இது மக்களாட்சி யுகம். மதங்கள் தோன்றி எத்தனையோ ஆண்டுகள் ஓடி விட்டன. இப்போது மதச்சட்டங்களை தூக்கி வைத்துக் கொண்டு அந்தச் சட்டங்களின்படிதான் ஆட்சி நடத்துவோம் என்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு பெயர் ‘Fundamentalism’ அது இந்து அடிப்படைவாதமாக இருந்தாலும் சரி, இஸ்லாமிய அடிப்படைவாதமாக இருந்தாலும் சரி எந்த அடிப்படைவாதமாக இருந்தாலும் அது மக்களுக்கு எதிரானது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆயுதப் போராட்டம் நடத்தி துப்பாக்கி முனையில் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறார்கள். அங்கே இருந்த அதிபர் உயிருக்குப் பயந்து வேறு நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். ஆப்கான் நாட்டில் வாழும் மக்களே அச்சத்தின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள். அந்த நாட்டில் இருந்து எப்படியாவது தப்பித்து விட்டால் போதும் என்ற மனநிலையில் இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.

2001 ஆம் ஆண்டுக்கு முன்பு தாலிபான்கள் ஆட்சியில் இருந்த போது ‘Islamic Emirate of Afghanistan’ என்ற பெயரில் அவர்கள் தங்களது ஆட்சியை நடத்தினார்கள். அப்போது ஆட்சியை எதிர்ப்பவர்களை சுட்டுக் கொன்றார்கள். பெண்கள் வேலைக்கு செல்வதை தடுத்தார்கள். பெண்கள் படிக்கவே கூடாது என்று தடை போட்டார்கள். பெண்கள் எந்தெந்த ஆடைகளை உடுத்த வேண்டும் என்பது மதத்தின் பெயரால் கட்டாயமாக திணிக்கப்பட்டன. ஆண் துணை இல்லாமல் பெண் வெளியே நடமாட முடியாது என்ற நிலை இருந்தது. பெண்களை இப்படி ஒரு பக்கம் அடக்கி ஆள்வது. கேட்டால் மதங்கள் அப்படித்தான் கூறுகிறது என்று சொல்வது. மக்களின் ஜனநாயக கருத்துரிமையை மதத்தை காரணம் காட்டி தடுப்பது. கேட்டால் சுட்டுக் கொல்வது என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியவை இல்லை.

ஆனால், இன்றைக்கு சர்வதேச அரசியல் என்பது உள்நாட்டு மக்கள் எவ்வளவு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதைவிட தங்களுக்கான மேலாதிக்கத்தை தொடங்குவதற்கு என்ன வழிகள் இருக்கின்றன என்பதைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றன. தலிபான்களின் ஆட்சி ஆப்கானில் வந்தவுடன், சீனா ஆதரவுக் கரத்தை நீட்டிவிட்டது. பாகிஸ்தானும் அதை ஆதரித்து விட்டது. இரஷ்யா மட்டும் பொறுத்திருந்து முடிவெடுக்கப் போவதாக கூறியிருக்கிறது. அமெரிக்காவில், அங்கே வாழ்ந்து கொண்டிருக்கிற ஆப்கானிய மக்கள் ஏன் அமெரிக்க படைகளை திரும்பப் பெற்று விட்டீர்கள்? என்று போராடுகிறார்கள்.

மதம் ஆட்சி செய்கின்ற எந்த நாடாக இருந்தாலும் அது மக்களை காட்டுமிராண்டி காலத்திற்கே பின்னோக்கி இழுத்துச் செல்லும் என்பதில் இரண்டு வித கருத்துகளுக்கு இடமே இல்லை. மத அடிப்படைவாதம் இப்படி எந்த உருவில் வந்தாலும், சமத்துவத்தை விரும்புகிற சமூகம், அறிவியல் சமூகம், மக்களாட்சி கோட்பாடுகளை ஏற்கும் சமூகம் அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It