டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பாலினச் சமத்துவத்தைக் கிட்டத்தட்ட எட்டிவிட்டோம் என்று பெருமிதப் படுகிற வேளையில் உண்மையான பாலினச் சமத்துவத்தை அடையவில்லை என்கிற வேதனையும் எழுகிறது.

எந்தவொரு விளையாட்டிலும் ஆணுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண்கள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன், பெண்கள் பங்கேற்கும் வகையில் 18 புதிய போட்டிகளையும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிமுகப்படுத்தியது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களின் பங்கேற்பு 49 சதவீமாக உயரக் காரணமாக இருந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செயல் அதிகாரிகள் குழுவிலேயே பாலின ஏற்றத்தாழ்வு நிலவுவது நகைமுரண். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகக் குழுவில் 33.3 சதவீதப் பெண்களே இடம் பிடித்திருக்க, குழு உறுப்பினர்களில் 37.5 சதவீதத்தினர் மட்டுமே பெண்கள். பாரா ஒலிம்பிக் குழுவில் பெண்களின் எண்ணிக்கை 25 சதவீதம் மட்டுமே.

பாலினச் சமத்துவத்தை மேம்படுத்தும் எண்ணத்தில் இளம் தாய்மாரும் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வகையில் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், டோக்கியோவில் கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளால் வீராங்கனைகள் குழந்தைகளைத் தங்களுடன் அழைத்து வரத் தடைவிதிக்கப் பட்டது. பாலூட்டும் தாய்மார் இதற்குக் கண்டனம் எழுப்பினர். அதைத் தொடர்ந்து தாய்மார் குழந்தைகளைத் தங்களுடன் தங்க வைத்துக் கொள்ளலாம் என்று ஜூன் மாத இறுதியில் அறிவிக்கப்பட்டது.

டோக்கியோ ஒலிம்பிக்கின் ஒருங் கிணைப்புக் குழு தலைவர் யோஷிரோ மோரி, பெண்கள் அதிகமாகப் பேசுவார்கள் என்று கூட்டத்தில் பேசியதையடுத்து அந்தப் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ஒலிம்பிக் முன்னாள் வீராங் கனையும் ஜப்பானின் அரசியல்வாதியுமான செய்கோ ஹஷிமோட்டோ நியமிக்கப்பட்டார். அதேபோல், ஒலிம்பிக் தொடக்க விழாவின் கிரியேட்டிவ் இயக்குநர், ஜப்பானின் ஆடை வடிவமைப்பாளர் நவோமியின் தோற்றம் குறித்து மோசமான கருத்துகளைச் சொன்னதால் அவரும் அந்தப் பொறுப்பிலிருந்து விலக்கப் பட்டார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிறுவனரான பியர் த கூபர்தான் 1896ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பங்கேற்கத் தடைவிதித்தார். 1952ஆம் ஆண்டுவரை பத்து சதவீதத்துக்கும் குறைவான பெண்களே ஒலிம்பிக்கில் பங்கேற்றனர். அதன் பிறகு பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததே தவிர, பாலினச் சமத்துவத்தை முழுமையாக அடைய முடியவில்லை. இந்தப் பின்னணியில் பார்க்கும் போது, ஒலிம்பிக் வரலாற்றில் டோக்கியோ ஒலிம்பிக்கில் கடைப்பிடிக்கப்பட்ட பாலினச் சமத்துவ நடவடிக்கைகள் முக்கியமான மைல் கற்கள். ஒலிம்பிக் கமிட்டியின் அறிவிப்பால் பல நாடுகளும் தங்கள் அணியில் பெண்களை அதிக எண்ணிக்கையில் இடம் பெறச் செய்தன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சீனா, கனடா ஆகிய நாடுகள் ஒருபடி மேலே போய், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையிலான பெண் களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பின.

போட்டிக்கு ஏற்ற ஆடைகளைப் பெண்கள் அணிவது குறித்த விவாதத்தை ஜெர்மனியின் ஜிம்னாஸ்டிக்ஸ் அணி தொடங்கி வைத்தது. பெண்களை வெறும் உடலாகப் பார்க்கும் கலாச்சாரம் உலகம் முழுக்க நிலவிவரும் நிலையில் விளையாட்டுத் துறையும் அதற்கு விதிவிலக்கல்ல. பொதுவாக ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் கைகளையும் கால்களையும் வளைத்து இயங்குவதற்கு ஏதுவாக உடலை இறுக்கிப் பிடிக்கும் சிறிய ஆடைகளைத்தாம் அணிவார்கள். கால்கள் முழுவதும் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்ட அந்த உடை தங்கள் உடலை வெளிப்படுத்துகிற விதத்தில் உடன்பாடு இல்லை என்று அறிவித்த ஜெர்மன் பெண்கள் அணி, கழுத்து முதல் கால் வரை மறைக்கும் முழு ஆடையை அணிந்தது. இது குறித்துப் பேசிய, அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை, “நான் அணிகிற உடையில் கால்கள் தெரிவதால் நான் உயரமாகத் தோற்றமளிக்கிறேன். அதனால், அந்த உடையை அணிவதில் எனக்குச் சங்கடமில்லை. அதற்காக அனைவரும் பிகினி உடையைத்தான் அணிய வேண்டும் என்கிற அவசியமில்லை. அவரவருக்கு எது சவுகரியமாக இருக்கிறதோ அதை அணியலாம்” என்று தெரிவித்தார். போட்டியின் போது ஜெர்மனி அணி அழைக்கப்பட, சிவப்பும் வெள்ளையும் கலந்த அந்த ஆடை அழகாக இருப்பதாகப் அறிவிப்பாளர் சொன்னார். ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் இறுதிப் போட்டிக்கு ஜெர்மனி அணி தேர்வாகவில்லை என்கிற போதும், ஆடை விஷயத்தில் கவனம் ஈர்க்கத் தவறவில்லை.

பாலினச் சமத்துவத்துக்கான ஏற்பாடு களால் பலன் அடைகிறவர்கள் வெள்ளை இனப் பெண்களே என்கிறது வரலாறு. கனடா உள்படப் பெரும்பாலான நாடுகளில் கறுப்பினப் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப் படவில்லை. நிற வேற்றுமையைக் களையாமல், பாலினச் சமத்துவம் குறித்து முழங்குவதால் எந்தப் பலனும் இல்லை. அனைத்துப் பெண் களுக்கும் சமமான வாய்ப்பு வழக்கப்படுவது தான் சமத்துவத்தை அடைய உதவும். அதேபோல் மாற்றுப் பாலினத்தவர் பங்கேற்பு குறித்த தகவல்களை ஒலிம்பிக் கமிட்டி வெளியிடவில்லை. ஒவ்வொரு போட்டிப் பிரிவிலும் குறைந்தது ஓர் ஆண், ஒரு பெண் இருக்க வேண்டும் என்று அறிவித்ததே தவிர மாற்றுப் பாலினத்தவர் குறித்து எந்தக் குறிப்பும் தரப்படவில்லை.

டோக்யோ ஒலிம்பிக்கில் அரை இறுதி ஆட்டம் வரை அழைத்து சென்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் உறுப்பினர் வந்தனா கட்டாரியா வீட்டின் முன்பு சாதி இந்துக்கள் அநாகரிக நடனம்... பட்டாசு வெடிப்பு... அணியில் அதிகம் தலித்துகள் என்பதால் அரை இறுதி ஆட்டத்தில் தோல்வி என சாதி ரீதியான வசவுகள்... எல்லா விளையாட்டுகளில் இருந்தும் தலித்துகளை வெளியே அனுப்ப வேண்டுமென்று கூச்சல்... உத்தரகாண்ட் மாநிலம், அரித்துவார் ரோஷனாபாத் என்ற கிராமத்தில் இந்தியாவின் செல்ல மகள் வந்தனா குடும்பத்தினருக்கு இழைக்கப்பட்ட அநீதி...

இதே போட்டியில் மூன்று முறை தங்கம் வென்ற முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இதே அணிதான்... கால் இறுதி போட்டிக்கு இந்தியாவை தகுதியாக்கிய தென் ஆப்ரிக்காவுடனான போட்டியில் ஹாட் ட்ரிக் (தொடர்ச்சியாக மூன்று) கோல் அடித்து சாதனை புரிந்து வெற்றிக்கு பங்களித்தது வந்தனாதான்...

உலகம் முழுவதுமுள்ள மக்கள் குறிப்பாக விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் இந்தியாவின் மதிப்பை குறைத்துள்ளது... தேசத்திற்காக விளையாடும் பெருமை மிக்க வீரர்கள் மனதை இரணமாக்கியுள்ளது.

இம்முறை இந்திய பெண்கள் ஹாக்கி அணி நாடு முழுக்க பெரும் எழுச்சியை உருவாக்கியது. இந்த எழுச்சியை உருவாக்கிய பெண்கள், மிக எளிய பின்னணியிலிருந்து வந்தவர்கள். வேளாண் குடும்பம், வீட்டில் மகள் ஆடுவதை பார்க்க சரியாக ஒரு தொலைகாட்சிகூட இல்லாத குடும்பம், போட்டிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தந்தையை இழந்த ஒரு வீராங்கனை, குடிக்கு அடிமையான தந்தை தந்த மன உளைச்சலை மீறி டோக்கியோவில் வெற்றியை நிலை நாட்டிய இன்னொரு வீராங்கனை என்று இவர்களது கதைகளை கேட்க கேட்க நெஞ்சு விம்முகிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It