கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

‘ஒற்றை ஆட்சி; ஒற்றைப் பண்பாடு’ நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் மத்திய பார்ப்பனிய ஆட்சி - நீட் வழியாக மாநில கல்வி உரிமையை பறித்ததுபோல், ‘ஜி.எஸ்.டி.’ வழியாக மாநிலங்களின் வரி விதிப்பு உரிமையையும் பறித்துவிட்டது.

இந்திய அரசியல் சட்டம் இந்தியா வின் மாநிலங்களின் உரிமைகளில் வரிவிதிப்பு உரிமைகளையும் வழங்கியிருக்கிறது. நாடு முழுதும் ஒரே வர்த்தக சந்தை - ஒரே வரி என்று கூறி மோடி மத்திய சரக்கு மற்றும் சேவை வரியை ஜூலை முதல் தேதி முதல் அமுல்படுத்திவிட்டார்.

அம்பானி, அதானி போன்ற பெரும் பணமுதலைகள் இதை ஆதரிக்கிறார்கள் என்பதிலிருந்தே இது யாருக்கு சாதகமானது என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த ஜி.எஸ்.டி. சிறிய நடுத்தர நிறுவனங்கள், வர்த்தகர்கள் சாமான்ய மக்கள் தலை மீது சுமையை ஏற்றியிருக்கிறது. ஜவுளி, பீடி, மருந்துத் தொழில்கள், கட்டுமானம், போக்குவரத்து, தையல், தீப்பெட்டித் தொழில்கள், சிறு தொழில்களை கடுமையாக பாதித்திருக்கிறது.

•             2010ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி இத்திட்டத்தைக் கொண்டு வர முயன்றபோது அதை கடுமையாக எதிர்த்தது இதே பா.ஜ.க.தான். இதற்காக  3 மசோதாக்களை நாடாளுமன்றத் தில் சமர்ப்பித்தபோது அதைத் திரும்பப் பெற வைத்தது பா.ஜ.க. குஜராத் முதல்வராக இருந்த மோடி, தனது மாநிலத்தில் ஜி.எஸ்.டி.யை உயிரைக் கொடுத்தாவது தடுப்பேன் என்று வீரவசனம் பேசினார். அதே பா.ஜ.க. வரித் துறையில் புரட்சி செய்துவிட்டதுபோல் இப்போது தம்பட்டமடிக்கிறது.

•             மாநிலங்களின் தனித்துவங்களை அழிக்கும் முயற்சிகளில் ஒன்றாகவே பா.ஜ.க. இப்போது இதை அமுல்படுத்தியிருக்கிறது.

•             சிறு தொழில்களுக்கு 5 சதவீத சேவை வரியிலிருந்து ரூ.1.5 கோடி வரை விற்பனை செய்வோருக்கு விலக்கு தரப்பட்டிருந்தது. இப்போது இந்த இலக்கை 20 இலட்சமாக குறைத்து விட்டார்கள்.

•             திருப்பூரில் பின்னலாடைத் தொழிலில் பெரும் நிறுவனங் களிடம் சிறு சிறு வேலைகளை ‘ஜாப் ஆர்டர்’ எடுத்து வேலை செய்து வந்த 7 இலட்சம் தொழி லாளர்கள் இப்போது வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. காரணம் ‘ஜாப் ஒர்க்’ எடுத்து செய்யும் வேலைக்கு 18 சதவீத வரி விதித்து விட்டார்கள். ஜாப் ஒர்க் செய்வோருக்கு கூலியை உயர்த்தித் தர முடியாது என்று பெரும் நிறுவனங்கள் தாங்களாகவே அந்த வேலைகளை செய்து கொள்ள முடிவு செய்து விட்டன. இதனால் ‘ஜாப் ஒர்க்கை’ நம்பி திருப்பூர் வந்த ஏழை குடும்பங்கள் ஊரை விட்டே வெளியேறத் தொடங்கி விட்டன. பா.ஜ.க.வை தீவிரமாக ஆதரிக்கும் ‘தினமணி’ நாளேடே (ஜூலை 17) இந்த செய்தியை கட்டுரையாக வெளியிட்டுள்ளது.

•             குடிசைத் தொழிலான கடலை மிட்டாய்க்கு 5 சதவீத வரி; ஆனால் பீசாவுக்கு வரி இல்லை.

•             ஆயுர்வேத மருந்துகளுக்கு வரி போட்டு விட்டார்கள். கடும் காய்ச்சலுக்கு அரசு இலவசமாக வழங்கி வந்த ‘நில வேம்பு கசாயம்’ - இனி பாட்டிலில் அடைத்து 100 ரூபாய்க்கு விற்கப் போகிறார்கள் என்று கூறுகிறார் மருத்துவர் சிவராமன்.

•             ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விற்கும் சொகுசுகார்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் வரி குறைப்பு.

•             பெட்ரோலுக்கும் டீசலுக்கும் ஜி.எஸ்.டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுவிட்டது. அதன் இரகசியம் என்ன தெரியுமா? ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டு வந்து விட்டால் விலை பாதியாகக் குறைந்து விடும். பெட்ரோலுக்கு 55 சதவீதமும் டீசலுக்கு 57 சதவீதமும் இப்போது வரி போடப்படுகிறது. இதை 18 சதவீதமாக குறைக்க மோடி அரசு தயாராக இல்லை. அதுதான் விலக்கு அளித்ததற்கான இரகசியம். வார இறுதி நாள்களில் குடும்பத்துடன் ஓட்டலுக்கு சென்று சாப்பிடுபவர்களுக்கு போடப்படும் ‘பில்’லைப் பார்த்தாலே ‘ஜி.எஸ்.டி.’யின் சுமை புரியும்.

இப்படி ஏராளமாக சொல்ல முடியும்; உதாரணத்துக்காக மட்டும் சிலவற்றை சுட்டிக் காட்டினோம்.

இதைவிட மற்றொரு ஆபத்தும் இதில் இருப்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.

ஜி.எஸ்.டி. கட்டமைப்பில் வரி செலுத்துவோர் - இந்த வரிவிதிப்பை அமுல்படுத்துவோர் அனைவருக்கும் தொழில்நுட்பக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகள் வழங்குவதற்காக ‘ஜி.எஸ்.டி.என்.’ என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட் டுள்ளது. இது அரசு நிறுவனம் அல்ல; தனியார் அமைப்பு என்பது தான் அதிர்ச்சிக்குரிய செய்தி. பொதுவாக ‘ஸ்டேட் வங்கி’ போன்ற அரசுத் துறை வங்கிகளிடம் தான் அரசு நிதி சார்ந்த பொறுப்புகளைக் கையாளும் உரிமைகள் வழங்கப் படும். இப்போது அதிகாரம் வழங்கப் பட்டுள்ள தனியார் அமைப்பில் அரசின் பங்கு 49 சதவீதம். ஆனால் அய்.சிஅய்.சி. வங்கி, ஹெச்.டி.எப்.சி. வங்கி உள்ளிட்ட தனியார் வங்கி மற்றும் அமைப்புகளின் முதலீடு 51 சதவீதம். அரசு முதலீட்டைவிட அதிகம். மத்திய மாநில அரசுகள் ஜி.எஸ்.டி. மூலம் வசூலிக்கும் வரியான பல இலட்சம் கோடி ரூபாய் நிதி நிர்வாகத்தை தனியார் கட்டுப்பாட் டிலுள்ள நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு இந்தியாவின் அனைத்துத் தொழில் நிறுவனங்களின் வர்த்தகம், வணிகம் சார்ந்த அத்தனை தகவல்களும் தனியார் நிறுவனத்துக்குக் கிடைத்து விட வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளது மோடி ஆட்சி. தனியார் பிடியில் உள்ள இந்த ‘ஜி.எஸ்.டி.என்.’ நெட் ஒர்க்கிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் யாரும் தகவல் கேட்டுப் பெற முடியாது. மத்திய அரசின் தலைமை கணக்கு அதிகாரியின் (சி.ஏ.ஜி.) கணக்கு தணிக்கையும் செய்ய முடியாது. இது தேசத்தின் நலனுக்கே ஆபத்து. இவ்வளவு அதிகாரங்களை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க லாமா என்று எதிர்ப்பு தெரிவிப்பது யார் தெரியுமா? பா.ஜ.க.வைச் சார்ந்த சுப்ரமணியசாமி, மாநிலங்களவை யிலேயே சுப்பிரமணியசாமி இதை எதிர்த்துப் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா உள்ளிட்டவர்கள் சுவாமியின் கருத்தை ஆதரித்துப் பேசியுள்ளனர். (‘ஜூனியர் விகடன்’ 26.7.2017 இதழ் இது பற்றி விரிவாக செய்தி வெளியிட்டுள்ளது)

அய்.சி.அய்.சி., எச்.டி.எப்.சி. உள்ளிட்ட தனியார் வங்கிகள், பார்ப்பன ஆதிக்கத்தில் புழுத்துக் கிடப்பவை. இந்தியாவின் அனைத்து வணிக தொழில் வர்த்தக நடவடிக்கைகள் அவை செலுத்தும் வரிகளை முறைப்படுத்தும் அதிகாரங்கள் அனைத்தும் பார்ப்பன ஆதிக்க அமைப்புக்கு தாரை வார்த்திருக்கும் தேச துரோகத்தை செய்திருக்கிறார் நிதி அமைச்சரான பார்ப்பனர் அருண் ஜெட்லி, மோடியின் ‘ஆசீர்வாதத்தோடு’ நடந்திருக்கிறது. இனி மாநில அரசு நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் எந்தப் பொருளுக்கும் வரி விதிக்கும் அதிகாரம் இல்லை. ‘ஜி.எஸ்.டி.’ வரியை மாற்றி அமைக்கும் அதிகாரம் ‘ஜி.எஸ்.டி.’ கவுன்சில் என்ற அமைப்புக்குப் போய் விட்டது. இதில் சட்டமன்றமோ நாடாளுமன்றமோ தலையிட முடியாது. இந்த அமைப்பின் ‘வீட்டோ’ அதிகாரத்தை மோடி ஆட்சி தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுவிட்டது. இதில் உறுப்பினராக இருக்கும் நிதியமைச்சர்கள் தலையாட்டி பொம்மைகள்தான்.

ஒரு மாநிலத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்ட வரிவிதிப்பைப் பிடுங்கி, பார்ப்பன தனியார் நிறுவனத்தின் கண்காணிப்புக்கு தாரை வார்த்து விட்டார்கள். தமிழகத்தின் தனித்துவம் பறிபோய் விட்டது.

இந்த ஆபத்துகளை தமிழர் களுக்கு உணர்த்தவே இந்தப் பயணம்.