குண்டர் சட்டத்தைத் தகர்த்து விடுதலையானவுடன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, 2017ஆம் ஆண்டு தோழர்களுடன் நேராக இராயப்பேட்டை திராவிடர் விடுதலைக் கழகத்தின் பெரியார் படிப்பக வாயிலில் உள்ள பெரியார் சிலைக்கு மாலையிட வந்தார். அப்போது திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் வரவேற்று மாலை அணிவிப்பு நிகழ்வில் பங்கேற்றனர். ஓராண்டுக்குப் பிறகு இப்போது சட்ட விரோதமாகக் கூடி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததாக காவல்துறை தோழர் திருமுருகன் காந்தியை கைது செய்துள்ளது. முதலில் அவர் மீது ‘தேசத் துரோக’ வழக்கைப் பதிவு செய்து வெளிநாட் டிலிருந்து அவர் திரும்பும் வரை காத்திருந்து பெங்களூர் விமான நிலையத்தில் கருநாடக காவல்துறை கைது செய்து, சென்னை நகர காவல்துறையிடம் ஒப்படைத்தது. சைதை நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டார் திருமுருகன் காந்தி. ஜெனிவாவில் உள்ள அய்.நா.வின் மனித உரிமைக் குழுவில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி திருமுருகன் பேசியிருக்கிறார். இது தேச விரோதம் என்றது காவல்துறை. அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் பேசுவது எப்படி குற்றமாகும்? அதில் இந்தியாவும் இணைந் திருக்கிறதே? இந்தக் குற்றச்சாட்டில் எப்படி காவலில் வைப்பது என்று கேட்ட நீதிபதி, காவலில் அடைக்க மறுத்து, வேண்டுமா னால் அது குறித்து திருமுருகன் காந்தியிடம் 24 மணி நேர விசாரணை நடத்தி அவரை விடுவித்துவிட வேண்டும் என்றார் நீதிபதி.

அடுத்த சில மணி நேரங்களிலே இராயப்பேட்டை பெரியார் சிலைக்கு சட்ட விரோதமாக ஊர்வலம் சென்று மாலை அணிவித்ததாகக் கூறி வேறு ஒரு நீதிபதி முன் நிறுத்தி கைது ஆணை பெற்று வேலூர் சிறையில் அடைத்து விட்டனர்.

பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது குற்றமா என்று கேட்டு இராயப்பேட்டையில் உள்ள அதே பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் 9 பேரை காவல்துறை கைது செய்து சிறையிடைத்துள்ளது (ஆக.12இல்). பெரியார் சிலைக்கு மாலை போட் டதற்காக கைது செய்யவில்லை. 9 பேர் ஒன்றாகக் கூடி வந்ததுதான் குற்றம் என்கிறது காவல்துறை.

கலைஞர் மறைவுக்கு இறுதி மரியாதை தெரிவிக்க காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி வந்தபோது அவருக்குப் பாதுகாப்பு தர வேண்டிய காவல்துறை காணாமல் போய்விட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி திக்கு முக்காடிப் போய் தவித்ததார் இராகுல் காந்தி. பலத்த பாதுகாப்புக்குரிய ஒரு அகில இந்திய கட்சியின் தலைவரை இப்படி ‘அம்போ’ என்று பாதுகாப்பு வழங்காமல் தவிக்க விட்ட காவல்துறை, அதற்குக் கூறிய காரணம் என்ன தெரியுமா? இராகுல் காந்தி வருவதாக அறிவித்த நேரத்துக்கு முன்கூட்டியே வந்து விட்டார். நாங்கள் என்ன செய்ய முடியும் என்று காரணம் கூறுகிறது. இராகுல் காந்தி காவல்துறையின் பாதுகாப்புப் பெற வேண்டுமானால் அவர் அறிவித்த நேரத்தில் சரியாக வந்து சரியாக அறிவித்த நேரத்தில் புறப்பட்டு விட வேண்டும் போலிருக்கிறது. அப்படிப் பாதுகாப்பில் ‘கறார்’ காட்டும் இதே காவல்துறை எஸ்.வி.சேகர் என்ற பார்ப்பன திரைப்பட நடிகர் மீது தொடரப் பட்ட வழக்கில் அவருக்கு உயர்நீதிமன்றம் முன் ஜாமின் மனுவை இரத்து செய்த பிறகும் மாதக் கணக்கில் அவரைக் கைது செய்யாத தோடு கைது செய்யப்பட வேண்டிய நபருக்கு பாதுகாப்பு அளித்து வந்தது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதனின் (பார்ப்பனர்) நெருங்கிய உறவுக்காரர் என்பதற்காக காவல்துறை, இராகுல் காந்திக்கு தர மறுத்த ‘பாதுகாப்பை’ சட்டப்படி கைது செய்யப்பட வேண்டிய எஸ்.வி.சேகருக்கு ஓடோடி வழங்கியது.

காவல்துறையை இயக்குவது நடுவண் அரசால் அதிகாரமளிக்கப்பட்டுள்ள ஒரு பார்ப்பனர் குழுதான் என்பதற்கு இது ஒரு சான்று. மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் உடல் அடக்கத்துக்கு அனுமதி மறுத்து ‘அறிக்கை’ வெளியிட்டது. (அரசாணை அல்ல; அறிக்கை என்றுதான் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கூறினார்) அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அறிக்கைகளை அமைச்சர்கள் வெளியிட வேண்டுமே தவிர, அரசின் தலைமைச் செயலாளர் அல்ல; இதிலிருந்து தமிழக அமைச்சரவை அதிகாரம் பறிக்கப்பட்டு, பார்ப்பன தலைமைச் செயலாளருக்கு வழங்கப்பட்டிருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இதில் கலைஞருக்கு கடற்கரையில் இடம் தரக் கூடாது என்று வாதாடியவர் சி.எஸ். வைத்தியநாதன் எனும் பார்ப்பனர். அவர்தான் அரசு வழக்கறிஞர். இதே கருத்தை தொலைக்காட்சியில் பேசியவர் ‘துக்ளக்’ ஆசிரியரும் ஆர்.எஸ்.எஸ்.சின் அதிகார மய்யமுமான பார்ப்பனர் ஆடிட்டர் குருமூர்த்தி, தமிழக அரசின் அதிகாரப்பிடி ‘அவாள்’களிடம் தான் சிக்கியிருக்கிறது.

பெரியார் சிலைக்கு மாலையிட தடை; கலைஞர் உடலை அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யத் தடை - என்று தமிழின உணர்வுகளை அவமதிக்கும் செயல்பாடுகள், தமிழகத்தில் பா.ஜ.க.வை முழுமையாகத் துடைத்தழிக்கும் என்ற அளவில் நாம் வரவேற்கவே செய்கிறோம்.

பெரியார் சிலைக்குக் கூட்டமாக வந்து மாலை போடுவது குற்றம் என்று கைது செய்யும் காவல்துறை, அடுத்து கலைஞர் நினைவிடத்தில் கூட்டமாக வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவதும் குற்றம் என்று அங்கே திரண்டு வரும் மக்களையெல்லாம் கைது செய்து தமிழகம் முழுதும் உள்ள நீதிமன்றங்களில் அவர்களைக் கொண்டு போய் நிறுத்தி ‘ரிமாண்ட்’ செய்தாலும் ஆச்சரியமில்லை. அதையும் செய்துவிட்டால் தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியிலேயே பா.ஜ.க. என்ற மதவாத கட்சிக்கு ஒரு நிரந்தரப் புதை குழியும் நினைவுச் சின்னத்தையும் தமிழ்நாட்டு மக்கள் அமைப்பதற்கு பேருதவியாக இருக்கும். அப்போது எந்தத் தடையும் இல்லாமல் தமிழகமே திரண்டு வந்து அந்த ‘சமாதி’க்கு மலர்வளையம் வைக்கும் காலம் விரைந்து வந்து சேரும்.

Pin It