றுகைப் போராட்டம் நடத்தி சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் கைதானார்கள்.

ஈரோடு மண்டல கழகப் பொறுப்பாளர் களுக்கான பயிற்சி முகாம் அத்தானியில் சிறப்புடன் நடந்தது (ஜூன் 26, 27). பரப்புரைப் பயணத்தின் ஒரு பகுதியாக ஜூலை 31 அன்று சென்னை ஓட்டேரி பகுதியில் கழகக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியினர் பொதுக் கூட்ட மேடை நோக்கி மறியலுக்கு வந்தனர். மேடை எதிரே எதிர்ப்புக் குரல் எழுப்பினர். கழகத் தோழர்கள் மிரட்டலைச் சந்திக்க தயாரான நிலையில் காவல் துறை தலையிட்டு கூச்சல் போட்டவர்களை அப்புறப்படுத்தியது.

ஆகஸ்டு:

பரப்புரைப் பயணத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்டு 16ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் நடைபெறவிருந்த கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி தராமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் கழக சார்பில் கூட்டத்தின் அனுமதியை உறுதி செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. மனுவை விசாரணைக்கு ஏற்று உயர்நீதி மன்றம் விநாயகர் சதுர்த்தியை காரணம் காட்டி திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுக் கூட்ட உரிமையை தடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டது (ஆக. 9). ஈரோட்டில் கழகத்தின் நிர்வாகக் குழு கூடி பரப்புரைப் பயணம் குறித்த நிறைகுறைகளை விவாதித்தது (ஆக.18). மேட்டூரில் கழகத்தினர் திட்டமிட்ட நாத்திகர் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுக்கவே, உயர்நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று, நாத்திகர் விழா பேரணியை சேலம் மேற்கு மாவட்டக் கழகம் மிகச் சிறப்பாக நடத்தியது. தமிழகம் முழுதுமிருந்தும் விழாவுக்கு கழகத் தோழர்கள் திரண்டு வந்திருந்தனர்.

செப்டம்பர்:

சென்னையில் ஆண்டுதோறும் மதப் பதட்டத்தை உருவாக்கி வரும் விநாயகன் சிலை ஊர்வலத்தை எதிர்த்து இவ்வாண்டும் சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் பெரியார் கைத்தடி ஊர்வலம் நடத்தி கைதானார்கள் (செப். 7). கழகப் பொருளாளர் இரத்தினசாமி, செயலவைத் தலைவர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பிரபாகரன், அறிவியல் மன்றத் தோழர் சிவக்குமார் ஆகியோர் செப். 9 முதல் 24 வரை தமிழகம் தழுவிய பயணம் மேற்கொண்டு கட்டமைப்பு நிதி ‘புரட்சிப் பெரியார் முழக்க’ ஏட்டுக்கான உறுப்பினர் சேர்க்கும் பணி களில் இறங்கினர் (செப்.9-24). அரசு அலுவலகங் களில் ஆயுத பூஜைகளை நிறுத்தக் கோரி மாவட்டத் தலைநகர்களில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங் களை நடத்தியது (செப்.29). சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டை உறுதி செய்த கருநாடக சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கிய தால் தமிழக முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந் தார். தமிழக அரசியலில் திடீர்த் திருப்பம் உருவானது.

சென்னை மந்தைவெளிப் பகுதியில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட நடைபாதைக் கோயிலை அகற்றக் கோரி கழகத் தோழர்கள் எடுத்த முயற்சியால் நடைப்பாதைக் கோயில் அகற்றப் பட்டது. கழக அமைப்புகளால் பெரியார் பிறந்த நாள் விழாக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டன.

அக்டோபர்:

ஆர்.எஸ்.எஸ். ‘விஜயதசமி’ கொண்டாட்டத்தையும், அதன் தலைவர் மோகன் பகவத் உரையையும், அரசு தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புச் செய்த செய்தி கிடைத்த அடுத்த நாளே சென்னை அரசு தொலைக்காடசி நிலையத்தில் சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தி கைதானார்கள. இளம் தமிழகம், தமிழ்நாடு மக்கள் கட்சி உள்ளிட்ட தோழமை அமைப்புகளும் பங்கேற்றன. சென்னை யில் தலைமைநிலையத்தில் கழகத்தின் தலைமைக் குழு கூடி, கழக அமைப்பு முறைகளில் மாற்றங் களைக் கொண்டு வருவதற்கு வசதியாக கழகத் தலைவர், பொதுச் செயலாளர் பதவிகளைத் தவிர ஏனைய பதவிகளைக் கலைப்பது என்று முடிவெடுத்தது.

தீபாவளி நாளன்று, தீபாவளி மறுப்போரின் ஒன்று கூடல் நிகழ்வுக்கு சென்னை மாவட்டக் கழகம், சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம் இணைந்து ஒன்று கூடல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தன. தீபாவளி மூடத்தனங்களை விளக்கி கருத்துகள் விவாதிக்கப்பட்டன. மூடநம்பிக்கை ஒழிப்பு திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இனி, கழக நிகழ்வுகளில் குழந்தைத் தொழிலாளர் உழைப்பைச் சுரண்டி சுற்றுச் சூழலைப் பாதிக்கும் பட்டாசுகளை வெடிப்பதில்லை என உறுதி மேற்கொள்ளப்பட்டது (அக்.2). திருச்சியில் கழக செயலவை கூட்டம் கூடி முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது. பார்ப்பனிய எதிர்ப்பு - ஜாதி தீண்டாமை எதிர்ப்பு, மனித உரிமை, சுற்றுச் சூழல் ஆபத்து, பொருளியல் சுரண்டல், பெண்ணுரிமை, பன்னாட்டு சுரண்டல் என்று பல துறைகளில் பெரியாரியல் பார்வையில் கழகத்தின் கொள்கை மற்றும் அணுகுமுறைகளை முன்வைத்து நிறை வேற்றப்பட்ட இத் தீர்மானங்களை முற்போக்கு அமைப்பினர் பாராட்டினர் (அக். 26).

நவம்பர் :

திருச்சியில் கூடிய கழகச் செயலவை முடிவின்படி உசிலம்பட்டி விமலாதேவி ஜாதி வெறிக் கொலையைக் கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் உடன்பாடுடைய அமைப்புகளைத் திரட்டி கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. தமிழகம் முழுது மிருந்தும் தோழர்கள் பங்கேற்றனர்.

கோவையில் வேளாண் பல்கலைக்கழகம் பஞ்சாங்கத்தை அறிவியலாக்கி விவசாயிகளுக்கான வழிகாட்டும் கையேட்டில் இணைத்ததைக் கண்டித்து கோவையில் கழக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடந்தது (நவ. 17).

நவம்பர் 26 ஆம் நாள் மேதகு பிரபாகரன் 60ஆவது பிறந்த நாள் வாழ்த்துக் கூறும் பதாகையை மயிலாப்பூர் கழகத் தோழர்கள் நிறுவியதைத் தடுக்க வந்த காவல்துறை, ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ செய்தியாளர், ‘முழக்கம்’ உமாபதியை தனியாக இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து நடத்திய கொலை வெறித் தாக்குதல் தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்தது. கழகம் நாடு முழுதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு அவசரமாகக் கூடியது (நவ.29). டிசம்பர் 9ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கூட்டமைப்புச் சார்பில் நடத்த முடிவு செய்யப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளான ‘முழக்கம்’ உமாபதிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தரவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி 10 நாள் பயணமாக ‘மாவீரர் நாளில்’ பங்கேற்க சுவிட்சர் லாந்து நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார். புலிகள் பயிற்சி நடந்த மேட்டூர் புலியூர் அருகே வழக்கம் போல் மாவீரர் நாள் நினைவு நாளை கழகத்தினர் எழுச்சியுடன் நடத்தினர். தமிழகம் முழுதுமிருந்தும் தோழர்கள் பங்கேற்றனர். புதுவை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாவீரர் நாள், ‘சமர்க்கள நாயகன்’ நூல் வெளியீட்டுடன் நடந்தது. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரபாகரன் 60ஆவது பிறந்த நாள் கொண்டாடப் பட்டது. அய்ரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான நீதிமன்றம் ‘விடுதலைப் புலிகள்’ இயக்கத்தின் மீது விதித்திருந்த தடை செல்லாது என்று தீர்ப்பளித்தது.

ஜாதியை ஒழிக்க பெரியார் அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டம் நடந்த வரலாற்றுச் சிறப்பு நாள் நவம்பர் 26 அன்று ஜாதி ஒழிப்புப் போராட்ட வரலாற்றை விளக்கும் துண்டறிக்கைகளை பொள்ளாச்சி மாவட்டக் கழகம் மாணவர்களிடம் வழங்கியது.

டிசம்பர்:

டிசம்பர் 9ஆம தேதி ‘முழக்கம்’ உமாபதி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய காவல்துறை வன்முறையாளர்கள் இளையராஜா, கலைச்செல்வி, வடிவேலு மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி, தமிழர் வாழ்வுரிமைக் கூட்டணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடந்தது. பல்வேறு கட்சித் தலைவர்கள், இயக்கங்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர்.

கழக தலைமை செயற்குழு சென்னையில் கூடி, அமைப்புகள் தொடர்பான பிரச்சினைகளை விவாதித்தது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக்க செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டன (டிச.22).

Pin It