கணவன் இறந்தவுடன் மனைவியை நெருப்பில் போட்டு எரிக்கும் ‘சதி’ எனும் உடன் கட்டை ஏறும் கொடுமை, சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. 1988ஆம் ஆண்டு இராஜஸ்தான் மாநிலத்தில் ரூத்கன்வர் என்ற பெண் உடன்கட்டை ஏறினார். உடனே பார்ப்பனர்கள் அந்தப் பெண்ணுக்கு கோயில் கட்டி ‘சதி மாதா’ என்று வழிபட ஆரம்பித்தார்கள். சங்பரிவார்களும் இதை ஆதரித்தன. பா.ஜ.க.வின் உ.பி. முதல்வராக இருந்த கல்யாண்சிங், சதி மாதா கோயிலுக்குச் சென்று வழிபட்டார். பூரி சங்கராச்சாரியான பார்ப்பனர் நிரஞ்சோ தீர்த் என்பவர், அப்போது உடன்கட்டை ஏறுவதை நியாயப்படுத்தி பேசி வந்தார். இராஜஸ்தான் மாநில அரசு நிறைவேற்றிய உடன்கட்டை ஏறுதல் தடுப்புச் சட்டத்தைக் கடுமையாகக் கண்டித்து வந்தார். இந்த சட்டத்தின்படி உடன் கட்டையை ஆதரித்துப் பேசு வதும் குற்றம். சங்கராச்சாரி அது பற்றிக் கவலைப்படவில்லை.

இந்த நிலையில் சங்கராச்சாரி மீரத் நகரில் உடன்கட்டை ஏறுவதை ஆதரித்துப் பேசவும் யாகம் நடத்தவும் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். இதை எதிர்த்து வடநாட்டில் சமூக நீதியை தீவிரமாக ஆதரிப்பவரும் பார்ப்பன எதிர்ப்பாளராகவும் வலம் வந்த ஆன்மீகவாதியான அக்னிவேஷ், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். உடன்கட்டையை ஆதரித்து தாம் பேச தயாராக இருப்பதாகவும், தன்னிடம் வாதிட எவர் வேண்டுமானாலும் வரட்டும் என சங்கராச்சாரி சவால் விட்டார். அக்னிவேஷ் சவாலை ஏற்றார். 100 தொண்டர்களுடன் நடைப் பயணமாக மீரத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். செய்தி அறிந்து நடுங்கிப் போன சங்கராச்சாரி, இதற்கு சில பார்ப்பன அமைப்புகளை பிடித்து, அக்னிவேஷ் பயணத்துக்கு தடை போட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் உச்சநீதி மன்றம் பயணத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

படை திரட்டிப் புறப்பட்ட அக்னிவேஷ், புது டில்லியிலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சிரோரி எனும் ஊரில் பேசும்போது இவ்வாறு கூறினார்: “பூரி சங்கராச்சாரியோடு நான் உடன்கட்டை ஏறும் பிரச்சினை பற்றி மட்டும் விவாதிக்கப் போவது இல்லை. பெண்களுக்கு எதிராக பார்ப்பன மதம் இழைக்கும் அநீதிகளுக்கு எதிராக விவாதிக்கப் போகிறேன். எனது இந்த விவாதம் மத வெறிக்கு எதிரான மக்கள் உரிமைக்கான சவால் களம். மதஅங்கீகாரத்தோடு சமுதாயத்தில் திணிக்கப்பட்டுள்ள ஜாதி, வரதட்சணை, பால்ய விவாகம் போன்ற கொடுமைகள் குறித்து வாதிடப் போகிறேன். மக்கள் கிளர்ந்தெழ வேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார்.

ஏப்ரல் முதல் தேதி இரவு அக்னிவேஷ் தனது தோழர்களுடன் பூரி சங்கராச்சாரி யாகம் நடத்தும் மீரத் நகரத்தை நெருங்கி விட்டார். 4 கிலோ மீட்டர் அருகிலுள்ள பெலேஸி என்ற இடத்துக்கு வந்து விட்டார். பூரி சங்கராச்சாரியை நெருக்கடியிலிருந்து மீட்க காசியில் உள்ள சமேரு மடத்தின் சாமியாரான சங்கானந்தா சரசுவதி எனும் பார்ப்பனர் அவசரமாக களமிறங்கி செயல்பட்டார். உ.பி. அரசுக்கு அழுத்தம் கொடுத்து அக்னிவேஷையும் அவரது தோழர்களையும் கைது செய்ய ஏற்பாடு செய்தார். அடுத்த நாள் காலை 8 மணிக்கு மீரத் நோக்கி அக்னிவேஷ் படை புறப்பட்ட போது உ.பி. மாநில அரசு சட்டம் ஒழுங்கை காட்டி அக்னிவேஷ் மற்றும் 190 தோழர்களை கைது செய்தது. பக்பஜ் மாஜிஸ்திரேட்பத்சவா எனும் பார்ப்பனர், அக்னிவேஷ், சங்கராச்சாரி யாகம் வளர்க்கும் இடத்துக்கு வருவதற்கு பிற்பகல் 3 மணி வரை தடை போட்டார். பூரி சங்கராச்சாரி யாகத்தை நடத்தாமல் 3 மணிக்குள் மீரத்தை விட்டு பூரிக்கு ஓட்டம் பிடித்தார். அக்னிவேஷ் அவரது படையினர் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.