kolathoor mani and viduthalai rajendran at erodeஇந்த நாட்டின் அரசியல், ஆரிய-திராவிடர் போராட்டமேயாகும் என்று பெரியார் சுட்டிக் காட்டினார். அதுவே ‘திராவிடன் மாடல்’, ஆர்.எஸ்.எஸ். மனுவாதத்துக்குமான போராட்டமாக பரிணமித்து இருக்கிறது என்பதை திராவிடர் விடுதலைக் கழகம் (தி.வி.க.) சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஏப்.2, 3 தேதிகளில் ஈரோட்டில் முறையே தி.வி.க. தலைமைக் குழுவும் செயலவையும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை யிலும் நடந்தது. இரண்டாம் நாள் (ஏப்.3, 2022) ஈரோடு கே.கே.எஸ்.கே. மண்ட பத்தில் நடை பெற்ற செயலவைக் கூட்டத்தில் தீர்மானங்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்தார். 90 உறுப்பினர்களில் 86 பேர் பங்கேற்றனர். அதில் நிறைவேற்றப்பட்ட ‘திராவிடன் மாடல்’ குறித்த தீர்மானம்:

• திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினரும், கழகத்தின் செயல்வீரரும் எளிய முறையில் தோழர்களுடன் பழகி கழகக் கொள்கைகளை பரப்புவதில் முன்னின்று செயல்பட்ட மடத்துக்குளம் மோகன் மற்றும் பெரியாரிய அம்பேத்கரிய சிந்தனைகளை தனது புரட்சிகரமான 'விடுதலைக்குரல்' வழியாக 'இசைப்போர்' நடத்திய தலித் சுப்பய்யா என்று அறியப்பட்ட லெனின் சுப்பய்யா மறைவிற்கு இந்த செயலவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

• “புராண காலத்திலிருந்து இந்த நாட்டில் நடப்பது அரசியல் போராட்டமல்ல, ஆரிய திராவிடப் போராட்டம் தான்” என்றார் பெரியார். தமிழ்நாட்டில் காலூன்றத் துடிக்கும் பார்ப்பன சனாதன சக்திகள் தொடர்ச்சியாக, பல்வேறு சூழ்ச்சிகளோடு அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் அவர்களால் முழுமையாக வெற்றி பெற முடியவில்லை. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, ஆட்சியிலிருந்த அ.இ.அ.தி.மு.க.வின் வலிமை யற்றத் தலைமையைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, பல ஆண்டு காலம் தமிழ்நாட்டை “ஆட்டி வைத்த” பார்ப்பனிய சக்திகள், திமுக ஆட்சிக்கு வந்துவிடாமல் தடுக்கும் அத்தனை திரைமறைவு முயற்சிகளையும் மேற்கொண்டு அதிலும் தோற்றுப்போயின. திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் ஒன்றிய சனாதன ஆட்சியின் மனுவாதத் திட்டங்கள் நெருக்கடிக்கு உள்ளாயின.

“திராவிடன் மாடல்” என்பதே திமுக வின் கொள்கை என்று திட்டவட்டமாக அறிவித்த திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின், அதை நோக்கித் தீவிரமான திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் பெரியார் சுட்டிக்காட்டிய ஆரிய திராவிடப் போராட்டம் என்பது இப்போது திராவிடன் மாடலுக்கும் ஆர்.எஸ்.எஸ் சனாதன ஆரியத்துக்குமான போராட்டமாக வடிவம் பெற்று நிற்கிறது. திராவிடன் மாடல் தனக்கான கல்வி, மருத்துவம்,பெண்கள் முன்னேற்றம், தன்னுரிமை, மொழி, தொழில், மற்றும் நிதிக் கொள்கைகளைக் கட்டமைத்து உருவாக்கி ஒற்றை இந்தியா என்ற பார்ப்பனிய சூழ்ச்சிக்கு எதிராக தமிழ்நாட்டைக் கட்டி எழுப்பும் முனைப்புகளில் முன்னேறி வருகிறது. இந்த வளர்ச்சிகளை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் தனது முழுமையான அதிகார பலத்தையும் ஒன்றிய பார்ப்பனிய ஆட்சி தமிழ்நாட்டின் மீது செலுத்தி திராவிட மாடலை முறியடிக்க முயலுகிறது.
இறையாண்மை கொண்ட தமிழ்நாட்டு சட்டமன்றத் தீர்மானங்களை, ஆளுநரைப் பயன்படுத்தி முடக்கும் அப்பட்டமான சட்ட மீறல்கள் அரங்கேறி வருகின்றன. வேத காலத்தில் தொடங்கி தொடரும் இந்தப் போராட்டத்தை முறியடிக்க வேண்டிய தேவையும் அவசியமும் எழுந்து நிற்கிறது. தமிழின உணர்வாளர்கள் இந்தப் போராட்டத்தில், வரலாற்று சமூக அரசியல் வெளிச்சத்தில் புரிந்துகொண்டு கட்சி வேறுபாடின்றி தமிழ்நாடு அரசின் திராவிட மாடலுக்கு ஓர் அணியாய் திரண்டு ஆதரவு தர வேண்டும் என்று இந்த செயலவை அறைகூவல் விடுக்கிறது.

தமிழ்நாட்டின் சுயமரியாதை தனித்துவத்துக்கு உறுதியாகக் குரல் கொடுக்கும் தமிழக முதல்வருக்கு கழகம் பாராட்டு

• பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஐ அரசே சமூக நீதி நாளாக அறிவித்து, அரசு ஊழியர்களை சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்க வைத்தது ; அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் திட்டத்தை செயல்படுத்தியது; தமிழ் வழிபாட்டிற்கு முன்னுரிமை ; தமிழ்நாட்டிற்கு தனியான கல்விக் கொள்கை; 'நீட்' - இலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற தொடர் முயற்சிகள்; மருத்துவப் மேற் பட்டப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு நிலைநாட்டிட சட்டப் போராட்டம் நடத்தி அனைத்து மாநிலங்களுக்கும் சமூக நீதியை மீட்டுத் தந்தது; தமிழ்நாடு அரசுப் பணிகளில் தமிழ் பயின்றவர்களே வரமுடியும் என்ற சமூக நீதி ஆணை; தாலிக்கு தங்கம் என்ற ஊழலையும், பெண்ணடிமையையும் நிலை நிறுத்தும் திட்டத்திற்கு மாற்றாக, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கல்லூரிப் படிப்பு வரை மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை; மக்களைத் தேடிச் செல்லும் மருத்துவம் மற்றும் கல்வி வழங்கும் திட்டங்கள்; திறன் மேம்பாடும் தொழில் நுட்பமும் நிறைந்த இளைஞர் சமூகத்தை உருவாக்கிட “நான் முதல்வன்” என்றத் திட்டம்; தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்த முதலீடுகளைத் திரட்டும் முயற்சி; பொருளாதாரத் துறை நெருக்கடியில் பரிதவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து மருந்து, உணவுப் பொருள்களை அனுப்பிட அனுமதிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை; குடிஅரசு தின அணி வகுப்பில் தமிழக ஊர்திகள் புறக்கணிப்புக்கு சுயமரியாதை உணர்வோடு காட்டிய முதல்வரின் எதிர்ப்பு; கூடங்குளம் அணுக் கழிவுகளை, ஒப்பந்தப்படி இரஷ்யாவிற்கே அனுப்ப வேண்டும் என்ற அடுக்கடுக்கான திட்டங்கள், கோரிக்கைகளோடு தமிழ்நாட்டை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முதலிடத்தில் கொண்டுவர அயராது பணியாற்றும் தமிழ்நாடு அரசையும், தமிழ்நாடு முதல்வரையும் இச்செயலவை பாராட்டி மகிழ்கிறது.

ஜாதி ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம்

• ஜாதி ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நீடிப் பதோடு தற்போதைய சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி ஜாதி வெறிக் குற்றவாளிகள் தப்பி விடுவதைத் தடுக்கவும், ஜாதி இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கவும் ஜாதி ஆணவப் படுகொலைகள் தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கைக்கு செயல் வடிவம் தர தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று இந்த செயலவை வலியுறுத்து கிறது. ஜாதி, மத மறுப்பு இணையர்களை பாதுகாக்கும் கடமை திராவிடன் மாடல் ஆட்சிக்கு உண்டு என்பதைச் சுட்டிக்காட்டி அவர்களை பாதுகாக்கும் தனிப் பிரிவுகள், விடுதிகளை உருவாக்க வேண்டும் என்று இந்த செயலவை வலியுறுத்துகிறது.

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம்

• சாமியார்கள் மூலம் அப்பாவி மக்கள் ஏமாறுவதும், உடைமைகளை பறிகொடுப்பதும் அதிகரித்து வருகிறது. மக்களின் மூட நம்பிக்கையை மூலதனமாக்கி மக்களை ஏமாற்றும் சாமியார்களைத் தடுத்து நிறுத்தவும், இந்திய அரசியல் சட்டம் குடிமக்களின் கடமையாக வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்கவும்(51 ஹ (h), கர்நாடகம், மகராஷ்டிரா மாநிலங்களில் அமலில் இருப்பதைப் போல் “மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம்” ஒன்றை தமிழ்நாடு அரசு கொண்டு வர வேண்டும் என்று இந்த செயலவை கேட்டுக் கொள்கிறது. மக்களிடையே இந்த மூடநம்பிக்கைகளை விளக்கி, அறிவியலையும், பகுத்தறிவையும் பரப்புவதற்கு அரசு ஊக்குவிப்பதும், பிற்போக்குவாதிகளிடமிருந்து வரும் எதிர்ப்புகளை புறம் தள்ளி இந்த பகுத்தறிவு, அறிவியல் பரப்புரைக்கு தடையின்றி உரிய அனுமதி வழங்கிட காவல்துறைக்கு உரிய வழிகாட்டு முறைகளை அரசு வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இந்த செயலவை கேட்டுக் கொள்கிறது.

ஜாதிக்குள் வரன் தேடும் வணிக அமைப்புகளுக்கு தடை போடுக

• ஜாதியற்ற தமிழ்நாட்டை உருவாக்குவதில் தான் தமிழ்நாட்டின் பெருமையும் அடையாளமும் இருக்கிறது. அந்த வகையில் ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை கலைஞர் முதல்வராக இருந்த போது அறிமுகப்படுத்தினார். இப்போது ஜாதி அமைப்புகள் சமூக நீதியை புறம்தள்ளிவிட்டு தேர்தல் அரசியலுக்கான வாக்கு வங்கிகளாக ஜாதியைப் பயன்படுத்தி அதன் பெருமைகளைப் பேசி வருவது வன்மையான கண்டனத்திற்கு உரியது. இதற்கு வலிமை சேர்ப்பது போல் ஜாதிக்குள்ளே வரன் தேடும் சில வணிக அமைப்புகள், ஊடகங்களில் ஜாதிக்குள் வரன் தேடும் விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. இது போன்ற ஜாதிக்குள் வரன் தேடும் விளம்பரங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். அத்தகைய விளம்பரங்களை ஊடகங்கள் ஒலிபரப்பி சமூகத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லக் கூடாது என்று செயலவை கேட்டுக் கொள்கிறது.

ஜாதிச் சான்றிழ்: ஜாதிப் பெயர்களைத் தவிர்த்து வகுப்புப் பெயர்களை மட்டும் பதிவு செய்யலாம்

• மாணவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஜாதிச்சான்றிதழுக்கு மாற்றாக “இட ஒதுக்கீடு உரிமைச் சான்றிதழ்” அல்லது “வகுப்புச் சான்றிதழ்” (Community) வழங்கி - சான்றிதழ்களில் ஜாதிப் பெயரைத் தவிர்த்து விடலாம் என்று இந்த செயலவை தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது. ஜாதி குறித்த விவரங்கள் வருவாய்த் துறையில் மட்டுமே இருந்தால் போதும்! சான்றிதழ் களில் வேண்டியதில்லை என்பதே இச்செயலவையின் கோரிக்கையாகும்.

- விடுதலை இராசேந்திரன்