மத்திய இணை அமைச்சராக இருக்கும் சாத்வி நிரஞ்சன் ஜோதி என்ற உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்த பெண் சாமியார், டெல்லியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், “டெல்லியை இராமனுக்குப் பிறந்தவர்கள் ஆட்சி செய்ய வேண்டுமா? அல்லது முறை தவறிப் பிறந்தவர்கள் ஆட்சி செய்ய வேண்டுமா?” என்று பேசியுள்ளார். இதற்கு நாடாளுமன்றத்திலும் நாடு முழுதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ‘இராமனுக்குப்’ பிறந்தவர்கள்தான் நாட்டின் நல்லாட்சிக்குத் தகுதியானவர்கள். நாட்டின் உண்மையான குடிமக்கள் அவர்கள்தான் என்ற இந்தக் கருத்து, ஏதோ, இந்தப் பெண் அமைச்சரின் உணர்ச்சிகரமான பேச்சு என்றோ, மதவெறித் தனத்தின் வெளிப்பாடு என்றோ கருதிடக் கூடாது.

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள், ‘இராமனை’ தங்களின் கடவுளாக ஏற்றுக் கொண்டால் இந்தியா வில் வாழலாம் என்று ஆர்.எஸ்.எஸ்.சுக்கு தத்துவத்தை வழங்கிய கோல்வாக்கர் எழுதியிருக்கிறார்.

1939இல் ஆர்.எஸ்.எஸ். சாகாக்களில் பாடிய பாடல், இப்படி கூறுகிறது:

“நான் பிறந்த தாய்நாடே
உன்னை வணங்குகிறேன்
என்னை வளர்த்த ஆரிய நாடே
உன்னை வணங்குகிறேன்
எங்களை விரைவில் முழுமையான
இந்துக்கள் ஆக்குங்கள்
எங்களை இராமனின் சீடர்களாக்குங்கள்”

என்கிறது அந்தப் பாடல்.

இராமனின் பிள்ளைகளாக பிறப்பது இருக்கட்டும்; ‘இராமனே’ எப்படிப் பிறந்தான்?

இராமன் பிறப்புப் பற்றி வால்மீகி இராமாயணம் என்ன கூறுகிறது? அஸ்வமேத யாகத்தில் பிறந்தவன் இராமன் என்று கூறுகிறது. இதன் கதை நாற்றமடிக் கிறது என்பதால், கம்பன், “அஸ்வமேத யாகத்தை” “புத்திர காமேஷ் யாகமாக” திருத்தி எழுதினான். கம்பனாலேயே இராமன் பிறப்பை சகிக்க முடியவில்லை போலும். வால்மீகி இராமாயணம் தான் மூல இராமாயணக் கதை. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட அந்த மூல இராமாயணம் இராமன் பிறப்புப் பற்றி என்ன கூறுகிறது?

கலைக்கோட்டு மகரிஷியும், இன்னும் அவருக்குத் துணைவராக இருத்துவிக்களும், புரோகிதப் பார்ப்பனர்களும் சேர்ந்து யாகசாலையொன்று ஏற்படுத்தி, வேதாகம விதிப்படி யக்கியங்களை வளர்த்து, யாக மண்டபத்தைச் சுற்றி வேதப் பிராமணர்கள் உட்கார்ந்துகொண்டு, சோமக் கொடி என்னும் ஒருவகைப் பூண்டை நசுக்கி அதன் சாற்றைப் பிழிந்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொண் டிருப்பர். யாக குண்டத்தைச் சுற்றி இருபத்தோரு யூபஸ் தம்பங்களை நாட்டி, அந்த ஸ்தம்பங்கள் தோறும் பசுக்கள், குதிரைகள், பாம்பு, பறவை, பன்றி, ஆமை முதலியவற்றைக் கொண்டு வந்து முறைப்படி வைக்கப்பட் டிருக்கும். அதன் பிறகு சாஸ்திர விதிப்படி அஸ்வமேத யாகத்தற்கு வேண்டிய நல்ல பஞ்ச கல்யாணிக் குதிரையொன்றும், முன்னூறு “யாகப் பசுவும்” கொண்டுவந்து, அந்த யூபஸ்தம்பத்தில் கட்டப்பட்டிருந்தனவாம்.

புரோகிதராகிய இருத்துவிக்களும், வேதப் பிராமணர்களும் முன்னாடியே சித்தப்படுத்தி வைத்திருந்த சோமபானத்தை அருந்தி, பசு, பன்றி, பாம்பு, ஆமை, மச்சம் முதலியவற்றை அந்த யாக குண்டத்திலிட்டு அக்கினிதேவனுக்கு ஆகுதி கொடுத்துவிட்டுத் தங்களும் அவற்றைத் திருப்தியாய் புசித்தானவுடன், அரசனின் முதல் மனைவியாகிய கவுசல்லியா தேவியார் பஞ்சகல்யாணிக் குதிரையை மும்முறை சுற்றி வந்தவுடன், தனது கையிலிருக்கும் உடைவாளால் அஸ்வத்தை மூன்று துண்டாக வெட்டிக் கொன்றபின், அவ்விரவு முழுதும் அஞ்சா நெஞ்சத்துடன் அக்குதிரையைக் கட்டித் தழுவிக் கொண்டிருந்து, விடிந்தபின் அரசன் தன் பத்தினிமார்களாகிய மூவரையும் இருத்துவிக்களுக்குக் (புரோகிதர்களுக்கு) குருதட்சணையாகக் கொடுத்துவிட்டாராம்., இருத்துவிக்குகளும் இராஜபத்தினிமார்களைக் கைப்பற்றிக் கொண்டுபோய் அந்த இரவு முழுதும் தங்களிடத்தில் வைத்திருந்து, அவர்களுக்குச் சந்தான பாக்கியத்தை (குழந்தைப் பிறக்கும் பாக்கியத்தை) அளித்தவுடன், அரச பத்தினிகள் மூவரையும் அரசனிடத்தில் அவர்களுக்கு ஈடான திரவியங்களைப் பெற்றுக் கொண்டு திருப்பிக் கொடுத்து விட்டார்களாம்.

அன்றே கவுசல்லியாவுக்கு இராமனும், கைகேயிக்குப் பரதனும், சுமத்திரைக்கு இலட்சுமணன், சத்துருக்கனும் ஜனனமானார்கள்.

இப்படி நம்ப முடியாத கற்பனையில் உருவாக்கப்பட்ட ஒரு இழிப் பிறப்பை கலாசாரத்தின் அடையாளமாகவும் தேசத்தின் குறியீடாகவும் மாற்றுவதற்குத் துடிக்கிறது, பார்ப்பனியம்!

இந்த “இராமனு”க்குப் பிறந்தவர்களே - நாட்டையும் ஆளவேண்டும் என்கிறார்கள்!

வெட்கம்! மகா வெட்கம்!

Pin It