Elena smolyarchukகொரோனா ஒன்றாவது அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என மனித குலத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக் கிறது. இந்த நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தப்பித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை, மக்களிடையே உருவாகி இருக்கிறது. குறுகிய காலத்தில் ஒரு நோய் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது என்பது மருத்துவ உலக வரலாற்றில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் இந்த தடுப்பூசிகளை கண்டு பிடிப்பதற்கு உழைத்த விஞ்ஞானிகள் யார்? அதன் பிண்ணனி என்ன என்ற செய்தி உலகத்தில் இருட்டடிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இது குறித்து இன்றைய இந்து ஆங்கில நாளேட்டில் ‘சுப்ரனா பானர்ஜி’ என்ற பெண் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த கட்டுரை முக்கியமான ஒரு கருத்தை வெளிச்சப்படுத்தி இருக்கிறது. கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த அந்த விஞ்ஞான குழுவிற்கு தலைமை தாங்கி வழிநடத்தி தடுப்பூசிகளை வளர்த்து எடுப்பதில் பெரும் பங்காற்றியவர்கள் பெண் விஞ்ஞானிகள் என்ற உண்மையை இந்தக் கட்டுரையில் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசிக்கு அதை கண்டறிந்த விஞ்ஞான குழுவிற்கு தலைமை தாங்கி வழிநடத்தியவர் ‘சாரா கில்பர்ட்’ என்ற பெண் விஞ்ஞானி. அவருடைய பங்கு இதில் மிகவும் முக்கியமானது. ‘கோவேக்சின்’ இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி விஞ்ஞானிகள் குழுவிற்கு தலைமையேற்று வளர்த்தெடுப்பதில் பெரும் பங்காற்றியவர் 'சுமதி' என்ற பெண் விஞ்ஞானி. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த ‘ஜேன்சன்’ (Janssen) என்ற தடுப்பூசியை தயாரிப்பதில் மிக முக்கிய பங்காற்றியவர் டச்சு நாட்டைச் சேர்ந்த ‘Elena smolyarchuk’ பெண் விஞ்ஞானி. இந்த தடுப்பூசி தான் ஏனைய தடுப்பூசிகளைவிட சக்தி வாய்ந்தது என்று இப்போது உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் இவை எல்லா வற்றையும்விட இந்த தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு அடிப்படையான ஒரு ஆய்வை நடத்தியதும் ஒரு பெண் என்பதுதான் இதில் மிகவும் முக்கியமானது. அவரது பெயர் ‘கேட்டலின் கேரிகோ’. ஹங்கேரியில் பிறந்து தற்போது அமெரிக்காவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

நோய் தொற்றுகளை கண்டுபிடிப்பது தொடர்பான ஆராய்ச்சி களில் அவர் 22 ஆண்டுகளாக தன்னை ஒப்படைத்துக் கொண்டிருக் கிறார். அவர் கண்டுபிடித்த ஒரு மகத்தான மருத்துவப் புரட்சி தான் mRNA என்ற புதிய டெக்னாலஜி ஆகும். mRNA என்ற புதிய டெக்னாலஜியை அவர் கண்டுபிடித்ததன் வழியாகத்தான் இன்றைக்கு இந்த நோய்களில் இருந்து தடுக்கின்ற தடுப்பு ஊசிகளையும் கண்டுபிடிக்க முடிந்தது என்பது மிகவும் அடிப்படையான ஒரு செய்தி ஆகும். உலகத்தில் இதற்கு முன் mRNA என்ற டெக்னாலஜியை இதுவரை கற்பனை யில் கூட எவரும் சிந்தித்தது இல்லை. அத்தகைய கண்டுபிடிப்பை உலகிற்கு வழங்கி மகத்தான புரட்சியை செய்து காட்டியிருப் பவர், இந்த கேட்டலின் கேரிகோ என்ற அமெரிக்காவில் பணியாற்றுகின்ற, ஹங்கேரியில் பிறந்த பெண் விஞ்ஞானி. தன்னுடைய மருத்துவ ஆய்வுப் பயணத்தில் கடுமையான ஆண் ஆதிக்கத்தை சந்தித்ததாக கண்ணீருடன் பகிர்ந்துகொள்கிறார்.

தன்னுடைய சோதனைச் சாலையில் தன்னுடன் இணைந்து ஆய்வு நடத்துவதற்கு எந்த ஆண் விஞ்ஞானிகளும் தயாராக இல்லை. போதுமான நிதியும் தன்னுடைய ஆய்வுக்கு ஒதுக்கப்படவும் இல்லை. ஒரு கட்டத்தில் இந்த ஆய்வுத்துறையில் இருந்து ஒதுங்கிக் கொள்ளலாம் என்று அவர் முடிவெடுத்த நிலையில் 1968ஆம் ஆண்டு ‘போட்டோ காபி சென்டர்’ ஒன்றில் டாக்டர் ‘ட்ரைவ் வெய்ஸ்’ என்றவரை சந்தித்தபோது தான் இவரது ஆய்வுகளைப் பற்றி அவர் அறிந்து வியந்து போய் இவரது ஆய்வுக்கு உதவ முன்வந்தார், ஊக்கப்படுத்தினார். அதற்குப் பிறகு தான், 'நான் என்னுடைய ஆய்வைத் தொடர்ந்தேன்' என்று அவர் இப்போது கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி முகாமை தொடங்கி வைக்கும், நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க வந்த போது கூடியிருந்த சுகாதாரப் பணியாளர்கள் எழுந்து நின்று கைதட்டி, கண்ணீருடன் அந்த விஞ்ஞானிக்கு வரவேற்பு கொடுத்த போது ‘என்னுடைய 22 ஆண்டு கனவு இப்போது வெற்றி பெற் றிருக்கிறது’ என்று அவர் மனம் நெகிழ்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். இந்த ஆண்டு நோபல் பரிசுக்கு தகுதி படைத்த ஒரே ஒரு விஞ்ஞானி இவராகத்தான் இருக்க முடியும் என்று அந்தக் கட்டுரையை சுப்ரனா பானர்ஜி எழுதியிருக்கிறார்.

அறிவியல் உலகிலும், மருத்துவ உலகிலும், விஞ்ஞான உலகிலும் ஆண்கள் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது, பெண் விஞ்ஞானிகள் எப்படிப் புறக்கணிக்கப்படுகிறார்கள், இந்தியத் திருநாட்டில் பெண்களுக்கான ஒடுக்குமுறைகள் வேறு வேறு வடிவத்தில் இருந்தாலும், அய்ரோப்பிய நாடுகளில் பெண்களுக்கான ஒடுக்கு முறைகள் வேறு ஒரு வடிவத்தில் உருவெடுத்து நின்று கொண்டிருப்பதை இந்த செய்திகள் நமக்கு உணர்த்திக் கொண்டு இருக்கின்றன. ஆனாலும் இந்த உலகம் முழுவதும் நோயினால் தவித்த மக்களை காப்பாற்றி அதற்கான தடுப்பூசியை கண்டுபிடித்த இந்த பெண் விஞ்ஞானிகளுக்கு தலைதாழ்ந்த வணக்கத்தையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்வோம்.

- விடுதலை இராசேந்திரன்