பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா 14 ஆண்டுகால இழுபறிக்குப் பின் மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. மக்களவையில் நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மசோதாவை ஆதரித்த பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளிலேயே இது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்த மசோதா சட்டமாகி விட்டால், 544 நாடாளுமன்ற உறுப்பினர்களில், 181 பேர் பெண்களாக இருப்பார்கள். 28 சட்டமன்றங்களில் உள்ள 4,109 சட்டமன்ற உறுப்பினர்களில் 1370 பேர் பெண்களாக இருப்பார்கள். இப்போது நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் குறைவுதான். காங்கிரஸ் கட்சி, கடந்த தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியதே 43 பெண்கள்தான். அதே போல், பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தியது 44 பெண்களைத்தான்.  

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, பிற்படுத்தப்பட்டோர், முஸ்லீம்களுக்கான உள் ஒதுக்கீட்டோடு தான் வரவேண்டும் என்று கூறி, மசோதாவையே எதிர்க்கும் கட்சிகள் கடந்த தேர்தலில் களமிறக்கிய பெண்களின் எண்ணிக்கையும் குறைவுதான். பகுஜன் சமாஜ் கட்சி 28 பெண்களையும், சமாஜ்வாடி கட்சி 15 பெண்களையும் ஜனதா தளம் (யு) 3 பெண்களையும், ராஜ்டிரிய ஜனதா தளம் 2 பெண்களையும் மட்டுமே நிறுத்தியது. இந்த அரசியல் கட்சிகள் எல்லாமுமே பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தர விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. 

இந்த நிலையில் சட்டம் இருந்தால் மட்டுமே பெண்களுக்கு அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. எனவேதான் அப்படி ஒருசட்டம் வந்துவிடாமல் தடுக்கும் தீவிர முயற்சிகள் நடக்கின்றன.  

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு ஒதுக்கீட்டுக்கான சட்டத்துக்கு எதிர்ப்பு இல்லாதபோது, நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கான உரிமைகளை வழங்கினால் மட்டும் கடும் எதிர்ப்புகள் வருகின்றன. பள்ளிகள், கல்லூரிகளில் இடஒதுக்கீட்டுக்கு எழாத எதிர்ப்பு, உயர்கல்வியில், மேல் பட்டப்படிப்பில் இடஒதுக்கீடு என்று வரும்போது, வலிமையாகி விடுவதைப் போல்தான்! 

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை உள்ஒதுக்கிடு ஏதும் இல்லை. தாழ்த்தப்பட்டோருக்கான ரிசர்வ் தொகுதி ஒதுக்கீடு மட்டுமே இருந்து வருகிறது. இந்த நிலையில் ரிசர்வ் தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர் பெண்களாக இருந்தால், கட்டாயமாக அவர்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடிப் பிரிவினராகத்தான் இருந்தாக வேண்டும். ஏனைய தொகுதிகளில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் பற்றிதான் இப்போது பிரச்சினை எழுகிறது. உயர்சாதி, நகர்ப்புற மேல்தட்டு வர்க்கப் பெண்கள் தேர்தல் களத்துக்கு வந்து, பெண்களுக்கான ஒதுக்கீடுகளைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற வாதத்தை, மசோதாவை எதிர்க்கும் கட்சிகள் முன் வைக்கின்றன. இந்த வாதத்தில் உண்மை இருக்கிறதா என்பது மசோதா சட்டமான பிறகுதான் தீர்மானிக்க முடியும். ஆனால் மண்டல் அறிக்கை அமுலாகிய பிறகு, இந்திய அரசியலில் நிகழ்ந்த மாற்றத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பார்ப்பன உயர் சாதி அரசியல் பிரதிநித்துவமும், தலைமையும், அரசியலில் கடும் வீழ்ச்சியை சந்திக்க தொடங்கின. பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்டோரின் அரசியல் அத்தியாயம் தொடங்கியது.  

இந்தியாவில் ஜனநாயகமும், சாதியும் இணைந்து கைகோர்த்து நிற்கும் நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் நிறுத்தப்படுகிற வேட்பாளர்களை தொகுதியில் நிலவும் சாதிகளின் எண்ணிக்கையே தீர்மானிக்கிறது என்பதே கசப்பான உண்மை. இதனால், உள் இடஒதுக்கீடு ஏதும் இல்லாமலேயே பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் கணிசமாக நாடாளுமன்றத்துக்கு வந்து விடுகிறார்கள். இந்த நிலையில் பெண்களுக்கான மசோதா உள்ஒதுக்கீட்டோடு மட்டுமே கொண்டு வரப்பட வேண்டும் என்று பிடிவாதம் காட்டுகிறவர்களின் நோக்கம், பெண்கள் பெருமளவு அரசியலுக்கு வந்துவிடக் கூடாது என்பது தானே தவிர, சமூகநீதிக்கான துடிப்பு அல்ல. உயர் கல்வித் துறையில் 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் வீதிக்கு வந்து எதிர்ப்பு காட்டியபோது, இந்த ‘சமூக நீதிப் போராளிகள்’ வீதிக்கு வந்து போராடவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். 

‘பெண்கள் மசோதாவை எதிர்க்கும் கட்சிகள் தேர்தலில் பெண் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது, பிற்படுத்தப்பட்டோர், மைனாரிட்டிகளைத் தேர்வு செய்ய எந்தத் தடையுமே இல்லை’ என்று, காங்கிரஸ் தலைவர் சோனியா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அப்படிக் கூறாமல், ‘காங்கிரஸ் கட்சி, பெண் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் போது, பிற்படுத்தப்பட்டோர் மைனாரிட்டிகளுக்கே வாய்ப்பளிக்கும்’ என்று சோனியா கூறியிருக்கக் கூடாதா? அப்படி கூறியிருந்தால், மசோதாவை எதிர்ப்போர் வாயை அடைத்திருக்கலாமே என்ற கேள்வியை ‘இந்து’ ஏட்டில் வெளிவந்த ஒரு கட்டுரை எழுப்பியிருக்கிறது. இது நியாயமான கேள்விதான். மசோதாவை ஆதரிக்கிற கட்சிகள், இப்படி ஒரு உறுதிமொழியை முன் வைத்தால், பெண்கள் மசோதாவுக்கான எதிர்ப்பு பெருமளவு அடங்கிப் போயிருக்கும். 

வி.பி.சிங் மண்டல் அறிக்கையை முதன்முதலாக அமுல்படுத்தியதே வேலை வாய்ப்பில் மட்டும்தான், அதிலும், விஞ்ஞானம், ராணுவம் தொடர்பான துறைக்கு பொருந்தாது என்றுதான் அறிவித்தார். ஆனாலும் கூட, முதலில் “கணக்கு தொடங்கப்படட்டும்” என்ற கண்ணோட்டத்தில், சமூக நீதியில் நம்பிக்கை உள்ள கட்சிகள் அதை வரவேற்றன. இதே அணுகுமுறையை பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவில் பின்பற்றுவதற்கு, ஏன் தயங்க வேண்டும்? 

பெண்கள் அமைப்புகள் இதற்கான ஆதரவு இயக்கங்களைத் தொடங்கிட வேண்டிய நேரம் வந்துவிட்டது! மிரட்டலுக்கு ஆட்சி பணியக் கூடாது.

- விடுதலை இராசேந்திரன்