திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 12.8.2016 அன்று மாலை, சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற ‘அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைப் பயணம்’ நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
இந்திய அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு பல அடிப்படை உரிமைகளை வழங்கியிருப்பதைப் போலவே அதன் 51ஏ பிரிவின்படி அடிப்படை கடமைகளையும் வரையறுத்துள்ளது. அறிவியல் மனப்பான்மை, மனித நேயம், ஆய்வு மனப்பான்மை, சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்தெடுப்பது என்பதை குடிமக்கள் அனைவரின் அடிப்படை கடமை என்று உள்பிரிவு ‘எச்’ (h) வலியுறுத்துகின்றது. இதனை வலியுறுத்தியே “நம்புங்கள் அறிவியலை! நம்பாதீர்கள் சாமியார்களை!” எனும் முழக்கத்தோடு அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைப் பயணத்தை தமிழகத்தின் நான்கு முனைகளிலிருந்தும் திராவிடர் விடுதலைக் கழகம் மக்களின் பெரு வரவேற்போடும், ஆதரவோடும் நடத்தி முடித்துள்ளது. அரசியல்அமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அடிப்படை கடமைகளை நிறைவேற்றும் இப்பயணங்களுக்கு ஆதரவாக பாதுகாப்பு வழங்கியும் வந்த சிறுஇடையூறுகளைக் களைந்தும் பேருதவியாக நின்ற காவல்துறை குழுக்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
அதேவேளை, காவல்துறை தலைமை இயக்குநர் ஒப்புதல் பெற்றும், உள்ளூர் காவல்துறையிலிருந்து அனுமதியும் பெற்று நடைபெற்ற இப்பயணத்தை, வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் ஒரு சிலரின் எதிர்ப்பு என்று காரணமாகக் காட்டியும், வேலூர் மாநகரிலும், திருவண்ணாமலை மாவட்டத்திலும், விழுப்புரம் மாவட்டத்திலும் பயணம் செய்வதற்கு முன்னதாகவே பெற்றிருந்த அனுமதியை முன்கூட்டியே இரத்து செய்த காவல்துறை அதிகாரிகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களை கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. அனுமதி பெற்றவர்களிடம் தமிழ்நாடு காவல்துறை சட்டவிதிகளின்படி கருத்துகூடகேட்காமல் தன்னிச்சையாக இரத்து செய்த தான்தோன்றித்தனமான இப்போக்கு ஒரு ஜனநாயக நாட்டுக்கு ஏற்புடையதல்ல என்பதையும், அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமைகளுக்கு எதிரானது என்பதையும் வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
ஒலிபெருக்கி அத்துமீறல்
கடுமையாக உழைத்துக் களைத்த தொழிலாளர்களுக்கும், முதியோர்களுக்கும், நோய்வாய்பட்டோருக்கும், பயிலும் மாணவர்களுக்கும், இளங்குழந்தைகளுக்கும் நிம்மதியான உறக்கம்என்பது மிகவும் தேவையான ஒன்றாகும். இதனைக் கருத்தில் கொண்டே இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை உள்ள நேரத்தை ‘அமைதி நேரம்’ என அறிவித்து, அவ்வமைதி நேரத்தில் எந்தவொரு காரணத்துக்காகவும் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தக் கூடாது என அரசின் சட்டங்களும், விதிகளும் உயர், உச்சநீதிமன்றங்களின் பல தீர்ப்புகளும் வலியுறுத்துகின்றன. ஆனால், கோவில் திருவிழாஎன்ற பெயராலும், அரையாண்டு தேர்வின்போது‘அய்யப்பன்’ பேராலும், ஆண்டுத் தேர்வின்போது‘அம்மன்’கள் பேராலும் ஒலிபெருக்கிகளை இரவு முழுக்க அலறவிட்டு, தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களுக்கு கடுமையான இடையூறுகளை விளைவிக்கும் சட்டமீறல்கள் நடப்பது வழமையாகிவிட்டன. மேலும், மார்கழி மாதத்தில் விடியற்காலை தொடங்கி, முற்பகல் 9 மணி வரை ஒலிபெருக்கி இரைச்சல் பெருங்கொடூரமாய் இருக்கும். அரசியல் கட்சிகள், அமைப்புகள், குறிப்பாக அரசுடன் மாறுபடும் அமைப்புகள், கட்சிகளிடம் மட்டும் கண்டிப்புடன் விதிகளைக் கடைபிடிக்கும் காவல்துறை, ஆளும் கட்சிகளுக்கோ, கோவில் திருவிழாக்களுக்கோ எந்தத் தடையும் எழுப்புவதே இல்லை. இந்நிலையில், அமைதி நேரங்களில் ஒலிபெருக்கிகளை இயக்கத் தடை விதித்தும், எந்த அமைப்பினரானாலும் ஒலிபெருக்கி ஒழுங்குவிதிகளை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கழகம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.
விநாயகன் ஊர்வலத்தில் சட்டமீறல்கள்
பிள்ளையார் சதுர்த்தி பல காலமாக நடந்து வந்திருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக அது மதநம்பிக்கை வரம்புகளைத் தாண்டி, அரசியல்நோக்குடன் இந்துத்துவ அமைப்புகளால் செயற்கையாக வளர்க்கப்பட்டு, கலவரங்கள் நிறைந்த ஊர்வலங்களாக மாறி நிற்கின்றன. எல்லாவித சட்டவிதிகளுக்கும் நாங்கள் அப்பாற்பட்டவர்கள் என்பதைப்போல ஊர்வலக்காரர்கள் நடந்து கொள்வதும், சட்ட விதிகள் ஊர்வல நாள்களில் செல்லாது என்பதைப்போல காவல்துறையினரும் அரசு நிர்வாகங்களும் கண்டு கொள்ளாமல் விடுவதும் நடைமுறையாகி வருகின்றது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற வேதிப் பொருள்களாலும், சுட்ட களிமண்ணால் செய்யப்பட்டவையும், இரசாயன வண்ணங்கள் பூசப்பட்டதுமான சிலைகளை ஏரி, குளம், ஆறு, கடல் என எந்த நீர்நிலைகளிலும் கரைக்கக் கூடாது என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆண்டுதோறும் முன்னெச்சரிக்கையாக விளம்பரப்படுத்தி வந்தாலும், பல உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இவ்வொழுங்கு முறைகளை தீர்ப்புகளாகவும், ஆணைகளாகவும் பிறப்பித்திருந்தாலும் அவை குறித்து அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் அக்கறையற்று இருப்பது கண்டனத்துக்கு உரியதாகும்.
விதி மீறி செய்யப்படும் சிலைகளை கடைசி நேரத்தில் தடை விதிப்பதும், தடுப்பதும் தேவையற்ற சிக்கல்களையே உருவாக்கும். எனவே, சமூக அக்கறையுள்ள அமைப்புகள், தனி நபர்கள் உற்பத்தி நிலையிலேயே பிளாஸ்டர் ஆப் பாரிஸ், சுட்ட களிமண் ஆகியவற்றால் செய்யப்படும் சிலைகளையோ, இரசாயன வண்ணம் பூசப்பட்டவைகளையோ கண்டறிந்தாலும், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளவற்றைக் கண்டறிந்தாலும் உடனடியாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், காவல்துறை ஆகியவற்றுக்கு எழுத்து வடிவிலோ, தொலைபேசி வழியாகவோ புகார் செய்து தடுக்க வேண்டுமாறு திராவிடர் விடுதலைக் கழகம் அன்புடன் கேட்டுக் கொள்கின்றது. அதுபோலவே, ஒவ்வொரு ஊரிலும், பகுதிகளிலும் பிள்ளையார் சிலைகளை வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களையும், அதற்கான நிபந்தனைகளையும், சிலைகளைக் கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ள நீர்நிலைப் பகுதிகளையும் செய்தித்தாள்கள் வழியாக அறிவித்தும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், காவல் நிலையம், மக்கள் கூடும் இடங்களில் நன்றாகத் தெரியும் வண்ணம் அறிவிப்புப் பலகைகளை நிறுவ வேண்டும் என்றும் கழகம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.
வாகன விதிமீறல்கள்
மக்களின் உயிர்களைப் பற்றியுள்ள அக்கறையின் காரணமாக இந்திய அளவிலும், மாநில அளவிலும் போக்குவரத்து வாகனங்களைப் பற்றிய கண்டிப்பான பல விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவ்விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டிய போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலவேளைகளில் கையூட்டுக்கு ஆசைப்பட்டும் -தனக்கும், தன் கருத்துக்கும் உடன்பாடுள்ளவர்களுக்கு சட்ட விரோத சலுகைகள் அளித்தும் போக்குவரத்து விதிகளை அலட்சியப்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றிச் செல்வது சட்ட விரோதம் என்பதால் சந்தை, திருமணம், சாவு போன்ற நிகழ்வுகளுக்கு மக்களை ஏற்றிச் செல்கின்ற சரக்கு வாகனங்கள் மீதுவழக்குகள் பதிவதும், பெருந்தொகை அபராதம் விதிப்பதும், பல வேளைகளில் அவ்வாகனங்களையும், ஆவணங்களையும் பறிமுதல் செய்வதும் நடைபெறுகின்றன. ஆனால், அச்சட்ட விதிகள் விழாக்களில், குறிப்பாக, பிள்ளையார் ஊர்வலங்களில் முற்று முழுதாக நடைமுறைப்படுத்துவதே இல்லை. அவ்வாறு வாகனங்களில் மக்களை ஏற்றி வருவதும், வாகனங்களின் மேற்கூரைகளில் அமர்ந்து வருவதும் சர்வ சாதாரண நிகழ்வாகவே மாறிவிட்டது.
இவ்வாறு போக்குவரத்து விதிகளுக்கு எதிராக பொதுமக்களை ஏற்றிவரும் வாகனங்கள் மீது வழக்குகள் பதிந்து, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்பதை உடனடியாக போக்குவரத்துத் துறையும், காவல்துறையும் அறிவிக்க வேண்டும் என கழகம் வலியுறுத்துகின்றது. அதுபோலவே பொது மக்களை ஏற்றிவரும் சரக்கு வண்டிகளை புகைப்படமாகவோ, காணொளியாகவோ வாகனப் பதிவு எண், அருகில் நிற்கும்காவல் துறையினர் ஆகியனவற்றைப் பதிவு செய்து, சமூக வலைத் தளங்களில் வெளியிட்டும், புகைப்பட காணொளிப் பதிவுகளை உரிய அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் புகார் கடிதத்துடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டுமாறு சமூக அக்கறையுள்ள மனித நேயர்களை திராவிடர் விடுதலைக் கழகம் அன்புடன் கேட்டுக் கொள்கின்றது.
ஆபத்தான ‘நேர்த்திக் கடன்’கள்
மண்டை உடையவும், மூளையைப் பாதிக்கவும்காரணமான வெறுந் தலையில் தேங்காய் உடைத்தல், படுத்திருக்கும் ஆண் பெண்களை ஏறி மிதித்து ஆசிவழங்குதல், குழந்தைகளை ஏறி மிதித்தல், கத்தியால் உடலை வெட்டிக் கொள்ளுதல் போன்ற பல அபாயகரமான செயல்கள் நேர்த்திக் கடன் -பக்தியின் பேரால் நடந்து வருகின்றன. குழந்தைப் பேறுக்குப் பூஜை செய்வதாகக் கூறி பெண்களிடம் பாலியல் வல்லுறவு கொள்ளுதல், குழந்தை வரம் கொடுப்பதாகக் கூறி, தங்கள் வாயில் மென்ற பழங்களை ஊட்டி விடுதல், ஆசி வழங்குதல் என்கிற பேரால் கட்டி அணைத்தல், தொட்டுத் தடவியும், பாலியல் குறும்புகள் செய்தும் பெண்கள் மீதான வன்முறை நிகழ்வதும் நடந்து வருகின்றன. அறிவியல் பெருமளவில் முன்னேறி விளங்குகின்ற இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் இவ்வாறான அருவெறுக்கத்தக்க நிகழ்வுகள் பரவலாக நடைபெறுவது பேரவலமாகும். உடல்நலக் கோளாறுகளைக் குணப்படுத்தவும், செயற்கை முறை கருத்தரிக்கச் செய்யவும், மருத்துவமனைகளும், மருத்துவ அறிவியலும் பெருகி வளர்ந்துள்ள நிலையில், அறிவியல் வளராத காலத்தில் மோசடியாக திணிக்கப்பட்ட இம் மூடநம்பிக்கைகளை விட்டொழித்து, அறிவியல் வழிப்பட்ட முறைகளைப் பின்பற்றுமாறு தமிழக மக்களை திராவிடர் விடுதலைக் கழகம் கேட்டுக்கொள்கின்றது. அறிவியலைக் கற்றுணர்ந்தோரும், சமூக நலம் விரும்பிகளும் இச்செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்து மானமும் அறிவும் மிக்க நல்வாழ்வுக்கு வழி அமைக்க முன்வரவேண்டும் என்றும் கழகம் அறைகூவி அழைக்கின்றது.
மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம்
அறிவியல் கல்வியின் வழியாக அறிவு வளர்ந்துள்ள நம் நாடு அறிவியல் மனப்பான்மையில் போதிய முன்னேற்றமின்றியே உள்ளது. அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதில் கல்வியும், சமூகஅக்கறையுள்ள சிலரும் முன்னெடுப்புகள் மேற்கொள்கின்றனர். அவை தன்னலமிக்க ‘தெய்வீக’ மனிதர்களாகத் தங்களை கூறிக் கொள்வோரின் ஏமாற்று நடவடிக்கைகளாலும், மந்திரம், மாயம், பேய், பில்லி என்ற மூடக் கருத்துகளில் இருந்து விடுதலை பெறாத மக்களாலும் பெரிய அளவுக்கு நடைபெறுவதே நின்று நிலவும் எதார்த்தமாக உள்ளது. மக்களின் நலனுக்காக சில ஒழுங்குமுறைகளை அரசு அறிவித்து, சட்டங்களாக்கி செயல்படுத்துகிறது. சாலை விதிகள், மருத்துவ சட்டங்கள், மருந்து கட்டுப்பாட்டு சட்டங்கள் போன்றவை அவற்றுள் சில. அண்மைக் காலமாக நவீன சாமியார்களின் கிடுகிடு வளர்ச்சியும், அவ்வப்போது அந்த ஆசிரமங்களைப் பற்றி கடத்தல், அடைத்து வைத்தல், கொலை, பாலியல் வன்முறைகள் போன்ற பல எதிர்மறை செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. இவைபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற வொட்டாமல் தடுக்கவும், தெய்வத் தன்மைவாய்ந்தவர்களாகக் கூறப்படும் மனிதர்களின் செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்தவும், மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை மராட்டிய மாநிலம் நிறைவேற்றியுள்ளது. கருநாடக மாநிலத்தில் பொதுவெளியில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. இவ்வேளையில், பகுத்தறிவு சிந்தனையிலும், சார்வாகம், ஆசீவகம், சித்தர்கள், வள்ளலார், பெரியார் என நீண்ட பகுத்தறிவு சிந்தனை மரபுகொண்ட தமிழ்நாட்டிலும் அரசு அவ்வாறான மூடநம்பிக்கைகள் ஒழிப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என திராவிடர் விடுதலைக்கழகம் கேட்டுக் கொள்கின்றது.