அணுசக்தி தேவையா இல்லையா?
என்னைப் பொறுத்தவரையில் அணுசக்தி தேவையில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அணுசக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதென்பது ஈயைக் கொல்வதற்காக பீரங்கியைப் பயன்படுத்துவது போன்றது. பொதுவாக நீர்மின் நிலையங்களில் நீரின் வேகத்தைப் பயன்படுத்தி டர்பன் சுற்ற வைக்கப்படுகிறது. டர்பைன் சுற்றும்பொழுது அதோடு பொறுத்தப்பட்டிருக்கும் ஜெனரேட்டர் இயங்கி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அனல் மின்நிலையங்களில் நிலக்கரியைப் பயன்படுத்தி வெப்பம் உண்டாக்கப்படுகிறது. அந்த வெப்பம் நீரைச் சூடேற்றி நீராவியாக்குகிறது. பின்பு நீராவி டர்பனைச் சுற்றவைத்து அதோடு பொருத்தப்பட்டிருக்கும் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அணுமின் நிலையங்களில் கிடைக்கும் யுரேனியத்தை அணுப்பிளவுக்கு உட்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் ஆற்றலைக் கொண்டு நீரை நீராவியாக்கி டர்பனைச் சுற்றவைத்து ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அடிப்படையில் பார்த்தோமெனில் நீரைச் சூடேற்றி நீராவியாக்கி, அதன்மூலம் மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் தொழில்நுட்பம்தான் அணுசக்தி, ஒட்டுமொத்தமாகச் சொல்வதென்றால் நீரைச் சூடேற்றி மின்சாரம் தயாரிக்க அணுசக்தி தேவையில்லாத ஒன்று.
அணுசக்தி, மின்சாரம் தயாரிக்க மட்டும்தான் பயன் படுத்தப்படுகிறதா?
எந்த நாடாவது அணுசக்தியை மின்சாரம் தயாரிக்க மட்டும்தான் பயன்படுத்துகிறோம் என்று சொன்னால் அது பொய். ஏனெனில் அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தையும், அணு உலைகளில் கிடைக்கும் புளுடோனியத்தையும் பயன்படுத்தி அணுகுண்டு தயாரிப்பதுதான் அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் உண்மை.
அணுமின் நிலையங்களும், அணுசக்தியும் எவ்வாறு வளர்ச்சியடைந்தது?
அணுமின் நிலையங்கள் மற்றும் அணுசக்தியின் வரலாறு 1930களில் இருந்து ஆரம்பிக்கிறது. அப்போதுதான் முதன் முதலில் நியூட்ரான் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மெதுவாக வளர்ச்சியடைந்து 1942ல் இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோ பல்கலைக் கழகத்தில் சிக்காக்கோ பைல் 1 என்ற முதல் செயற்கை அணு உலை என்ரிக்கோ பெர்மி என்பவரால் உருவாக்கப்பட்டது. பின்பு அதே ஆண்டின் டிசம்பர் மாதம் முதல் செயல்படத் தொடங்கியது. 1954ல் முதன்முதலில் மக்களின் பயன்பாட்டிற்காக ரஷ்யாவில் ஆப்மிளிக் பவர் பிளான்ட் என்ற அணு உலை நிறுவப்பட்டது. 1956ல் வியாபார நோக்கத்திற்காக இங்கிலாந்தில் உள்ள கெய்டர் ஹால் என்ற இடத்தில் நிறுவப்பட்டது. அனைத்து அணு உலைகளும் வெவ்வேறு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதால், இதுதான் முதல் அணு உலை என்று வரையறுத்துக் கூற முடியாது. அணு உலைகள் மற்றும் அணுசக்தி பிரபலமடைந்தது 1950களுக்குப் பிறகுதான்.
அணுசக்தியின் பயன்பாடுகள் என்ன?
மின்சாரம் தயாரிக்கவும், கப்பல் மற்றும், நீர்மூழ்கி கப்பல்களை இயக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவிடம் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கின்றன. பொதுவாக ஒரு நாட்டின் வலிமையைக் காட்டுவதற்காகவே அணுசக்தி பயன்படுத்தப்படுகிறது.
உலகம் முழுவதும் எத்தனை அணு உலைகள் இருக்கின்றன?
உலகம் முழுவதும் மொத்தம் 400க்கும் அதிகமான அணு உலைகள் இருக்கின்றன. அதில் அமெரிக்காவில் மட்டும் 108 அணு உலைகள் இருக்கின்றன. அதற்கு அடுத்ததாக ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் 50 முதல் 60 அணு உலைகள் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கின்றன.
எத்தனை வகையான அணு உலைகள் இருக்கின்றன?
அணு உலைகளை பலவிதங்களில் வகைப்படுத்தினாலும், தொழில்நுட்பம் சார்ந்து பிரிக்கப் படுகின்றன. வகைகள்தான் முக்கியமாகப் பிரிக்கப் படுகிறது. தொழில்நுட்பம் ரீதியாக அணு உலைகளை, பிரஷ்ரரைஸ்டு ஹெவி வாட்டர் ரியாக்டர், பாயில்டு வாட்டர் ரியாக்டர், வாட்டர் வேப்பர் எனர்ஜடிக் ரியாக்டர் அல்லது பிரஷ்சரைஸ்டு வாட்டர் ரியாக்டர் புரோட்டோ டைப் பாஸ்ட் பிரீடர் ரியாக்டர் என நான்கு வகைகள் இருக்கின்றன.
இந்தியாவில் எந்த வகையான அணு உலைகள் இருக்கின்றன?
இந்தியாவில் மொத்தம் 20 அணு உலைகள் இருக்கின்றன. அவற்றுள், கர்நாடகாவில் உள்ள கெய்காவில் 4 உலைகள், குஜராத்தில் உள்ள கக்ராபார் என்ற இடத்தில் 2 உலைகள், தமிழ்நாட்டில் உள்ள கல்பாக்கத்தில் 2 உலைகள், உத்தரப் பிரதேசத்தில் உள்ள நரேராவில் 2 உலைகள், ராஜஸ்தானில் உள்ள ரவாத்பாதாவில் 6 உலைகள் என மொத்தம் 16 உலைகள் பிரஸ்சரைஸ்டு ஹெவி வாட்டர் ரியாக்டர் சார்ந்தவை. மேலும் மகாராஷ்ட்ராவில் உள்ள 4 உலைகள் பாயில்டு வாட்டர் ரியாக்டர் சார்ந்தவை. மேலும் ராஜஸ்தானில் உள்ள பன்ஸ்வாரா மற்றும் ரவத்பாத்தாவில், 2 உலைகள், குஜராத்தில் உள்ள கக்ராபாரில் 2 உலைகள் கட்டுமானத்தில் உள்ளன. இவை பிரஷ்சரைஸ்டு ஹெவி வாட்டர் ரியாக்டர் சார்ந்தவை ஆகும். இதுவும் போக கூடங்குளத்தில் 2 உலைகள் தயாராக உள்ளன. மேலும் 4 உலைகள் கூடங்குளத்தில் கட்ட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் மீது அமெரிக்கா ஏன் அணுகுண்டை வீசியது?
போர் நடக்கும்போது எதிரி நாட்டின் மீது குண்டு வீசித் தாக்குவது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் ஜப்பான் கதையோ வேறு. ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசும்பொழுது கிட்டத்தட்ட ஜப்பான் சரணடையும் நிலையில் இருந்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ஜப்பான் மீது அணுகுண்டை வீசியது சரணடைய வைப்பதற்காக அல்ல. மாறாக அணுகுண்டினுடைய சக்தியைச் சோதித்துப் பார்ப்பதற்காக.
ஜெய்தாபூரில் நிறுவப்படுவதாக இருக்கும் அணு உலை எப்படிப்பட்டது?
ஜெய்தாபூரில் நிறுவப்பட இருக்கும் அணு உலை முன்னர் நிறுவப்பட்ட எல்லா அணு உலைகளில் இருந்து வேறுபட்டது. முன்னதாக ஐரோப்பியன் பவர் ரியாக்டர் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பெயர் ஒரு பிராந்தியத்தைக் குறிப்பிடும் வகையில் இருப்பதால் பின்னர் என்ஹன்ஸ்டு பவர் ரியாக்டர் என்று மாற்றப்பட்டது. இது பிரான்ஸ் நாடுகளில் உருவாக்கப்பட்டது. இந்த அணு உலை, உலகத்தில் பின்லாந்து மற்றும் சைனா ஆகிய இரண்டு நாட்டில் மட்டும்தான் கட்டுமானத்தில் இருக்கிறது. தற்போது ஜெய்தாபூரில் அரிவா என்ற கம்பெனியால் கட்டப்படுவதாக இருக்கிறது. இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவெனில் இந்த அணு உலை எந்தவிதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று யாருக்கும் தெரியாது. BWR, PHWR ஆகிய அணு உலைகள் எந்தவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அனுபவம் நமக்கு இருக்கிறது. ஆனால், EPR அணு உலை எப்படி வெடிக்கும் எந்தவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று யாருக்கும் தெரியாது.
புகுஷிமாவில் விபத்துக்குள்ளான அணு உலை BWR வகையைச் சார்ந்தது. பொதுவாக அணு உலையில் மையப் பகுதியில் அணுக்கரு பிளவு ஏற்பட்டு வெப்பம் அதிக அளவில் உருவாகும் அந்த வெப்பத்தைக் குளிர்விக்க மூன்றடுக்கு குளிர்சாதன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் அடுக்கிற்கு அணு உலையில் இருந்தே மின்சாரம் பெறப்பட்டு அணு உலை குளிர்விக்கப்படுகிறது. இரண்டாவது குளிர்சாதன அடுக்கு டீசல் மூலம் இயக்கப்படுகிறது. முதல் அடுக்கு வேலை செய்யாமல் போனால் இரண்டாவது அடுக்கு இயங்கி அணு உலையை குளிர்படுத்தும். ஒரு வேளை இந்த இரண்டு அடுக்கும் செயல்படாமல் போனால் பாட்டரியால் இயங்கும் மூன்றாம் அடுக்கு செயல்பட்டு அணு உலையைக் குளிர்விக்கும். பாட்டரியால் இயங்கும் மூன்றாம் அடுக்கு 2 மணி முதல் 4 மணி நேரம் மட்டுமே இயங்கக்கூடியது. சுனாமியின்போது மூன்றடுக்கு குளிர்சாதன ஏற்பாடு தகர்க்கப்பட்டு அணு உலை வெடித்துச் சிதறியது. அணு உலை வெடித்ததன் காரணமாக மிகப்பெரிய அளவில் கதிர்வீச்சு ஏற்பட்டது. ஜப்பான் அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தாலும்கூட கதிர்வீச்சின் தாக்கம் மிகப் பெரிய அளவில் இருந்தது.
புகுஷிமா சம்பவத்திற்குப் பின் இந்திய அரசு அணு உலைகளின் பாதுகாப்பிற்காக என்ன நடவடிக்கை எடுத் திருக்கிறது?
புகுஷிமாவில் விபத்துக்குள்ளான அணு உலை BWR வகையைச் சார்ந்தது. BWR அணு உலை இந்தியாவில் உள்ள தாராபூரில் 1971 நிறுவப்பட்டது. மேலும் தாராபூரில் மட்டும்தான் BWR அணு உலை இருக்கிறது. புகுஷிமா அணு உலை விபத்திற்குப் பின்பு தாராபூரில் உள்ள அணு உலைப் பாதுகாப்பு சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.
அணு விபத்துக்களைச் சமாளிப்பதற்கான மேலாண்மை இந்தியாவில் எப்படி இருக்கிறது?
இந்தியாவில் அணு உலை விபத்துக்களை சமாளிப்பதற்கான மேலாண்மை கேள்விக்குரியதே. ஜப் பான் சுனாமி மற்றும் அணு உலை விபத்தால் பாதிக்கப்பட்டபோது அந்நாட்டு பிரதமர் மக்களிடம் சென்று ‘நான் உங்களுடன் இருக்கிறேன்’ என்று சொன்னார். ஆனால், இந்தியாவில் போபால் விபத்து ஏற் பட்டபோது அப்போதைய முதல்வர் டெல்லி சென்றுவிட்டார். மேலும், கல்பாக்கத்தில் பாதுகாப்பு, ஒத்திகை ஒரு முறை நடைபெற்றபோது அங்கிருந்த இரண்டு பஸ் இயங்கவில்லை. அதோடு வாக்கி டாக்கியும் செயல்படவில்லை.
உலகத்தில் நடைபெற்ற முக்கியமான அணு விபத்துக்கள் எவை?
செர்னோபில் அணு உலை விபத்து, 3 மைல் தீவு விபத்து ஆகியவை முக்கியமான அணு விபத்துக்கள் ஆகும். ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டுதான் பேரழிவை ஏற்படுத்தியது எனக் கூறலாம். ஆனால், கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் அணுகுண்டா? அணு உலையா? என்பது பிரச்சனையல்ல. அணு வெடிப்பு ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஹிரோஷிமா, நாகசாகி. செர்னோபில் அணு உலை வெடிப்பு சற்று வித்தியாசமானது. ஏனெனில் இந்த அணு உலை வெடித்தபோது மூடப்பட்டு இயங்காமல் இருந்தது. செர்னோபில் மக்களுக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம் என்னவெனில், அணு உலை மூடப்பட்டாலும் பல ஆயிரம் வருடங்களுக்கு நாம் அதைப் பாதுகாக்காவிட்டால் அது நமக்கு பேராபத்தைக் கொடுக்கும்.
அணு உலை விபத்து எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்?
அணு உலை விபத்து ஏற்படும்போது பல ஆயிரம் உயிர்கள் பலியாவதோடு அதன் பாதிப்பு நின்று விடுவதில்லை. மாறாக அணுக் கதிர்வீச்சு பல வருடங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அணுக் கதிர்வீச்சின் பாதிப்பைப் புரிந்துகொள்ள அணுவின் ஆயுட்காலத்தைத் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். யுரேனியத்தின் அரை ஆயுட்காலம் 2 லட்சம் வருடம் ஆகும். அதாவது 2 லட்சம் வருடங்களுக்கு மேலாக யுரேனியம் கதிர்வீச்சை வெளியிடும். ஒரு வேளை கல்பாக்க அணு உலையை மூடினால் கூட இரண்டு லட்சம் வருடம் பாதுகாக்காவிடில் அது பேரழிவை ஏற்படுத்தும். மேலும், கதிர்வீச்சு பல ஆயிரம் மைல்களுக்கு இருக்கும் செர்னோபில் விபத்து ஏற்பட்டபோது கல்பாக்கத்தில் கதிர்வீச்சு பதிவு செய்யப்பட்டது.
யுரேனியம் இயற்கையாகக் கிடைக்கிறது. அப்படியெனில் இயற்கையாகவே யுரேனியம் கதிர்வீச்சை வெளியிடும் அல்லவா?
இது ஒரு தவறான புரிதல் ஆகும். ஏனெனில் இயற்கையாக இருக்கும் பொழுது யுரேனியம் கதிர்வீச்சை அதிகம் வெளியிடுவதில்லை. அவை இயற்கையில் பல்வேறு தாதுக்களுடன் இருக்கும்பொழுது அதன் கதிர்வீச்சு குறைந்து இருக்கும். ஆனால் அவை அனைத்தையும் ஒரே இடத்தில் ஒன்று சேர்க்கும்பொழுது கதிர்வீச்சு அதிகமாகும்.
அணுக் கழிவுகளை அழிப்பதற்கான தொழில்நுட்பம் என்ன?
அணுக் கழிவுகளை அழிப்பதற்கான தொழில்நுட்பம் இதுவரை உலகத்தில் இல்லை. அதிகபட்சம் மறுசுழற்சி செய்து கொள்ளலாம் அல்லது கடலுக்கடியில் புதைத்து வைக்கலாம்.
கதிர்வீச்சு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்?
கதிர்வீச்சு பல தலைமுறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கேன்சர் போன்ற உயிர்க்கொல்லி நோய்களை ஏற்படுத்தும். குழந்தையின்மை, ஊனமுற்ற குழந்தைகள் பிறக்க வழிவகுக்கும்.
அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தம் இந்திய வளர்ச்சிக்கு உதவுமா?
உதவாது. இந்த ஒப்பந்தத்தின்படி அணுவிபத்து ஏற்பட்டால், அணு உலையை நிறுவிய கம்பெனி வெறும் 2500 கோடி இழப்பீடு வழங்கினால் போதுமானது இன்னும் 35 வருடம் கழித்து விபத்து ஏற்பட்டால்கூட 2500 கோடி இழப்பீடு வழங்கினால் போதுமானது. இரண்டாவதாக இந்த ஒப்பந்தத்தினால் ஜெனரல் எலக்ட்ரிகல் போன்ற ஐரோப்பிய கம்பெனிகளுக்குதான் நன்மையே தவிர இந்தியாவிற்கு அல்ல.
அணுசக்தி, இந்தியாவிற்கு மின்சாரத் தேவையை எந்த அளவிற்கு பூர்த்தி செய்யும்?
அணுசக்தி இந்தியாவின் மின்சாரத்தை தேவையை மிகக் குறைந்த அளவே பூர்த்தி செய்யும். தற்போது இந்தியாவின் மின்சாரத் தேவை 175,000 மெகாவாட். இதில் 60&65 சதவிகிதத்தை நிலக்கரி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் மூலம் பெறப்படுகின்றது. 25% நீர் மற்றும் காற்று மூலம் பெறப்படுகின்றது. வெறும் 4780 மெகாவாட் மின்சாரம் மட்டுமே அணுசக்தி மூலம் பெறப்படுகின்றது. இந்தியா அடுத்த ஆண்டுகளில் 8 முதல் 10% வளர்ச்சியை மேற்கொண்டால், 2030ல் நம்முடைய தேவை 6,00,000 முதல் 8,00,000 மெகாவாட்டாக இருக்கும். கிட்டத்தட்ட 5,00,000 கோடி செலவழித்து நாம் 2030ல் பெறப்போகும் அளவு 60,000&80,000 வரை மட்டுமே அணு சக்தியைப் பயன்படுத்தி நம்முடைய மின் பகிர்மான இழப்பு 27%. இதனைக் குறைத்தாலே அணுசக்தி இல்லாமல் இருக்கலாம். மீண்டும் மீண்டும் தொடர்ந்து கிடைக்கக்கூடிய மறுசுழற்சி சக்தியைப் பயன்படுத்துவதுதான் நல்லது.
இந்தியாவின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய என்ன செய்யலாம்?
இந்தியாவில் 3000 தாலுக்காக்கள் இருக்கின்றன. இந்தியாவின் மின்சார உற்பத்தி பரவலாக்கப்பட வேண்டும். பரவலாக்கப்பட்டால் மின் இழப்பைக் குறைக்கலாம். எடுத்துக்காட்டாக, நெய்வேலியில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றது. இதனால் 30% மின்சார இழப்பு ஏற்படுகின்றது. அதே வேளையில் மின்சாரம் உற்பத்தி பரவலாக்கப்பட்டால் மின் இழப்பைக் குறைக்கலாம். அடுத்ததாக மாற்று எரிசக்தியைப் பயன்படுத்த வேண்டும். அதாவது சூரியசக்தி, பயோகேஸ். இந்த மாற்று எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான செலவும் குறைவு. இந்தியாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து ஜியோதெர்மல் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம். ஒட்டுமொத்தமாக மாற்று எரிசக்திதான் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யுதே தவிர அணுசக்தி அல்ல.
உலகத்தில் எந்த நாட்டில் எல்லாம் மாற்று எரிசக்தி பயன்படுகிறது?
பெரும்பாலான நாடுகளில் மாற்று எரிசக்தி பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, கிரீன்லாந்தில் 100% மாற்று எரிசக்தியால் மின்தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இறுதியாக நீங்கள் சொல்ல நினைப்பது?
ஒன்றுபட்ட மக்கள் போராட்டம் மூலமே இயற்கையைப் பாதுகாக்க முடியும். இதைப் புரிந்துகொண்டு மக்கள் அனைவரும் இணைந்து இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். இயற்கை என்பது நாம் நம் முன்னோரிடம் இருந்து பெற்ற சொத்து அல்ல. நம் பேரக் குழந்தைகளிடம் இருந்து பெற்றுள்ள கடன். வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்க வேண்டியது நம் கடமை.
சந்திப்பு : பூவுலகின் நண்பர்கள்
எடுத்து எழுதியவர் : கஜேந்திரன்