உலகில் முழுமையாக மரணதண்டனையை நீக்கம் செய்துள்ள நாடுகளின் எண்ணிக்கை (ஜூன் மாத நிலவரம்) 101; கடந்த ஆண்டு உலகம் முழுதும் நிறைவேற்றப்பட்ட மரணதண்டனைகளின் எண்ணிக்கை 607; (இது 2013ஆம் ஆண்டைவிட 22 சதவீதம் அதிகம்) கடந்த ஆண்டு 22 நாடுகள் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளன. 2,466 பேர் கடந்த ஆண்டு மட்டும், மரணதண்டனைக்கு உள்ளாகியுள்ளனர். அமெரிக்காவில் 2007 முதல் 2012 வரை மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் 220 பேர். இதே காலகட்டத்தில் அமெரிக்காவில் மரணதண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்படாதவர்கள் 504 பேர். இந்தியாவில் 2004 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் மரணதண்டனையிலிருந்து ஆயுள் தண்டனை யாக்கப்பட்டவர்கள் 3751 பேர். 2007ஆம் ஆண்டில் தான் இந்தியாவில் ஓராண்டில் அதிக எண்ணிக்கையில் 186 பேருக்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது.

கருவறை’யிலிருந்து ‘கவர்னர்’ மாளிகை நோக்கி

       கடவுளோடு உரையாடக்கூடிய மொழியாக வேதத்துக்கு பெருமை கொண்டாடுகிறது பார்ப்பனியம். வேதம் படித்த பார்ப்பனர்கள், ‘கடவுளுக்கு’ உரிமை கொண்டாடி, ‘கருவறையை’ தங்களுக்கான ‘தீட்டுப்படாத’ புனித இடமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ‘கருவறை’யைப் மட்டுமல்ல; ‘கவர்னர் மாளிகையையும்’ வேத பண்டிதர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இமாசலப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆச்சார் யாதேவ விரத் வேதம் படித்த பார்ப்பனர். அரியானாவில் ‘குருகுல குருnேத்ரா’ என்ற பெயரில் வேத பாடசாலை நடத்து கிறார். யோகா, பயிற்சியும் இயற்கை மருத்துவமனையையும் நடத்தி வரும் இவர், உலகம் முழுதும் வேத கலாச்சாரத்தைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு வேதம், உபநிஷத்துக்களை ‘பிராமணர்’களுக்கு கற்பித்து வருகிறார்.

       பீகாருக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் என்பவரும் வேத கலாச்சாரத்தைப் பரப்புவதற்காகவே அரியானாவில் பயிற்சி மய்யம் நடத்தி வருகிறார். ஆனால், இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். பா.ஜ.க. – தாழ்த்தப்பட்ட வர்களுக்காகவே தனியாக உருவாக்கியிருக்கும் ‘ஷெட்யூல்ட் கேஸ்ட் மோர்ச்சா’ என்ற அமைப்பின் தலைவர். என்னதான் வேதம் படித்தாலும், பா.ஜ.க. வின் தாழ்த்தப்பட்டோருக்கான தனிப் பிரிவில்தான் இவர் இயங்க முடியும். இனி அடுத்தடுத்த ஆளுநர்களாக வரப் போகிறவர்கள், இப்போது எந்தக் கோயிலில் அர்ச்சகர்களாக இருக்கிறார்களோ தெரியவில்லை. ஆளுநர் மாளிகைகள் – வேத மடாலயங்களாகிவிடும்போல!

கழுத்துக் கயிறும் கைக் கயிறும்

       கணவன் - திருமணம் செய்யப்போகும் ஒரு பெண், இனி தனக்கு ‘கீழ்ப்படிந்தவளாகவே’ இருக்கவேண்டும் என்பதன் அடையாளமாகக் கட்டப்படுவதுதான் தாலி. சமத்துவத்தையும் சுயமரியாதையையும் விரும்பும் பெண்கள், தாலியை அகற்றிக் கொள்ள முன் வந்தால், அது இந்து மதத்துக்கும், பண்பாட்டுக்கும் எதிரானது என்று தோள் தட்டி தொடை தட்டி, ‘இந்துத்துவா’வாதிகள் கிளம்பி விடுகிறார்கள். கடந்த ஏப்.14ஆம் தேதி, பெரியார் திடலில் நடந்த தாலி அகற்றும் நிகழ்வில், உள்ளே புகுந்து வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள். தாலி குறித்து விவாத நிகழ்ச்சி நடத்திய ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வெடிகுண்டு வைத்தார்கள்.

       கழுத்தில் கயிறு கட்டுவதுபோல கையில் கயிறு கட்டும் ஒரு பழக்கமும் ‘இந்து கலாச்சாரமாக’ நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பெயர் ‘ரக்ஷா பந்தன்’. இது பெண்கள் ஆண்களின் கைகளில் கட்டும் கயிறு. ஒரு பெண், ஆணின் கையில் இந்தக் கயிறை கட்டிவிட்டால் அவனை சகோதரராக ஏற்றுக் கொண்டதாக அர்த்தம். சகோதரனாக இப்படி அறிவிக்கப்பட்ட ஒரு ஆண், அந்தப் பெண்ணின் மீது சகோதரன் என்ற உரிமையில், தனது கட்டுப்பாட்டைத் திணிக்க முடியும். இதையெல்லாம் இப்போது ஏன் குறிப்பிட வேண்டியிருக்கிறது என்று, சந்தேகம் வரலாம். இந்த ‘ரக்ஷா பந்தன்’ என்ற இந்துமத சடங்கை மோடி ஆட்சி, தேசிய விழாவாக ஆகஸ்ட் இறுதியில் அறிவிக்கப் போகிறதாம். இதற்கு சமூக ஆர்வலர்களும் இடதுசாரி சிந்தனையாளர் களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

       ரக்ஷாபந்தன் என்ற சடங்கு 1905ஆம் ஆண்டு அறிமுக மானது. இந்து மத முறைப்படி பெண்கள் பிறமதத்தினரை சகோதரராகக் கருதவே இது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்து-முஸ்லீம் பிரிவினருக் கிடையே திருமண உறவுகள் நிகழ்ந்துவிடாது தடுப்பதே இதன் நோக்கம். பிறகு ‘இந்து’ மதத்துக் குள்ளேயே இந்த கயிறு கட்டும் பழக்கம் வந்துவிட்டது. இது குறித்து சமூக ஆர்வலர் ராம்புனியானி தலைமையில் கூடிய சமூக ஆர்வலர்கள் விடுத்துள்ள அறிக்கையில், “இந்துமத சடங்கை - ஒரு அரசு தேசிய விழாவாக ஏன் அறிவிக்க வேண்டும்? இதன் மூலம் பெண்கள் ஆண்களுக்குக் கட்டுப்பட வேண்டும். அவர்களை சகோதரர்களாக மட்டுமே ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது. ஒரு பெண்ணை ‘சக மனுஷியாக’ ஒரு ஆண் பார்க்காமல் அவளை தனது கட்டுப்பாட்டில் இருப்பவளாக ஒரு ஆண் ஏன் பார்க்க வேண்டும்? வடமாநிலங்களில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகள் இதே பார்வையில் தீர்ப்பை அளிக்கின்றன. அதற்கும், இதற்கும் என்ன வேறுபாடு என்ற கேள்விகளை எழுப்புகிறது, அந்த அறிக்கை. மதக் கட்டுகள் பழக்க வழக்கங்களை எதிர்த்து, பெரியார் உயர்த்திய பெண்ணுரிமைக் குரல், இப்போது சமூக மாற்றத்தை விரும்புவோரின் குரலாகவே ஒலிக்கத் தொடங்கியிருப்பது பெரியாரியத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி அல்லவா?

குப்பை பொறுக்கும் ‘பூணூல்’கள்!

       பார்ப்பனக் கோட்டையான சென்னை மேற்கு மாம்பலத்தில் சத்குரு வேத பாடசாலை, சுப்ரமணிய வீதியில் உள்ளது. இந்த வீதியில் குப்பைகள் தேங்கிப் போய் கிடந்த நிலையில், ‘வேதம்’ படிக்கும் ‘பார்ப்பன’ சிறுவர்கள், ‘பூணூல்’ அணிந்த கோலத் துடன் வீதிகளில் இறங்கி குப்பைகளைப் பொறுக்கினார்கள். இதைப் படம் பிடித்து முகநூலில் ஒருவர் வெளியிட்டார். உடனடியாக இதை வரவேற்று முகநூலில் 2300 விருப்பப் பதிவுகள் விழுந்தன. அவ்வளவு தான். ஆடிப் போனது சென்னை மாநகராட்சி. உடனே, ‘பூணூல்’ தரிக்காத ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ களைக் கொண்டுவந்து இறக்கி, குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். நாள் முழுதும் குப்பைகளை நீக்கி சுத்தம் செய்வதும், குப்பைகளைப் பொறுக்கி வாழ்க்கையை நடத்துவதும், ‘பஞ்சமர்’, ‘சூத்திரர்’ களுக்கு விதிக்கப்பட்ட ‘தர்மம்’; வேதம் ஓதுவதையே ‘தர்மம்’மாக்கிக் கொண்ட ‘பிராமணர்கள்’ – இப்படி வீதிகளில் இறங்கி ‘குப்பை’களை சுத்தம் செய்யத் தொடங்கினால், நாடு அதைத் தாங்குமா?

        எனவே தான் மாநகராட்சி அதிரடியாக ‘இறங்கி’ தர்மத்தைக் காப்பாற்றியிருக்கிறது.