மக்கள் உரிமைகளையும் மாநிலங்கள் உரிமைகளையும் பறித்து, ஒற்றை பாசிச ஆட்சியாக இந்தியாவை மாற்றி வரும் நடுவண் ஆட்சி - இப்போது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தையும் நீர்த்துப் போகச் செய்து விட்டது. ஆட்சியாளர் ஊழல் - அதிகாரிகள் முறைகேடுகளை அம்பலப் படுத்துவதற்கு மக்களிடம் இருந்த வலிமையான ஆயுதத்தைப் பிடுங்கி விட்டது, நடுவண் ஆட்சி.

• தகவல் ஆணையர் என்ற பதவிக்கு தேர்தல் ஆணையத் தலைவர் பதவிக்கு நிகரான அரசியல் சட்ட உரிமை - ஊதியம் வழங்கப்பட்டு இருந்தது. மாநில தகவல் தரும் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணைய உறுப்பினர்களுக்கு நிகரான உரிமை - ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இப்போது மோடி ஆட்சி கொண்டு வந்த சட்டத்திருத்தம், இந்த சுயேட்சை அதிகாரத்தைப் பறித்து, இந்த ஆணையர்களுக்கான ஊதியத்தை அவ்வப்போது நடுவண் ஆட்சியே நிர்ணயிக்கும் என்று கூறுகிறது.

• ஏற்கனவே இருந்த சட்டப்படி தலைமை தகவல் ஆணையர் - மாநில தகவல் ஆணையர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் நீடிக்க முடியாது. ஓய்வு பெறும் வயது 65 என்று நிர்ணயிக்கப் பட்டிருந்தது. இதன் காரணமாக அதிகாரிகள் அரசுக்கு எதிராக இருந்தாலும்கூட அச்சமின்றி தகவல்களை வழங்கி வந்தனர். இப்போது நடுவண் ஆட்சி, அவர்கள் பதவிக் காலத்தை நீட்டிக்கலாம். ஓய்வு பெறும் வயதையும் நீட்டிக்கலாம் என்று சட்டம் திருத்தப்பட்டு விட்டது. எனவே அரசுக்கு எதிராக செயல்படாமல் இருந்தால் பதவி நீட்டிப்பு கிடைக்கும் என்பதால் அதிகாரிகள் நேர்மையோடு செயல்படுவார்களா என்று எதிர்பார்க்க முடியாது.

• ஏற்கனவே இருந்த சட்டப்படி பிரதமர் நியமிக்கும் குழு - நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், பிரதமரால் நியமிக்கப்படும் காபினட் அந்தஸ்துள்ள ஒரு அமைச்சர் அனைவரும் சேர்ந்துதான் தலைமை ஆணையரை தேர்வு செய்ய முடியும். மாநிலங்களில் செயல்படும் தகவல் ஆணையர்களை முதலமைச்சரால் நியமிக்கப் படும் மூவர் குழு மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சேர்ந்துதான் தேர்வு செய்ய முடியும். இப்போது பதவிக் காலம் மற்றும் ஊதியங்களை நிர்ணயிக்கும் அதிகாரங்களை நடுவண் அரசே எடுத்துக் கொண்டு விட்டதால் மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டு விடுகிறது. தகவல் தரும் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யும் உரிமை குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்குத்தான் உண்டு என்பது பழைய சட்டம். அதுவும் உச்சநீதிமன்றம் நியமிக்கும் விசாரணைக் குழுவால் அதிகாரிகள் மீதான புகார்கள் உறுதிப்படுத்த வேண்டும். இப்போது நடுவண் அரசு நினைத்தாலே பதவி நீக்கம் செய்ய வழி வகுத்துள்ளது சட்டத் திருத்தம்.

நேர்மையான ஆட்சியாளர்களாக இருந்தால் ஏன் இந்தச் சட்டத்துக்கு பயப்பட வேண்டும்?

மூன்று வாரங்களுக்கு முன் பீகாரில் பா.ஜ.க.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. அவர் மீதான குற்றச்சாட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தும் ஒரு செயல்பாட்டாளரை நீதிமன்ற வளாகத்திலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கு தூண்டுதலாக செயல்பட்டார் என்பதாகும். தகவல் பெறும் உரிமைச் சட்டம் என்ற ஒன்று உயிர்த் துடிப்புடன் இருப்பதால் தங்கள் கட்சிக்காரர்கள் தண்டனைக்குள்ளாக வேண்டியிருக்கிறதே, என்ற எண்ணத்தில் தான் இந்த சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.