சென்னை பல்கலைக்கழகத்தில் அரசியல், விஞ்ஞானம் மற்றும் பொது நிர்வாகத் துறையின் தலைமைப் பேராசிரியர் இராமு. மணிவண்ணன். ஈழத் தமிழர் உரிமைப் போராட்டத்தில் அளப்பரிய பங்காற்றி வரும் பேராசிரியர். அய்.நா.வின் கூட்டங்கள் நடக்கும் போதெல்லாம் ஜெனிவா சென்று மனித உரிமைத் தளங்களில் ஈழத் தமிழர் பிரச்சினைகளை முன்னெடுத்தவர். ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கான சான்றுகளைத் திரட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் ஆவணமாக்கியவர்.

        ஒரு பேராசிரியர் என்ற எல்லையோடு தனது கடமை முடிந்துவிடவில்லை என்று சமுதாயப் பணியாற்றக் கூடியவர். அவரை இப்போது சென்னை பல்கலைக்கழகம் பழி வாங்கியிருக்கிறது. துறைத் தலைவர் பதவியிலிருந்து அவரை இறக்கிவிட்டு, அந்த இடத்துக்கு கோட்டீசுவர பிரசாத் என்பவரை துணைவேந்தர் நியமித்துள்ளார். பேராசிரியர் மணிவண்ணன் செய்த ‘குற்றம்’ தான் என்ன?

        “மதுக் கடைகளை மூடும் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் பற்றிய தகவல்களைத் தருமாறு என்னிடம் கேட்டார்கள். மாணவர்களுக்கான போராட்ட உரிமைகளில் நான் தலையிட முடியாது என்று கூறி, அது குறித்த தகவல்களைத் தர மறுத்து விட்டேன். அதன் காரணமாக எனக்கு இந்தத் ‘தண்டனை’ தரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். பேராசிரியர் இராமு. மணிவண்ணன், கடந்த மார்ச் மாதம் ஈழத் தமிழர்களுக்காக நடந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். மோடி, இலங்கைக்கு செல்வதை எதிர்த்து, நடந்த கண்டனக் கூட்டம் அது. இதில் பங்கேற்றதற்காக துணைவேந்தர், பேராசிரியரை எச்சரித்துள்ளார்.

        அப்போது பேராசிரியர் இராமு. மணிவண்ணன் அவர்களை, காவல்நிலையத்தில் வைத்து 3 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் இதைக் கடுமையாக எதிர்த்ததால் நடவடிக்கை கைவிடப்பட்டது.

       பல்கலைக்கழகம் அரசின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் அமைப்பு அல்ல. ஒரு பேராசிரியரின் கருத்துரிமைகளை கல்வி வளாகங்களுக்குள் முடக்குவதும் தண்டிப்பதும் வன்மையாக கண்டனத்துக்கு உரியதாகும். தமிழ் நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஆளும் கட்சியின் தீவிர ஆதரவாளராக மாறி, பேராசிரியர்களைப் பழிவாங்குவது வன்மையான கண்டனத்துக்குரியது.

Pin It